சத்யனிடம் பதிலில்லாமல் போனாலும் மறுக்காததே அன்புக்கு மகிழ்வை தர, “நான் ஊருக்கு போக பத்து பதினைஞ்சு நாள் ஆகிடும். நீயும் வா. சுகந்திகிட்ட கல்யாணம் பத்தி போன்ல பேசுறதை விட நேர்ல பேசுறதுதான் சரிவரும்” என்றான்.
“டேய் என்னடா? நீ பாட்டுக்கு பேசுற?” என சத்யன் பதற, “நீ வர! சரவணனுக்கும் கால் பண்ணி வர சொல்றேன், இந்த முறை நான் ஊருக்கு போகும்போது எனக்கு முன்ன நீங்க இரண்டு பேரும் வீட்டுல இருக்கனும்” என்றான் கட்டளையாக.
“இவ்வளோ அவசரமாவா? ஊருக்கு வரேன்டா, ஆனா” எனும்போதே இடைமறித்தவன் “தூக்கம் கண்ணை சொழட்டுது, அடுத்த ஷாட் கொஞ்சம் பிரிஸ்க்கா இருக்கனும். கண்ணு சிவப்பா இருந்தா நல்லாயிருக்காது. நான் நாளைக்கு கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தான் அன்பரசு.
*** *** *** *** ***
ரங்கசாமி மாதவனிடத்தில் பேசி இன்றோடு பத்து நாள்கள் முடிந்திருந்தது. மாதவனிற்கு பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே மறுத்திருப்பார். அவருக்கு சம்மதம்தான் போல, அன்பரசு வீட்டிற்கு வந்ததும் கேட்டு சொல்வார் மாதவன் என்று நம்பிக்கையை இழக்காமல் காத்திருந்தார் ரங்கசாமி.
அன்று அன்னையிடம் பேசியதை கேட்டதிலிருந்து அன்பரசை அடிக்கடி நினைப்பாள் முல்லை. அப்படி நினைத்ததாலோ… அல்லது தந்தையின் சிரித்த முகத்தாலோ என்னவோ? தன்னை அவர்கள் மறுக்கவில்லை என்று மனம் இதமாய் உணர்ந்தது.
அன்பரசை திருமணம் செய்துகொண்டால் அப்பாம்மாவை தினமும் பார்த்துக்கொள்ளலாம் என்பதோடு, அத்தை சித்தப்பாக்கள் சண்டையிடும் எண்ணத்தோடு நெருங்கமாட்டார்கள் என்று நிம்மதியானாள் முல்லை. தந்தையிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை நினைக்க, தற்போது சிரிப்புதான் வந்தது முல்லைக்கு.
சொன்னது போல தினமும் தனது வீட்டிற்கு வந்துபோகும் தூரத்தில் வரன் பார்த்துவிட்டார் தந்தை என்று பெருமையாய் உணர்ந்தாள். இன்னும் தன்னிடம் பகிரவில்லை என்றாலும் அன்னையிடம் அன்பரசு பற்றிய பேச்சுகள் விட்டில் அதிகமாக, தன்போல் அன்பரசால் ஈர்க்கப்பட்டாள் முல்லை.
அன்று வீட்டிற்கு வந்து தனது அத்தை மகனையும், சித்தப்பா மகனையும் மிரட்டிய பராக்ரமமும், எந்த பிரச்சனையானாலும் என்னை கூப்பிடுங்க என்று தந்தையிடம் சொன்ன அக்கறையும் அனுதினமும் மனக்கண்ணில் மின்னி மறைந்தது.
அன்பரசு நடித்த காட்சிகளை தேடி தேடி பார்த்து ரசித்தாள். இவன் தனக்காகனவனா என பிரம்மித்தாள்… பூரித்தாள். அவனின் பழைய ஆணழகன் போட்டிகளை யூடியூபில் ஆர்வக்கோளாறில் தேடி பார்த்தவளுக்கு வெட்கம் வந்தது.
ஒற்றை உள்ளாடை மட்டுமே அணிந்து எப்படித்தான் இப்படி போஸ் கொடுக்குறானோ? என வெட்கத்தோடு கடிந்தவள், இனி இப்படி பார்க்கக்கூடாது என்று அன்பரசை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து, படத்திலிருந்தவனுக்கு அரைடிராயரை வரைந்து, பின்னே ரசித்தாள் அவனின் திடாத்கரமான வெற்றுடலை.
அன்பரசோடு தன்னை கற்பனை செய்து பார்த்தவள், ம்… நான் உயரம் என்பவர்கள் அன்பரசோடு நிற்கும்போது என்ன சொல்வார்கள்? அவனின் உயரத்திற்கு தான் மட்டுமே பொருத்தமானவள் என பாராட்டுவார்கள் என நினைக்க பெருமையாக உணர்ந்தாள்.
பெரிய நடிகனாக வருவான், நான் செலிபிரட்டியின் மனைவி ஆகப்போகிறேன் என கர்வம் கொண்டாள். அன்பரசு சம்மதம் கிடைத்ததும் முடிந்தவரை திருமணத்தை சீக்கிரம் வைக்கத்தான் தந்தை நினைப்பார். இதுவரை பார்லர் சென்றதில்லை ஆதலால் திருமணத்தின்போது அலங்காரம் ஒத்துக்காமல் போய்விடக்கூடும்.
நாளை பார்லர் செல்லலாம். திருமணத்திற்கு முன்பாக நான்கைந்து ஃபேஷியல் செய்தால் முகம் இன்னும் பளிச்சென்று ஆகிடும். அப்படியே காஜல், ஃபேஷ் க்ரீம், மற்றும் சிலது வாங்கி வரலாம். அன்பரசு நடிகன் ஆதலால் அவனோடு வெளியில் செல்லும்போது மாடர்னாக தயாராக வேண்டுமென நினைப்பானா?
ஹேர் ஸ்ட்ரெட்னிங் செய்துக்கலாமா என யோசித்தவள், வேண்டாம் வேண்டாம்… எப்படியும் அவனின் சம்மதத்திற்கு பின்னே தன்னோடு பேசுவான்தானே? அப்பொழுது அவனின் பிடித்தங்களை தெரிந்துகொண்டு செய்துக்கலாம் என கடந்த பத்து நாள்களாக இன்பக் கனவுகளில் மூழ்கினாள் முல்லை.
** ** ** **
அன்பு சம்மதிப்பான் என்ற நம்பிக்கையில் ரங்கசாமி இருந்திடக்கூடாது. அது முல்லையின் வாழ்வை கெடுத்தது போல் ஆகிடும். இன்று விசயத்தை சொல்லிவிட வேண்டும் என தனது இன்ஸ்டியூட்டில் இருந்தபடி ரங்கசாமியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் மாதவன்.
இன்ஸ்டியூட் ஜன்னலிலிருந்து பார்த்தாலே வெளியில் தெரியும். வழக்கமாய் ரங்கசாமி காம்ப்ளக்ஸிற்கு பதினொரு மணிபோல் வருவார் ஆதலால் ஜன்னல்புறம் வந்து நின்றிருந்தார் மாதவன்.
எதிர்பார்த்தது போல ரங்கசாமி வர, அவரின் செயலை பார்த்தவருக்கு கவலை ஆனது தற்போது. ம்… எப்பொழுதும் இன்ஸ்டியூட்டிற்கு வரும் மாணவர்களின் சைக்கிளை எடுக்கச்சொல்லி சண்டையிடும் ரங்கசாமி, இன்று காரிலிருந்து இறங்கி தானே சைக்கிளை ஓரமாய் நிறுத்தி, பிறகு தனது காம்ப்ளக்ஸிற்குள் காரை செலுத்தினார். அதுவும் இன்முகத்தோடு.
பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையிலிருக்கிறார் என புரிந்த மாதவனுக்கு, இவரிடம் எப்படி விசயத்தை விளக்குவது என்று கவலையானது.
அன்பரசிடம் பேசுனீர்களா என்று கேட்டிடலாமா என உள்ளம் பேராவல் கொண்டது ரங்கசாமிக்கு. ஆனால் தானாய் மகளையும் கொடுக்க சம்மதித்து, இதையும் கேட்க சங்கடமாக இருக்கவே, வேண்டாம்… மகனிடம் கேட்டிருந்தால் இந்நேரம் நமக்கு சொல்லியிருப்பார். தினமும் இங்கு வருவேன் என்று தெரியும்தானே? அவராக பதில் சொல்லட்டும் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டார்.
நாற்பது வருடங்களாக ரங்கசாமி, மாதவன் குடும்பம் இங்குதான் இருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட இயல்பாக இருவரும் பேசிக்கொண்டதில்லை. அப்படி இருந்தவர் உயிராய் பாவிக்கும் மகளை மகனுக்கு கொடுக்க எப்படி முன்வந்தார்? தன் மகனையும் குடும்பத்தையும் இத்தனை உயர்வார் நினைத்திருக்கிறாரா என வியந்தவர், ஹம்… அந்த பொண்ணு நம்ம மருமகளாக நமக்கு கொடுத்து வைக்கில என வருந்தினார்.
அன்று இவ்விசயம் பேசும்போது ரங்கசாமி முகத்திலிருந்த ஆர்வத்தையும், தன் சம்மதம் வேண்டி அவர் எதிர்பார்ப்பையும் நினைக்க தற்போதும் கூட முல்லையை மறுக்க மனம் வருந்தியது மாதவனுக்கு. ஆனாலும் உண்மையை சொல்லித்தான் ஆகனும், தன் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பார். மனம் நோகாமல் எப்படி சொல்லலாம் என தனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டு ரங்கசாமியை காண சென்றார் மாதவன்.
மாதவன் கேட்டினுள் நுழையும்போதே, எழுந்த ரங்கசாமி, “வாங்க வாங்க மாதவன்” என்றார் உற்சாகமாக.
ரங்கசாமியின் உற்சாக வரவேற்பில் சங்கடமானார் மாதவன். “வரேன்ங்க” என்றபடி முன்னேற, அதற்குள் கடையிலிருந்து ரங்கசாமி தன்னை நோக்கி வரவும், தனிமையில் பேசுவதுதான் சரியென மாதவனும் தேங்கி நின்றார்.
தனது காரை திறந்த ரங்கசாமி, “வாங்க” என்க, பெருத்த சங்கடத்தோடு காரினுள் சென்றார் மாதவன்.
எப்படி ஆரம்பிப்பதென்று தடுமாறிய மாதவனின் முகத்தை கண்ட ரங்கசாமியின் மனம் பதட்டமானது. பெரியவரின் முக வாட்டத்தை சகிக்க முடியாமல் பேச நினைத்ததை விடுத்து, “உங்க பொண்ணுக்கு என்னங்க குறை? அன்பரசை விட உசத்தியா ராஜா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பான்” என்றார் மாதவன்.
ரங்கசாமியின் முகம் வருத்தத்தை காண்பிக்க, ரங்கசாமியை எப்படி கூப்பிட வேண்டும் என்று கூட மாதவனுக்கு தெரியவில்லை. பெண் கொடுக்க நினைத்தவரை அண்ணா என்றும் அழைக்க முடியாமல், தனக்கும் ஐம்பத்தெட்டு வயதாகியிருக்க பெரிவரே என்றழைத்தால் வருந்துவாரோ என்று, “ஐயா இதுல வருத்தப்பட ஒன்னும் இல்லங்க. என் மகனுக்கு பிடிக்காம வேணாம்னு சொல்லலைங்க.
தன் கல்யாணம் நடந்துட்டா பெரியவன் வாழ்வை சரி செய்ய முடியாம ஆகிடுமோனு அன்பு பயப்படுறான். சத்யன் மறு கல்யாணம் செய்யமாட்டேனு பிடிவாதமா நிக்குறான். இதான்ங்க பிரச்சனை. நல்ல இடத்துலயிருந்து பொண்ணு கொடுக்க நினைக்கிறாங்கனு சொன்னேன். யாருனு கூட கேட்காம கல்யாண பேச்சே வேணாம்னு முடிவா சொல்லிட்டானுங்க.
அதோட என் தங்கை பொண்ணும் வாழாம இருக்கிறா, நம்மளை விட பெரியவங்க வாழ்க்கை இப்படி இருக்கும்போது எப்படி கல்யாணம் செய்து சந்தோசமா வாழ்றதுனு அன்பு யோசிக்கிறானுங்க. எங்க குடும்ப பிரச்சனை இப்போதைக்கு தீரும் பிரச்சனை இல்லைங்க, வருசக்கணக்கானாலும் ஆகும்.” என்றார் பொறுமையாக.
உண்மையில் அன்பரசன் வேண்டாம் என்றானோ? அல்லது இவருக்கு பிடிக்கலையோ… ஏதோ ஒன்று. மொத்தத்தில் தன் மகளை மருமகளாக்கிக்கொள்ள விருப்பமில்லை என்பதை விளக்கிய பின்னே, மேலும் இதுபற்றி பேச தன்மானம் இடம் கொடுக்காமல் போக, “சரிங்க” என முடித்தார் ஒற்றை சொல்லோடு.
“என்னை தவறா நினைக்காதிங்க. முல்லையை விட நல்ல பொண்ணா அன்புக்கு கிடைக்குமா தெரியாது. ஆனா அன்பை விட நல்ல பையனாதான் உங்க மகளுக்கு கிடைப்பான்” என தேற்றி, “இதை மனசுல வச்சிக்கிட்டு வேற ஏதும் உதவினா கேட்காம விட்டுடாதிங்க. கஜேந்திரன் மாதிரி வேறு யாரும் பிரச்சனை செய்தா தயவு செய்து என் நம்பருக்கு கூப்பிடுங்க. என் மகனும் இதை சொல்லிட்டுத்தான் போயிருக்கான்” என்று தனது கார்டை நீட்டினார் மாதவன்.
“உங்க நம்பர் என்கிட்ட இருக்குங்க” என ரங்கசாமி கார்டை மறுக்க, வருந்துகிறார் ரங்கசாமி என்றுணர்ந்த மாதவனின் மனம் தவித்தது. தன் மகன் தற்போதைக்கு திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டான் என்று அன்றே மறுத்திருக்கனுமோ?
எதற்கும் ஒரு வார்த்தை அன்பரசிடம் கேட்ட பின்னே சொல்லலாம் என்று நினைத்தது தவறோ? இவர் கேட்டு பத்து நாள்களுக்கு மேலானதால் சம்மதிப்போம் என்று நம்பிட்டாரோ? என்ற கேள்விகள் வலம் வர, ரங்கசாமியின் முகம் பார்க்கவே தயங்கினார் மாதவன்.
ஆனாலும் அதற்குமேல் ரங்கசாமி முன் இருக்க முடியாமல் போக வேறு வழியின்றி “சரிங்க நான் கிளம்பறேன்” என்று தன்மையாகவே சொல்லி விடைபெற்றார்.
அன்று ரங்கசாமி வீட்டில் நடந்த சொத்து பிரச்சனையைப் பற்றி அன்பரசு சொன்னது நினைவில் வர, நலமோடு இருக்கும்போதே மகளுக்கு அனைத்தும் செய்திட வேண்டும் என நினைத்திருப்பார் போல. அதுதான் இத்தனை அவரசமாய் வரன் பார்க்கிறார்.
யாரோ பெற்ற மகளை உயிர்போல் பாவித்து வளர்க்கும் இவரின் உயர்ந்த எண்ணித்திற்கே நல்ல மருமகன் கிடைப்பான் என்ற நம்பிக்கையோடும், மகாலஷ்மி போன்ற பெண் தன் மகனுக்கு கொடுத்து வைக்கவில்லை என்ற வருத்தத்தோடும் தனது இன்ஸ்டியூட்டிற்கு சென்றார் மாதவன்.
வீட்டிற்கு வந்த ரங்கசாமியிடம், “என்னங்க அதுக்குள்ள வந்துட்டிங்க? லன்ச் டைம்க்குத்தானே வருவிங்க? உடம்பேதும் படுத்துதா?” என தவித்தார் ஜானகி.
“நல்லாத்தான் இருக்கேன் ஜானு” என்றார் தளர்வாக.
“அப்புறம் ஏன் முகம் இவ்வளோ சோர்ந்திருக்கு? உங்க தம்பி, அக்கானு யாராவது போன் செய்தாங்களா?” என்றார் கவலையாக.
அன்னை தந்தையின் தவிக்கும் குரல் கேட்டு முல்லை வெளியே வர, மகளை கவனியாத ரங்கசாமி, “அதெல்லாம் இல்ல ஜானு” என்று மாதவன் சொன்னதனைத்தும் சொல்லி, “அன்பரசு சம்மதிக்கிலன்றதை தாண்டி முதல்ல மாதவனுக்கே இதுல விருப்பம் இல்ல போல. ரொம்ப நம்பியிருந்தேன். அவர் நிராகரிக்கவும் மனசு வலிக்குது. நம்ம பொண்ணுக்கு என்ன குறை ஜானு?” என்றார் வேதனையோடு.