அதற்குள் இனியனும், கவினும் வீட்டிற்கு வந்து விட்டனர்.
கவின் அவளது தோற்றத்தை கண்டு ,” என்ன சித்தி ஏன் இப்படி நிக்கிறீங்க ?”என்று கேட்க , சட்டென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு,” எதுவும் இல்லப்பா பாப்பா பெயரை பாத்துட்டு இருந்தேனா… பார்க்கவும் என்னை அறியாம அழுக வந்துருச்சு” என்றாள்.
“அவ்வளவு தானா?!, நான் பயந்து போயிட்டேன் சித்தி” என்று நெஞ்சில் கை வைத்தபடி கூற ,”அதெல்லாம் எதுவும் இல்ல கவி, சரி வா” என்றதும் மூவருமாக உள்ளே சென்றனர். அவனுக்கு எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் பூரணி.
“அடடா அத்தை அவரை விடுங்க.” என்ற இனியன்,” இங்க கொஞ்சம் அப்படி தான் மச்சான். நீங்க வாங்க” என தன்னோடு அழைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் கலிய பெருமாளும் வீட்டிற்குள் நுழைந்தார் , அவர் வரவும் பவ்யமாக ஓரம் சென்று நின்றவள் ,” பெரிய மாமா இது கவின். என் அக்கா பையன்” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
” வாப்பா எப்படி இருக்க?, நல்லா இருக்கியா?” என்று அவர் பரஸ்பர நலம் விசாரித்து விட்டு,” வந்த பிள்ளைக்கு ஏதாவது கொடுத்தியாம்மா?” என்று கேட்டார். கலியபெருமாள் சினிமா நடிகர் வேல ராமமூர்த்தி போன்றதொரு உருவம். முறுக்கு மீசையும், கருத்த தேகமும் அந்த கிராமத்தின் பெரிய மனிதர் என்ற தோரணையை எடுத்துக் காட்டியது. நல்ல டாம்பீகமான குரல் அவருக்கு.
” ஜூஸ் கொடுத்துட்டேன் மாமா ” என்று ஒதுங்கி நின்றே பதில் அளித்தாள்.
“சரிம்மா. ஏம்மா விசாலம் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணு” என்று குரல் கொடுத்தபடியே அமர்ந்தவரை சற்று விந்தையுடன் தான் நோக்கி இருந்தான் கவின்.
பூரணியோ,” எல்லாம் ஆயிடுச்சு மாமா. ஒங்களுக்கு பத்திரிக்கை குடுத்ததும், உங்க கூடவே சாப்பிட சொல்லலாம் னு …”என்று இழுத்தாள்.
“வந்த விருந்தாளியை அப்படி எல்லாம் காக்க வைக்கக் கூடாதும்மா. நம்ம வூட்டுப் புள்ள ஒனக்குத் தெரியாதது இல்லை . சூதானமா இருக்கணும் “என்றார் மீசையை முறுக்கி விட்டபடி.
“சரிங்க மாமா” என்றாள் படபடப்புடன்.
அதன் பிறகு கவினிடம் கண்காட்டியவள்,” பெரியப்பான்னு சொல்லணும் கவி” என கிசுகிசுத்து விட்டு , வேகமாக அடுக்களைக்குள் சென்று அவனுக்கு கதவு திறந்து விட்ட பெண்மணியை அழைத்து வந்தாள்.
அந்தப் பெண்மணி தாம்பூலத்தில் எல்லாம் சரியாக எடுத்து வைத்து விட்டு ஒதுங்கி நிற்க , பூரணி கவினிடம் மீண்டும் கண் காட்டினாள் .
கவின் பத்திரிக்கையை எடுத்து அதில் வைத்தவன், வெற்றிலை பாக்கின் மீது நூற்றி ஒரு ரூபாய் பணம் வைத்துவிட்டு
“கல்யாணத்திற்கு கண்டிப்பா வந்துடனும் பெரியப்பா” என்றான்.
பூரணியின் முகத்தில் நிறைவான புன்னகை .
“சரிப்பா சந்தோஷம் வந்து விடுகிறோம்.” என்று அவரும், பத்திரிகையை எடுத்துக் கொண்டார்.
“சிம்பிளா அடிச்சு இருக்கீங்க பத்திரிக்கை” என்று திருப்பி பார்த்துவிட்டு சொல்ல,
“ஆமாம் பெரியப்பா!, மாப்பிள்ளை வீடு இதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால யாரு பேரும் போடாம சிம்பிளா அடிச்சிட்டாங்க” என்று கூறினான்.
“சரிப்பா சரிப்பா… அதுவும் நல்லதுக்குத் தான் இவங்க பேர் போடல அவங்க பேர் போடலைனு ஒரு வம்பு வரும். இது பரவாயில்லை ” என்றவர், “இருப்பா சாப்டுட்டு போகலாம்” என்று சொல்ல,
” வேற யாருக்கு பெரியப்பா பத்திரிக்கை வைக்கணும்? நம்ம சொந்த பந்தம் உங்களுக்குத் தானே தெரியும். நீங்க சொல்ற மாதிரி செஞ்சுடுறேன் பெரியப்பா. ” என்று பவ்யமாக கேட்ட கவினை அவருக்கு நிரம்பவே பிடித்து விட்டது.
” மத்தவங்களுக்கு நான் கொடுத்துக்கிறேன் ப்பா ” என்றவர்,” இனியா! வீட்டுக்கு கூட்டிட்டு போய் அம்மா கிட்ட பத்திரிக்கை வைக்க சொல்லு” என்று சொல்ல, இனியன் தலையாட்டினான் .
“பிறகேன் பாத்துட்டு நின்னுட்டு இருக்க?, கூட்டிட்டு போயிட்டு வா இனியா, அவங்களுக்கும் வேலை இருக்கும் இல்ல” என்று சொன்னதும் கவின் பூரணியைப் பார்த்தான்.
” போய்ட்டு வா கவி. அவங்களுக்கும் முறையா அழைச்சிட்டு பத்திரிக்கை வைக்கணும் ” என்று சொல்ல சரியென தலையாட்டினான் கவின்.
பூரணியிடம் ஒரு மாதிரியான ஒதுக்கமும், அமைதியும் தென்படவே அது புதிதாக தெரிந்தது கவினுக்கு.
அவனுள் பல வினாக்கள் வரிசை கட்டி நின்றது.
*********
நான்கு வீடுகள் தள்ளி இருந்தது இனியனின் வீடு.
“வொர்க் பண்றிங்களா இனியன் இல்ல ஸ்டடீஸா?” என்றபடி நடந்தான் கவின்.
“என்னைப் பார்த்தா காலேஜ் படிக்கிற மாதிரி இருக்கா மச்சான்?” ஆர்வம் பொங்க கேட்டான் இனியன்.
“ஹாஹாஹா! அப்படியும் தான் தெரியுது, பட் உங்க பாடி லாங்குவேஜ் நீங்க ஒர்க் பண்றீங்கனு சொல்லுது” என்று கவின் சொல்ல
“நீங்க சைகாலஜி ஸ்டூடன்டா என்ன?, ஆராய்ச்சி பயங்கரமா பண்றீங்க. நான் வேலை பார்க்கிறேன் மச்சான். மெடிக்கல் ரெப்” என்று கூறவுமே கவின் புன்னகைத்தான்.
“என்ன படிச்சிருக்கீங்க இனியன்?” என்றதும்
“இந்த மச்சான், மாப்ளைனு எல்லாம் சொல்ல மாட்டீங்களா ?”என்று அவனுக்கு பதில் சொல்லாமல் கேட்க
“ஃப்ளூயண்டா வரல இனியன். பேசிட்டே இருந்தா பிக்கப் பண்ணிடுவேன்” என அதற்கும் புன்னகைத்தான்.
“அழகா சிரிக்கிறீங்க மச்சான்!” இனியனுக்கு மனதில் தோன்றியதை பகிர்ந்து விட்டான்.
அதற்குமே கவினிடத்தில் புன்னகை தான். வீடு வந்து விடவே,” ம்மா மா எங்கருக்க ?”என்று அழைத்தபடியே இனியன் வாயிலில் செருப்பை கழற்றி விட்டு ,”வாங்க மச்சான் குனிஞ்சு வாங்க, நிலைப்படி இடிக்கும்” என எச்சரித்தே அழைத்தான்.
“அங்கேயே அனுபவம் கிடைச்சிடுச்சு” என சிரித்தபடி தலையை தடவியவன் , அப்போது வலிப்பது போல முகம் சுருக்கினான்.
“உட்காருங்க மச்சான், நான் அம்மாவை கூப்பிட்டு வர்றேன்” என்று உள்ளே ஓட
“டேய் இனியண்ணா…! கடைக்குப் போனீயே …என்ன வாங்கிட்டு வந்த ?”சத்தமிட்டபடி வெளியே வந்தாள் நனிமதுரா.
முகமெல்லாம் சந்தனக்காப்பு. குறைக்கண் போட்டு தான் பார்த்தபடி வந்தாள். இனியன் வண்டி சத்தம் கேட்கவும், அண்ணன் தான் வந்திருக்கிறான் என்று அப்படியே வெளியே வந்து விட்டாள்.
கவினுக்கு அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டு விட்டது.
அவனது திகைத்த முகத்தைக் கண்டவள்,” அச்சோ!” என்று துப்பட்டாவை தூக்கி முகத்தை மூடியபடி ,வந்தவழியே ஓடி விட்டாள்.
‘எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் போல’ என சிரித்துக் கொண்டவனின் மனதில் தங்கை கமலினி வந்து நின்றாள் இதே சந்தனம் பூசிய முகத்துடன்.
யோசித்து கொண்டிருக்கும் போதே, இனியன் தாயுடன் வந்து விட்டான்.
“வாப்பா தம்பி. நல்லா இருக்கீங்களா…? பூரணி அண்ணி அக்கா மகனாமே…?!,வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்றவர் தண்ணீரைக் கொடுத்தார்.
அவருக்கு பதில் சொல்லியபடியே தண்ணீரை அருந்தியவன், பத்திரிக்கையைக் கொடுத்தான்.
“எல்லாரும் வந்திடணும் அத்தை” என்றதும் பூரித்துப் போனது அவருக்கு.
“எங்கண்ணனுக்கு ஒரு வாரிசு இருந்திருந்தா… இப்ப இப்படித்தான் இருந்திருக்கும். “என்றவர்,” வந்திடுறேன் தம்பி” என்றார் மகிழ்ச்சியாகவே.
“அம்மா!” என்று இனியன் கண்டிப்புடன் அழைத்தவன்,” சாப்பாடு எடுத்து வைங்க” என்றான்.
“இல்ல இனியன் பரவாயில்லை. சித்தியை அழைச்சுட்டு கிளம்பணும் , இன்னும் கல்யாண வேலை இருக்கே” என்றான் படபடப்பாக.
முகத்தைக் கழுவிக் கொண்டு வந்த மதுராவின் காதில் இது விழுந்து விட ,”எங்கத்தையை கூட்டிட்டுப் போக வந்திருக்கிறீங்களா? என்றாள் நக்கலாக.
அவள் கேட்ட தொனியை உணராதவனோ,” ஆமாம் அதுக்காக தான் நானே வந்தேன்” என்றான்.
சத்தமாக சிரித்து விட்டாள் மதுரா.
“மது !”என்று இனியன் கோபத்துடன் அழைக்க ,கவின் நெற்றிச் சுருக்கினான் விஷயம் புரியாமல்.
“தப்பா எடுத்துக்காதீங்க மச்சான் “என்ற இனியன் ,”நீ உள்ள போ மது தேவை இல்லாத வேலை பார்க்காதே” என எச்சரித்து தங்கையை அனுப்பி விட்டான்.
கவின் பத்திரிக்கையை கொடுத்து விட்டு கிளம்ப, இனியன் அவனோடு மீண்டும் பூரணியின் வீட்டிற்கு செல்ல வாசலுக்கு வந்தான் .
வாசலில் நின்ற மதுரா இடுப்பில் கை வைத்தபடி, அவனை மேலும் கீழுமாய் பார்த்தாள். பார்வையில் ஏளனம் தெரிந்தது அவளுக்கு.
“மது எதுக்கு வழிய மறைச்சு நிக்கிற?” என்று இனியன் முறைத்தபடி கேட்க
“இல்லண்ணே அத்தையை பார்க்க அதிசயமா ஒருத்தர் வந்திருக்கார். அவங்க வீட்ல இருந்து அதான் இவர் நிஜமாவே மனுசனா இல்ல ஆவியானு செக் பண்றேன்” என்று கிண்டலுடன் உரைக்க, கவின் அவளை முறைத்தான்.
“என்னங்க கிண்டலா?” என்று பட்டென்று கேட்டு விட
அவளோ,” அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன் !”என்றாள் முகம் மாறாமல்.
“மது பேசாம இருக்க மாட்ட ,மச்சான் ! நீங்க வாங்க போகலாம் .அவளுக்கு கொஞ்சம் வாய்த்துடுக்கு “என்று இனியன் தங்கையை முறைத்தபடி அழைக்க
“இருங்க இனியன். மேடம் எதுக்கு இப்படி சொல்றாங்கனு தெரிஞ்சுக்கிறேனே…!”என சட்டமாக நின்றவனிடம்,” எங்கத்தையை பார்க்க பிறந்த வீட்டில் இருந்து யாரும் வந்தது இல்லை. அதனால தான் கேட்டேன் நீங்க மனுசனா ஆவியானு !”என்றாள்.
“ம்ம்ஹ்ஹ்ம், நான் மனுசன் தான் மேடம். சித்தியை என் சிஸ்டர் மேரேஜுக்கு இன்வைட் பண்ண வந்தேன். வந்தது என்ன அவங்களை கையோடு அழைச்சிட்டுப் போகப் போறேன் போதுமா விளக்கம்?!” என்றான் சற்று முறைப்புடன்.
மதுரா வாய் விட்டுச் சிரித்தாள்.
“இப்போ எதுக்குங்க சிரிக்கிறீங்க?” நிஜமாகவே எரிச்சல் வந்து விட்டது கவினுக்கு.
“ஹலோ மிஸ்டர் அத்தையை கூட்டிட்டு போகலாம் னு நினைச்சீங்களா?” என்றதும் கவின் புருவம் சுருக்க ,
மதுராவோ,” அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அவங்க வெளியேவே போனதில்லை. அதாவது வெளியூர் போனதே இல்லை “என்றாள்.
” நீங்க என்ன சொல்றீங்க ?,எனக்கு சுத்தமா புரியலையே “என கவின் அப்போதும் குழப்பமாகவே கேட்க,
” ஏன்னா எங்க மாமா வீட்ல புருஷனை இழந்த அவங்களை எந்த விஷயத்திற்கும் கூட்டிட்டு போக மாட்டாங்க. அத்தை எப்போதும் வீட்லதான் இருப்பாங்க ,எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து அப்படித் தான் நடக்குது. அதை நீங்கள் மாற்ற நினைத்தால் முடியுமா என்ன?” என்று கிண்டலாகவே பேசிவிட்டு ,”உங்களால முடிஞ்சா எங்க அத்தையை இங்கிருந்து கூட்டிட்டு போயிருங்க பார்க்கலாம்” என்றாள் சவாலாக .
கவினுக்கு ரோஷம் வந்து விடவே,” நான் கூட்டிட்டு போயிட்டேன்னா..?” என்று புருவமுயர்த்தி கேட்டு விட,
” அது அவ்வளவு சுலபம் இல்லை சார்” என்றபடி போய்விட்டாள்.
கவினுக்கு மனதில் குழப்பம் சூழ்ந்து கொண்டது.’ ஏன் விதவை என்றால் வெளியே போகக் கூடாதா?, இது என்ன புது சட்டமா இருக்கு?’ என்று எரிச்சலடைந்தவன் ,’கமலினி திருமணத்திற்கு நிச்சயம் பூரணியை அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டு அய்யலூரை விட்டு கிளம்பினான்.
அதே சமயத்தில் பூரணி திருமண பத்திரிக்கையை பார்த்தபடி தன்னறைக்குள்ளேயே அமர்ந்து விட்டாள் .
அவள் பார்வையோ, நடராஜன் வனஜா என்ற அந்த பெயர்களிலேயே நிலைத்திருந்தது.
கவி சொன்ன வார்த்தைகளும், ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘ கமலினிக்கு இது லவ் மேரேஜ் சித்தி’ என்று இருந்தான்.
‘கமலிக்கு காதல் கல்யாணமா ?’ நினைக்கையிலேயே சிரிப்பு தான் வந்தது அவளுக்கு .
‘காதல் திருமணத்தை எதிர்த்த தன் மாமனே இன்று தன் மகளுக்கு காதல் திருமணம் செய்து வைக்கிறார்’ என விரக்தி பொதிந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டினாள். பழைய நினைவுகள் எல்லாம் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
*********
நிருபா நான் வனஜா பேசுறேன் “என்ற வனஜாவின் குரலில் குதூகலமாக எழுந்தமர்ந்தான் நிரூபன் சக்கரவர்த்தி.
சொல்லுங்க தமக்கையாரே!, என் ஞாபகம் எல்லாம் இருக்கா உங்களுக்கு?” நக்கல் வழிந்தது அவன்கேட்ட தொனியில்
என்ன நிரு…?” என்று அலைபேசியில் அவர் சங்கடம் கொள்ள,” ஹாஹாஹா நத்திங் கா ஜஸ்ட் ஃபார் ஃபன். சொல்லு எப்படி இருக்க…? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?, ஹவ் இஸ் ராகுல் ?”என்றதும் வனஜாவின் பக்கம் அமைதி நிலவியது.
வனஜாக்கா என்னாச்சு ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க எதிர்முனையில் ,”நான் நடராஜன் பேசுறேன் மாப்ள “என்ற குரல் கேட்க இப்போது நிரூபனிடம் அமைதி நிலவியது.