மாதவன் குளித்துக்கொண்டிருக்க அவரின் மொபைல் ஒலிக்கவே, “மாமா சத்யன்கிட்டயிருந்து போன்” என உரக்க சொன்னாள் சுகந்தி.
“பேசும்மா, இதோ வந்துடறேன்” என்றார் உள்ளிருந்து.
அத்தை இறந்தபோது சத்யனிடம் பேசியது. அதுவும் தானாய் போய் பேசவும் அதற்கான பதிலை மட்டுமே தந்தான். அதன்பின் சேகர் பலமுறை சத்யனிற்கு அழைத்து பேசியிருக்கிறான், சத்யனும் சேகருக்கு அழைத்து பேசுவான். ஆனால் தன்னிடம் பேசியதில்லை ஆதலால் தற்போது அழைப்பை ஏற்க தயக்கமாக இருக்கவே ஏற்கலாமா வேண்டாமா என யோசிக்கும்போதே அழைப்பு நின்றிருந்தது.
இரண்டு நாள் முன்பு அத்தைக்கு அழைத்து மகளை விசாரிக்கும்போது, நான்கு நாட்களாக சுகந்தி இங்குதான் இருக்கிறாள் என்றும், அன்பு பேசியதால் தன் மகளுக்காக வந்திருக்கிறாள் என்றும் அத்தை மூலமாக அறிந்திருந்தான். அந்தநேரம் சுகந்தி ஜனனியோடு அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னார் கல்பனா.
தான் திருமணம் செய்துகொள்ளாமல் நான் செய்துகொள்ள மாட்டேன் என இரண்டு வருடத்திற்கு முன் தம்பி சொன்னபோதும் கூட மறுமணத்தை மனம் ஏற்கவேயில்லை. சென்ற முறை குவைத் வந்தபோது, குழந்தை கொடுக்க தெரிந்தவனுக்கு தனது உயிரை சுமப்பவளை எப்படி பாதுகாப்பது என்ற எண்ணமில்லாமல் போனது தன் தவறுதான் என்ற அன்பரசின் கூற்றை மனதளவில் ஒப்புகொண்டிருந்தான்.
மனைவி இறந்த பின்னே சத்யனிற்கிருந்த ஒரே ஆறுதல்… மனைவியை நிராகரித்தது போல் அல்லாமல் தன் மகளை உயிர் பொக்கிஷமாய் தனது பெற்றோர் பாதுகாத்து வந்ததுதான்.
தனது அவசரத்திற்கும், கவனமின்மைக்கும் தன்னை பெற்று ஆளாக்கிய பெற்றோர் மீது பழியை போடுவது தவறென பல வருடங்கள் கழித்து உணர்ந்திருந்தான்.
இரண்டு வருடத்திற்கு முன்பே குடும்ப நிம்மதிக்காக மறுமணம் செய்துகொள்ளலாமா என்று முயன்று யோசித்தான்தான். ஆனால் யோசிக்கும் நேரமெல்லாம் தனது மனைவி பிரசவ அறைக்குள் செல்லும் போது பார்த்த கடைசி பார்வை கண்முன் தோன்ற துளிர்த்த மறுமண எண்ணம் அழிந்து போகும்.
அன்பரசு சுகந்தியை மணக்க சொல்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சத்யன். தன்னைவிட இரண்டு வயது பெரியவள் என்பதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் சுகந்தியை மனைவி ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் மிக மிக கடினமாக இருந்தது.
சுகந்தியை திருமணம் செய்துகொண்டால், மகளுக்கு நிச்சயம் நல்ல அன்னையாக இருப்பாள் என்றும், தன் குடும்பத்திற்காக அவரது குடும்பத்தை விடுத்து தன் வீட்டிலேயே தங்கியிருக்கும் அத்தையின் மனபாரம் முற்றிலும் அகலும் என்றும் அன்பரசு சொன்ன வார்த்தைகள் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டிருக்க கடந்த பத்து நாட்களாக சுகந்தியைப் பற்றித்தான் யோசித்திருந்தான்.
தன்னை போல் திருமண வாழ்வில் தோல்வியுற்றவளோ… அல்லது சரியானவன் கிடைக்கவில்லையோ? எதோ ஒன்று… தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்வதில் விருப்பமில்லாமல் எட்டு வருடங்களாக இருந்தவள், தனது மகளுக்காக தனது இதய கூட்டை சற்று விஸ்தாரமாக்கியிருக்கிறாள் எனப்புரிய மனம் நெகிழ்ந்தது சத்யனிற்கு.
நெகிழ்ந்த மனம் மகளுக்காக மறுமணம் செய்துகொள்ளலாமா என்றும் யோசிக்க, ஹம்… எல்லா ஆண்களை போலவும் மனைவி இறந்த பின்னே புதுமாப்பிள்ளை ஆகிறேனோ? என தன்னிரக்கமாகவும் நினைத்தான்.
திருமணம் செய்து கொள்வதை பற்றி பிறகு ஆலோசிக்கலாம். தற்போது சுகந்தி தனது வீட்டில்தான் இருக்கிறாள். முதலில் அவளிடம் பேசலாம். உன் வீட்டிற்கு வந்தபோது என்னை ஏன் நிராகரித்தாய் என கேட்கலாம் என்று மீண்டும் தந்தைக்கு அழைத்தான்.
இம்முறை மாதவனே அழைப்பை ஏற்று, “குளிச்சிட்டிருந்தேன்ப்பா” என விளக்கம் கொடுக்க, “பாப்பா ஸ்கூல் போய்ட்டாளாப்பா?” என விசாரித்து, “நீங்க குளிச்சிட்டிருந்தா என்ன? அந்த எருமையை அட்டன் பண்ண சொல்ல வேண்டியதுதானே?” என்றான்.
சுகந்தியைப் பற்றி மகன் பேசியதும் மகிழ்ந்த மாதவன், “இந்தா கொடுக்குறேன், சுகந்திகிட்டயே கேளு” என்று சுகந்தியிடம் நீட்டி, “பேசுடா, உன்னை கேட்டான்” என்றார் சன்னக்குரலில்.
மொபைலை வாங்கி காதில் பொருத்தினாலும் பேச தயங்கினாள். தந்தை கிசுகிசுத்ததையும், சில நொடி மௌனத்தையும் யோசித்து மொபைல் சுகந்தியிடம்தான் உள்ளது என்று கணித்தவன் “எப்படி இருக்க எரும?” என்றான்.
சத்யனின் பழைய அழைப்பில் மனம் பரவசமாக “எருமையை இப்போதான் கண்ணுக்கு தெரியுதோ?” என பதில் கொடுத்தாள் தயக்கம் உடைத்து.
“எனக்கு எப்போவுமே கண்ணு நல்லாதான் தெரியும். நீதான் உன் வீட்டுக்கு வந்தப்போ என்னை அசிங்கப்படுத்தின” என்றான் கோபமாக.
“அது என் வீடு இல்ல” என கர்ஜித்து, “அத்தை இறந்தப்போவே அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டேன், சுகந்தி காரணமில்லாம அப்படி இருக்க மாட்டானு நீ ஏன்டா யோசிக்கல?” என்றாள் இவளும் கோபமாக.
சுகந்தியின் திருமண வாழ்வு குறித்து அன்பரசு கணித்தது சரியாக இருக்குமோ என யோசித்தவன், “உன் அத்தை மாமா பேச்சு கேட்டு என்கிட்ட பேசலயோனு நினைச்சிட்டேன் சுகந்தி. சாரிடீ” என்றான் உண்மையாக.
“பார்டா… என் பேர் கூட உனக்கு தெரியுமா?” என்றாள் எள்ளலாக.
“எல்லாரையும் பார்க்கனும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா கல்யாணம் செய்துக்குற எண்ணமில்லாம ஊர் பக்கம் வரக்கூடாதுனு அன்பு மிரட்டுறானே” என்றான் பாவமாக.
“அன்பு சொல்றதுல என்ன தப்பிருக்கு?” என்றாள் தயக்கத்தோடு.
சத்யன் அமைதியாகிட, சிறு இடைவெளி விட்டு “சத்யா” என்றாள்.
“ம்” என்றவன், “அன்பு சொல்றதுல தப்பில்லைதான். ஆனா அவ என்னை கடைசியா பார்த்த பார்வை இன்னும் நெஞ்சை கணக்குதே. நம்பி வந்தவளை பறிகொடுத்துட்டேனே… உன்னை அத்தை வளர்த்த மாதிரிதானே அவளையும் அவங்கப்பாம்மா வளர்த்துருப்பாங்க” என்றான் வேதனையாக.
தனது கணவனின் மிருக செயலை நினைத்தவள், மனைவி இறந்து இத்தனை வருடம் கழித்தும் அவளின் நினைவில் வாழும் சத்யனை நினைத்து மிகுந்த பெருமை கொண்டாள். இப்படி நல்லவன் இனி தனித்திருக்க கூடாது என்ற அக்கறையும் வர, “பழசையே நினைச்சிட்டிருக்காதடா, உன் பொண்டாட்டியை வளர்த்த மாதிரிதான் உன்னையும் என் அத்தை மாமா வளர்த்தாங்க.
உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்ற குற்றவுணர்வுலயே அத்தை போய்ட்டாங்க. மாமாக்கும் அந்த நிலைமையை கொண்டு வந்துடாத. உன் பொண்டாட்டி பார்த்த கடைசி பார்வைக்கு, என் மகளை விட்டுடாதன்ற அர்த்தம் கூட இருந்திருக்கலாம். உன்னை புரிஞ்சவ இல்லையா? நான் இல்லைனாலும் உன் வாழ்க்கையை வாழனும்னு நினைச்சிருக்கலாமில்ல?” என்றாள் பாசத்தோடு.
“ஹம்… நல்லா பேச கத்துக்கிட்ட” என பாராட்டியவன், “எனக்கு இவ்வளோ சொல்ற? நீ என்ன பண்ணலாம்னு இருக்க?” என்றான்.
“உன் பிரச்சனை வேற, என் பிரச்சனை வேற. என் கல்யாணத்தை பத்தி யாரும் பேசக்கூடாதுனு அன்பு சொல்லியிருக்கான்ல?” என இவள் கடுகடுக்க, “அவன் சொன்னா நான் கேட்கனுமா?” என்றான் இலகுவாக.
சுகந்தி இணைப்பை துண்டித்திட, “கட் பண்ணிட்டாளா? ஷப்பா…” என சலித்தவன், கல்யாணத்தை பத்தி பேசினாலே கட் பண்றா. இதுல என்னை கல்யாணம் செய்துக்கோனு எப்படி கேட்குறது? என நினைத்தான் மலைப்பாக.
பின்னே, ஓ… அவளை கல்யாணம் செய்துக்க நான் சம்மதிச்சிட்டேனா? என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான் வியப்போடு.
“ஆகாமலா இவ்வளோ நேரம் பேசுனிங்க?” என கல்பனா வெள்ளந்தியாய் கேட்க, “நான் அவன் கல்யாணத்தை பத்தி பேசினா அவன் என் கல்யாணத்தை பத்தி பேசுறான்” என்றாள் கடுப்போடு.
சத்யன் மேலுள்ள கோபத்தை போக்க அன்பரசுக்கு அழைத்தாள். அன்பரசு அழைப்பை ஏற்காமல் போகவே, “யாருக்கும்மா போன் போட்ட? அன்புக்கா?” என்றார்.
“ஆமாம் மாமா, ஆனா அவன் எடுக்கல”
“என்கிட்ட பேசியே நாலு நாள் ஆகுதும்மா, நான் கால் பண்ணும்போது அட்டன் பண்றதில்ல, அவனுக்கு ஓய்வா இருக்கும்போது சேஃபா இருக்கேன், பேசக்கூடிய சூழல் இல்லப்பானு வாய்ஸ் மெஸேஜ் போடுறான். ஜனனிம்மாக்கு கூட வாய்ஸ் மேஸேஜ்தான் போட்டான்”
சுகந்தி முகம் இறுக்கமாகவே இருக்க, “விடு சுகந்தி, எதோ பாசத்துல சொல்லியிருப்பான். திரும்ப மலையேறாத. போய் குளிச்சிட்டு வா” என அதட்டினார்.
அதிகாலையிலிருந்து தொடர்ந்து நான்கு மணி நேரம் நடித்துக்கொண்டிருந்தவன், தற்போதுதான் மொபைலை எடுத்துப்பார்த்தான். தற்போதும் கூட பேசும் மனநிலையில் இல்லை அன்பரசு. இரண்டு மணி நேரத்தில் குளித்து உண்டு சற்று நேர ஓய்விற்கு பின்னே மீண்டும் படபிடிப்பு இருக்கிறது.
ஆனாலும் அழைப்பு சுகந்தியினுடையது என்பதால் அவளுக்கு அழைத்தான். குளிப்பதற்காக டவலோடு சென்றவளிடம் “சுகந்திம்மா அன்புதான் கூப்பிடறான் வா” என்றார் மாதவன்.
மொபைலை வாங்கியவள், அன்பரசின் நலனை கூட விசாரிக்காமல் சத்யனோடு நடந்த உரையாடல்களை சுருக்கமாக விளக்கி “உன் கண்டிஷனை மீறி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றான்டா” என குற்றம் வாசித்தாள் கோபமாக.
“சத்யன் உன்கூட இவ்வளோ பேசினானா? என மகிழ்வோடு வியந்தவன், “அவன் முதல்ல ஒழுங்கா? பெத்த பிள்ளையை விட்டுட்டு பரதேசம் போனவனுக்கு உன்னை சொல்ல என்ன தகுதி இருக்கு?” என கோபம்போல் கேட்டு “அவன் பேசுனதையெல்லாம் மண்டையில ஏத்திக்காத சுகந்தி” என்றான் தன்மையாக.
சுகந்தி அமைதியாக இருக்க, “எனக்கு இன்னும் ஆறேழு நாளைக்கு ஷுட் இருக்கும், நேத்தே அப்பா அக்கௌண்ட்டுக்கு பணம் டிரான்ஸஃபர் பண்ணிட்டேன், என்னை எதிர் பார்க்காம நல்லநாள் பார்த்து கார் எடுத்துட்டு வந்துடுங்க” என்றான்.
“நீ வந்த பின்னவே எடுத்துக்கலாம்” என சுகந்தி சொல்ல, “இங்க கொடும்மா” என மொபைலை வாங்கிய மாதவன், “அன்பு முக்கியமான விசயம் பேசனும்டா” என்றார்.
“சொல்லுங்கப்பா” என்றான்.
சுகந்தியும், கல்பனாவும் அருகிலிருப்பதால், “நல்ல இடத்துலயிருந்து உனக்கு பொண்ணு கொடுக்க ஆசைப்படுறாங்க” எனும்போதே “அப்பா… நைட் மூனு மணிநேரம்தான் தூங்கினேன், எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு, நடக்காத விசயத்தை பேசி டைம் வேஸ்ட் பண்ணாதிங்க” என்றான் அதீத சோர்வோடு.
“நானா கேட்கலடா, தானா தேடி வந்த சம்பந்தம். இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு நேரமிருக்கும்போது கால் பண்ணு, யார் என்னனு விபரம் சொல்றேன். நம்ம பதிலை எதிர்பார்த்துட்டிருப்பாங்க”
தேடி வந்த வாய்ப்பு முல்லை என்றறியாமல் “எப்படி பட்ட சம்பந்தமா இருந்தாலும் வேணாம்னு சொல்லிடுங்க, எத்தனை வருசம் ஆனாலும் சத்யன் கல்யாணம் நடக்கும்வரை கண்டிப்பா நான் கல்யாணம் செய்துக்கமாட்டேன்” என்று உறுதியாக சொல்லி, பின்னே சுகந்தியிடம் ஜனனியைப் பற்றி விசாரித்து இணைப்பை துண்டித்தான் அன்பரசு.
ரங்கசாமி மகள் என்றறிந்தால் விசயம் பரவி விடும். அன்பரசு சம்மதிக்காத பட்சத்தில் அது தவறாகிடும் என்றுதான் யாரிடமும் பகிராமல் இருந்தார் மாதவன். தற்போது தான் நினைத்தவாறே அன்பரசு திருமணம் வேண்டாம் என்றிட, இதை எப்படி ரங்கசாமியிடம் சொல்வதென்று கவலையானது மாதவனுக்கு.
“விடுங்க மாமா, நம்ம அன்பு மனசுக்கு நல்ல அழகியா கிடைப்பா. இந்த முறை வரட்டும். சத்யன் கிடக்குறான், உன் வாழ்க்கையை பாருனு நான் சொல்றேன். உங்க ஃப்ரண்டுகிட்ட கொஞ்சம் டைம் கேளுங்க” என்றாள்.
“சரிம்மா” என்றார் அரை மனதோடு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.