சகோதரிகள் இருவரும் அளவளாவிக் கொண்டிருக்க , கவினும், கமலியும் புன்னகையோடு கேட்டிருந்தனர். நெடுநாளைய ஏக்கங்கள் எல்லாம் பனித்துளி போல கரைந்து கொண்டிருந்தது அங்கே.
சிறுவயது ஞாபகங்கள் எல்லாம் பேசி சிரித்தவர்கள், மறந்தும் அவர்கள் வாழ்வின் கசந்த நினைவுகளைப் பகிரவில்லை.
“அக்கா நாளைக்குப் பேசுறேன். சமைக்கணும்” என எழுந்து கொண்டாள் பூரணி.
“மணி எத்தனை?” என்றபடி பார்த்த சரண்யா பதறி ,”கவி உங்கப்பா பஸ் ஸ்டாண்ட் வரச் சொன்னாரு மறந்துட்டேன் ஓடு “என்று சொல்ல இணைப்பு துண்டிக்கப்பட்டது.
‘இன்னும் அவருக்கு பயந்துட்டு தான் இருக்கியாக்கா ‘என கவலை கொண்டவள் , அவசரமாய் சமையலறைக்குள் ஓடினாள்.
“சித்தி… சித்தி.. பொறுமை பொறுமை… அம்மா சமைச்சுடுச்சு” என மோகன் சொல்ல, பதற்றத்துடன் உள்ளே நுழைந்தாள் பூரணி.
“இருக்கட்டும் பூர்ணி. நாங்களாச்சும் அம்மா, அண்ணே வீடுன்னு ஓடுறோம். நீ எங்கேயும் போவலையே. பாரேன் ஒரு ஃபோனு நம்பரு கூட இல்லாம இருந்துட்டோம் சரி எல்லாம் நல்லா இருக்காகள்ள?” என்று கேட்க
“நீதேன் எங்கேயும் போக முடியாம இருந்த உங்க அக்காளாச்சும் வந்து பாத்திருக்கலாம். ம்க்ஹ்ம் அதுக்கென்ன வேலையோ பாவம்” என்றவர் பேசியபடி உணவை கூடத்திற்குக் கொண்டு சென்றார்.
அதற்குள் கலியபெருமாள் வந்து விட்டவர், உணவுண்ண அமர , மோகனும் வந்தமர்ந்தான்.
“ஏண்டா தெக்கால காட்டுக்காரன் கூட என்னடா தகராறு ?,அந்தக் குதி குதிக்கிறான்” என்றதும்
“ஒண்ணுமில்லப்பா. நேத்து மடை மாத்தும்போது முனியன் சரியா அடைக்கல போல, தண்ணி அவன் காட்டுக்குள்ள போயிருச்சு அதுக்குத்தான் கத்தி இருப்பான். நாஞ்சொல்லிட்டுத் தான் வந்தேன் அதுக்குள்ள உங்கிட்ட சண்டை இழுத்துட்டானா!?” என்று மோகன் கேட்க
“தெனவெடுத்தவன், என்ன வயக்காடா அடிச்சுக்கிட்டு போச்சு லபோதிபோனு கத்துனான்டான்றேன்” என்றார் சற்று கோபத்துடன்.
“விடுப்பா நாளைக்கு அவன கேட்டுக்கிடுறேன்” என்றபடி உணவை உண்ணத் துவங்கினான்.
“பூர்ணி கல்யாணத்துக்கு இன்னும் எத்தன நா இருக்கு ?”என்று கேட்க
“ஒரு வாரம் மாமா” என்றாள்.
“ம்ம்ம் சரித்தான். நீ புள்ளைக்கு சித்தி மொறையாவுதுல்ல. சித்தி வகையில பெருசா சீரு செய்ய மாட்டாக. இருந்தாலும் மொதப்படியா வந்து பத்திரிக்கை வச்சிருக்காங்க. கல்யாணப்பிள்ளைக்கு ஒரு பவுன்ல தோடு எடுத்துக்கிட்டு, பொடவை துணிமணி வச்சு குடுத்துட்டு வாரோம். நானும் பவளமும் போயிட்டு வாரோம். செவ்வந்தி நீ உள்ளூர் வடக்கித்தெரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்திடு. மோகனு நீ என்ன பண்ற வேடசந்தூர்ல ஒரு கல்யாணம் அதுக்கு போயிட்டு வந்திரு “என்றார்.
பூரணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கவின் அத்தனை ஆசைப்பட்டு அழைக்கவும், மதிவாணன் பேசினால் பேசட்டும் வாங்கிக் கொள்வோம். திருமணத்திற்கு செல்லலாம் என்று சற்று முன்பு தான் யோசித்திருந்தாள். இப்போது கலியபெருமாள் இப்படி சொல்லவும் முகமே வாடிப் போனது அவளுக்கு.
“சரிங்க மாமா” என்றவள் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துச் சென்றாள்.
“ஏங்க அந்தப் புள்ளையை போயிட்டு வரச் சொல்லுவீங்கனு பார்த்தா, நீங்க என்ன இப்படி சொல்றீங்க?” செவ்வந்தி கேட்டிட
“ஏங்க அதுக்குன்னு அக்காமவ கலியாணத்துக்கு அது போவாம எப்படிங்க…? இத்தனை வருஷமும் வீட்டோட அடைஞ்சு கெடந்துச்சு. வெளியே தெருவ கூட போனதில்ல” என்று சங்கடமாக உரைக்க மோகன் அறை வாசலில் வந்து நின்றான்.
“யப்பா…!” என்று அழைத்திட,”
உள்ளார வாய்யா” என்று அழைத்தார் செவ்வந்தி.
“உட்காருய்யா… என்ன சேதி?” என்று கலியபெருமாள் கேட்டிட
“ஒண்ணுமில்ல கல்யாணத்துக்குப் போறது பத்திதான் பேச வந்தேன்.” என்றான் தயக்கமாக
“ஏன்யா வேலை எதுவும் இருக்குதா…?, விடு விருந்துல போய் மொய் வச்சுக்கிடலாம்” என்றார் அவர்.
“அதில்லப்பா… சித்தியை சென்னை கல்யாணத்துக்கு அனுப்புவோமே… அவங்க வெளியே சொல்லல இருந்தாலும் ஆசையிருக்குமில்ல. அவங்க போய் சீர் செஞ்சா அது ஒரு மாதிரி தானப்பா.” என்று தயங்கினாலும் கேட்டு விட்டான்.
“எல்லாஞ்சரிதான்யா ஆனா அது அக்காப் புருஷன் கொஞ்சம் வெடுமணியா (வெடுக்கென்று) பேசுவாப்டி, அதான் யோசிச்சேன். பத்திரிக்கை வைக்கக் கூட மவனை அனுப்பி விட்டுட்டு கமுக்கமா இருந்துகிட்டாகள்ள” என கலியபெருமாள் சொல்ல
“யப்பா உங்க தயக்கமும் சரி தான் ஆனா சித்தியும் ஆசைப்படுவாங்கள்ள அதான் ஒரு யோசனை சொல்ல வந்தேன்” என்றான்.
“சொல்லுய்யா, சரியா இருந்தா செய்யலாம்” என்று கூறி விட்டார் கலியபெருமாள்.
“ஒண்ணுமில்ல இனியன் சொன்னான் கல்யாணத்துக்குப் போறதா… அவன் கூட அனுப்புவோம் இல்லாட்டி நானும் கூட போயிட்டு வாரேன் சீர் செஞ்சதும், தாலிக்கட்டு முடிஞ்சதும் பத்திரமா கூட்டிட்டு வந்திடுறேன்” என்றான் மோகன்.
சில நிமிட யோசனைக்குப் பிறகு,” ம்ம்ம் அப்ப சரி தான் நீ சித்தியை கூப்பிட்டுக்கிட்டு போய்ட்டு வந்திடு. சீர் செஞ்சுட்டு கெளம்பிடுங்க, நான் இங்க வேடசந்தூர் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்திடுறேன், என்ன செவந்தி சரிதானே ?”என்று மனைவியை கேட்க
“சரிங்க நல்லதுதான். அப்ப காலையில போய் தோடு சிமிக்கி எடுத்துக்கிட்டு, பொடவையும் எடுத்துட்டு வருவோம் . யய்யா மோகனு இந்த தேங்கா வாழைப்பழம், பூவு எல்லாம் அங்க போய் வாங்கிக்கங்க “என்றார் செவ்வந்தி .
மோகன் வேகமாக ,”சரிப்பா இதை சொல்லத்தான் வந்தேன். நீங்க படுங்க.” என்று எழுந்து கொண்டான்.
“ஏய் உன் சித்தி கிட்ட சொல்லிடு. என செவ்வந்தி சொல்ல,” செரிம்மா!” என்று கதவை சாத்தி விட்டுச் சென்றான்.
“சண்டை கிண்டை போட்டியா மோகன்?” என்று பதற்றமாக கேட்க
“ஏன் சித்தி?, அதெல்லாம் இல்லை. நான் சொன்னதுமே கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு சரினு சம்மதிச்சுட்டாங்க.” என்றதும் பூரணிக்கு மனம் வானில் பறந்தது. ஆனாலும் மதிவாணனை நினைத்து தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு .
“நாம சென்னைக்குப் போறோம் , கல்யாணத்துல கலக்கறோம்” என்ற மோகன் படுக்க சென்று விட்டான்.
‘நீயும் வெளியே போறடி பூரிக்குட்டி. அக்காவைப் பார்க்கலாம், கவின் கமலி எல்லாரையும் பார்க்கலாம் பேசலாம் ‘என நினைத்தவளுக்கு அப்போது தான் நினைவே வந்தது. தான் போவது தன் அக்கா மகள் திருமணத்திற்கு மட்டுமல்ல நடராஜனின் மகன் திருமணத்திற்கும் தான் என்பது.
‘ஸ்ஸ்ஸ் இதை எப்படிடி யோசிக்காம விட்ட ?’என தன்னை நொந்து கொண்டவள் ,’ம்ப்ச் அவருக்கும் இதெல்லாம் தெரியாமலா இருக்கும். மகனுக்கு இங்க கல்யாணம் பண்றாருன்னா அவர் எதுவும் நினைக்கலைன்னு தான அர்த்தம் என்று தானே ஒரு அர்த்தத்தை கற்பித்துக் கொண்டு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
படுக்கையை விரித்துப் போட்டு விட்டு தன் கணவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். கம்பீரமான சிரிப்புடன் கண்ணாடிச் சட்டத்திற்குள் நிறைந்திருந்தார் சிவலிங்கம்.
‘ரொம்ப நாளைக்கு அப்புறம் அக்காவை பார்க்கப் போறேன். கல்யாணத்துக்கு நல்லபடியா போயிட்டு வந்திடணும். எனக்குத் துணையா வாங்கய்யா’ என்று வேண்டிக் கொண்டாள்.
‘போ உன் வாழ்வையே தீர்மானிக்கப் போகும் நிகழ்வெல்லாம் அங்கே தான் நடக்கப் போகிறது’ என்பது போல அவர் பார்வை இருந்தது.
“நீங்க இன்னும் கொஞ்சம் எங்கூட வாழ்ந்திருக்கலாமில்ல. எனக்குப் புடிச்சவங்க யாரும் என்கூட இருக்கக் கூடாதுன்றது என் தலையெழுத்து போலிருக்கு “என முனகியபடி பெருமூச்செறிந்தாள். நினைவுகளில் வந்து போனது அவளது திருமணம் .
அவசர அவசரமாக நடந்து முடிந்திருந்தது சிவலிங்கம் பூரணசந்திரா திருமணம்.
“ஒந்திமிருத்தனத்தெயெல்லாம் காட்டாம ஒழுங்கா பொழைச்சுக்க, இங்கருந்து உன்னால ஒரு பிரச்சனைன்னு ஒரு சேதி வந்திடக் கூடாது” எனக்கு என எச்சரித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பினர் அவளின் பெற்றோர்.
“வராதுப்பா!” என்று முணுமுணுத்து விட்டு தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.
“வெளக்கேத்து பூரணி!” செவ்வந்தி மூத்த மருமகளாய் உதவி செய்தார்.
“நல்லா வேண்டிக்கய்யா ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு… லிங்கம் புள்ள கூட சேந்து நின்னு கும்பிடு” என்று கலியபெருமாள் சொல்ல,” சரிங்கண்ணே!” என்று பூஜையறையில் பூரணியோடு இணைந்து கும்பிட்டார் அவர்.
“இது தான் புது சித்தியா ?அத்தையா?” என்று கேட்டபடி வந்து நின்றது நான்கு வாண்டுகள். அது இனியன், மோகன், மதுரா, கனிஷ்கா தான். ஆம் அப்போதே பவளக்கொடி சேகரன் திருமணம் எல்லாம் முடிந்திருந்தது. சேகரன் காதல் திருமணம் செய்து கொண்டார் அதனால் சிவத்திற்கு திருமணம் முன்பே அவருக்கு திருமணம் நடந்து குழந்தையும் பிறந்துவிட்டிருந்தது.
“ஆமாங்கண்ணுகளா இவங்கதான் புது சித்தி ஒனக்கு இனியனுக்கும் அத்தை” என்றார் சிவம்.
“அத்த நீங்க அழகா இருக்கீங்க” இனியன் களுக்கி சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரித்து விட்டு ஓடினர்.
இரவு சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள் பூரணி.
பேச்செல்லாம் அமைதியாக பேசும் சிவத்திற்கு முகம் அத்தனை கனிவானதாய் இல்லை. கம்பீரத் தோற்றம், முறுக்கு மீசை, அவர் வயதுக்கே உரிய உடல்வாகாய் இருந்தார். பூரணி அவர் அருகில் கன்னுக்குட்டிப் போல சிறிதாய் இடுப்பில் இருந்து கொஞ்சம் உயரமாய் நின்றாள்.
சிவலிங்கத்தின் உருவத்தைப் பார்த்து அவளுக்கு பயம் தான் வந்திருந்தது.
“வாய்யா ஏன் அங்கனயே நிக்கிற உள்ள வா!” என புது மனைவியை சிவம் அழைத்திட , அவளுக்கு உள்ளூர நடுக்கம் தான். கோழிக்குஞ்சு போல ஒடுங்கி வந்தவளைக் கண்டு அத்தனை கனிவு அவர் பார்வையில். கதவைத் தாழிட்டு விட்டு ,”உட்காருய்யா!” என்றார் சிவம்.
‘உருவத்தைப் பார்த்து போடி வாடி என்று அரற்றி உருட்டி மிரட்டப் போகிறார் ‘என்று அவள் நினைத்திருக்க, சிவமோ தான் அப்படியில்லை என்று அவரது ,”அய்யா!” என்ற அழைப்பிலேயே காட்டி விட்டார்.
“எம்பேரு பூரணி “என்றாள் மெலிதாய்.
“தெரியுமேப்பா… உட்காருய்யா. பேரு தெரியாமலா கட்டிக்கிட்டேன்” என சிரித்தபடி அவளருகில் அமர்ந்து கொண்டார்.
“பயப்புடாதப்பா. அம்புட்டு அச்சமெல்லாம் வேணாம் சரியா…?”கையைப் பிடித்து தூக்கி மடியில் அமர வைத்துக் கொண்டார். சட்டென சிவம் அப்படி செய்யவும் திடுக்கிட்டவள் இறங்க முற்பட,” ஒண்ணுஞ் செய்ய மாட்டேன்மா உட்காரு. சும்மா பேசிக்கிட்டு தான் இருப்பேன் “என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டவர், அப்படியே அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.
“யாரையோ ஆசைப்பட்டியாமே…?அதான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி தந்துட்டாங்க னு கேள்விப்பட்டேன். இல்லாட்டி சரிக்கு சரி வயசு உள்ள மாப்ளைக்கு தந்திருப்பாங்களா?” என்று கேட்டதும் மயக்கமே வந்து விட்டது பூரணிக்கு.