பூரணியைக் கண்ட நடராஜன் திகைத்தவர், பின்னர் சுற்றி உள்ளவர்களைக் கண்டு நிதானத்திற்கு வந்து விட்டார்.
பூரணிக்கோ, மனமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. நம்மைத் தெரிந்தது போல அவர் காட்டிக் கொள்ள கூடாது என்று அவசர வேண்டுதல் வைத்தாள் வனஜாவின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை கவனியாமல்.
நடராஜனைக் கடக்கையில் இதயம் தடதடக்கத்தான் செய்தது பூரணிக்கு. நடராஜன் சங்கடமாய் தலையை குனிந்திருந்தார்.
எல்லோரும் உள்ளே சென்று விட , நிரூபன் இனியனிடம் பேசப் போய் விட்டான்.
“இந்தக் கல்யாணத்திற்கு தான் வந்தீங்களா ?.பாருங்க அது தெரியாம ஒண்ணா ட்ராவல் ஆகியிருக்கோம்.”என்றான் சிரிப்புடன்.
“ஆமாண்ணா, பொண்ணு என் அத்தையோட அக்காப்பொண்ணு அதான் அவங்களை அழைச்சுட்டு வந்தோம் நீங்க மாப்ளைக்கு…” என இழுத்தான் இனியன்.
“மாப்பிள்ளைக்கு தாய்மாமன் முறை ஆகுது. “என்றான் நிரூபனும்.
“ஓஓஓ சரிங்கண்ணா!” என்றதும் அவர்களோடு பேச அமர்ந்து விட்டான் அவன்.
மூவரும் பேச்சில் மும்முரமாக இருக்க , கவினும் வந்து கலந்து கொண்டான் அவர்களோடு.
“திண்டுக்கல் அய்யலூர் தானா நீங்க?, பரவாயில்லை ரொம்ப நெருங்கி வந்துட்டோம். நான் மணப்பாறை தான். என்எஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் னு ஒரு மளிகைக்கடை வச்சிருக்கேன். உங்க ஊர் சந்தைக்கு கூட அடிக்கடி வருவேன். வியாழக்கிழமை சந்தையில இந்த பழுபாவக்கா வாங்க வருவேன்” என்றான் நிரூபன்.
“ஓஓஓ… அப்போ அங்க இங்க நீங்க மோகன பார்த்திருப்பீங்க. நாங்களும் பழுபாவக்கா விற்க வருவோம். நல்ல ரேட் அது. கிலோ 250 -300 கூட விற்கும் மோகன் வயல்ல அதான் போட்ருக்கான்” என்று இனியன் சொல்ல
“பரவாயில்லைய்யா . நல்ல விவசாயம் தான். அது விதைக்கிழங்கு போட்டு தான் சாகுபடி பண்ணனுமாமே…?, சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாம். சமைச்சா ஆட்டுக்கறி சமைச்ச மாதிரி அற்புதமா இருக்கும், எங்கப் பெரியண்ணனுக்கு சுகரு. அவருக்காக வாங்க வருவேன் “என்றான் நிரூபன் கூடுதல் தகவலாக.
“ஆமாண்ணா நல்ல காய் அது பேரு தான் பாவக்கா ஆனா கசப்பே இருக்காது. அங்கன மலைப்பட்டியில் அதான் முழு விவசாயம். நிறைய நோய்க்கு மருந்தா சொல்றாங்க அந்தக் காயை. நீங்க நெறய விஷயம் தெரிஞ்சு வச்சிருப்பீங்க போலருக்கே?!” என்று மோகன் கேட்க
“எல்லாம் போறப் போக்குல இப்படி நாலு பேர் கிட்ட பேசி கேட்டு, படிச்சு தெரிஞ்சுக்கறது தான் தம்பி.” என்று புன்னகையாக நிரூபன் சொல்ல
“மோகன் அவர் உனக்கு சித்தப்பா முறை ஆகுது. நீயும் நானும் அண்ணன் தம்பின்னா அவர் மாப்பிள்ளைக்குத் தாய்மாமன் அப்போ பார்த்துக்க “என்று கவின் கூற,” அட ஆமா இனிமே அண்ணேன்னு கூப்பிடலை. சித்தப்பான்னே கூப்பிடுறேன்” என்றான் அவனும்.
“ஹாஹாஹா ! அப்ப எனக்கு மாமாவா?” என சிரித்த இனியன் ,”உங்களுக்கு பொண்ணு எதுவும் இருந்தா சொல்லுங்க மாமா, நானே கட்டிக்கிறேன். உங்களை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு “என்று இலகுவான கிராமத்து குறும்பு அவனிடத்தில் வெளிப்பட, நிரூபன் அட்டகாசமான சிரிப்புடன் ,”வாய்ப்பில்லை ராசா நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. இலக்கியநடையில் சொல்லணும்னா நான் ஒரு விதவன் “என்றான் இயல்பாய்.
சட்டென ஒரு அமைதி நிலவியது அங்கே
“சாரிண்ணா !”என்று இனியன் உடனே மன்னிப்பு கேட்க
“பாத்தியா பொண்ணு இல்லைன்னதும் மறுபடியும் அண்ணன் ஆக்கிட்ட , அதனால சாரி எல்லாம் எடுத்துக்க முடியாது “என்று சொல்லி சிரித்த நிரூபன் ,”இதுல என்னய்யா இருக்கு. விடு விடு “என்றதோடு வேறெதுவும் பேசவில்லை.
அதற்குள் வேறு விஷயங்கள் பற்றி பேசத் துவங்கி விட்டனர் நால்வரும். பேச்சுவாக்கில் மாப்பிள்ளையின் குணம் பற்றியும் விசாரித்துக் கொண்டான் கவின். நிரூபனுக்கும் அது புரிந்து தானிருந்தது. ஆனாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை அவன். தங்கை வாழப் போகும் வீட்டைப் பற்றி அவன் விசாரித்ததில் மகிழ்ச்சியே நிரூபனுக்கு.
அதற்குள் இனியனை மதுரா அழைத்து விட்டாள்.
அழைப்பை ஏற்ற இனியன் பேசி விட்டு ,”மோகன் மது செமினார் முடிச்சுட்டாளாம். ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் போயிட்டு வரேன்னு சொன்னா “என்றான்.
“அப்போதைக்கு கூப்பிட சொல்லு கூட்டிட்டு வரேன்” என்ற மோகன் தன் தந்தையிடம் பேசி விட்டு வருவதாக சென்றான்.
**********
நடராஜன் வந்த உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் நினைவில் பூரணி வந்து நின்றாள்.
சற்று முன் தான் சரண்யா பூரணியை என் தங்கை என்று வனஜாவிடம் கூறி இருந்தார்.
அதிலிருந்து இப்போது வரை வனஜாவிடம் சிக்கவில்லை நடராஜன்.
“அதான் உங்க ஆசைக்காதலி..” என்றதும்,” வனஜா!” என்று அதட்டியவர் ,”தேவை இல்லாத விஷயம் எல்லாம் பேசாதே. எனக்குத் தெரிஞ்சா நான் சொல்லி இருக்க மாட்டேனா…?இதை இத்தோடு விடு வனஜா. அவ கல்யாணத்திற்கு வந்திருக்கா, அவ்வளவு தான். தெரிஞ்சது போல கூட நான் காட்டிக்கலை போதுமா” என்றார் சற்று கோபத்துடன்.
“பார்த்து கவனம் அவ்வளவு தான்” என எச்சரித்து விட்டுச் செல்ல , பெருமூச்சு தான் நடராஜனிடத்தில்.
‘ஆனாலும் பூரணியிடம் ஓரிரு வார்த்தை பேசி அவளது நலமாவது விசாரிக்க வேண்டுமென்றுத் தோன்றியது’ அவருக்கு. திருமணமாகி ராகுல் பிறந்த பிறகு நிறைய விஷயங்களில் இருந்து தள்ளிப் போய் விட்டார் நடராஜன். அதில் அவரதுக் காதலும் ஒன்று.
கல்லூரியில் படிக்கும் போது காதல், அதற்கு பெற்றோரின் எதிர்ப்பு, அதனால் நடந்த அவசரத்திருமணம் என்று புயலடித்து தான் ஓய்ந்தது அவர் வாழ்வில்.
‘காலம் எவ்வளவு வேகமாக சுழலுகிறது?’ என்று நினைத்தவர் அடுத்த வேலையை கவனிக்கத் துவங்க, மனமோ பூரணியிடம் நிலை கொண்டது.
‘ஏன் இப்படி இருக்கிறாள் நெற்றியில் கருப்பு பொட்டு, கழுத்தில் மெல்லிய சங்கிலி அப்படி என்றால் கணவன் இல்லையா…? பிள்ளை எதுவும் இல்லையா இல்லை இருக்கிறார்களா… இளைத்துப் போய் இருக்கிறாளே… ஏன் நிச்சயத்தன்று வரவில்லை ?’என்றெல்லாம் ஓடியது அவருள்.
“சார் நைட் டிஃபன் ரெடி” என்று சமையற்காரர் அழைக்க ,நினைவுகளை உதறித் தள்ளி விட்டு திருமண வேலைகளை கவனித்தார்.
*******
“என்ன வனஜா இப்படி பண்ணி வச்சிருக்காரு உன் புருஷன்.?” வனஜாவின் மூத்த அண்ணன் சிவகுரு கேட்க
“என்னாச்சுண்ணா?” என்று பதற்றமாய் வனஜா கேட்க
“என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்கிற…? அந்தப் பொண்ணோட சித்தி யார்னு உனக்குத் தெரியாதா?” நேரடியாக அவர் கேட்க
வனஜாவிற்குள் பெரும் போராட்டம்.
“ஏதோ ராகுலு ஆசப்பட்டான்னு ஜாதி மாறி கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க சரி , உன் மவன் மனசை உடைக்க வேணாமின்னு நாங்களும் பெரிய மனசோடு வந்துட்டோம். இங்க வந்து பார்த்தா உன் புருஷன் பழைய காதலுக்கு புள்ளையார் சுழி போடுவார் போலத் தெரியுதே ?”என்று வெடுக்கென்று கேட்டு விட
வனஜா பதறிப் போய்,” அச்சோ !அண்ணே அதெல்லாம் இல்ல நீங்க வேற… அவருக்கும் எனக்குமே இப்ப தான் தெரியும் அவ தான் பொண்ணோட சித்தின்னு. அவர் தெளிவா சொல்லிட்டாரு, நான் எந்த பேச்சும் வச்சுக்க மாட்டேன்னு. இதுக்கு மேல எதுக்கு நாம பயப்படணும்?” என்று வனஜா சமாதானமாய் கூற
“என்னவோ வனஜா எங்களுக்கு நீ நல்லா இருக்கணும் , அவ்வளவு தான். நீ ஆசைப்பட்டியேன்னு தான் நடராஜனுக்கு உன்னைக் கட்டி வச்சோம். பார்த்துக்க அவ்வளவு தான். உன் புருஷனை கண்டிச்சு வை. வர்ற மருமக கிட்டயும் லேசுபாசா கண்டிப்போட இரு. அந்த புள்ள உன் வீட்டுப் பக்கம் வரக் கூடாது அவ்வளவு தான். எதுவாக இருந்தாலும் அவக அம்மா வூட்டோட வச்சு சொந்தம் கொண்டாடிக்க சொல்லு” என்றார் அவர்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன் அண்ணே. அந்த அளவுக்கு விட்டுடுவேனா.? இவன் மட்டும் காதல் கீதல்னு சொல்லாம இருந்திருந்தா இந்நேரம் நீயும் நானும் சம்மந்தி ஆகி இருப்போம்ண்ணே பாவிப்பய அவன் தான் அந்த புள்ள தான் வேணும்னு நின்னுட்டான்” என்றார் ஆதங்கத்துடன்.
“ப்ப்ச், காலையில கல்யாணத்தை வச்சுக்கிட்டு என்ன பேச்சுமா இது.?, சரி விடு நீ வேலையப் பாரு. உன் புருஷன் போக்கு மாறுச்சுன்னா எங்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன். “என்றவர் ,”அப்படி எதுவும் சில்மிஷம் பண்ணான். வெட்டி பொலி போட்ருவேன்” என்று மீசையை முறுக்கிக் கொண்டு உக்கிரமாக பேச, அத்தனையையும் நடராஜன் கேட்டிருந்தார்.
அவர் மனமோ உலைக்கலனாய் கொதித்தது.
‘என்ன நினைச்சுட்டு இருக்கானுக இவனுக.?,ஏன் இவனுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எந்தப் பொண்ணையும் பாக்கலையா…? ரொம்ப தான் பேசுறானுக. வரட்டும் எதாச்சும் எங்கிட்ட கேட்கட்டும் , அப்புறம் பாத்துக்கிறேன் இவனுகளை. இதுக்குன்னே அவ கிட்ட போய் பேசுறேன் நான் ‘என்று சத்தியபிரமாணம் எடுக்காத குறையாய் நினைத்து விட்டு அகன்றார் நடக்கப் போவது தெரியாமல்.
*********
அக்கா என்று தயக்கமாக அழைத்த பூரணி மெதுவாக நடராஜன் விஷயத்தைப் போட்டுடைத்தாள்.
“என்னடி சொல்ற ?!”என்று வியப்பாய் வினவிய சரண்யா ,”உங்க மாமாவுக்கு அவரைத் தெரியுமான்னு தெரியலையே…? தெரிஞ்சிருந்தா இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துட்டு இருக்க மாட்டார் “என்று கூறியவர் மெல்லிய குரலில்,” உன் காதலை இவங்க எதிர்க்காம இருந்திருக்கலாம்னு தோணுது பூரணி” என்று சொல்லி விட்டார் பூரணியின் நிலையையும், நடராஜன் இப்போது வாழும் வாழ்வையும் நினைத்து மனம் தாளாமல்.
“அக்கா இப்போ போய் எதுக்கு இந்தப் பேச்சு? யார் காதிலாவது விழுந்துத் தொலைக்கப் போகுது. அதுவுமில்லாம இப்போ அவர் நமக்கு சம்மந்தி சொல்லப் போனா அண்ணன் முறையாகுது “என்று கண்டித்தாள் பூரணி.
“சரி விடுடி. இப்ப எதுக்கு அதெல்லாம்? ஆமா நீ என்னம்மோ சொல்ல வந்தியே!?” என வினவும் போதே பார்வதி வந்து சரண்யாவை கூப்பிட, வேகமாக வெளியேறினார் சரண்யா.
கமலி வரவேற்பிற்காக தயாராக ராகுலும் தயார் ஆகி விட்டிருந்தான். மணமக்கள் ஒரு மணிநேரத்தில் வரவேற்பு மேடையில் அமர்ந்திருந்தனர். ராகுலோடு வேலை செய்பவர்கள் நடராஜனோடு வேலை செய்பவர்கள் என்று ஒவ்வொருவராய் வாழ்த்தி விட்டுச் சென்றனர். கடும் முகூர்த்தம் ஆதலால் முதல் நாளே வந்து வாழ்த்தி விட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
இனியன், மோகன் இருவரும் மதுராவை அழைத்து வந்திருந்தனர்.
கவின் வாசலில் நின்று அவனது அலுவலக நண்பர்களுக்காக காத்திருக்க, மதுரா இளஞ்சிவப்பு டிசைனர் சேலையில் வந்து கொண்டிருந்தாள். பெரிதாக முக அலங்காரம் எல்லாம் செய்திருக்கவில்லை அவள் திருத்திய புருவத்தின் இடையில் அரக்குசிவப்பு பொட்டு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் அணிந்திருந்தாள்.
இனியனோடு வளவளத்துக் கொண்டே வர, கவின் அவளை பார்த்திருந்தான் புருவமுயர்த்தி.
‘எங்கத்தையை கல்யாணத்திற்கு வரவழைச்சுட்டாராமாம். மிதப்பா பார்க்கறார்’ என மனதினுள் அவனை அர்சித்தப்படி வந்தாள்.
“வாங்க வாங்க… இனியன், ரிஷெப்ஷன் ஆரம்பிச்சிடுச்சு உள்ளே உட்காருங்க என் கொலிக்ஸ் வரணும் அவங்களை அழைச்சுட்டு வந்திடுறேன் “என அனுப்பி வைத்தான்.
மூவரும் பூரணியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டனர்.
“காலையில் மறுபடியும் எத்தனை மணிக்குப் போகணும் மதுரா?” என பூரணி கேட்க
“காலையில் ஆறுமணிக்கு அத்தை. மேரேஜ் முடிஞ்சதும் சேர்ந்து போயிடலாம் “என்றாள் அவள்.
மோகன் ,’ம்ம்ம் ம்ம்ம்’ என கைபேசியில் ம்ம்ம் கொட்டிக் கொண்டிருந்தான்.
“ஹ்ம்ம் , கல்யாணம் இங்க தானாம். வேடசந்தூர்ல ஏதோ பிரச்னை போல அதனால கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டிலேயே வச்சுக்கலாம்னு சொந்தக்காரங்களை கூட்டிட்டு சென்னைக்குத் தான் வந்துட்டு இருக்காங்களாம். பக்கத்துல வந்துட்டு கல்யாணத்திற்கு வராம இருந்தா நல்லா இருக்காது அதனால அங்க கல்யாணம் முடிஞ்சதும் வந்து கூப்பிட்டுக்க சொன்னாங்க “என்றான்.
“அப்ப ஒண்ணாவே கிளம்பிடுவோம்” என்று கூறிய இனியன், குமரனை அழைத்து தனதருகில் அமர்த்திக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ்ண்ணே… நிரூபாண்ணே வெளியே போயிருக்காங்களாம் நான் தூங்கிட்டேன் எழுந்தா திருதிருனு முழிக்க வேண்டியதாகிடுச்சு” என சந்தோஷமாய் அமர்ந்து கொண்டான்.
இனியன் ஆல்பத்தில் கமலியை பார்த்ததோடு சரி. அதன் பிறகு அவளை கவனத்தில் கொண்டு வரவில்லை அவன். அது அவனுக்குப் பிடிக்கவுமில்லை.இயல்பிற்கு மாறான ஒன்றை செய்ய அவனுக்கு எப்போதும் பிடிப்பதில்லை.*********
மதிவாணன் மகள் வரவேற்பு மேடையில் நிற்பது கண்டு மனம் குளிர்ந்தார். மகள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிய நிம்மதி அவருள்.
ராகுல் மெல்லிய குரலில் கமலியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் பார்வதியும், சண்முகத்தின் மனைவி விஜயாவும், அறைக்குள் பேசிக் கொண்டிருக்க, அதை கேட்ட வனஜாவிற்கு நெஞ்சே அடைப்பது போல இருந்தது.
….. தொடரும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.