பூரணி திருமணத்தில் சம்மதம் இல்லை என்று கூறவுமே கலியபெருமாளுக்கு முகம் மலர்ந்து விட்டது.
கவினோ,” நீங்க ஏற்பாடு செய்ங்க சித்தப்பா. உங்களுக்கு சப்போர்டா நாங்க இருக்கோம் “என்று கூறி விட , நிரூபன் கிளம்பி விட்டான்.
வெளியே அவன் வாங்கி கொடுத்த பசு ,’அம்மா !’என்று சத்தமிட்டது.
‘வீட்டுக்கு மகாலெட்சுமியை கொண்டு வந்து விட்ருக்கேன். பார்க்கலாம் இந்த வீட்டு சாமி எனக்கு என்ன செய்றாருன்னு…!’ மனதில் சிவலிங்கத்தை நினைத்துக் கொண்டான்.
இங்கே பூரணியிடம் செவ்வந்தியும் ,கலியபெருமாளும் பூவை எடுக்கும்படி கூறிக் கொண்டிருந்தனர்.
பொட்டை செவ்வந்தியே அழிக்கப் போக ,மதுரா இடையில் வந்து நின்று விட்டாள்.
“வேணாம்த்தை. ப்ளீஸ்!” என்றவளை முறைத்து விட்டு,” சின்னப்பிள்ளைத்தனமா ஏதாச்சும் செய்ய நினைக்காதீங்க, பூரணி நீ போய் மொகத்தை கழுவிட்டு அதை எடுத்துப் போட்டுட்டு வா. எண்ணைத் தேச்சு தலை முழுகணும்.” என்றார் அதட்டலாக .
“பொட்டும் பூவும் வச்ச மனுசன் உயிரோட தான் இருக்காரு. தயவு செஞ்சி இப்படி பேசாதீங்கத்தை” என்று கத்தி விட்டாள் மதுரா.
“இந்தா பவளம், இவளைக் கூட்டிட்டு போயிரு. அடிச்சுட கிடிச்சுடப் போறேன்.” என்று பவளத்திடம் எகிற, அப்போது தான் வந்தார் மார்த்தாண்டன்.
“என்னவாம்? , வீட்ல ஒருத்தரையும் காணாம்னு இங்கன வந்தா ஒரே கரைச்சலா கெடக்கு. இனியா வேலைக்கு போவல நீ? “என்றபடி உள்ளே வந்தார்.
“என்னான்னு சொல்வேன்?” என நீட்டி முழக்கிய பவளம் விஷயத்தை கூற , மார்த்தாண்டன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.
*********
பூரணி அமைதியின் திருவுருவமாக அமர்ந்திருந்தாள்.
‘என்ன செய்து விட்டார் சிறிது நேரத்தில். எதுக்கு மறுபடியும் இந்த காதலும், கத்தரிக்காயும். திரும்பவும் ஏன் வருது.? என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டியா கடவுளே…!?’ என மனதின் ஆற்றாமையை தீர்க்க முயன்றாள்.
அவன் சூடிய மல்லிகை மணம் பரப்பியது அறையில் மட்டுமல்ல, மனதிலும் தான். ஆனாலும் ஏற்க முடியாமல் தவித்தவள் சிவத்தின் புகைப்படத்திற்கு விளக்கேற்றினாள்.
‘ஆயாளுக்கு சொணக்கமாக்கும். கண்ணை மூடி இருப்பியாம் ,மூச்சை இழுத்து விடுவியாம், சரியாப் போகுமாம்’ என சிவம் எப்போதோ கூறிய வார்த்தைகள் இப்போது ஒலித்துக் கொண்டிருந்தது.
இளையபட்டாளம் எல்லாம் ஒன்றுகூடி உள்ளே நுழைந்தது.
“அத்தை!” மதுரா அழைத்தவள், வேகமாக சென்று அணைத்துக் கொண்டாள்.
‘என்ன பேசுவது?’ என்று புலப்படாமல் சிறிது நேர மௌனம் அதை அவளே கலைத்தாள்.
“எனக்கு எதுவும் இல்லை, ஏன் இப்படி வந்து உட்கார்ந்து இருக்கீங்க?” மெல்லிய குரலில் கேட்டாலும் அனைவருக்கும் கேட்க தான் செய்தது.
“என் மேல கோபமா சித்தி?” கவின் அருகில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டான்.
“எதுக்கு கவின்…?”
“சித்தப்பாவை…” எனும் போதே பூரணி நிமிர்ந்துப் பார்த்திட,” ரொம்ப நல்லவர் சித்தி ப்ளீஸ்.” என்றான் கண்கள் சுருக்கி
“இங்க அவர் நல்லவர், கெட்டவர்ன்ற வாதமே இல்ல கவி. அவர் செஞ்ச காரியம் தான் கெட்டதுனு சொல்றாங்க “
“அவர் செஞ்சது அவசரம் னு வேணும்னா சொல்லலாம் அத்தை. ஆனா கெட்டதும் இல்லை, தப்பும் இல்லை” என்று மதுரா நிரூபனுக்கு பரிந்து கொண்டு வந்தாள்.
“கெட்டதுனு மத்தவங்க தான் சொல்றாங்க சித்தி, உங்க மனசுக்குத் தோணலை தானே…?!,எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் நடத்துறேன், ம்ஹூம் நாங்க நடத்துறோம் நீங்க ஒத்துக்கிட்டா மட்டும் போதும் “என மோகன் மற்றொரு கையைப் பிடித்துக் கொள்ள
“இந்த வயசில் இதெல்லாம் தேவையா எனக்கு.?”என்று மென்முறுவலோடு சொல்ல
“உங்களுக்கு ஒண்ணும் வயசாகலை. இப்போ தான் 34,35 தான் இருக்கும்” என்று கமலி சொல்ல
“36 “என்றாள் பூரணி.
“அவ்வளவு தானே ஆகுது. நடிகைகள் எல்லாம் இந்த வயசுக்கு மேல தான் கல்யாணமே பண்றாங்க, நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க. அதெல்லாம் பண்ணலாம்” என்று அமைதியாக இருந்த இனியன் கூற
“அடுத்த வருஷம் பேரன், பேத்தி எடுத்திடுவேன். இதோ என் மகளுக்கே கல்யாணம் ஆகிடுச்சே…!” என கமலியின் கேசத்தை வருட , இனியன் இதழ்களில் புன்னகை நெளிந்தது.
“அதெல்லாம் சொல்லாதீங்க நீங்க. அதனால என்ன…? உங்க மேரேஜ் பார்க்க நாங்க ஆசைப்படுறோம். நீங்க ஒத்துக்கோங்க சித்தி”என கவின் பிடிவாதமாய் பேச
“சில விஷயங்களை அப்படியே விட்டுட்டா வாழ்க்கை அது போக்கில் போகும் எனக்கு அதுபோதும். என்னை விட்டுடுங்களேன்.” என்றாள் சற்று சங்கடமாக.
“ஏன் சித்தி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கவா?” என்று கமலி கேட்க
“கேளுடா…!”
“உங்களால உங்க ஃபர்ஸ்ட் லவ் மறக்க முடியலையா?” என்றதும்,” கமலி!” என்று அதட்டினர் இனியன், கவின் இருவரும்.
“இருண்ணா நான் தப்பா கேட்கலையே…?!,சிவம் சித்தப்பா மேல உங்களுக்கு ஒரு பாசம் இருக்கு, பக்தி இருக்கு. அதை உங்க பேச்சிலேயே என்னால உணர முடியுது. அவர் உயிரோடிருந்திருந்தால் கண்டிப்பா உங்க வாழ்க்கை அடுத்த லெவல் போயிருக்கும். ஆனா இல்லைன்ற பட்சத்தில் நீங்க அடுத்த கல்யாணம் பத்தி யோசிக்காம இருந்தது ஆச்சரியமா இருக்கு. அம்மா சொல்லி இருக்காங்க , உங்க அளவுக்கு முற்போக்கா யோசிக்கிறது யாருமே கிடையாதுன்னு. அப்போ அவ்வளவு முற்போக்கு சிந்தனை உள்ள நீங்க, செகண்ட் மேரேஜ் பத்தி யோசிக்காம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறது தான் ஆச்சரியத்தை தருது எனக்கு. “என்று தெளிவாக கேட்டாள் கமலினி.
ஆழ்ந்த பெருமூச்சு அவளிடத்தில்.
கவின் நிரூபனுக்கு அழைத்திட உடனே அழைப்பு ஏற்கபட்டது.
பூரணியின் குரல் கேட்கவுமே நிரூபன் கவனமாகினான்.
“பூரணி… ஹ்ம்ம் பூரணசந்திரா பிசிஏ… என் ஊரில் முதல் பட்டதாரி. கம்ப்யூட்டர்னா என்னன்னு அவ்வளவா தெரியாத இடத்தில் அந்த படிப்பை எடுத்து படிக்கப் போனேன். பயம் சுத்தமா கிடையாது. அழவே மாட்டேன். அது எனக்கு பிடிக்காத விஷயம். மூணாவது பெண்ணா பிறந்துடுச்சேனு என் அம்மா வருத்தமேபடலை. அப்பாவும் தான். நல்ல சந்தோஷமான வாழ்க்கை. கேட்டது கிடைக்கும். ஏதாவது தெரியாத விஷயமா பூரணிகிட்ட கேளு சரியா சொல்லுவான்ற அளவுக்கு நான் எங்க ஊரில் பிரபலம்.”
“அம்மா சொல்லி இருக்காங்க. ஆனா டிகிரி முடிக்கலைனு “என்று கவின் இழுக்க
“ம்ம்ம்.இல்லை முடிச்சுட்டேன் சர்டிபிகேட் அப்புறம் தான் வாங்கினேன் அதான் அக்கா சொல்லி இருப்பா. அந்த ஊரிலேயே பத்தொன்பது வயசுலேயே டிகிரி முடிச்சது நானா தான் இருக்கும். நாலு வயசுல எல்லாம் அஞ்சு வயசு ஆகிடுச்சு னு சொல்லி சீக்கிரம் ஸ்கூல்ல சேர்த்துக்கிட்டாங்க. அப்போ எல்லாம் பர்த் சர்டிபிகேட் கிடையாதே. எனக்கு படிக்க ரொம்ப பிடிக்கும் கவி. காலேஜிலும் போன மொதல் வருஷமே பேமஸ் ஆகிட்டேன். அப்போ எனக்கு பதினாறு வயசு தான் எங்கூட படிச்சவங்களுக்கு எல்லாம் என்னை விட ஒரு வயசு ரெண்டு வயசு அதிகமா தானிருந்தது. ஃபர்ஸ்ட் செம்ல நைன்ட்டி ஃபோர் ஃபர்ஸன்ட் மார்க், நோட்டிஸ் போர்ட் ல என் நேம் வந்தது. அவ்வளவு பெருமை எனக்கு. கல்ச்சுரல் , காம்படிஷன் எதையும் விட்டது கிடையாது. எல்லாத்திலும் முன்னாடி வந்திடுவேன். என் டிபார்ட்மென்ட் ல இருக்க ஷீல்ட் கப்ல பாதி நான் வாங்கினதா தான் இருக்கும். மூணாவது வருஷம் வந்தாச்சு, அப்போ தான் வந்தார் மிஸ்டர் நடராஜன். எம்ஃபில் படிச்சார் அங்க. வயசு அவருக்கு அப்பவே 25னு நினைக்கிறேன். கூடவும் இருந்திருக்கலாம். ஒரே பஸ்ல டிராவல் பக்கத்து ஊர் தான் எருக்கங்குடி. பஸ்ல நான் பண்ற அரட்டை, பேச்சு எல்லாம் பிடிச்சு லவ் சொன்னார் ஒரு நாள். உடனே எல்லாம் ஏத்துக்கலை. நாலு மாசம் அலைஞ்சு திரிஞ்சு சம்மதிக்க வச்சார். அதுக்கப்புறம் என்ன வழக்கம் போல எல்லா காதலர்கள் மாதிரி க்ரீட்டிங் கார்ட் வாங்கித்தர, வீட்டுக்கு தெரியாம வெளியே சந்திக்கனு போச்சு. அப்போ மொபைல் அவ்வளவு ஃபேமஸ் கிடையாது. பட்டன் ஃபோன், லேண்ட்லைன் தான் அதிகம். எங்க காதலை வளர்க்க ஒரு ரூபா டெலிஃபோன். அது கூட டூ டைம்ஸ் பேசி இருப்பேன். அதையே வீட்ல வந்து சொல்லி வச்சுட்டாங்க.”
“அப்படி என்ன பேசிப்பீங்க ?”ஆர்வம் தாளாமல் மதுரா கேட்க, சிரிப்பு தான் அவளிடத்தில்.
“நண்டு சும்மா இரு “மோகன் அதட்ட, அவனைப் பார்த்து மூக்கை சுரித்தாள்.