“அதுவும் கேட்கணும் தான்.ஆனா அதுக்கு முன்ன பேச வேண்டியது சொல்ல வேண்டியதுனு நிறைய இருக்கே!” என்றான்.
“ஆமாம் கேட்கணும்னு நினைச்சேன். நான் வரும்போது உங்க கடையை …”எனும் போதே நிரூபன் முறைத்து விட்டு,” நம்ம கடை” என திருத்தினான்.
“சரி நம்ம கடை. நான் பார்க்கவே இல்லையே…?” என்றாள் மெல்லிய குரலில்.
“கடை எப்படி இருக்கும்.?, அதைத்தான் சூப்பர் மார்க்கெட்டா மாத்தியாச்சே, வரும்போது பார்க்கலை என்எஸ்பி சூப்பர் மார்க்கெட் னு போர்ட் இருந்திருக்குமே “என கேட்க
“என்எஸ் மளிகைக்கடைனு சொல்லவும் அதைத் தேடினேன்.” என்றாள்.
“என்னைப்பத்தி எதுவுமே கேட்கலையே நீ ?”என்று கேட்டதும்
“குமரன் சொன்னான் முதல் கல்யாணத்தில் ரொம்ப கஷ்டப்பட்டதா…!” என்றதும்
“அதை கஷ்டம்னு சொல்ல முடியாது. ஆனா அப்போ புரிதல் இல்லை எனக்கு. அப்பா அம்மா ரொம்ப வயசானவங்க. என் கல்யாணத்தைப் பார்க்காமலேயே இறந்திடுவோமோனு பயம் அவங்களுக்கு. பெருசா எதையும் யோசிக்காம அப்பாவோட தங்கச்சிப் பொண்ணை பேசி முடிச்சுட்டாங்க. அவ தான் எங்க குடும்ப்திலேயே கடைசியா பிறந்தவ. எனக்கும் அவளுக்கும் ஒரு அஞ்சு வயசு வித்தியாசம் தான் இருந்தது. எனக்கு இருபத்தி மூணு. அவளுக்கு பத்தொன்பது தான். ரெண்டு பேரும் சின்ன வயசு பண்ணி வச்சுட்டாங்க. அவங்களை சொல்லியும் குத்தமில்லை.”
“அப்பா அம்மா அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருபத்தி அஞ்சு வருஷம் கழிச்சு நான் பிறந்தேன். அப்பவே அவங்க வயசு ஐம்பதைத் தொட்டுடுச்சு, அம்மாக்கு நாற்பத்தி அஞ்சு அந்த வயசில் கருவை சுமந்து பெத்தெடுத்ததே பெரிய விஷயம். ரொம்ப செல்லம் எனக்கு அவங்க கிட்ட. படிக்காம போயிட்டேன் , அதாவது ஒரு டிகிரி வாங்கிட்டு விட்டுட்டேன். அதுக்கு மேல அப்பாக்கு முடியாம போக, இங்கேயே கடையை பார்த்துட்டு இருந்துட்டேன். கல்யாணம் ஆகும்போது இருபத்தி மூணு வயசு தான் வேறயா . அப்பா எங்க காலம் இருக்கப்பவே பேரன் பேத்தியை பார்த்திடுறோம்டானு கேட்டு கெஞ்சவும் மறுக்க முடியாம ஒத்துக்கிட்டேன். “
“ரொம்ப அமைதியா., யாரையும் எதிர்த்து பேசாம அவ்வளவு சைலண்டா இருப்பேன். என் அம்மா அப்படி வளர்த்து வச்சுட்டாங்க. அனுசரிச்சு போன்னு சொல்லி சொல்லியே யாரையும் எதிர்த்து பேச மாட்டேன். அதுதான் எல்லாருக்கும் தொக்கா போச்சு” என்று பேச்சை நிறுத்த
“நிரூபா..!”என்றழைத்ததும்
“அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலை பூரணி. என்னைப் பிடிக்கலைன்னு சொல்றதை விட எங்கப்பா அம்மாவை வயசான காலத்தில் பார்த்துக்க பிடிக்கலை. வீட்ல ஒரே பையன் தொந்தரவு இருக்காதுனு சொல்லி கட்டி வச்சாங்களாம். கல்யாணம் ஆகி மூணாம் நாளே தனிக்குடித்தனம் போகணும்னு கேட்டு நிற்கிறா. என்னத்த சொல்ல. என் அப்பா அம்மாவை விட்டு எப்படி போக… பேசிப் புரிய வைக்க பார்த்தேன். விருந்துக்கு போனப்ப திரும்ப வர முடியாதுனு சொல்லி அங்கேயே தங்கிட்டா. அப்பாவோட தங்கச்சி தான் ஆனா அவங்களும் தனியா தான் போகச் சொன்னாங்க. முடியாதுனு மறுத்தப்ப அவளோட அண்ணன் தம்பி எல்லாம் அவ்வளவு பேச்சு. இஷ்டமின்னா வந்து வாழு இல்லாட்டி போடான்னாங்க. தன்மானத்தை விட்டுப் போக முடியல. அப்படியே போக அப்பாவும் அம்மாவும் தனிக்குடித்தனம் போகச் சொல்லி அவ வீட்டுலயும் பேசிட்டாங்க. தனிக்குடித்தனம் வைக்க எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு அவளையும் கூட்டிட்டு வர்றதா தகவல் சொன்னாங்க.”
“தனியா இருந்திங்களா?” என்று பூரணி கேட்க
“அவளை… கோவிச்சுட்டுப் போனாளே அப்போ தான் நான் முழுசாப் பார்த்தது. அப்புறம் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு ஸ்பாட்லயே இறந்துட்டானு தகவல் மட்டும் சொன்னாங்க, நான் அடிச்சுப் பிடிச்சுப் போறதுக்குள்ள சிதையில ஏத்திட்டாங்க. எந்த சடங்குமோ, முறையுமோ நான் செய்யவே இல்லை. அதுக்குள்ள எல்லாம் முடிச்சுட்டாங்க. கேட்டதுக்கு பாடி ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு, அப்படி இப்படினு மழுப்பல் பதில் தான் வந்தது. கொள்ளி கூட கடைசியா சிவகுரு அண்ணே சத்தம் போட்டு வைக்கச் சொன்னாரு. தாலினு ஒண்ணுக் கட்டினதுக்கு அதை மட்டும் செஞ்சேன். அப்புறம் தான் ஒவ்வொரு விஷயமா வெளியே வந்தது” என்றான் பெருமூச்சுடன்.
பூரணி,’ இன்னும் என்ன இருக்கிறதோ ?’என்று அவன் முகம் காண
“அவளுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை பூர்ணி. இவங்க சொத்து வெளியே போயிடக்கூடாதுனு மிரட்டி பண்ணி வச்சிருக்காங்க. அதனால தான் அவ ஏதேதோ சொல்லி வீட்டை விட்டுப் போயிருக்கா. போனவ அங்கிருந்து அவ லவ்வரைத் தேடி போயாச்சு. இவங்க மறுபடியும் தேடிப் போக அங்கிருந்து வரமாட்டேன்னு ஒரே பிடிவாதமாம். வலுக்கட்டாயமா கூட்டிட்டு வரவும், ஓடுன கார்கதவைத் திறந்துட்டு கீழே குதிக்க லாரியில் மாட்டி சுக்கு சுக்கா போயிட்டா. இவனுக அதை மறைச்சு எல்லா காரியத்தையும் முடிச்சுட்டானுக. “
“ஏன்டா அவன் வந்து கேள்வி கேட்டா என்னடா செய்வீங்கனு கேட்டதுக்கு, மளியக்கடக்காரனுக்கு அவ்வளவு தைரியமிருக்கா, கேட்க சொல்லுங்க பார்க்கலாம். ஆம்பளையா லட்சணமா அவன் நடந்திருந்தா எந்தங்கச்சி வேற ஆம்பளையைத் தேடிப் போயிருப்பாளானு அவ்வளவு எகிறு எகிறிருக்கானுக. மனசே விட்டுடுச்சு. இதுல அப்பாவும் ,அம்மாவும் வேற மனசு நொந்து கொஞ்ச நாளிலேயே படுத்தப் படுக்கையா போயிட்டாங்க. வெறுத்து போயிடுச்சு எனக்கு. எவனையும் எந்தக் கேள்வியும் கேட்கலை. எங்கேயாவது விஷேஷத்தில் பார்த்தா கூட பேசறதில்லை . அப்பா அம்மாவை கவனிச்சுட்டே அஞ்சு வருஷம் ஓடிடுச்சு.” என்றவன் நிறுத்தி விட்டு மீண்டும் அவனேத் தொடர்ந்து,
” அப்படி இப்படினு ரெண்டு பேரும் ஒரே நாளில் இறந்து போனாங்க. சாவிலும் இணைபிரியாத தம்பதினு நியூஸ் பேப்பரில் எல்லாம் வந்தாங்க. அதுக்கப்புறம் என் நல்லது கெட்டதை எடுத்துச் செய்யவோ பேசவோ ஆள் கிடையாது. ஏதாவது தேவைன்னு வரும்போது எனக்கு மறுகல்யாணம் பண்றதைப் பத்திப் பேசுவாங்க. தேவை முடியவும் வாயைத் திறக்க மாட்டாங்க. முதல்ல ஆசையா ஆர்வமா கேட்பேன் அப்புறம் வரவர அலுத்துப் போச்சு, பேச்சை எடுக்குறதுக்கு முன்னாடியே அவங்க தேவையை முடிச்சு விட்ருவேன். நிம்மதியாவது மிச்சம் ஆகுமேன்னு” என்றான் மெலிதான புன்னகையுடன்.
“இதுக்குப் பேரு ஏமாளித்தனம் சார் !”என்றாள் சிறு கோபத்துடன்.
“ஆமா தான். ஆனா இந்த பணத்தை எல்லாம் வச்சு என்ன பண்ணப் போறோம்னு ஒரு எண்ணம். அந்த எண்ணமே என்னை வேறெதுவும் யோசிக்கவிடலை. இருக்கிறது போதும் இதை வச்சு வாழ்ந்துக்கலாம்னு தோணும். ஆனா எந்த வேலையும் செய்யாம இருந்தா மைன்ட் சுயபச்சாதாபத்தில் வீணாப் போயிடுமோனு தோணுச்சு. அதனால என்னை இப்படி மாத்திக்கிட்டேன். இதுவரை இங்க வரவே பிடிச்சதில்லை. மணப்பாறையிலேயே தங்கிடுவேன். கந்தன் வந்தா மட்டும் இங்க வருவோம். மத்தபடி அங்கே தான். குமரன் வீட்டில் தான் எல்லாம் செய்வாங்க “என்றவன்,
” சரி அதை விடு” என தன் கைகளுக்குள் அவள் கையை பொத்தி வைத்துக் கொண்டான்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது” என்றவள்
” ஏதாவது சாப்பிடறீங்களா?” என்று கேட்டுக் கொள்ள
“வேணாம்பா, இனிப்பு எல்லாம் நிறைய சாப்பிடுறதில்லை. “என்றபடி அசதியாய் கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.
“வனஜா எப்படி உங்களுக்கு அக்கா?” என்று சந்தேகத்துடன் கேட்க
“ஹ்ம்ம் அதுக்கும் எனக்கும் ஆறு மாச வித்தியாசம் தான் ஆனா அக்கானு தான் கூப்பிடணும்னு சொல்லும். நடராஜன் மாமாவும் அப்படித்தான் சொன்னாரு. சரினு அப்படியே தான் கூப்பிடுவேன். ஆனா கந்தனுக்கும் எனக்கும் நாலஞ்சு வருஷ வித்தியாசம் ஆனா அவனை அண்ணன்னு கூப்பிட்டதே இல்லை நான். “
“கல்யாணத்துக்கு எப்படி ஒத்துக்கிட்டேன்னு கேட்கவே இல்லையே?” என்றதும் ,”அது தேவையே இல்லைனு தோணிடுச்சு. அதான் கூட இருக்கியே போதும்.”என்றான் நிறைவாக.
இரவுப்பொழுது இதம் சேர்த்தது. இளமையைக் கொண்டாடும் வயதில்லை ஆனால் மனமுதிர்வையும் மிச்சமிருக்கும் இனிமைக்காலங்களையும் அனுபவிக்க மனம் உண்டே…
தாம்பத்தியம் எனும் கடலில் முக்குளிக்க இருவருக்குமே பயம், பதற்றம் , இந்த வயதிற்கு மேல் முடியுமா என்ற எண்ணம். இருவரின் மனமும் உடலும் திருப்தியுறுமா என்ற அலைப்புறுதல், நிறைய பேசினார்கள், ஐயாவோடு இருந்த நாட்களை இயல்பாகவே பகிர்ந்து கொண்டவளுக்கு நடராஜனை காதலித்த நாட்களை நினைக்கவும் விருப்பமில்லை பகிரவும் மனதில்லை.
“இந்த வயசில் இவ்வளவு பிடிவாதமா காதல் கல்யாணம் எப்படி!?” ஆச்சரியத்துடன் வினவியவளை,” அதென்ன நீயே இந்த வயசுனு சொல்ற… வயசெல்லாம் ஜஸ்ட் ஒரு நம்பர் அவ்வளவு தான். பிறந்த வருஷத்திலிருந்து ஒண்ணு கூடுது. மத்தபடி நாம எப்படி இருக்கணும்னு மனசு தான் தீர்மானிக்குது. நான் இன்னும் ஜஸ்ட் டிவெண்டி தான் தெரியுமா!?” என்றான் சிரிப்புடன்.
“விடுங்கப்பா சிலரை திருத்தவே முடியாது. அவன் இப்பவும் அடங்கினான்னு பார்த்தீங்களா…? விமலாக்காவை கூட்டிட்டு வந்து நிச்சயமே பண்ண வந்துட்டான். “
“என்ன ?”என்று கோபத்துடன் எழ
“எதுக்கு டென்ஷன்?, உட்காருங்க.” என்றவள் ,”ஆமா… விமலாக்காவுக்கு உடம்பில் இல்லாத வியாதியே இல்லையாம். எப்போ சாவேன்னு தெரியாது. அதனால என் பொண்ணுக்கும், அவருக்கும் நீதான் துணையா இருக்கணும்னு ஒரே எமோஷனல் ப்ளாக்மெயில் அனத்தல் . பெரிய மாமாக்கு அவ்வளவு கோபம். சொத்து எல்லாம் பிரிச்சு தந்து மூஞ்சியிலேயே முழிக்காதீங்கனு கத்தி விட்டுட்டாரு. அப்புறம் கனிஷ்கா இருக்கா அவளுக்காகனு சொல்லி சமாதானம் செஞ்சோம். ஆனா வீட்டுப் பக்கம் வரக்கூடாதுனு கத்தி விட்டுட்டாரு. “என்றாள்.
“அவங்க என்ன லூசா?” என்று கேட்டுவிட்டான்.
“அவங்களே வந்து பொண்ணு கேட்கிறாங்கன்னா, அவன் எவ்வளவு கொடுமைபடுத்தி இருக்கணும். அவங்களை பார்த்து கோபம் வரலை பரிதாபம் தான் வந்தது.”என்றவள் அவன் முகம் பார்க்க
“என்ன?” என்று சிரிக்க
“ஒண்ணுமில்லை. மத்தவங்க எப்படினு தெரியல, பசங்க தான் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க, அதுவும் மோகன் தான் ரொம்பத் தேடுவான்” என்றாள் வருத்தமாக.
இருவரும் ஒன்றாகத்தான் உறங்கவேண்டும் என்ற நிதர்சனம் தெரியும். இதில் வாய்ப்பேச்சாக மறுக்க ஒன்றுமில்லை என இருவருக்குமே புரிந்தது. இயல்பை இயல்பாகவே ஏற்றுக் கொண்டனர்.
*************
அன்று மாலையே அனைவரும் திண்டுக்கல் கிளம்பிவிட்டனர்.
“நீ இல்லாம தான் ஏதோ மாதிரி இருக்கும் புள்ள.” செவந்தி கண்ணீரும், மகிழ்வுமாய் விடைபெற இளையவர்களால் தான் கண்ணீரை அடக்கவியலவில்லை.
மதிவாணன் விடைபெறும்போது அப்போது என்ன கூறினாரோ அதைத்தான் இப்போதும் கூறினார்.
“பார்த்து சூதானமா பொழைச்சுக்கோ. ஒனக்குத் தெரியாததில்லை.” என முடித்துக் கொண்டார்.
“சரிங்க மாமா!” என்றவள் தன் தமக்கையை அணைத்துக் கொண்டாள்.
கவினுக்கு அத்தனை நிறைவு. தான் நினைத்ததை நடத்தி வைத்துவிட்ட பெருமை அவனுக்கு. மறுமணத்திற்கு அச்சாரம் போட்ட தோழனையும் அழைத்திருந்தான்.
“பரவாயில்லை மச்சான். மனசு நிறைவா இருக்கு.” என்று தம்பதியை வாழ்த்திவிட்டுச் சென்றான் அவன்.
மதுரா கவினை பார்த்தபடி நிற்க, அவளை புருவமுயர்த்தி என்னவென்று கேட்டான்.
“கேபி மட்டுமா…? இந்த அத்தான் மச்சான் அதெல்லாம் இல்லையா?” என்று கிண்டலாய் கேட்க
“என்ன சார்… உடம்பு எப்படி இருக்கு ?”என்று மிரட்டியவள் ,”கொஞ்சம் நல்லா பேசினா சேட்டை.” என முறைத்துவிட்டுச் செல்ல மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான்.
மோகன் இருவரையும் கவனித்திருந்தான்.
*********
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.