“நம்ம ராகுலுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்கோம். லவ் பண்ணிட்டான், அதான் அவசரமா முடிக்க வேண்டிய சூழ்நிலை. அதனால தான் ஃபோன்ல தகவல் சொல்றேன். நீங்க அவனுக்குத் தாய்மாமன் உங்களுக்கு முக்கியமா சொல்லணுமே?!” என்றார்.
“நான் மட்டுமா அத்தான் தாய்மாமன். ராகுலுக்குத் தான் மூணு பேர் இருக்காங்களே நான் வனஜாவுக்கு பெரியப்பா பையன் தானே?” என்று கூறி விட்டான் நறுக்கென்று.
“ஹ்ம்ம் மூணு பேர் இருந்து என்ன பிரயோஜனம்?” என்று பெருமூச்செறிந்தவரை கைபேசியின் வழி முறைக்க தான் முடிந்தது அவனால் .
“கல்யாணத்துக்கு வந்திடு மாப்பிள்ளை , நீதான் எல்லாம் செய்யணும். வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் “என்று சொல்ல, நிரூபன் பதில் ஏதும் பேசவில்லை.
” என்ன மாப்ள நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியா இருக்கியே?, நீயும் உங்க அண்ணனுகளுக்கு தொணையா வராமல் இருக்கலாம் நினைச்சியா?” என்று நறுக்கென்று கேட்டுவிட ,
நிரூபனோ,” அதெல்லாம் இல்ல மாமா. நான் அவங்க கிட்டயும் பேசுறேன், நானும் வரேன்” என்று கூறிவிட்டான். ஆனால் இது அத்தனை இலகுவாக நடக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
ஏனெனில் சொந்த அண்ணன்களே திருமணத்திற்கு செல்லாமல் இருக்கையில், நாம் சென்று சீர் செய்தால் ஏதேனும் பிரச்சனையை கிளப்பி விடுவார்கள்’ என்று யோசித்தான்.
அதற்காக தமக்கையையும் விட முடியாது. யாருமே போகாமல் இருந்தால் நடராஜன் என்ன பேசுவார் என்று அவன் அறிந்தது தான்!,
அவன் இதையெல்லாம் யோசிக்கையிலேயே,” ஒரு வாரத்துக்கு முன்னமே வந்துரு மாப்பிள்ளை. அப்பதான் என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது வழிமுறை எல்லாம் சொல்லுவேனா ?”என்றார் நடராஜன்.
வனஜா கைபேசியை வாங்கி ,”நிரூபா !”என்றவர் அப்படியே நகர்ந்து நடராஜனை விட்டு தனியே வந்தார்.
“நிரூபா மன்னிச்சிடு. எனக்கும் வேற வழி இல்ல ராகுல் காதலிச்சு கல்யாணம் பண்றது அண்ணன்களுக்கு புடிக்கல. அவங்க பொண்ணுங்கள கட்டுவாங்கன்னு நினைச்சு இருப்பாங்க போல, ஆனா இவன் லவ் பண்ணி வரவும், அவங்களுக்கு அதுல விருப்பமில்லை. ஆளுங்க வேற நம்ம ஆளுங்க இல்ல. ஆனாலும் எப்படி ஏத்துக்கறீங்கன்னு சண்டைக்கு நின்னாங்க. நீ தான் எப்படியாவது அவங்களையும் கூட்டிட்டு வந்துடனும். இல்லாட்டி இந்த மனுஷன் என்ன பேசியே கொன்றுவாரு!” என்று படபடப்பாக பேசிவிட்டு ,”நான் வைக்கிறேன். அவர் வர்றாரு, தயவு செய்து எப்படியாவது எல்லாரும் குடும்பமா வந்துடுங்க “என்றார் வனஜா.
“சரிமா. நான் பாத்துக்கிறேன்.” என்று இணைப்பை துண்டித்த நிரூபன் ,’தன் அண்ணன் வீட்டிற்கு போக வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.
‘இன்னும் அங்கே என்ன கலவரங்கள் வெடிக்கப் போகுதோ?’ என்று யோசித்தபடி முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு கிளம்பினான்.
நிரூபன் சக்ரவர்த்தி மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறான். அதனை சூப்பர் மார்க்கெட்டாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறான். வயதோ நாற்பத்தி மூன்றை தொட்டு விட்டது.
திருமணம் ஒரு முறை நடந்து விட்டாலும், இதுவரை தனித்து தான் வாழ்கின்றான். மனைவியாக்கப்பட்டவள் ஒரு வாரத்திலேயே மரணித்து விட்டாள். அதன் பிறகு அவன் திருமணம் என்ற ஒன்றை நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதன் பிறகு மளிகைக்கடையும் , அவன் வீடும் அவனது தனிமைக்கு மருந்தாகி இருந்தது.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான். இவன் வயதில் உள்ள சில ஆண்களுக்கெல்லாம் லேசாக முடி உதிர்ந்து வழுக்கை துவங்கி இருக்க இவனுக்கோ அடர்த்தியான கேஷம்.
‘காதோரத்தில் நரைச்ச முடி !’என்று பாட்டுப் பாடத் தோன்றும் அளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும். முகத்திற்கு தகுந்த மாதிரி மீசை. ஆனந்தம் சீரியல் வரும் துரை சிங்கத்தைப் போல இருப்பான். சுருக்கமாக சொல்லப்போனால் மனமும் அதை விட இளமையாக துள்ளலாக இருக்கும் அவனுக்கு, எதைப் பற்றியும் பெரிதாக கவலை கொள்ள மாட்டான்.’ கவலைப்பட்டால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?’ என்பது போன்று குணமுள்ளவன்.
கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது கைபேசி அழைத்திட, இணைப்பை ஏற்றான்.
“நிரூபண்ணா சக்கரை மூட்ட வந்து இருக்கு, கடைக்கு வரீங்களா?” என்று கடையில் வேலை செய்யும் பையன் அழைக்க ,”இந்தா கிளம்பிட்டேன் டா வந்துடறேன்” என்று இணைப்பை துண்டித்து விட்டு , அவசரமாக தன் வண்டியை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். கருஞ்சிவப்பு நிற பஜாஜ் பல்சர் இயக்கியவன், இடையில் வேறு எங்கும் நிற்காமல் நேரே கடைக்கு சென்று விட்டான்.
” ஏண்டா வந்தா இறக்க வேண்டியது தானே?, இதுக்கு நான் வரணுமா?, வருஷக்கணக்கா வேலை பாக்குற. ஆனாலும் நான் வந்து நிற்கணும்னு நினைச்சா எப்படி டா ?”இன்று கடைப்பையனை கடிந்து கொண்டவன், பின்னர் சர்க்கரை மூட்டை கொண்டு வந்தவரிடம் திரும்பி,” அந்த நாலு மூட்டை இறக்கிடுங்கண்ணே” என்றான்.
” ஏ தம்பி இந்த மாசத்துல இருந்து நாட்டு சக்கரை வாங்கிக்கிறேன் சொன்னீங்களே, அதுவும் ஒரு மூடை கொண்டு வந்து இருக்கேன். பாக்கறீங்களா?” என்று அவர் கேட்க
“இறக்கிடுங்கண்ணே… நல்லா தரமா தானே இருக்கும். ஏன்னா மூட்டைல வாங்குறேன். சக்கர கல்லு மண்ணு இருந்தா சரி வராது மறுவடி யாரும் வாங்க மாட்டாவ. அதுக்குன்னு தான் நானே நேரா போய் காய்ச்சற இடத்திலேயே வாங்கிட்டு வர்றது” என்று கூற
” அதெல்லாம் சுத்தமா தான் தம்பி செய்து எடுத்துட்டு வர்றோம். இது அண்ணனே காய்ச்சறாங்க, உங்களுக்கு தெரியுமில்ல. சர்க்கரை எப்படி இருக்கோ அதே போல தான் நாட்டு சக்கரையும் நல்லா தரமாவே செய்கிறார்கள் அவங்க வீட்டுக்கு கூட அத தான் தம்பி எடுத்துட்டு போறாங்க, நம்பி வாங்கலாம் “என்று மூட்டையை உதவியாளனை இறக்க வைத்தார் .
“பேங்க்லேயே போட்டுருங்க தம்பி. இன்னொரு நாலு இடத்துக்கு இறக்க வேண்டியது இருக்கு, நான் கையில வச்சிருந்தா கணக்க விட்டுருவேன்” என்றார் அவர்.
“சரிங்கண்ணே ஒரு ஜூஸ் குடிச்சிட்டு போங்க “என்றவன் தனது உதவியாளனை அழைத்து குளிர்சாதன பெட்டியில் இருந்த ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்து வரும்படி பணித்தான்.
பழச்சாறை குடித்துவிட்டு அவர்கள் கிளம்ப, தன் உதவியாளரிடம் திரும்பியவன் ,”அடேய் கடையை பார்த்துக்கோ. நான் அண்ணன் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன். சாப்பிடுற நேரத்துக்கு வந்துருவேன்டா. அப்படி வரலைன்னாலும் கடையை போட்டுட்டு, நீ போய் சாப்பிட்டு வந்துடு. சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்காத” என்று எச்சரிக்கையாக கூறிவிட்டு கிளம்பினான்.
***********
கவின் திண்டுக்கல்லில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றவன், பூரணியை பற்றிய யோசனையிலேயே இருந்தான்.
‘ ஏன் சித்தி இப்படி இருக்காங்க?, அந்த பொண்ணு சொன்னது போல அவங்க வெளியிலேயே போனதில்லையா?, இப்படி அடக்கி ஆளுற வீட்ல ஏன் அவங்க இருக்கணும் ?’என்றெல்லாம் யோசித்தவன்,
தனது அன்னையைப் பற்றியும் நினைத்துக் கொண்டான்.
‘ ஏன் அம்மாவும் போய் சித்தியை பார்க்கல, அப்படி என்ன பாசம் இல்லாமல் போயிட்டாங்க?, இப்ப மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருக்காங்க. இதைப்பற்றி அவங்க கிட்ட பேசணும்’ என்று நினைத்துக் கொண்டே காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குள் நுழைய மதிவாணனின் சத்தம் காற்றைக் கிழித்து கொண்டு வந்தது.
” யாரை கேட்டு போய் பத்திரிக்கை வைக்கப் போனான் அவன்?, மீசை முளைச்சிட்டா அவன் இஷ்டத்திற்கு ஆடுவானா?, அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்டானா?, என்னை கேட்காமல் எப்படி போய் அவங்களுக்குப் பத்திரிக்கை வைக்கலாம் ?”என்று தாம் தூம் என குதித்துக் கொண்டிருந்தார்.
“அப்பா தெரு வரைக்கும் சத்தம் கேட்குது , எதுக்கு கத்துறீங்க?” என்று புருவத்தை சுளித்தபடி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் கவின் .
“வாடா !,நீயும் என் உசுர எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டு தான் அலைஞ்சிட்டு இருக்கியா? கொஞ்சம் கூட அப்பாண்ற மரியாதை இல்லாம= நான் என்ன நினைப்பேன் ஏது நினைப்பேன் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் அப்படின்னு நினைக்காமல் நீ பாட்டுக்கு அவளுக்கு போய் பத்திரிகை வச்சிட்டு வந்து இருக்க ?, என்ன குளிர் விட்டு போச்சா எல்லாத்துக்கும் ?!”கடுப்பாக கத்தியவரை அலட்சியமாக பார்த்தான்.
” இப்ப என்ன நடந்தது ?எல்லாருக்கும் பத்திரிகை வைக்க தானே செய்கிறோம், உங்க வீட்டு சொந்தங்களுக்கு எல்லாம் வச்சீங்க இல்லையா? அப்போ அம்மா வீட்டு சொந்தமான சித்தி ஒரு ஆள் தானே இருக்காங்க அவங்களுக்கும் வைக்கிறது தானே முறை. அம்மாவும் எதிர்பார்ப்பாங்க தானே தங்கச்சி தன் மக கல்யாணத்துக்கு வரணும்னு, இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்கன்னு இப்படி கத்துறீங்க? என்றான் கவினும் பதிலுக்கு .
அவரோ ,” என்ன தப்பா?, எனக்கு அவளை பிடிக்காதுன்னு உனக்கு, உங்க அம்மாவுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்தும் நீ போய் பத்திரிகை வச்சிட்டு வந்து இருக்க, அப்போ எனக்கு இந்த வீட்ல என்ன மரியாதை?, இல்ல எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் நடக்கணுமா? என்று கோபத்துடன் கேட்க
“ப்ப்ச், ஜஸ்ட் ஒரு பத்திரிக்கை. அதுதானேப்பா வைக்கப் போனேன் இதுல என்ன தப்பை நீங்க பார்த்தீங்க. இல்ல எனக்கு புரியல., அவங்க உறவு வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு அவங்க உங்களை என்ன செஞ்சாங்க?, ஏதாவது ரீசன் வேணும் இல்லையா?, எதுவுமே இல்லாம அவங்களை ஒதுக்கி வைக்கிறதுக்கு என்ன காரணம் ?”என்று அவனும் விடாமல் கேட்க
மதிவாணன் கோபத்துடன்,” ஏதோ செய்யுங்க இதுக்கு மேல நான் எதுவும் சொல்ற மாதிரி இல்ல. ஆனா அவ வந்தா நான் பேசமாட்டேன் அவ்வளவுதான் அவளால ஏதாவது பிரச்சனை வந்தது அப்படின்னா பார்த்துக்கோங்க” என்றார் அவர்.
” இல்லை எனக்கு புரியல என்ன பிரச்சனை வந்துரும்னு நீங்க நினைக்கிறீங்க?, அவங்க கல்யாணத்துக்கு வரப் போறாங்க. வந்துட்டு அட்டென்ட் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு திரும்ப போகப் போறாங்க, இதுல என்ன பிரச்சனை வரும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்று என்று கேட்க
மதிவாணனும்,” நான் எதுவும் சொல்ல விரும்பல. அதான் பத்திரிக்கை வச்சிட்டு வந்தாச்சுல்ல அதுக்கு மேற்பட்டு நான் பேசி என்ன ஆகப்போகுது?” என்று முடித்துக் கொண்டார்.
சரண்யாவோ,”ஹப்பா …!,இந்த மனுஷனுக்கு எதுக்கு தான் இவ்வளவு கோவம் வருதோ?” என்று முணுமுணுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட்டார்.
மதிவாணன் கத்தியதெல்லாம் பெரிய விஷயமாக அவர் எடுத்துக் கொள்ளாதது கவினுக்கு வியப்பாக இருந்தது.
‘ இந்த அம்மா என்ன… அவர் அவ்வளவு சத்தம் போட்டாரு, எதுவும் நடக்காதது போலவே உள்ள போறாங்க’ என்று நினைத்து சிரிக்க,
கமலினி வெளியில் வந்தவள் ,”சாரி அண்ணா உங்களுக்கு ஒரு தண்ணி கூட குடுக்க விடாமல் கத்திக்கிட்டு கிடக்கிறார் இந்தாங்க “என்று தண்ணீரை நீட்டியவள் ,”சித்தி எப்படி இருக்காங்க? “என்றாள்.
“நல்லா இருக்காங்க என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறார்கள் கமலி என்றான் உண்மையை உடைத்து.
மதிவாணனும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
சரண்யா வெளியே வந்தவர் ஏண்டா தம்பி கையோடு கூட்டிட்டு வரேன்னு சொன்ன, ஏன் கூட்டிட்டு வரல?” என்று கேட்க,” ஏம்மா பத்திரிக்கை வைத்ததுக்கே அப்பா இந்த சத்தம் போடறாங்க. இதுல நீங்க கையோட கூட்டிட்டு வர சொல்றீங்களே எந்த தைரியத்துல சொல்றீங்க?!” என்றான் வியப்பாக
” அவர் என்னைக்கு தாண்டா திட்டலை, முன்னாடியெல்லாம் அவர் பேச்சைக் கேட்டு என் தங்கச்சியை பார்க்காமல் இருந்துட்டேன். இனியும் ஏன் இருக்கணும்? “சரண்யா சொல்ல
கவின் சிரித்தபடியே,” இத்தனை நாளும் இருந்தீங்களே அப்பவே எல்லாம் உங்களுக்கு தோணலையா தங்கச்சியை போய் பார்க்கணும் கொள்ளணும்னு. இப்போ ஏதோ புதுசா அக்கறை படுற மாதிரி இருக்கு, அவங்கள பார்த்து இருந்தா நல்லா இருந்திருக்கும்மா ஏன் இப்படி செஞ்சீங்கன்னு எனக்கே தெரியல” என்றான் சங்கடமாக .
“ஏண்டா என்ன ஆச்சு அவ அங்க நல்லா தானே இருக்கா எந்த பிரச்சனையும் இல்லையே? அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் நல்லா தானே பார்த்துப்பாங்க. ஏதும் பிரச்சனையா கவி?, நல்லா இருக்கா தானே?!” என்று படபடத்தவரை அமைதி காக்கும்படி கூறியவன்,” அவங்க நல்லா இருக்காங்கன்னும் சொல்ல முடியாது. நல்லா இல்லைன்னும் சொல்ல முடியாது. நான் பார்த்தவரை அங்கே ஒரு மனுஷியா இருக்காங்க. ஆனா நல்லா இல்ல அவங்க” என்றான் தெளிவாக.
” என்னடா கவி இப்படி சொல்ற நீ?, எதுவும் கொடுமைப்படுத்தினாங்களா அப்படி எதுவும் உனக்கு தெரிந்ததா?” என்று மறுபடியும் கேட்க,” அம்மா கொடுமைப்படுத்துறது அடிக்கிறது, உதைக்கிறது அந்த மாதிரியா? அப்படின்னா அவங்க அதெல்லாம் நல்லா இருக்காங்க, ஆனா நான் பார்த்தவரை அவங்க நல்லா இல்லம்மா. கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு அவங்க வரணும் அவங்களோட வாழ்க்கையில ஏதாவது மாற்றம் வரணும், நான் வர வைக்க விருப்பப்படுகிறேன். அதுக்காவாவது சித்திய கூட்டிட்டு வருவேன். இதுவரை அவங்கள தனியா விட்டதே போதும் , அங்க இருக்க ஒரு பொண்ணு சொல்றா அவங்க இதுவரை வெளியவே போனது இல்லைன்னு, அப்ப பாத்துக்கோங்க. அவங்க நல்லா இருக்காங்களா இல்லையான்னு..இப்போ நீங்க சொல்லுங்க” என்றான் சற்று கோபத்துடன்.
மதிவாணன் அவர்களின் சம்பாஷணைகளை கேட்டபடி தான் அறைக்குள் இருந்தார்.