பூரணி கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டுச் செல்ல மதுரா சரண்யாவோடு சென்று நின்று கொண்டாள்.
“ஏன்டா…பூ வைக்கலையா?” என்ற சரண்யா அங்கிருந்த மல்லிகையை சூடி விட்டார்.
“வெளியே பூ ஓவர் விலை அத்தை, அதான் வாங்கலை வந்துட்டேன். மோகன் மாமா வாங்கித் தரேன்னார். நான் தான் வம்படியா வேண்டாம்னு இழுத்துட்டு வந்தேன்.” என்றதும்,” அதனால என்ன இங்கே தான் இவ்வளவு பூ இருக்கே! “என்றார் சரண்யா.
“ஆக்ஸுவலா உங்க கிட்ட சண்டை போடத் தான் நான் வந்தேன் தெரியுமா ?”என்றாள் மனதை மறையாமல்.
“எதுக்கும்மா?!” என ஆச்சரியத்துடன் கேட்க
“பின்னே, உங்க தங்கச்சியை இத்தனை வருஷமா பார்க்காம இருந்துட்டிங்களே, அதுக்கு தான். சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அத்தை. நீங்க வந்து அவங்களை அடிக்கடி பார்த்திருக்கலாம்” என்று கூறி விட்டாள் வேகமாக.
“உனக்கேத் தோணி இருக்குன்னா, நான் நினைக்காம இருந்திருப்பேனா சொல்லு. ஆரம்பத்தில் அவ மேல கோபமிருந்தது. சொன்னப் பேச்சை கேட்காம இப்படி நடந்துட்டாளேன்னு வருத்தம் இருந்தது. ப்ப்ச் அதெல்லாம் விடுடா, பெரிய நூல்கண்டு சிக்கல் மாதிரி விலக்க விலக்க முடிச்சு எங்கே இருக்குன்னே புரிபடாம போயிட்டு இருக்கும்” என பெருமூச்செறிந்தவர்,” இனிமேலாவது அவளை அடிக்கடி பார்த்துக்கணும்” என்றார்.
“சரி பரவாயில்லை விடுங்கத்தை. இனிமேலாவது எங்கத்தை சந்தோஷமா இருக்கணும்” என்றவள்,” அடிக்கடி வர முடியாட்டாலும் அட்லீஸ்ட் எங்க ஊர்த் திருவிழா, விசேஷம் இதுமாதிரிக்காவது வந்துட்டுப் போங்கத்தை” என்றாள்.
“கண்டிப்பா வரேன்டா. பரவாயில்லை நான் வந்து பார்க்காட்டாலும் அவளைப் பார்த்துக்கிட்டீங்களே ரொம்ப சந்தோஷம்மா” என சொல்லி விட்டு வேலையை கவனிக்க ,”ம்மா!” என்று அழைத்தான் கவின் மதுராவைப் பார்த்தபடி.
‘பார்வையைப் பாரு கண்ணை நோண்டி கையில் தரணும்’ என்று முனகிக் கொண்டாள்.
“இந்தா கவி” என்று எடுத்து தந்தவர் ,”அப்பா எங்கடா?, உர்ருன்னே இருக்கார் கொஞ்சம் கூட இரு கவி” என்று சொல்ல
“ம்மா பொண்ணு மேரேஜ் பண்ணிட்டுப் போறா அவருக்கு கஷ்டமா இருக்காதா… வருத்தமா இருக்கிறதை உர்ருனு சொல்றீங்களே?” என்று சிரித்தான்.
“அடப் போடா அவர் எந்த நேரத்தில் என்னக் கேட்பாரோனு நானே பயந்து போயிருக்கேன், நீ வேற” என்றதும் ,”நோ இஷ்யூ மா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேனில்ல. வரவே மாட்டாங்கனு சொன்ன சித்தியையே வரவழைச்சுட்டேன்” என்றான் மதுராவைப் பார்த்தபடி.
‘ம்ம்க்கும் ரொம்பத்தான் ‘என்று அவனைப் பார்த்து நாக்கைத் துருத்தி ஒழுங்கு காட்ட ,அவனோ ,”அடிங் !”என்று வாயசைத்தான் சரண்யா பார்க்காதவாறு
“திமிர் பிடிச்சவ” என்று முனகியபடி கைக்குட்டையை வாங்கிச் சென்றான்.
********
“விஜயா கேட்டியா சங்கதியை? , அந்த வெள்ளைக்கலர்ல பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்துச்சே, அது தான் வனஜா புருஷன் காதலிச்ச ஆளாம். அந்தப் பொம்பளை ராகுலுக்கு சின்ன மாமியாராம் போ “என்ற பார்வதி களுக்கி சிரித்தபடி ,”நடராசன் பாடு இனி கொண்டாட்டம் தான் போ “என்றார்.
“ஏக்கா நீ வேற… இதுல என்னத்த கொண்டாட்டம் அவருக்கு?” என்று விஜயா கூற
பார்வதியோ,” ஏன் இல்ல உசுருக்குசுரா காதலிச்சவ இனிமே சொந்தக்காரி ஆகிடுவா. மகளைப் பார்க்க வர்றேன்ற சாக்கில நடராசனையும் பார்ப்பா…அப்பறம் என்ன எது பத்திக்குமோ யாருக்குத் தெரியும்.? ஏற்கனவே நடராசனை இந்த வனஜா மவனைக் காட்டிக் காட்டித் தான் சர்க்கஸுல சிங்கத்தை சாட்டைக்கு பணிய வைக்கிற மாதிரி இழுத்துப் புடிச்சிருக்கா. இனிமே சாட்டை எல்லாம் செல்லுபடி ஆகாது. அந்தப் பொம்பளைக்கு புருஷன் வேற இல்லையாம். போதலையா ரெண்டு பேரும் தொடுப்பு வச்சுக்க” என்று நொடிக்க
“நீ என்னக்கா இப்படி சொல்ற இந்த வயசுல போய்…” என்று விஜயா முகம் சுளிக்க
“ஆம்பளை ஆசைக்கு ஏது வயசு.?நான் என்னவோ இல்லாததை சொல்ற மாதிரி சொல்ற…இனி வனஜா பாடு திண்டாட்டம் தான் போ” என்று மெல்லிய குரலில் உரைத்தாலும் அது வனஜாவிற்கு நன்றாகவே கேட்டது.
“எக்கா நீ சும்மா இரு , யார் காதுலயாவது விழுந்துத் தொலைக்கப் போகுது” என விஜயா கண்டிக்க
“இங்க யாருடி இருக்கா?, எல்லாந்தான் வரவேற்புல இருக்காங்களே !”என்று பார்வதி பேசி விட்டு ,”சாப்பிட போவும் போது எழுப்பு அசந்து வருது நான் கொஞ்சம் கண்ணசருறேன் “என்றபடி படுத்து விட்டார் வனஜாவின் உறக்கத்தைக் கேள்விக்குறி ஆக்கி விட்டு.
வனஜாவிற்கு படபடப்பாக இருந்தது. ‘இப்படியும் நடக்குமா ?என் புருஷன் அவ பின்னாடி போயிருவாரா…? அது நடந்தா நான் உசுரோடவே இருக்க மாட்டேன். ‘ என்றெல்லாம் எண்ணியவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
நெஞ்சை நீவியபடி மணமகன் அறையில் சென்று அமர்ந்து விட்டார். வியர்த்து வழிந்தது அவருக்கு. முகத்தைத் துடைத்துக் கொண்டு தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு வெளியேறினார்.
ரிஷெப்ஷன் முடிந்து மணமக்கள் அவரவர் அறைக்குச் சென்று விட்டனர்.
“காலையில் நேரத்திலேயே எழுந்துக்கணும் கமலி. ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்காம தூங்கணும் சரியா!” என மகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்க, கமலி தோழிகளோடு சென்று விட்டாள்.
இங்கே வனஜாவிற்கு மனமெல்லாம் போராட்டமாக இருந்தது. நடராஜன் அப்படி கூறி விட்டப் பிறகு எதுவும் கேட்கவும் முடியவில்லை. சரண்யாவிடம் பேசலாம் என்றால் நடராஜன் தான் பூரணியின் முன்னாள் காதலன் என்று அவர்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. பூரணியை இங்கிருந்து அனுப்ப வேண்டும் இனி அவள் உறவே கமலி குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு பேசி விடலாம் என்றாலும் இப்போதைக்குத் திருமணம் முடிந்து விடட்டும், பிறகு மகளோடு உறவை வளர்க்கலாம் என அவள் நினைத்தால் என்ன செய்வது? காலம் முழுதும் நம்மால் இதே சிந்தனையில் உழல முடியாதே?!’ என்ற பயமும் இருந்தது.
நிரூபன் அங்கே அமர்ந்திருந்தான் இனியனோடு. அவர்களுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தனர் மதுரா, சரண்யா, பூரணி மூவரும்.
‘காலையில் திருமணம் இப்போது வந்து இந்த பெண் வேண்டாம் என்று எப்படி சொல்லுவது?’ எதுவுமே புரியவில்லை வனஜாவிற்கு. ராகுலுக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டார் வனஜா.
“நிரூபா!” என்று குரல் கொடுக்க அவன் கவனித்து விட்டு எழுந்து வந்தான்.
“என்ன வனஜா… ஏதாவது வேலையா?” என கேட்டதும்,” என் கூட வா !”என்று அழைத்தார்.
“அங்கே உட்கார்ந்து இருக்கறது யார்னு தெரியுதா உனக்கு?” என கேட்க
“யாரு?” என்றான் புருவம் முடிச்சிட
“என் சம்மந்தி பக்கத்தில்” என கைகாட்ட
“ம்ம்ம், பொண்ணோட சித்தி. அது அவங்க நாத்தனார் பொண்ணு , என் கூட உட்கார்ந்து இருந்தவங்களும் அவங்க ரிலேஷன் தான். திண்டுக்கல் பக்கம் அய்யலூர் தானாம். ட்ரெயின்ல வரும் போது சேர்ந்து தான் வந்தோம் வனஜா. ரொம்ப நல்லாப் பழகுறாங்க” என்றான் இயல்பாக.
“அவ தான் உங்க மாமா காதலிச்ச பொண்ணு “என்றார் வனஜா எரிச்சலாக
“என்ன ?!”என்று அதிர்ந்த நிரூபன் ,”நிஜமாவா… மாமாக்குத் தெரியும் தானே ?, அப்புறம் எப்படி, ராகுலுக்காகவா இந்த விஷயத்தை ஒத்துக்கிட்டாரு?!” என்று கேட்டான் நம்பவியலாமல்.
“பாரு உனக்கே இந்த சந்தேகம் வருதுல்ல” என்று வனஜா, நிரூபனும் தன்னைப் போல் தான் நினைக்கிறான் என்றெண்ணி கேட்க
“அடச்சே! இதென்ன பைத்தியக்காரத்தனமா கேட்கிற…? நான் கேட்டது முன்னவே தெரியுமான்னு…நம்ம ராகுலுக்காக முன்னாள் காதலியை தங்கச்சி முறையில் ஏத்துக்க தயார் ஆகிட்டாரானு கேட்டேன். அந்த வகையில் அவரைப் பாராட்டுறேன் நான்” என்று சிலாகிப்பாக சொல்ல
“ம்க்கும், அவர் பழைய காதலை புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பா நினைக்கிறாரோ என்னவோ?”
“என்ன நீ மென்டல் மாதிரி பேசுற… இந்த வயசுக்கு அப்புறம் அவர் பழைய காதலை புதுப்பிச்சு என்ன செய்யப் போறாரு?. அவர் அவங்களை மறந்து கூட இருக்கலாம், வனஜா தேவை இல்லாம யோசிக்காத “என்றான் அவன்.
“எனக்கு நம்பிக்கையே இல்லை நிரூபா… கடைசிவரைக்கும் அவர் எனக்கே எனக்குன்னு இருப்பார்னு தோண மாட்டேங்கிது. மனசெல்லாம் ஒரே போராட்டமா இருக்கு. நெஞ்சே வலிக்குது எனக்கு” என சொல்ல
“நீ ரொம்ப குழம்பி போயிருக்கன்னு நினைக்கிறேன். இது மாதிரி வேற யார் கிட்டயும் பேசி வைக்காத. நீயே அவரை அசிங்கபடுத்துற மாதிரி இருக்கு இது” என்றவன்,” மாமா உன் கிட்ட நல்லா தானே இருக்கார்?” என்றான்.
‘ஆமா கிழிச்சாரு’ என முனக
“வனஜாக்கா…நம்ம வீட்டில் சீர் கேட்கிறது எல்லாம் ஒரு ஓரத்தில் வை. அது வேற விஷயம் உன் தனிப்பட்ட விஷயத்தில் அவர் உன்னை நல்லா தானே வச்சிருக்கார். கார் பங்களா உன் பேர்ல சொத்து னு எல்லாம் தந்திருக்கார். ரெண்டாவது நீ ஆசைப்பட்டன்னு சென்னையில் குடி வச்சிருக்கார். உன் வீட்டில் உள்ள ஆட்கள் கிட்ட அவர் கடுமையா நடந்திருக்கலாமே ஒழிய உன்னை இதுவரை அதட்டிக் கூட அவர் பேசினதில்லைனு எனக்குத் தெரியும். அதனால இதை நினைச்சு உன் வாழ்க்கையில் நீயே குழப்பத்தை உண்டாக்கிக்காத. ராகுலுக்கு அடுத்து பூர்வி இருக்கா நினைவிருக்கட்டும். இப்போ போய்த் தூங்கு காலையில் ப்ரெஷா மேரேஜுக்கு ரெடி
ஆகு” என்று ஆறுதல் கூறி அனுப்ப முற்பட
“கல்யாணம் ஆகி அப்புறம் இவ வந்து கமலியை பார்க்க வர்றேன்னு நின்னா இவரும் பழையபடி மாறிட்டா” என்று கூற நிரூபனுக்கு சலிப்பாய் இருந்தது.
‘இத்தனை வருடம் அவரோடு வாழ்ந்தும் அவரது மனநிலையை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன வாழ்ந்தாள் இவள் ?’என்று நினைத்தான்.
“வனஜாக்கா… மாமா அந்த அளவுக்கு மோசமானவரும் இல்லை. அவங்களும் அப்படிப்பட்ட ஆளாத் தெரியல. தயவு செஞ்சு கண்டதையும் யோசிச்சு உன் பையன் வாழ்க்கையை கெடுத்துடாதே “என எச்சரித்தான்.
“வாயை மூடு. ஏன் உன் நினைப்பு இவ்வளவு மோசமா இருக்கு.?, அப்படி பார்த்தா ஆம்பளை நான் இத்தனை வருஷம் பொண்டாட்டி இல்லாம தானே இருக்கேன், நானும் அப்படின்னு நினைச்சிருக்க அப்படித் தானே?!” என்று எரிச்சலாக கேட்டு விட்டான்.
“அச்சோ ! உன்னைப் போய் நான் எப்படி அப்டி நினைப்பேன்?” என பதற
“அப்போ முன்ன பின்ன தெரியாத அவங்களை மட்டும் நீ எப்படி தப்பா நினைச்ச?. உன் கூடவே இத்தனை காலம் வாழ்ந்த அந்த மனுசனை நீ எப்படி தப்பா நினைச்ச…? உன்னை விட்டுட்டு அவங்களைத் தேடிப் போக முடியாமலா இத்தனை வருஷம் உன்னோடு வாழறார்” என திட்டி விட்டான் அவரை.
வனஜாவின் முகம் தெளிய ,நிரூபன் நிம்மதி கொண்டான்.
“நிஜமாவே எதுவும் தப்பா நடக்காதுல்ல நிரூபா ?”என கேட்கவும் ,அவன் புன்னகைத்தபடி,” இந்த வயசுக்கு மேல உன் புருஷனை நீ இவ்வளவு சந்தேகப்பட வேண்டாம். அதெல்லாம் எதுவும் ஆகாது போ. “என கூற, வனஜா நிம்மதியாய் சென்றார்.
பூரணியை பார்த்தான். வெள்ளந்தியாய் மதுராவோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.
‘இப்படிப்பட்ட பொண்ணா தப்பான உறவை ஏற்படுத்திடுவாங்கனு நினைக்குது இந்த வனஜா’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு சென்றான்.
**********
ஐந்து மணிக்கு எல்லாம் மணமக்களை எழுப்பி விட்டு விட்டனர்.
அத்தை கல்யாணம் முடிஞ்சதும் நாம சென்னை ஃபுல்லா சுத்திப் பார்த்துட்டு போறோம் சரியா. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். பார்த்து பத்திரமா இருங்கத்தை” என்ற மதுரா இனியனோடு கிளம்பி விட்டாள்.
“சரி சரி நீ பத்திரமா போயிட்டு வா “என்ற பூரணி தயாராகி கொண்டிருக்க, சரண்யா மாப்பிள்ளைக்கு கவின் போட வேண்டிய மோதிரத்தையும் ப்ரேஸ்லெட்டையும் எடுத்துத் தரும்படி கேட்க,
இயல்பாய் அவளும் கொடுக்க அதில் தான் தாலிசரடும் இருந்தது. தாலிகட்டி மூன்றாம் நாளே தாலிகோர்த்து போட்டு விட வேண்டும் என்று வனஜா கூறி இருக்க, அதையும் கையோடு எடுத்து வந்து விட்டார்.
மதிவாணனின் அம்மா தாலிச்சரடும், மோதிரமும் பூரணி கையில் இருப்பதைக் கண்டு கோபமானவர் சரண்யாவை அதட்டினார்.
“அதை மொதல்ல உன் கையில வாங்கு ,எதை யார் கிட்ட தரணும்னு தெரியாது. புள்ள முதல் முதல்ல போடப்போற தாலிசங்கிலியை புருஷன் இல்லாதவ கிட்டயா தருவ ?”என திட்டி விட, பூரணிக்கு கண் கலங்கிப் போனது.
“அத்தை!” என்று சங்கடமாய் சரண்யா கன்டனக் குரலில் அழைக்க
“என்ன நொத்த…? இதை நீ என் கிட்ட குடுத்தாலும் அதைத்தான் சொல்லி இருப்பேன். இந்தாடியம்மா நல்லது நடக்கப் போற நேரம், இப்படி எதையாவது தொட்டு வாங்கிக் கட்டிக்காத. புருஷனை எழந்துட்டு நாம போய் முன்னுக்க நிக்கக் கூடாது” என்றார் வெடுக்கென்று.
பூரணி கண்களைத் துடைத்துக் கொண்டவள்,” இல்லத்தை அதில் தாலிசங்கிலி இருந்தது தெரியாது. மன்னிச்சிடுங்க” என்றாள் பொறுமையாக.
“நான் பார்த்ததால போச்சு மாப்ளை வீட்டுக்காரங்க பார்த்தா என்ன ஆகும்.?,எதுல கவனம் வைக்கிறோமோ இல்லையோ இதுல வைக்கணும்டி. பொசுக்குனு நம்மளை தூக்கி நடுவுல நிறுத்தி தூத்திப்புடுவாளுக. சூதானம். பொறந்ததுல இருந்து வைக்கிற பூவு பொட்டு. ஆனா எடையில வந்த புருஷன் போயிட்டா அதுவும் சேந்து நம்மளை விட்டு போயிருது “என்று நொடித்தவர் ,”வந்து உட்காரு… பெறகு போவோம்” என்று தன்னோடு அமர்த்திக் கொண்டார்.
சரண்யாவுக்கு மாமியாரை எந்த ரகத்தில் சேர்க்கவென்றே தெரியவில்லை.
*********
மதிவாணனுக்கு நிம்மதி பரவியது மனதில், இதுவரையில் எந்த பிரச்சினையும் எழவில்லை. தாலி கட்டிய பிறகு பூரணி போய் விடுவாள். கமலியோடு மட்டும் பழக விடாமல் பார்த்துக் கொண்டால் அவள் வாழ்வு சிறப்பாகி விடும் என்றெண்ணியிருந்தார்.
இத்தனை பேரின் சிந்தனைக்குக் காரணமானவளோ எதுவும் தெரியாமல் ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
மோகன் பூரணியிடம்,” சித்தி அங்கே கல்யாணம் முடிஞ்சதாம் , நான் போய் அப்பா அத்தையை கூப்பிட்டு வரேன். சீக்கிரம் வந்திடுவேன் “என்று அவன் சொல்லி விட்டுக் கிளம்ப, தனியாக அமர்ந்திருந்தாள்.
“கவின் உங்கப்பாவோட சித்தப்பா மண்டபத்திற்கு வழி தெரியாம நிக்கிறாங்களாம் கொஞ்சம் போய் கூட்டிட்டு வந்திடு “என்று சரண்யா அவனை அனுப்ப
“ம்மா மாப்பிள்ளைக்கு துணையா நிற்க சொன்னீங்க” என்று அலுத்துக் கொண்டவன்,” சரி போறேன் இருங்க” என்று கிளம்பினான்.
“ம்மா ரெடி ஆகிட்டிங்களா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐயர் வந்திடுவார், கமலிம்மா எதாவது சாப்பிடுறியா?” என மகளை கவனிக்க,” அம்மா பசிக்கலை” என்றாள் கமலினி.
“அப்படி தான்டா இருக்கும். ரெண்டு இட்லி மட்டும் சாப்பிடு. ம்மா பரணி எடுத்துட்டு வந்து கொஞ்சம் சாப்பிட வைடா. அம்மா வாசலில் அப்பா கூட நிற்கிறேன்” என கமலியின் தோழியிடத்தில் கூற அவளும்,’ சரி ‘என்றாள்.
ராகுல் தயாராகி மணமேடைக்கு வந்து விட்டிருந்தான். பட்டுவேட்டி சரசரக்க வந்தவனின் கழுத்தில் மாலை அணிவித்து மணமேடையில் அமர வைத்தார் சிவகுரு.