மகளுக்கு திருமணம் முடிக்கும்வரை ஆரோக்யத்தோடு இருக்கவேண்டும் என்று அத்தனை கவனமாய் பார்த்துக்கொள்வார் தன் உடலை. தற்போது மனம் அமைதியற்றுப்போக உடல் தன்போல் வலுவிழந்துவிட்டது ரங்கசாமிக்கு.
சர்கரையின் அளவும், இரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளதென்றும், மருத்துவமணையில் தங்கியிருந்து மருத்துவம் பார்க்கவேண்டும் என்றும் மருத்துவர் சொல்ல, வைத்தியம் பார்க்க சம்மதித்தாள் முல்லை.
இரண்டு நாள் கழித்து சற்றே தேறி வந்தார் ரங்கசாமி. மகளின் வருங்காலத்தை நினைத்து நிலைகொள்ளவில்லை மனம். இன்னும் தானாக எழுந்தமர முடியவில்லை. முயற்சித்தால் மயக்கம் வருவதுபோல் தோன்ற உண்ணும்போது தவிர எழுந்தமர்வதில்லை.
ரங்கசாமி அத்தனை உயரம் கிடையாது. தேகமும் மெலிந்த தேகம்தான். ரங்கசாமியை விட ஜானகி உயரம் கம்மி. சற்றே பூசிய உடல்வாகு. ரங்கசாமி மாநிறம். ஜானகி மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறம்.
இவர்களின் இரத்தபந்த மகள் இல்லை என்பதுபோல்தான் முல்லையின் உடல்வாகு. நல்ல உயரம். நல்ல நிறம், ஆண்குழந்தையை தத்தெடுக்க வந்தவர்களின் நினைப்பை ஐந்து மாதக் குழந்தையிலேயே தன் அழகால் மாற்றி தன்னை தத்தெடுக்க வைத்திருந்தவள் அல்லவா முல்லை.
பதின்ம வயதை எட்டியதும் பருவப்பெண்ணிற்குரிய ஜொலிப்பும் சேர்ந்துகொண்டது. க்ளாஸி லுக் என முல்லையிடமே சொல்லி வெக்கப்பட வைத்திருக்கிறார்கள் தோழிகள். முல்லையின் தோற்றத்தை பார்த்து பெரிய இடத்து பெண் என்று நினைப்பில் எட்ட நின்று ரசித்த கல்லூரி தோழர்களும் உண்டு.
ஆனால் முல்லையை பொருத்தவரை இவ்வுலகில் மிகச்சிறந்த அழகனாய் ரங்கசாமியும், அழகியாய் ஜானகி மட்டுமே. சிறு வயதிலேயே தான் வளர்ப்பு மகள் என அறிந்தவள் ஆதலால், இவர்கள் தன்னை மகளாக ஏற்காதிருந்தால் தன்நிலை என்னவாகியிருக்குமோ என பலமுறை நினைத்ததுண்டு.
“எனக்கொன்னும் இல்லடா. நல்லாயிருக்கேன்” என வாஞ்சையாய் சொல்லி, “நைட்டெல்லாம் இரண்டு பேரும் தூங்கலயா?” என்றார் மனைவி மகளிடம்.
“பயந்துட்டேங்க” என ஜானகி கண்ணீர் விட, “ப்ச் ஜானு… நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிக்காம என் உயிர் போகாது” என்றார் திடமான குரலில்.
திருமணம் என்றதும் முல்லையின் முகம் வாடிட, “உனக்கு மாப்பிள்ளை ஃபிக்ஸ் ஆகிடுச்சுனா பழைய தெம்பு வந்திடும்டா எனக்கு” என்றார் நெகிழ்வாக.
இன்றுதான் கொஞ்சம் பேசுகிறார் ஆகையால் தந்தையின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் அமைதிகாத்தாள் முல்லை.
மருத்துவமணைக்கு எப்படி வந்தோம் என்ற நினைவில்லாமல் போகவே, “எப்படி ஜானு என்னை கூட்டிட்டு வந்திங்க? நாராயணன் வந்தானா? இல்ல நிதீஷ் சதீஸ்க்கு போன் செய்திங்களா?” என்றார் ரங்கசாமி.
“அதுக்கெல்லாம் நேரம் ஏதுப்பா? நாங்களே உங்களை கூட்டிட்டு வந்துட்டோம்” என்றாள் முல்லை.
“அது சரிடா, என்னை எப்படி காருக்குள்ள கொண்டு வந்திங்க?”
“உங்க பொண்ணு தூக்கிட்டு வந்து காருக்குள்ள படுக்க வச்சா” என்று ஜானகி பெருமையோடு சொல்ல, ரங்கசாமி நம்ம முடியாமல் பார்க்க, “என்னாலயே நம்ப முடியலங்க, நீங்க மயக்கமாகிட்டிங்கனதும் எங்கிருந்து சத்து வந்துச்சோ தெரியலங்க. சட்டுனு தூக்கி தோள்மேல போட்டுகிட்டா” என்றார் பெருமையாக.
ரங்கசாமி நெகிழ்வோடு பார்க்க, “ஐம்பது கிலோ கூட இருக்கமாட்டிங்க. உங்களை தூக்குறது கஷ்டமாப்பா?” என்றாள் சிரிப்போடு.
“அட்மிட் பண்ணினதுக்கப்புறம் கூட வனிதாவும் நாராயணனும் வரலையா?” என்றார் விசாரணையாக.
“ப்பா, எனக்காக அவங்களை தள்ளி வச்சிட்டிங்க… அந்த கோபம் அவங்களுக்கு இருக்கும்தானே? கொஞ்ச நாள் கழிச்சு கோபம் தீரவும் வருவாங்க. ப்ரீயா விடுங்கப்பா. டாக்டர் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாதுனு சொல்லியிருக்காங்க” என்றாள்.
“ஓ வரலையா?” என விரக்தியாய் முணுமுணுத்து “நீயும் அம்மாவும் சாப்பிட்டிங்களாடா?” என இயல்பிற்கு வர முயற்சித்தார். பின்னே நிறைய யோசித்து சில முடிவுகளை எடுத்த பின்னேதான் முழுதாய் இயல்பிற்கு வந்தார் ரங்கசாமி.
மேலும் நான்கு நாட்கள் கழித்து மருத்துவமணையிலிருந்து வீட்டிற்கு வந்தார் ரங்கசாமி. “எப்போ பார்த்தாலும் எதோ யோசனையிலயே இருக்கிங்க? முல்லையை யாராவது கேட்டாங்களா? அவ கல்யாணத்தைதான யோசிக்கிறிங்க?” என்றார் ஜானகி.
ஆழ்ந்த யோசனையில் இருந்த ரங்கசாமி மனைவி கேட்டதை கவனத்தில் கொள்ளாமல் ஆமாம் என்பதாய் தலையசைக்க, “நம்ம மகளுக்கு அருமையான பையன் கிடைப்பான். நீங்க மனசை வருத்திட்டு திரும்ப படுத்துடாதிங்க” என்றார் ஜானகி.
மனைவியின் அக்கறையில் தன்னிலைக்கு வந்தவர், “டீ எடுத்து வா ஜானு” என்றார். ஜானகி சமையலறைக்கு செல்லவும், தன்னோடு வேலை செய்த நண்பனிற்கு அழைத்து விசயத்தை சுருக்கமாக சொல்லி, “எனக்கு ரிஜிஸ்தர் ஆபீஸ்ல யாரையும் தெரியாது. பணம் செலவானாலும் பரவால்ல, எல்லாம் இரண்டு நாளைக்குள்ள நடக்கனும். ஏற்பாடு பண்ணிட்டு கால் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தார்.
ஜானகி “என்ன ஏற்பாடுங்க? யார்கிட்ட பேசுனிங்க? தரகர்கிட்டயா?” என்றபடி டீயை நீட்ட, “முல்லை கல்யாணத்துக்கு முன்ன முடிக்க வேண்டிய விசயம் இருக்கு. அதுக்குதான் ஏற்பாடு செய்தேன்” என்று விசயத்தை சொன்னார் ரங்கசாமி.
“ஏங்க உங்களுக்கு ஒன்னும் ஆகாது, நாம பேரன் பேத்தியை கொஞ்சிட்டுதான் போவோம்” என்று பதறி சொல்ல, “எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு ஜானு. ஆனா கடவுள் எவ்வளோ நாள் விதிச்சிருக்காரோ தெரியாது. செய்ய வேண்டியதை செய்யாம விட்டுட்டா முல்லையை நிம்மதியா வாழ விடமாட்டாங்க” என்றார் உறுதியாக.
“அவங்களால என்னங்க செய்ய முடியும்? பூர்வீக சொத்துல பங்கு வேணாம்னு சொல்லிட்டிங்க, இந்த வீடும் காம்ப்ளக்சும் நீங்க சுயமா சம்பாதிச்சு கட்டியது. அப்பார்ட்மண்ட் எங்கம்மா எனக்கு கொடுத்த சீதனம். இதுலலாம் அவங்க உரிமை கொண்டாட மாட்டாங்க. இவ்வளோ அவசரமா ரிஜிஸ்தர் செய்தாதான் தப்பா நினைப்பாங்க” என்றார் கலக்கமாக.
“நீ நினைக்கிற மாதிரி இல்ல ஜானு அவங்க. நான் செத்துட்டேன்னா உன்கிட்டயும் முல்லைகிட்டயும் பாசாங்கு செய்வாங்க. அவங்க பண்றது பிரச்சனைனு கூட தெரியாம அப்பவும் அவங்களை நல்லவங்கனு நினைச்சு நீ இரக்கம் காட்டுவ. அது முல்லைக்கு பாதகமா முடிய வாய்ப்பிருக்கு. வாய்ப்பு என்ன? அதான் நடக்கும்”
“அவங்களுக்காக இல்லைன்னாலும் நிதீஷ், சதீஸ், அபர்ணா” என ஆரம்பிக்க, “அவங்களுக்கும் அவங்கப்பாம்மா புத்திதான் ஜானு. நான் முல்லைக்கு சொத்து எழுதி வைக்கிறது தெரிய வரும்போது எல்லாரையும் உனக்கு புரியும்” என்றார் ரங்கசாமி.
இருபது வயதில் திருமணமாகி முல்லையை தத்தெடுக்கும் முன் பத்து வருடங்களாக வனிதா, நாராயணன் குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து பாசம் வைத்துவிட்டார் ஜானகி. முல்லை வந்த பின்னே அவர்களை தவிர்ப்பது தவறென்ற உணர்வில் இருந்து இன்னும் மீள முடியவில்லை ஜானகியால்.
“யார் நிலைமையை யார் கண்டா? நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேனு தெரிஞ்சும் பார்க்க வராதவங்க, நான் இல்லாத காலத்துக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்க. அவங்களை யோசிச்சு நம்ம மகளை நிராதரவா விட்டுடக்கூடாது ஜானு” என்றார்.
நண்பனிடமிருந்து அழைப்பு வர, “ஆமாம்டா, அப்பார்ட்மண்ட், காம்ப்ளக்ஸ், இப்போ இருக்க வீடு எல்லாத்தையும் மக பேருக்கு மாத்தனும்” என்றார்.
மேலும் சில கேள்விகளுக்கு விபரம் சொல்லி, “இந்த வாரத்துல பண்ணிடலாமா? ஒகே ஒகே” என்று ரங்கசாமி இணைப்பை துண்டிக்க, முல்லை வந்தாள் தனதறையிலிருந்து.
“என்னடா இன்னும் குளிக்கலயா? இன்னைக்கும் வேலைக்கு போகலயா?” என்றார் ரங்கசாமி.
“ஜாயின் பண்ணி பத்து நாள்கூட ஆகல, ஒரு வாரம் லீவ் போட்டுருக்கிங்க. அப்பாய்ண்ட் பண்ணும்போதே ஃபர்ஸ்ட் சிக்ஸ் மன்த்க்கு லீவ் எடுக்கக்கூடாதுனு சொல்லியிருக்கோம்தானேனு கேட்டாங்க. அப்பாக்கு முடியலனா கூட வேலைக்கு வரனும்னு அவசியமில்லனு மனசுல நினைச்சேன். அந்தாளு என் முகத்துல என்ன கண்டானோ… நீங்க போலாம்னு சொன்னான். நான் வந்துட்டேன்” என்றாள் அசால்ட்டாக.
“இப்படி இருக்கிறது தப்புடா, அம்மா என் பக்கத்துல இருந்திருப்பாதானே? நீ வேலைக்கு போயிருக்கலாம்ல?” என்றார் சிறு கோபத்தோடு.
“மெடிசன் வாங்கி வர சொன்னாங்கப்பா. நான் இல்லாத நேரம் அம்மாகிட்ட சொன்னா அம்மாவால முடியாது. அம்மாவும் சரியா சாப்பிடாம வேற இருந்தாங்க. இந்த நிலையில என்னால வேலைக்கு போக முடியல” என்றாள் முல்லை.
“சரி வேற வேலைக்கு ட்ரை பண்ணு” என்றார் கட்டளையாக.
முடியாது என்றால் வருந்துவார் என, “இரண்டு மூனு மாசம் ஆகட்டும்ப்பா. உங்க ஹெல்த் சரியாகவும் ட்ரை பண்றேன்”
“வயசானா எல்லாமும் வரத்தான்டா செய்யும். அதுக்காக வேலைக்கு போகாம இருக்கலாமா?” என கேட்க, இவள் கெஞ்ச, பத்து நிமிட வாக்குவாதத்திற்கு பிறகு “மூனு மாசம்தான் டைம், அதுக்கப்புறம் சாக்குபோக்கு சொல்லக்கூடாது” என ரங்கசாமி கண்டிஷனோடு விட்டுக்கொடுக்க, நிம்மதியானாள் முல்லை.
உடன்பிறப்புகளையும், பாசத்திற்குரிய அவர்களின் வாரிசுகளையும் தன் ஒருத்திக்காக பகைத்துக்கொண்டிருக்கும் தந்தையை விட, வேலை கல்யாணம் என எதுவும் முக்கியமில்லை. தான் திருமணமாகி சென்றுவிட்டால் தற்போது போல் உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலையில் தன்னால் உடனிருந்து கவனிக்க முடியாது.
எனவே இவர்கள் இருக்கும்வரை இவர்கள்தான் தன் வாழ்வு என்ற முடிவிற்கு வந்திருந்தாள் முல்லை. அதோடு பெண்கேட்டு வந்தவர்கள் சொன்ன வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்திட, திருமணம் வெறுத்துப்போனது முல்லைக்கு.
மகள் மனைவியிடம் தனக்கு ஒன்றும் ஆகாது என்று சொன்னாலும், ஆறு நாள் மருத்துவமணை வாழ்வு ரங்கசாமிக்கு பயத்தை உண்டாக்கியிருந்தது. தன் உடல் நிலை நன்றாக இருக்கும்போதே மகளுக்கு திருமணத்தை முடித்தாக வேண்டும் என்று அனுதினமும் மனம் எடுத்துரைத்தது. இந்த வாரத்தில் சொத்து விசயங்களை முடிப்போம். பிறகு அடுத்த வாரமே மகள் திருமணம் பற்றி மகளிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் பேசலாம் என்று முடிவெடுத்தார் ரங்கசாமி.