முல்லை வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தியவனுக்கு வீட்டினுள் செல்லலாமா என்ற யோசனை வர, அங்கே கேட்டினுள் இன்னொரு காரும், மூன்று பைக்குகளும் இருந்ததை பார்ததவன், ‘ஒ… அவரோட அக்கா, தம்பி ஃபேமலி வந்திருக்காங்க போல. பரவால்ல, பிரச்சனைன்னதும் வந்துட்டாங்க’ என மெச்சுதலாய் நினைத்தவன், பிரச்சனை கஜேந்திரனாலா இல்லையா என அறிந்துகொண்டால் நிம்மதியாகிடலாமே என முடிவெடுத்து கேட்டின் உள்ளே பைக்கை செலுத்தினான்.
“தம்பி பிரச்சனை பண்ண வீட்டுக்கே வந்துட்டிங்களா?” என இடைமறித்தான் காவலாளி.
“இதென்னண்ணா இப்படி பேசுறிங்க? எங்களுக்கும் அவருக்கும் வாய்க்கா தகராறா என்ன?” என அதட்டலாக கேட்டு, “எனக்கு பெரியவரை பார்க்கனும்” என்றான் அன்பரசு.
“அவரே டென்ஷன்ல இருக்கார். நீங்க வேற ஏன் தம்பி?” என சலித்து, “இன்னொரு நாளைக்கு வாங்க” என மறுத்தார்.
“அவருக்கு என்ன பிரச்சனை தெரிஞ்சுக்கதான் வந்துருக்கேன். என்னால ஒரு பிரச்சனையும் வராது”
“அதை தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க? உங்க பழைய பகைக்கு சந்தோசப்படுவிங்க” எனும்போதே காவலாளியை தீயாய் முறைத்தவன், அழுத்தமாய் பிடித்து தள்ளி நிறுத்தி உள்ளே சென்றிருந்தான் அன்பரசு.
அங்கே நாராயணன், அவரின் மகன், மற்றும் வனிதா அவரின் மகன் சதீஷ் இருக்கவே, பரவால்ல, பெரியவருக்கு ஒன்னுனதும் கூடப்பிறந்தவங்க வந்துட்டாங்க என நினைக்கும்போதே நாராயணன் பார்த்த பார்வை அன்பரசுக்கு கோபத்தை வரவழைத்தது.
ஆனாலும் தன் கோபத்தை காட்டுவதற்கு நாராயணன் தனக்கு யாருமில்லை என மனதை கட்டுப்படுத்த்தி ரங்கசாமியிடம் சென்றவன், “ஐயா வீட்டுல ரொம்ப சத்தம்னு டைப்க்கு வர பசங்க சொன்னதா அப்பா சொன்னார். கஜேந்திரனால திரும்ப பிரச்சனையோனு விசாரிக்க வந்தேன்” என்றான் விசாரணையாக.
“திரும்ப பிரச்சனையா?” என முணுமுணுத்த நாராயணன், “அப்போ முன்னாடி என்ன பிரச்சனை வந்தது? அதை கேட்க இவன் யாரு?” என்றார் ரங்கசாமியிடம்.
நிம்மதியானவன், “சரிங்கய்யா” என கிளம்ப எத்தனிக்க, “இவனுக்கென்ன உங்கமேல திடீர் அக்கறை? இவன் இருக்க தைரியத்துலதான் என் மகனை வேணாம்னு சொன்னியா? யாரந்த கஜேந்திரன்?” என கேள்விகளை அடுக்கினார் வனிதா.
வனிதா கேட்ட தோரணையில் கோபமாக திரும்பியவன், அப்பொழுதுதான் வீங்கிச் சிவந்த முகத்தோடு சொந்த வீட்டில் யாரோபோல் ஓர் மூலையில் தலைகுனிந்து அமர்ந்திருந்த முல்லையைப் பார்த்தான்.
தனக்கே இப்படியென்றால் இவளிற்கு எப்படியிருக்கும்? என வருந்தி பொறுமையை இழுத்துப் பிடித்தவன் கஜேந்திரன் விசயத்தை சொல்லி, “அவன் எங்க ஜிம்முக்கு வரதால கண்டிச்சேன். இவர் பொண்ணுனு இல்ல, யார்கிட்ட வம்பு செய்திருந்தாலும் கண்டிச்சிருப்பேன்” என அறிவுருத்தி,
“நான் இருக்க தைரியத்துல உங்க மகனை வேணாம்னு சொன்னாருனு எந்த அர்த்ததுல சொன்னிங்க? வார்த்தையை யோசிச்சு அளந்து பேசுங்க. இல்ல… அசிங்கப்படுவிங்க” என எச்சரித்தான் கோபமாக.
“யார் வீட்டுக்கு வந்து யாரைடா மிரட்டுற?” என்றெழுந்தான் சதீஷ்.
“உங்கம்மா பேசின பேச்சுக்கு ஆம்பிளையா இருந்திருந்தா இந்நேரம் பேசின வாய் ரத்தம் சிந்தியிருக்கும். பொம்பளையா போய்ட்டாங்களேனு போனாப் போகுதுனு போனா நீ என்னடா ரொம்ப துள்ளுற?” என அழுத்தமான பார்வையோடு அன்பரசு சதீசை நெருங்கினான்.
அன்பரசின் பார்வையும் உடலமைப்பும் சதீஷிற்கு பயத்தை தருவதோடு, கை வைத்துவிட்டான் என்றால் அவமானமாகிடும் என்று “என்ன மாமா? நம்ம வீட்டுக்கு வந்து உங்க முன்னாடியே என்னை கேள்வி கேட்குறான். நீங்க அமைதியா இருக்கிங்க?” என்றான் ரங்கசாமியிடம்.
“நான்தான் கூடப்பிறந்த பாவத்துக்கு உங்களை மன்னிச்சு விட்டுட்டிருக்கேன், அன்புக்கு அப்படி என்ன இருக்கு? என்னை பார்க்க வந்தவன்கிட்ட எதுக்கு உங்கம்மா வார்த்தையை விட்டுச்சு?” என்று சதீஷை அதட்டி, அன்பரசிடம் “தம்பி… எனக்காக இவனை மன்னிச்சுடுங்க” என்றார் தன்மையாக.
“என் கேரக்டரை அசிங்கப்படுத்துறவனை யாருக்காவும் என்னால மன்னிக்க முடியாதுங்கய்யா” என இவனும் தன்மையாகவே சொல்லி சதீசை நெருங்கி நின்று “உங்கம்மா பேசினது சரியா?” என அழுத்தமாய் கேட்க, சதீஷ் பதிலின்றி தடுமாற… “சொல்டா… உங்கம்மா பேசினது சரியா?” என்றவன் சதீஷின் கன்னத்தை ஒற்றைக் கையால் இறுகப்பற்ற, வலிதாள முடியாமல், “கையை எடுங்க” என்றான் கிணற்றிற்குள் ஒலிக்கும் குரலில்.
“உங்கம்மா பேசினது சரியா?” என மேலும் கன்னத்தை இறுக்கி, ஒரு கையையும் பிடித்து திருப்ப “தம்பி… என்னைக்கும் வராதவர் வந்திருக்கிங்களேனு கேட்டேன். அதுக்காக பையன் மேல கை வைப்பிங்களா?” என பதறினார் வனிதா.
“என்னைக்கும் வராதவன் வந்தா இப்படித்தான் கேட்பிங்களா? உங்க வீட்டுக்கு வரவங்கள்லாம் இந்த நினைப்போடத்தான் வருவாங்களா? அப்படி வந்தவன்ல ஒருத்தனுக்குத்தான் உங்க பொண்ணை கட்டிக்கொடுத்திங்களா?” என கர்ஜித்தான் கோபத்தோடு.
“என்ன பேச்சுடா பேசுற?” என்று நாராயணன் மகன் அருகே வர, “வாடா வா… இன்னும் யாரையாவது கூப்பிடு” என்று சதீஷின் சோல்டரில் லேசாய் குத்தி விடுவித்து, இவனின் கையைப் பிடித்து முறுக்கி, “உன் வீட்டு பொண்ணை சொன்னா வலிக்கும். அடுத்தவங்களை மட்டும் உங்க இஷ்டத்துக்கு பேசுவிங்களாடா?” என்று தொடையில் உதைக்க சுருண்டு விழுந்தான் நாராயணன் மகன்.
பின்னே நாராயணனை முறைத்து, ரங்கசாமியிடம் “உங்கக்கா பேசினதுக்கும், இவனுங்க சிம்பிட்டு நின்னதுக்கும் என்னோட கால் பங்கு கோபத்தை காட்டியிருந்தா கூட இந்நேரம் செத்துருப்பானுங்க.
உங்களுக்காகத்தான் பொறுமையை இழுத்து பிடிச்சு லேசா தட்டினதோட விட்டுருக்கேன். இன்னொரு முறை இப்படி பேச்சு வந்தா உடம்புல ஒரு உறுப்பும் உருப்படியா இருக்காது. சொல்லி வைங்க!” என எச்சரிக்க, “அன்பு” என கண்டிக்கும் குரல் கொடுத்தார் கல்பனா.
“நீ எதுக்கத்த வந்த?” என வாயிலில் நின்றிருந்தவரை கடிய, “போனவனை இன்னும் காணோம்னு அண்ணன்தான்டா பார்த்துட்டு வர சொன்னார். இங்க வந்தா உங்கப்பா நினைச்ச மாதிரியே முரட்டுத்தனத்தை காட்டிட்டிருக்க” என்றார் அதட்டலாக.
கல்பனாவை விடுத்து ரங்கசாமியைப் பார்த்தவன், “கஜேந்திரனால பிரச்சனையோனு வந்தேன். இங்க வந்தபின்னதான் உங்க குடும்பம்தான் உங்களுக்கு பிரச்சனைனு புரிஞ்சது. எந்த அவசரத் தேவையா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க.
இங்க இருந்தேன்னா அடுத்த செகன்ட் வந்து நிப்பேன். வெளில இருந்தேன்னா நான் என்னைக்கு வரேனோ அன்னைக்கு உங்ககிட்ட பிரச்சனை செய்றவங்கனோட நாளை… அவங்க வாழ்நாள்ல மறக்க முடியாத நாளாக்கிடறேன்” என்று தைரியம் கொடுத்து தன் அத்தையோடு கிளம்பினான் அன்பரசு.
வீட்டிற்குள் வந்ததும், “அவர்கிட்ட எதுக்குடா அப்படி சொன்ன?” என முறைத்தார் கல்பனா.
“எதை சொல்றத்த?” என்றான் புரியாமல்.
தங்கையின் கோபம் பார்த்து, “என்ன நடந்தது கல்பனா?” என்றார் மாதவன்.
தான் கேட்டவற்றை சொல்லி, “அவங்களுக்கு பிரச்சனைனா இவன் எதுக்கு போகனும்? அடுத்த செகன்டே வந்து நிப்பேனு சொல்றான். அவர்கிட்ட பிரச்சனை பண்றவங்க உடம்புல உறுப்பிருக்காதுனு எவ்வளோ கோபமா சொல்றான். அவங்க பகையாளியை இவன் எதுக்கு வன்மம் தீர்க்கனும்?” என்றார் ஆற்றாமையாக.
“அச்சோ அத்த… நீ வரதுக்கு முன்ன என்ன நடந்ததுனு தெரியாம கோபப்படுற” என்றான் அன்பரசு.
“என்ன வேணா நடந்திருக்கட்டும். நமக்கு எதுக்கு அவங்க பிரச்சனை?” என்றார் முறைப்பாக.
அம்மா இத்தனை கோபப்படாதே என, “என்ன அன்பு நடந்தது?” என்றாள் சுகந்தி.
“ஜனனிம்மா தூங்கியாச்சா?” என எட்டிப்பார்க்க, “அவ எழுந்துக்கவேயில்ல. என்ன நடந்ததுனு சொல்லு” என்றாள்.
அங்கு நடந்ததை விளக்கியவன், “கொஞ்சம் கூட யோசிக்காம வார்தையை விடுறாங்க சுகந்தி, பெரியவரோட பொண்ணு அவமானத்துல குனிஞ்ச தலையை நிமிர்த்தவேயில்ல. இதை பார்த்துட்டு சும்மா வர சொல்றியா?” என்றான் கோபத்தோடு.
கல்பனா “இவனை பேசினதுக்கு மட்டும் திட்டிட்டு வரவேண்டியதுதானே? எதாவது பிரச்சனைன்னா கால் பண்ணுங்கனு எதுக்கு சொல்றான்? அந்த பெரியவர் எப்படி பார்த்தார் தெரியுமா?” என்றார்.
“எப்போவும் நம்மகிட்ட மல்லுக்கட்டுறவர் இன்னைக்கு அத்தனை பேர் இருந்தும் யாருமில்லாத அநாதை மாதிரி நிராதரவா பார்த்தாருத்த, அவரோட பலமே கூடப்பிறந்தவங்கதானு நினைச்சிட்டிருந்தோம்ல? அதெல்லாம் சும்மாத்த… இவர் சொத்துக்காகத்தான் அப்படி இருந்திருக்காங்க.
பொண்ணை கரையேத்தனுமேன்ற கவலையில இருக்கார். தத்தெடுத்து வளர்த்துனாலும் அவங்க பொண்ணு மேல உயிரையே வச்சிருக்கார். அந்த ஒரு விசயத்துக்காகவே அவருக்கு உதவி செய்ய நினைச்சி அப்படி பேசிட்டு வந்தேன்” என்றான்.
கல்பனா “நீ இப்படி நினைச்சி பேசின… ஆனா அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் வேறடா” என்றார் ஆற்றாமையாக.
“ஆமாம்ண்ணா… அவருக்கு நம்ம அன்புக்கு பொண்ணை கொடுக்க விருப்பம் போல. அவர் பார்வை அப்படித்தான் இருந்தது” என்றார் திடமாக.
அதிர்ந்தாலும் “அத்தை அப்படிலாம் இருக்காது. கஜேந்திரன் பிரச்சனை செய்ததுக்கு அந்த பொண்ணுக்காக யோசிச்சேன். இப்போவும் அவன்தான் எதாவது பிரச்சனை செய்திருப்பானோனு போனேன். நான் அக்கறையா போகவும் நன்றியோட பார்த்திருப்பார். நீ தப்பா புரிஞ்சிருக்க” என்றான்.
“நான் தப்பா புரிஞ்சிருக்கேனா? என்னை விட உனக்கு விபர ம் ஜாஸ்த்தியாகிடுச்சா?” என முறைத்தார் கோபமாக.
“என்னம்மா சொல்ற? அவங்க சைவம், நாம அசைவம். ஒத்து வராதே” என சுகந்தி கவலைபோல் கிண்டல் செய்ய, முறைத்தவன், “எரியறதுல எண்ணைய் ஊத்து” என்றான் கோபமாக.
“இவ்வளோ நாளா எனக்கு அப்படித்தானடா பண்ணிட்டிருந்திங்க” என்றாள் இலகுவாக.
“கஜேந்திரன் தப்பு செய்ததால அவங்க பொண்ணு விசயத்துல தலையிட்டது சரிதான். அதுக்காக அவங்க குடும்ப விசயத்துல ரொம்ப தலையிடாத அன்பு. நீ நல்ல எண்ணத்துல உதவி செய்யப்போய் அதுவே அந்த பொண்ணுக்கு கெட்டப்பேர் ஆகிடப்போகுது” என எச்சரித்தார் மாதவன்.
“சரிப்பா” என்றவன் மனம் அத்தை சொல்றதும் சரியா இருக்குமோ? என யோசித்தாலும், ச்சே… ச்சே… சுகந்தி சொன்னமாதிரி நாம அசைவம்ன்ற ஒரு காரணத்துக்காகவே இப்படிலாம் நினைக்கமாட்டார். சொந்தங்களே உதவி செய்யாத நேரம் நம்ம செய்தது… அதுவும் முன்ன நடந்த மனஸ்த்தாபங்களை மறந்து அவருக்காக, அவங்க பொண்ணுக்காக யோசிப்பேனு நினைச்சிகூட பார்த்திருக்கமாட்டார்.
இன்னைக்கு அவருக்காக பேசவும் நம்மளைப் போய் எதிரியா நினைச்சிருந்தோமேனு வருந்தி பார்த்திருப்பார் என தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு, “பசிக்குதத்த… கை கழுவிட்டு வரேன், சாப்பிட எடுத்து வைங்க” என்று தனதறைக்குள் சென்று வந்தான்.
உணவுண்ணும்போது சுகந்தி இயல்பாய் பேசிக்கொண்டே உண்டதும், அன்பரசிற்கு இன்முகமாக பறிமாறுவதும் என பார்த்த மாதவன், கல்பனா முகம் நிம்மதி கொண்டது.
அடுத்தநாள் உடற்பயிற்சி செய்யும்போதும், ஜனனியை பாட்டுக்ளாஸிற்கு சென்று விட்டுவந்த பின்னேயும் அன்றைய நாள் முழுதும் சுகந்தியோடே நேரத்தை கழித்தான்.
சொன்னதுபோல் மறுமணம் பற்றி பேசாத அன்பரசின் மேல் கோபமெல்லாம் போயிருக்க, அன்பரசிடம் வம்பளக்கும் நோக்கத்தில், “அன்பு… அந்த முல்லை பிள்ளை மேல எதாவது அபிப்ராயம் இருந்தா என்கிட்ட சொல்லுடா, உன்னை காட்டிக்கொடுக்காம மாமாகிட்ட நான் பேசி முடிக்கிறேன். மனசுல வச்சிகிட்டு ஏமார்ந்துடாத. அந்த பிள்ள வேற சின்ன வயசுலயே காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருப்பா. இப்போ சொல்லவே வேணாம். சும்மா கும்முனு இருப்பா… எவனாவது கொத்திட்டு போய்ட போறான்” என்றாள்.
சுகந்தியின் கிண்டலை புரிந்து, ஓ… நீ இப்படி வரியா என நினைத்தவன், “முதல்ல கல்யாணம் செய்துக்க எண்ணம் வந்தாதானே அப்படி கண்ணோட்டத்துல பார்க்க முடியும்?” என்றான் சோகம்போல்.
“என்னடா இப்படி சொல்ற? உனக்கும் லவ் ஃபெயிலியரா? நடிக்கப்போற இடத்துல எவளாவது சுத்தல்ல விட்டுட்டாளா?” என அதிர்ந்தாள்.
“அது ஒன்னுதான் குறைச்சல்” என முறைத்தான் சுகந்தியை.
நிம்மதியானவள், “அம்மா லேசுபட்ட ஆளில்ல, அந்த பெரியவர் பார்வை அம்மா சொன்னதுபோல இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. அந்தநேர டென்ஷன்ல நீ கவனிக்காம இருந்திருக்கலாம்” என்றாள்.
“ப்ச் போறியா…” என்றான் வெறுப்பாக.
“இந்த வயசுல அப்படி என்னடா வெறுப்பு?” என்றாள் உண்மை கோபமாக.
“கல்யாணம் செய்ய பயமா இருக்கு சுகந்தி” என பாவம்போல் சொன்னான் மனதுக்குள் சிரித்தபடி.
“என்னடா சொல்ற? பாடிபில்டர் வாய்ல இப்படி வரலாமாடா?” என்றாள் அதிர்வாக.