கலியபெருமாள் வெளியே வந்தவர்,” இன்னும் தூங்கலையா சேகரா?”என கேட்க திடுக்கென்று தூக்கி வாரிப் போட திரும்பியவனோ,” இல்ல அங்க இந்நேரத்துக்கு தூங்கி பழக்கம் இல்ல அதான்.” என்றான்.
“இருட்டுல நிக்காத. போய் ரூமுல தூங்க வேண்டியது தானே. பனியில கட்டிலப் போட்ருக்க, முடியாமப் போறதுக்கா வா. “என்றவர் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்து சேகரனின் அறையில் போட்டார்.
சேகரன் வேறு வழியின்றி பின்னால் சென்று விட, பூரணி நிம்மதியுடன் வெளியே வந்தாள்.
‘கெரகம் புடிச்ச நாய் இன்னும் இதே நெனப்போட தான் சுத்துவான் போலருக்கு.’ என்று எரிச்சலுடன் உள்ளே சென்றாள்.
வீடு பெரியதாக இருந்தாலும் கழிவறை எல்லாம் வெளியே வைத்து தான் கட்டி இருந்தனர். உள்ளே வைத்து கட்டும் பழக்கம் எல்லாம் அங்கில்லை. மூன்று சகோதரர்கள் இருந்ததால் சிவலிங்கமும் கலியபெருமாளும் பெரிய வீடாகவே கட்டினர். இருந்த இடத்திற்கு தனித்தனியாகவே வீடு கட்டி இருக்கலாம் என்றாலும் சிவலிங்கம் வேண்டாமென மறுத்து விட்டார்.
“சின்னவன் வெளிநாட்டுல குடித்தனம் நடத்தப் போயிட்டான். நான் இன்னும் கல்யாணம் காட்சி கூட பண்ணல. நீயும் ஒரு பயலோட நிப்பாட்டிட்ட , என்னதுக்கு ஏழு வீடு. பெரிய வீடா கட்டுவோம் புள்ளைகளை ஒத்துமையா இருக்கச் சொல்லி வளப்போம் சரிதான. அப்படி பிச்சுக்கிட்டு போகணும்னு நின்னாங்கன்னா நம்ம காலத்துக்கு அப்புறம் போவட்டுமே நாம என்ன செத்த பெறகு முழிச்சா பாக்கப் போறோம், எவன் சேந்து இருக்கான் இல்ல தனியா போயிட்டான்னு. இருக்கிற வரைக்கும் ஒண்ணா வாழ்ந்துட்டுப் போவோம்ணே. எனக்கெல்லாம் இதுக்கப்புறம் கல்யாணம் காச்சி நடக்குமான்னே தெரியல. கடைசி காலத்துல நான் தனியா கெடந்தா நீ பாத்துக்க மாட்ட” என்று முடித்து விட்டார் சிவம்.
இதற்காகவே மெனக்கெட்டு சிவத்தின் திருமணத்தை நடத்தி முடித்தார் கலியபெருமாள். ஆனால் தம்பியின் விதி இப்படி போகும் என்று கிஞ்சித்தும் நினைக்கவில்லை அவர்.
*********
கமலி திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. இனியன் மூன்றாம் அழைப்பிற்கு கமலியை சென்னைக்கு அழைத்துச் சென்று வந்து விட்டான்.
சேகரன் இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று அய்யலூரில் தான் இருந்தான்.
பூரணியை எவருமறியாமல் சீண்டிக் கொண்டு இருக்க, பூரணியோ கமலிக்கு துணைக்கு இருக்கிறேன் என அனுமதி கேட்டு பவளத்தின் வீட்டிற்கு சென்று விட்டாள்.
“புது இடம் மாமா. அதனால அவ கூட இருந்தா நல்லா இருக்கும்னு பார்க்கிறேன்” என்று கலியபெருமாளிடம் கேட்க
“அதுவும் சரிதான்மா, நீ போய் பேச்சுத் தொணைக்கு இரு. பவளமும் வேலைக்கு போயிரும். கமலி ஒத்தையா என்ன பண்ணும் நீ போ. “என அனுப்பி வைத்து விட்டார் அவர்.
சேகரனின் முகமூடியை கிழிக்க ஒரு நொடி ஆகிவிடாது தான். ஆனால் அண்ணன் தம்பி உறவிற்குள் மீண்டும் விரிசல் உருவாக்க விரும்பவில்லை அவள்.
ஏற்கனவே கலியபெருமாளுக்கும், சேகரனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்று மட்டும் தெரியும். ஆனால் அது எதனால் என்று தெரியவில்லை அவளுக்கு. சொத்துப் பிரச்சினையாக இருக்கலாம் என்று அவளே அனுமானித்துக் கொண்டாள்.
இந்த நிலையில் தான் மோகன், நிரூபனை அழைத்திருந்தான்.
“அண்ணா! இந்த புதன் சந்தைக்கு வரேன், மாடு வாங்கிடலாம்” என்று தகவல் சொல்ல
“புதன்கெழமை வந்தா ஆகாது மோகன். நீ செவ்வாய்க்கே வந்தா தான் நல்ல மாடா பாத்து வாங்க முடியும்” என்று நிரூபன் கூற
“சந்தை புதன்கிழமை தானேண்ணா?” என்று சந்தேகத்துடன் அவன் கேட்க
“சந்தை புதன்கிழமை தான். ஆனா மாடெல்லாம் செவ்வாக்கிழமையே வந்துடும். எல்லாம் லைனா குட்டியானையில் நிக்கும். அப்பவே நல்ல மாடுகள் எல்லாம் முக்காவாசி வித்துப் போயிரும். புதன்கிழமை இருக்கிற எல்லாம் மிச்ச மீதி தான். சுத்துப்பட்டு எல்லா ஊர்ல இருந்தும் விதவிதமான மாடு வரும். நீ நாட்டுமாடா கேட்கிறதால தான் மொதநாளே வரச் சொல்றேன், இப்ப எல்லாம் நாட்டு மாட்டுக்கு தான் டிமாண்ட் மோகன். அதனால நீ மொதவே வந்திடு. வந்ததும் எனக்கு ஃபோனைப் போடு நான் கூட்டிட்டு வந்துக்கிறேன்.” என்றான் விளக்கமாக.
சொன்னது போலவே மோகன் வந்து விட,மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு சென்று விட்டனர்.
மணப்பாறை மாட்டுச்சந்தை தமிழக அளவில் மிகப் பிரபலமான சந்தை. அங்கு கிடைக்காத மாடுகளே இல்லை எனலாம்.
வரிசை வரிசையாக குட்டியானை எனும் சிறியவகை டெம்போ மாடுகளை ஏற்றிக் கொண்டு நின்றது.
“என்னண்ணா இவ்வளவு வண்டிங்க. சொன்ன மாதிரி கூட்டம் அள்ளுதே…?!” மோகன் வியந்து பார்த்தான்.
“இன்னும் நேரம் போகப் போக வரும் பாரு கூட்டம், திருவிழாக்கடை மாதிரி இருக்கும். வா புரோக்கர் அங்க நிக்கிறாரு” என்று அழைத்துச் சென்றான்.
“வாய்யா வாய்யா உன்னையத்தான் தேடுனேன். நீ கேட்ட மாதிரியே சூப்பர் மாடு. காலையில ரெண்டு லிட்டர் சாயங்காலம் ரெண்டு லிட்டர் தாராளமா கறக்கும். தரமான நாட்டு மாடு. “என்றார் புரோக்கர்.
“எல்லாம் சரிண்ணே, வெலை படியணும், இல்லாட்டி வேற பாக்கலாம்” என்ற நிரூபன் மோகனிடம் எவ்வளவு பணம் என்னவென்று விசாரித்துக் கொண்டான்.
“கருத்தம்பட்டி சிவசக்தி மாடு நிரூபா. தேடித்தேடி நாட்டுமாடு தான் வளக்குறாப்ள. நீ கேட்டன்னுதான் மெனக்கெட்டு தம்பிட்ட பேசி வாங்குனேன். சந்தேகமே வேணாம் நல்ல ரகமான மாடு. வேற எங்கேயும் கிடைக்காது. வெலை எல்லாம் நியாயமா தான் வைப்பாப்ள” என்றார் அவர்.
“அந்தப் பையனே தான். அவர் பொண்டாட்டிக் கூட இங்க தான் மணப்பாறை கவர்மென்ட் பள்ளிகூடத்துல வேலை பாக்குது பனிமலரு.” என விபரம் கூறினார் அவர்.
“தெரியும்ண்ணே, நம்ம கிட்ட தான் மாச மளிகை வாங்குவாங்க. நம்ம சக்தி மாடுன்னு தெரியல. சரி மோகன், நீ மாட்டை பாரு. நம்ம ஆள் மாடு தான். தாராளமா வாங்கலாம்” என நம்பிக்கை அளிக்க மோகனுக்கு மாட்டைப் பார்த்ததுமே பரமதிருப்தி தான்.
“பேசி முடிச்சுடலாம்ண்ணா. தெரிஞ்சவங்க வேற, வாங்கிடலாம்” எனக் கூறி விட்டான் மோகன் .
அதற்குள் சிவசக்தியே வந்துவிட, நிரூபன் நலம் விசாரித்தான்.
“என்னண்ணே புது வியாபாரமா…?” என கிண்டல் செய்த சக்தி,” நீ பார்த்து வெலை பேசுண்ணே. நமக்குள்ள என்ன…?” என்று கூறி விட
“இருக்கட்டும்யா நீயும் வளர்த்திருக்க, அதுக்குத் தகுந்த மாதிரி பேசிடுவோம் “என்றவன் விலையைக் கூற சக்திக்கு அதில் திருப்தி தான்.
“ரைட்டுண்ணே… வெலை ஓகே தான், மாட்டை ஓட்டிக்கங்க. குட்டியானை எதுவும் வரச் சொல்லணுமா. நம்மபய ஒருத்தன் இருக்கான் கூப்பிடுறேன். நேக்கா எறக்குவான். மாடு சலம்பாது, துள்ளாது” என்று பேசி முடித்து ஒரு வழியாக மாலை நேரம் தாண்டி அய்யலூருக்கு மாட்டை ஏற்றி விட முடிவு செய்தனர்.
“மாடு அய்யலூர் போவுதா…? அய்யலூர்ல யாரு வீடு தம்பி?” என்று சக்தி மோகனை விசாரிக்க
“எங்கூர் அக்கா ஒண்ணை அங்க கட்டிக் குடுத்துருக்கோம் பேரு பரமு” என்று சக்தி சொல்லிக் கொண்டிருக்க
“பக்கத்து வீடு தான்ண்ணே.”என்றான் மோகன்.
“சரியாபோச்சு போ, அப்ப அந்த மச்சு வீட்டுப் பையனா நீ.? அங்கன அவர் பேரு என்ன சிவலிங்கம் சிவம் அவர் மகனா ?”என்று கேட்டதும் மோகனுக்கு முகம் மலர்ந்து விட்டது.
“அவரு அண்ணன் மவன் தான், எங்க சித்தப்பாவை தெரியுமா?!” என்று ஆர்வத்துடன் கேட்க
“அவரைத் தெரியாம இருப்பார்களா.?, ஜல்லிக்கட்டு பாக்கப் போறதே அவருக்காக தான். நல்ல மனுசன்யா. இவ்வளவு சீக்கிரம் போவார்னு தெரியல போ. அந்தக்கா சின்னவயசுல்ல… நல்லா இருக்காங்களா அவங்க?” என்று பூரணி பற்றி கேட்டவன்,
” வேற கல்யாணம் எதுவும் பண்ணி வச்சாங்களா உங்க வீட்டுல, ரொம்ப சின்னவங்க அவங்க அப்ப, எனக்கே ஒரு பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். எங்கப்பாவோட கேதத்துக்கு வந்திருந்தேன். அவங்களுக்கு புள்ளைங்க எதுவும் இருக்கா ?”என சிவசக்தி பேசப் பேச மோகனுக்குள் பிரளயமே வெடித்தது.
யாரோ முன்பின் அறியாதவன், சித்தியின் மறுமணம் பற்றிக் கேட்கிறான்.’ இத்தனை வருடம் இருந்தும் ஏன் அவர்களின் மறுமணம் பற்றி நம் வீட்டில் பேசவில்லை?’ என்ற எண்ணம் உள்ளுக்குள் குடைந்தது அவனை.
“அவங்களை கேட்டேன்னு சொல்லுப்பா.” என சிவசக்தி விடைபெற, நிரூபன் அவனை அனுப்பி வைத்தான்.
“அண்ணே எங்கூட இவர் வருவார். அப்ப தான் மாட்டை இறக்க வசதியா இருக்கும். நீங்க வண்டியில வந்துருந்தா அதுல வந்திருங்க.” என்றான் டெம்போ டிரைவர்.
“நான் பஸ்ல வந்தேன். அதுலயே வந்திடுறேன் நீங்க முன்னாடி போங்க” என்று மோகன் சொல்ல
நிரூபனோ,” சரியா போச்சு நீ பஸ்ல போய் எப்ப வீடு சேர…?” என்றபடி,
.
” தம்பி நாங்க முன்னாடி வண்டியில போறோம். நீங்க ஃபாலோ பண்ணி வந்திடுங்க “என்று கூறியவன், ப்ரோக்கரிடம் மாட்டிற்கான பணத்தை தந்து விட்டு மோகனை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
‘மறுபடியும் அய்யலூர் பயணம், பூரணியை பார்க்கலாம்.’ என உற்சாகத்துடன் நினைத்துக் கொண்டான் நிரூபன்.
அன்றிரவே மோகனை இறக்கி விட்ட நிரூபன் ,கிளம்புவதாக கூற அவன் மறுத்தான்.
“இந்த நேரத்துல கிளம்பிகிட்டு. இவ்வளவு உதவி செஞ்சு இருக்கீங்க. தங்கிட்டுப் போகலாம் இருங்கண்ணா, இனியன் பார்த்தா சந்தோஷப்படுவான்.”என இருக்கும்படி கூற, நிரூபனுக்கோ சங்கடமாக இருந்தது.
“தங்கிட்டுப் போகலாம் தம்பி. இவ்வளவு தூரம் மாடு பாத்து தந்திருக்கீக” என கலியபெருமாளும் சொல்ல, மறுப்பதற்கு வழியின்றி இருந்தான் நிரூபன்.
அதோடு வந்ததிலிருந்து பூரணி வேறு கண்ணில்படவே இல்லை. அவளைப் பாராமல் பேசாமல் கிளம்பவும் மனமில்லாமல் தான் இருந்தான்.
‘யாரிடம் கேட்பது? என்றும் தெரியவில்லை. தவறாக எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது?’ என நினைக்க செவ்வந்தி அவனுக்கு நிம்மதியளித்தார்.
“மோகனு! சித்தி, பவளம் வீட்டுல இருக்கு, கூட்டிட்டு வா. இருட்டுக்குள்ள தனியா வரவேணாம்.” என்று சொல்லவும், நிரூபனின் முகம் மலர்ந்து விட்டது சட்டென.
“இருங்கண்ணா வந்திடுறேன்” மோகன் கிளம்ப ,”இல்ல நானும் கூட வர்றேன்” என்று எழுந்து கொண்டான்.
“இங்க தானேண்ணா போய்ட்டு வந்துடுவேன்.” என்று மறுக்க
‘இவன் வேற புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே!’ என்று நொந்தபடி அமர்ந்து விட்டான் நிரூபன்.
அதற்குள் பூரணியே வந்து விட்டாள்.
நிரூபனுக்கு அகமும், முகமும் ஒரு சேர மலர்ந்து விட்டது அவளைக் கண்டதும்.
அவன் விழிவிரித்தப் புன்னகையை வாசலில் வரும்போதே கண்டு கொண்டாள் பூரணி.
ஒரு நொடி பார்வை தான் ஆனாலும் ஆழ்மனதில் மகிழ்ச்சி பிரவாகம் ஊற்றெடுத்தது அவனுக்கு.
“நீயே வந்துட்டியா, இப்ப தான் மோகனை வரச் சொன்னேன் “என்ற செவ்வந்தியிடம் புன்னகை சிந்தியவள், நிரூபனை வரவேற்க ஒரு தலையாட்டல் மட்டும் தான் அவனிடத்தில். உள்ளக்கிடக்கையை வெளியே காட்ட முடியாத அவஸ்தை அவனிடத்தில்.
‘இளைஞன் போல இது என்ன வேலை மனமே?!’ என்று அடக்கி வைக்க முற்பட, அது அடங்கா குதிரையாக அவளிடமே சென்றது.
மாடு வாங்கியது பற்றி பேசி சிலபல உரையாடல்களுக்குப் பிறகு உணவருந்தி முடிக்க மோகனோடு படுத்து விட்டான் நிரூபன்.
‘ப்ப்ச் ஒரு வார்த்தை கூட பேச முடியலையே… நிரூபா இது வேலைக்கே ஆகாது. இப்படியே பார்க்கவும் , ரசிக்கவும் இருந்தா ஒண்ணும் கதை ஆகாது. உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. டைரக்டா பொண்ணு கேட்டுடு. தர்றாங்க, தரலை அது அடுத்த விஷயம். குறைஞ்சபட்சம் நம்ம மனசில் இருக்கிறதையாவது சொல்லிடலாம்.”என்று நினைத்திருந்தான்.
‘காலையில் இங்கிருந்து ஒரு முடிவோடு தான் கிளம்புகிறோம்’ என யோசித்தபடி படுத்திருக்க, பூரணி அங்கு வந்தாள்.
“மோகன் தூங்கிட்டியா?” என அழைத்தபடி சற்று தொலைவில் நிற்க
“தூங்கிட்டாப்டி!” என்று நிரூபன் குரல் கொடுத்ததும்,
“நீங்க முழிச்சிருக்கீங்களா? தண்ணி எடுக்காம வந்துட்டான். இங்க வைக்கிறேன் தேவைப்பட்டா எடுத்துக்கோங்க.” என சொம்பை வைத்து விட்டு நடக்க ,
“பூரணி” என்று அழைத்துவிட்டான் சில நொடித் தயக்கத்திற்கு பிறகு.
“ம்ம்ம்” என்றவள் அங்கேயே நிற்க
“மோகன் சித்தப்பாவை பார்க்கணும், ஃபோட்டோ காட்டுவிங்களா?” என்று கேட்க
“கூடத்தில் மாட்டி இருந்ததே பார்க்கலையா?, காலையில் காட்டுறேன், என்ன திடீர் னு…?”பாதியில் நிறுத்தினாள் வினாவை.
“இல்ல தோணுச்சு. காலையில் …”என்று சக்தி பேசியதை கூற, அவளிடத்தில் மென்புன்னகை மட்டுமே.
“ஐயாவை பிடிக்காதவக யாரும் இல்லையே. காலையில் காட்டுறேன் பாருங்க.” என்றவள், அங்கே நிற்கவில்லை.
‘கஷ்டம்டா யப்பா. நாலு வார்த்தை சேர்த்து வாங்க முடியுதா இவங்ககிட்ட.’ தனக்குத் தானே நொந்து கொண்டான். ஆனாலும் ஓர் இலகுத்தன்மை மகிழ்வு எல்லாம் சேர உறக்கம் தன்னால் வந்தது.
*********
நடு இரவில் வந்து சேர்ந்தான் சேகரன். வாசலில் தான் படுத்திருந்தார் கலியபெருமாள்.
“எம்புட்டு நேரம்டா…? சாப்டியா எல்லாம் ஒறங்கிட்டாக, சோறு எடுத்து வைக்கவா ?”என்று கலியபெருமாள் கேட்க
“இல்ல சாப்டேன். டிக்கெட் விஷயமா அலைஞ்சுட்டு வாரேன். படுக்கிறேன் கண்ணைக்கட்டுது” என்று போய்விட்டான்.
” மட்டி. குடிச்சுட்டு வந்துட்டு காரணம் தேடுறான். பொண்டாட்டி கூட இல்லைன்னா இவனுக்கு கொம்பு மொளைச்சிரும்” என முனகியபடி படுத்து விட்டார் அவர்.
வாசற்கதவை உள்ளே தாழிட்டு விட்டுச் சென்றவன், புதிதாய் ஒரு ஆள் படுத்திருக்கவும் கேள்வியாகப் பார்த்து விட்டு நகர , பூரணி கழிவறையில் இருந்து வெளியே வந்தாள்.
‘ஓஓஓ கிளி இங்க தான் இருக்கா?’ என்றபடி அவளை நோக்கிச் சென்று விட்டான்.
“பூரணி சோறு எடுத்து வை.” என அதட்டும் போதே நிரூபன் கண்விழித்து விட்டான்.
பூரணி கண்டு கொள்ளாமல் செல்லவே, அவளின் கைப்பிடித்து இறுக்கியவன் ,”கொழுந்தன்னு மதிக்கிறியா நீ.?” அவளை அணைக்க முற்பட
பூரணி அவனிடமிருந்து திமிறியவள், சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனை அறைந்து விட்டாள்.
“என் கையால தான் சாகப் போற நீ. மரியாதையா போயிரு” எனும் போதே அவளை மீண்டும் இழுத்தணைத்து முத்தமிடச் சென்றவனை ஒரே தள்ளில் கீழே விழச் செய்திருந்தான் நிரூபன்.