நிரூபனிடம் அசைவுத் தெரியவே பூரணி ஆவலாய் அவன் முகம் பார்த்தாள். பிடித்தக் கையை மட்டும் விலக்கிடவில்லை அவள்.
கண்கள் சுருக்கி இங்குமங்கும் அசைந்தவனுக்கு அத்தனை அயர்வு முகத்தில்.
“ஸ்ஸ்ஸ் ப்ப்ச்…” என முனகியபடி அருகிலிருந்தவளைப் பார்க்க ஒரு கணம் திகைத்து விழித்தவன், மறுபடியும் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொள்ள
“நிரூபா …இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று பூரணியின் குரல் கேட்டதும்
‘என்ன பேசுறா…? அப்போக் கனவில்லையா?’ என மீண்டுமாய் விழிகளை திறக்க முடியாமல் திறந்து பார்க்க, உண்மையாகவே பூரணி அமர்ந்திருந்ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டான்.
“பூர்ணி… நீ… ப்ப்ச் நீங்க எப்படி இங்க…?” என்றபடி எழ முயற்சி செய்தவனால் அது முடியவே இல்லை.
“இல்ல இல்ல படுத்துக்கோங்க. ஏன் இப்படி தனியா…? குமரன் எங்க… உங்க அண்ணன்….” என்றவளால் அதற்கு மேலும் பேச இயலவில்லை. விழிகள் கண்ணீரால் தழும்பியது.
“குமரன் ஊருக்குப் போயிருக்கான். அவனுக்கு பையன் பிறந்திருக்கான்.” என்றவன்,” கேட்டதுக்கு பதில் சொல்லலை “என்றான் தலையைப் பிடித்தபடி. இருமல் வேறு பேசவிடாமல் இம்சித்தது.
” நான் என் ஃப்ரெண்டோட அப்பாவை பார்க்க வந்தேன். தலை வலிக்குதா மாத்திரை இருக்கா…? போட்டுக்கறீங்களா ?”என அருகில் தொங்கவிடப்பட்டிருந்த பையில் தேட
“அதில் எல்லாம் இல்லை. மாத்திரை தீந்திடுச்சு. இனிமே தான் தருவாங்க.” என்றவனுக்கு தலை வேறு சுற்றியது.
“ப்ம்ச் எழுந்துக்காதீங்க, ஏதாவது குடிக்கிறீங்களா பால் வாங்கிட்டு வரேன்.” என சொல்லவும்
“இங்க ஆஸ்பத்திரியில் தருவாங்க. சரி நீங்க கிளம்புங்க” என்று அவன் சொல்ல
“இப்படி இருக்கையில் தனியா விட்டுட்டு எப்படி போக?” என்று பதிலுக்கு அவள் கேட்க
அதற்குள் மருத்துவர் வந்து அவனை பரிசோதிக்க, பூரணி மீண்டும் வந்து விட்டாள்.
அவளைக் கண்டதும் தன்னிச்சையாக முகம் மலர்ந்துவிட்டது அவனுக்கு.
‘இந்த மூஞ்சி தான் நம்மளை போகச் சொன்னதா…?திரும்பி வந்ததும் பல்பு போட்ட மாதிரி முகத்தைப் பாரு’ என்று மனதினுள் சிரித்துக் கொண்டாள்.
“காய்ச்சல் இப்ப மறுபடியும் வந்திடுச்சே… மாத்திரை சரியா போட்டிங்களா?” என்றபடி மருத்துவர், ரத்தப் பரிசோதனை செய்த ரிப்போர்டை பார்த்தவர்,” டைஃபாய்டு அதான். “என்று சொல்ல
“தலைதான் ரொம்ப வலிக்குது, ஏதாவது மாத்திரை தந்திடுங்க” என்றான் வலியினூடே.
“ஊசி ஒண்ணு போடுறேன் சரியா போயிரும். சாப்பாடு மட்டும் வாந்தி வந்தாலும் பரவாயில்லைனு சாப்பிடணும் “என்ற மருத்துவர் அடுத்த நோயாளியை பார்க்க செல்ல,
பூரணி குறுக்கிட்டவள்,” அவங்க இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கணும் மேடம் ?”என்றாள்.
“தலைவலியும், காய்ச்சலும் விட்டுட்டா நாளைக்கே கூட்டிட்டுப் போங்க அப்பப்போ மட்டும் வந்து காட்டுங்க “என்றார்.
அதன் பிறகு உணவு வரவே ரசம் மட்டும் ஊற்றி பிசைந்து கொண்டிருந்தாள்.
“நான் உங்களை போகச் சொன்னேன் தானே?!” என்றவனை நிமிர்ந்து பார்த்து விட்டு,” காதுல கேட்டுச்சு. சரி கரைச்சுத் தரவா இல்லை ஊட்டிவிடவா?” என்று கேட்டதும் கோபம் அவனுக்கு அத்துமீறியது.
“இப்ப எதுக்கு இந்த கரிசனை ?,அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. கிளம்பறீங்களா!?” என்று மெதுவாக கடிந்து கொண்டாலும் பூரணியின் தோழிக்கும் கேட்டுவிட , அவள் பார்த்ததும் பூரணி நிரூபனை முறைத்தாள்.
“இப்ப எதுக்கு கத்திப் பேசறீங்க. தலைவலி இன்னும் அதிகமாகவா…?ஆஆ காட்டுங்க !”என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மிரட்டினாள்.
“இதெல்லாம் கானல்நீர் போல தான பூர்ணி. எனக்கு சரியானதும் போயிடுவ ,அப்புறம் நான் மறுபடியும்..” என்றதும் அவனை நிர்மலமான முகத்துடன் பார்த்தவள் தண்ணீரை நீட்டினாள்.
இருவரின் விழிகளும் தழுவிக் கொண்ட நேரத்தில் சத்தமின்றி இருவரின் இதயங்களும் தழுவிக் கொண்டது.
மோகன் வந்துவிடவே பூரணி சங்கடமாய் அவனைப் பார்த்தவள் ,”தனியா இருக்கவும் என்ன செய்றதுனு தெரியலை மோகன். தனியா விடவும் மனசில்லை “என்றாள் பரிதவிப்புடன்.
“தனியா விட்டிருந்தா தான் சித்தி கோபப்பட்டு இருப்பேன். சரி காய்ச்சல் இன்னும் இருக்கா? வேற ஆஸ்பத்திரியில் சேர்க்கலாமா… ?கலையரசன் ஹாஸ்பிடல், இல்லாட்டி தாஸ் ஆஸ்பத்திரி இருக்கு அதுவும் வேணாமின்னா அப்பல்லோ இருக்கு கூட்டிட்டுப் போகலாம் “என்று படபடத்தான்.
“இங்கேயே நல்லா பார்க்கிறாங்க மோகன். அடிக்கடி வந்து டாக்டர், நர்ஸுனு செக் பண்றாங்க” என்றவள்,”மாத்திரை குடுத்ததும் தூங்கிட்டாரு. காய்ச்சல் விட்ருக்கு இப்போ. எப்பவும் தனியா வந்து தான் பார்த்துக்குவாராம். இங்க வேலை பார்க்கிற நர்ஸு பொண்ணு சொல்லுச்சு. “என்றவள் தன் தோழியையும் அறிமுகம் செய்ய மறக்கவில்லை.
“அப்பா அம்மா அத்தை மூணுபேரும் பஸ்ஸுக்கு வர்றேன்னாங்க, நான் தான் இங்க எப்படின்னு பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். “என்றவன்
“பாப்பா, கூட எத்தனை பேருமா இருக்கலாம்” என்று கேட்டுக் கொண்டான்.
“ஒருத்தவங்க தான்ண்ணே இருக்க முடியும். மத்தவங்க வெளியே கீழ தான் இருக்கணும்” என்றாள் கிருத்தி.
“அப்ப நீங்க கூட இருங்க சித்தி. நான் வெளியே இருக்கேன் ஏதாவது வேணுன்னா கூப்பிடுங்க” என்று அமர்ந்து கொண்டான்.
அதன் பின் இரண்டு நாட்கள் நிரூபனோடு தான் பூரணி இருந்தாள். இடையில் கலியபெருமாள் ,செவ்வந்தி, பவளம், மார்த்தாண்டன் என ஒவ்வொருவராய் வந்து பார்த்துவிட்டும் சென்றனர்.
குமரன் மறுநாளே வந்தவன், நிரூபனை அத்தனை பேச்சு பேசினான் காய்ச்சல் சொல்லாமல் விட்டதற்காக.
“டேய் விடேன்டா !”என்று நிரூபன் இறங்கிப் போக குமரனோ மெல்லியகுரலில் ,”அண்ணி எப்படியோ இந்த சாக்கில் மனசு மாறிட்டாங்கனு சும்மா விடுறேன் ண்ணே” என்றான்.
“காய்ச்சல்னு பரிதாபப்பட்டு இருக்கா, வீட்டுக்கு கூட்டிட்டுப் போனதும் பழையகுருடி கதவைத்திறடினு கிளம்பிடுவா” என முணுமுணுக்க , அது பூரணியின் காதில் நன்றாகவே விழுந்தது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டனர்.
“குமரா, வீடு சுத்தம் பண்ணவே இல்லடா!” என்று முனக
“அதெல்லாம் பண்ணியாச்சு” என்ற குமரன் கதவைத் தட்டினான்.
பூரணி தான் கதவைத் திறந்தாள்.
“ஏன் குமரா இவ்வளவு நேரம்…?”என்றபடி அவனிடம் இருந்து பையை வாங்கிக் கொள்ள
“ஏன்டா இது நம்ம வீடுதான இல்ல அய்யலூருக்கு வந்துட்டோமா?” என்றிட
“ப்ப்ச் !”என்று திரும்பி அவனை முறைத்தாள் பூரணி.
“ஆயா வெந்நீரைப் போடு, அலுப்புத்தீர குளிக்கட்டும் பெறகு சாப்புட குடுக்கலாம்” என்று கலியபெருமாள் சொல்லவே ,நிரூபனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் தான்.
‘கனவுலகில் மிதக்கிறேனா?’ என்ற கேள்வி வேறு மனதில் உலா வந்தது.
குளித்துவிட்டு வந்தவனுக்கு நாட்டுக்கோழி சூப்பை கொடுத்திட ,”இப்ப வேணாமே!” என்று முகம் சுருக்கினான்.
“ஆஸ்பத்திரியில் ரசம் தான் சாப்பிட்டீங்க. இது கொஞ்சம் வாய்க்கு ருசியா இருக்கும் குடிங்க தம்பி” என பவளம் சொல்லியவர் கலியபெருமாளிடம் கண்காட்டினார் பேசும்படி.
“ம்ம்க்கும் “என தொண்டையை செருமிக் கொண்ட கலியபெருமாள்,” தம்பி நா சுத்தி வளைச்சு பேச விரும்பலை. ஆயா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருச்சு. இந்த வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிடுவோம் சரிதான. எல்லா ஏற்பாட்டையும் தான் ஏற்கனவே செஞ்சு வச்சிருக்கீங்களே. எங்களுக்கும் முழுசம்மதம்தான். நீங்க என்ன சொல்றீங்க?” என்று பட்டென்று கேட்டுவிட்டார் கலியபெருமாள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.