அன்று கங்காவின் வகுப்பில் பரிட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த ஒரு மாணவி ரேங்க் கார்டில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்காமல் வந்திருந்ததால் அவளை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்தாள் கங்கா.
அவளுக்குப் பார்க்க பாவமாக இருந்தாலும் இதுபோன்று சிறிய தண்டனை கூட இல்லாவிட்டால் மாணவர்களுக்குப் படிப்பின் மீது அக்கறையே இராது என்று எண்ணிக் கொண்டாள்.
ஒவ்வொரு தளமாக வகுப்பறைகளை மேற்பார்வையிட்டபடி வந்து கொண்டிருந்த சந்துரு அந்த மாணவி வெளியே நிற்பதை பார்த்துவிட்டு அவளருகே வந்து, “ஏன் வெளியே நிற்கிறாய்?” எனக் கேட்டான்.
“அது வந்து, அண்ணா இல்லை சார்” என்று பதில் சொல்லவே திக்கி திணறினாள் ரம்யா சந்துருவின் சித்தப்பா மகள்.
அது அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான பள்ளியாகவே இருந்தாலும் பள்ளி வளாகத்திற்குள் குடும்ப வாரிசுகளும் மற்றும் மாணவர்களும் சமம் தான். யாருக்கும் எவ்வித சலுகையும் கிடையாது என்பதில் வசுந்தரா உறுதியாக இருந்தார். வீட்டில் அன்பான பெரியம்மாவாக இருக்கும் வசுந்தராவே பள்ளிக்குள் வந்து விட்டால் மேடம் தான். அதை மீறிய உறவு கொண்டாடுவதை அவர் ஊக்குவிப்பதில்லை அதனால் சந்துருவையும் அவள் ‘சார்’ என்றே அழைத்தாள்.
ஆனால் அதை மாற்றி, “அண்ணா என்றே கூப்பிடு” என்றுவிட்டு மீண்டும் அவள் வெளியே நின்று கொண்டிருக்கும் விபரத்தை பற்றிக் கேட்டவனிடம் கண்ணீருடன் காரணத்தைச் சொன்னாள் ரம்யா.
“ரேங்க் கார்டை கொடு பார்க்கலாம்” என்றவனிடம் பயத்துடன் தயங்கித் தயங்கி அதைக் கொடுத்தாள்.
வாங்கிப் பார்த்துவிட்டு, “ஏன் இவ்வளவு குறைவான மார்க் வாங்கி இருக்கிறாய்? ஒழுங்காகப் படிக்கவில்லையா” என்று பெரியவனாக அதட்டியவனுக்கு அவளுடைய விசும்பல் ஒலி தான் பதிலாகக் கிடைத்தது.
“இதற்கெல்லாமா அழுவது, கண்களைத் துடை” என்றவன் ரேங்க் கார்டில் கையெழுத்து போட்டுவிட்டு அவளை வகுப்பறைக்குள் அழைத்து வந்தான்,
“எக்ஸ்கியூஸ் மீ” என்று கண்ணியவான் போல் அனுமதி பெற்று விட்டு உள்ளே வந்தவனைப் பார்த்த போது கங்காவுக்குக் கோபம் உண்டாயிற்று.
வழக்கம் போல் அவன் தன்னிடம் தான் ஏதோ வம்பு வளர்க்க வருகிறான் என்று நினைத்தபடி, அவனுக்கு அடுத்த மண்டகப்படி கொடுப்பதற்குக் காத்திருந்தவளிடம் ரேங்க் கார்டை எடுத்து கொடுத்தாள் ரம்யா.
“என்ன இது?” என்று வாங்கிப் பார்த்தவர்களுக்கு அவனுடைய கையெழுத்தை பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது.
“இவர் என்னுடைய அண்ணா மிஸ்” என்று சின்னக் குரலில் கூறினாள் ரம்யா.
‘ஓ, இவன் வீட்டுப் பெண்ணா!’ என்று நினைத்தவளிடம், “கார் டயரை கிழிப்பதில் இருக்கும் அறிவை பாடம் எடுப்பதில் காட்டி இருந்தால் மதிப்பெண் எப்படிக் குறையும்? தவறை உன்னிடம் வைத்துக் கொண்டு பிள்ளைகளை வெளியே நிற்க வைத்தால் மட்டும் படிப்பு வந்துவிடுமா அல்லது மதிப்பெண் தான் அதிகமாகி விடுமா?” என்று அவளுக்கு மண்டகப்படி கொடுத்தவன் பதிலுக்குக் காத்திராமல் வெளியே விரைந்தான்.
அவனுடைய கேள்வியில் கங்காவுக்கு வாயடைத்துப் போனது. எதிரியாக இருந்தாலும் அவனுடைய பேச்சில் இருந்த நியாயத்தை அவளும் மனமுவந்து ஒப்புக் கொள்ளவே செய்தாள். இன்னும் கூடுதல் சிரத்தை எடுத்துப் பாடம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டுமோ. புரியும்படி சொல்லிக் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் குறையும் அப்படி என்றால் அவன் சொன்னது போல இது அவளுடைய தவறுதான்!
அன்று முழுவதும் கற்பித்தலை இன்னும் எப்படி மேம்படுத்துவது என்று சிந்தித்தப்படியே இருந்தாள் கங்கா.
மாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில் வழியில் வசுந்தராவின் கார் ஓரமாக நிற்பதைக் சற்றுத் தூரத்திலேயே கண்டு கொண்டாள் கங்காதேவி. அப்போது அதே வழியாகச் சந்துருவின் கார் வசுந்தராவின் காரை கடந்து அங்கே நிற்காமல் செல்வதையும் கவனித்தாள்.
தெரிந்த ஒருவர் இப்படி வழியில் நிற்கும் போது கண்டும் காணாததைப் போலவா செல்வது மாற்றாந்தாயாக இருந்தாலும் வசுந்தரா அவனுக்கு அன்னை முறையில் இருப்பவர் அதிலும் வயதானவர் காரை நிறுத்தி ‘என்ன, ஏது?’ என்று விசாரித்து விட்டுப் போனால் அவன் தலையில் உள்ள மணி மகுடம் உடைந்தா போய்விடும். தன் வீட்டுப் பெண் என்கிற தயவு தாட்சண்யம் கூட இல்லாமல் இப்படி விருட்டென்று போவது அவனுடைய அகந்தையைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது என்று எண்ணியவள் ஸ்கூட்டியை மெதுவாகச் செலுத்தியபடி கார் அருகே வந்து நிறுத்தினாள்.
வெளியே நின்று கொண்டிருந்த வசுந்தராவிடம் என்ன பிரச்சனை மேடம் என்று விசாரித்தாள். “காரில் ஏதோ கோளாறு போல டிரைவர் சரி பார்த்துக் கொண்டிருக்கிறார், நீ கிளம்பும்மா” என்றார் அவர்.
ஆயினும் அவரை அப்படியே விட்டு விட்டு செல்ல அவளுக்கு மனம் கேட்கவில்லை.
“மேடம் நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் என்னுடன் வருகிறீர்களா? உங்களைப் பத்திரமாக வீட்டில் விட்டுவிடுகிறேன்” என்று அக்கறையுடன் கேட்டாள் அவள்.
சின்னப் புன்னகையுடன் “சரிம்மா?” என்றவர் டிரைவரிடம் திரும்பி, “நீ காரை சரி பார்த்து விட்டு வீட்டுக்கு வந்துவிடு, நான் கங்காவுடன் கிளம்புகிறேன்” என்று கூறிவிட்டு அவள் பின்னால் அமர்ந்து கொண்டார்.
வசுந்தராவின் வீடு கங்காவின் வீடு இருந்த தெருவில் இருந்து சற்று தள்ளியே இருந்தது. அவரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு “சரி மேடம் நான் கிளம்புகிறேன்” என்று போது அவளைத் தடுத்த வசுந்தரா, “இவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டுக்குள் வராமல் சென்றால் எப்படி, உள்ளே வாம்மா” என்று அன்போடு அழைத்தார்.
தவிர்க்க முடியாமல் அவருடன் உள்ளே சென்றாள் கங்கா. அவளை ஹாலில் அமர செய்து விட்டு உள்ளே சென்றவர் காப்பிப் பலகாரத்துடன் திரும்பி வந்தார்.
அந்த வீட்டில் ஆண்கள் யாரும் தென்படவில்லை ஆனால் நிறையப் பெண்கள் இருந்தனர். முந்தைய தலைமுறை பெண்கள் சிவரூபனின் சிற்றன்னைகள் போலும் சந்துருவுக்கும் தான்.
அடுத்தத் தலைமுறை பெண்களில் எல்லோருமே அவளை விடச் சிறியவர்களாவே இருந்தனர்.
ஒரே வீட்டில் இத்தனை பேரா என்று மலைப்பாக இருந்தது கங்காவுக்கு. சிந்தாமணி கூறியதைப் போலவே அந்த ஊரிலேயே பெரிய குடும்பம் இதுதான் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
கங்காவை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் வசுந்தரா. அவர்களும் அவளுடன் வெகு இயல்பாகவே பேசி பழகினர். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தப் பேச்சு பல நாள் பழகியவர்கள் போலக் கலகலப்பாகவே மாறிவிட்டிருந்தது.
பள்ளிக்கூடத்தில் மேனேஜிங் டைரக்டர் என்ற பதவிக்கு ஏற்றபடி கம்பீரமாக இருக்கும் வசுந்தராவுக்கும் இங்கே குடும்பத் தலைவியாகக் கனிவாக உரையாடிக் கொண்டிருக்கும் வசுந்தராவுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதை அவளால் உணர முடிந்தது.
கடைசியாகக் கங்கா கிளம்பும் சமயத்தில் வீட்டிற்குள் வந்த வசுந்தராவின் கணவர் மற்றும் அவருடைய தம்பிகள் ஒரு சிறு அறிமுகத்துடன் ஒதுங்கிக் கொள்ள, வசுந்தரா அவளுக்குக் குங்குமத் திலகமிட மற்ற பெரியவர்கள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் உள்ளிட்ட தாம்பூல தட்டை கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.
இவ்வளவு அன்பான குடும்பத்தில் சிவரூபன் எப்படி எதற்கும் துணிந்த அயோக்கியனாக வளர்ந்தான். அப்படியொருவன் மட்டும் அவள் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அவளுடைய வாழ்வு எவ்வளவு இனிமையானதாக இருந்திருக்கும். தேன் கூட்டில் கல் எரிந்ததைப் போல அவள் வாழ்வையே சிதைத்து எறிந்து விட்டுப் போய்ச் சேர்ந்து விட்டான் என நினைத்தபடியே இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்தாள் கங்காதேவி.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் ரம்யாவும் அவளுடைய தாயார் சுசிலாவும் கங்காவை தேடி அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களைப் பிரியத்துடன் வரவேற்று உபசரித்தாள் கங்கா.
ஆனால் அவர்கள் பேச வந்திருந்த விஷயம் தான் அவளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ரம்யாவுக்கும் அதே பள்ளியில் படிக்கும் அவளுடைய ஒன்று விட்டு தங்கைகளான மலர் மற்றும் பாரதிக்கும் தங்கள் வீட்டுக்கு வந்து அவள் டியூஷன் எடுக்க வேண்டும் என்று அவளைக் கேட்டுக்கொள்வதற்காக வந்திருந்தாள் சுசிலா.
“தவறாக எண்ணாதீர்கள், இப்படித் தனியே யார் வீட்டுக்கும் சென்று டியூஷன் எடுப்பதில்லையே” என்று தன்மையாகவே மறுத்தாள் கங்கா.
ஆனாலும் சுசிலா விடுவதாக இல்லை. ‘படிப்பு ஏறினால் ஒழுங்காகப் படி. இல்லாவிட்டால் பள்ளியிலிருந்து நின்று விடுங்கள் ஆனால் வெளியே எங்கேயும் டியூஷனுக்குப் போகக்கூடாது’ என்று எங்கள் வீட்டு ஆண்கள் சொல்லிவிட்டார்கள் என்று தங்கள் நிலைமையை எடுத்துக் கூறினாள்.
“இதற்கு வசுந்தரா மேடம் ஒன்றும் சொல்லவில்லையா?” எனக் கேட்டாள் கங்கா.
“இது நீ நினைக்கிற மாதிரி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அல்ல கங்கா. எங்கள் வீட்டில் இருந்து வெளியே சென்று படித்த ஒரே பிள்ளை சிவா தான் ஆனால் அவனும் எப்போது உயிருடன் இல்லை அதனால் இருக்கும் பிள்ளைகளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுக்கு இந்த மாதிரி தடை. அதனால் பெரிய அக்கா உட்பட நாங்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை. காலம் போகும் போக்கில் வேறு ஏதாவது ஆசிரியரை வரவழைத்து டியூஷன் எடுப்பதற்கும் தயக்கமாக இருக்கிறது. அதுவே நீ என்றால் எங்கள் எல்லோருக்கும் சந்தோஷம். அதனால்தான் உன்னிடம் கேட்க வந்திருக்கிறேன்” என்று விவரித்தார்.
ரம்யாவும் தாயுடன் சேர்ந்து கொண்டு, “ப்ளீஸ் மிஸ், நீங்கள் வீட்டிற்கு வந்து கற்றுக் கொடுத்தால் நான் இன்னும் நன்றாகப் படிப்பேன்” என்று கெஞ்சலாகக் கேட்கவும் கங்காவுக்குப் பாவமாக இருந்தது.
இவர்கள் வீட்டு உறவு தனக்குத் தேவைதானா என்று உள்ளூர் தோன்றிய போதும் கல்விக்குத் தடை போட அவளுக்கு விருப்பமில்லை. ஆகையால் “சரி” என்று ஒப்புக் கொண்டாள்.
யார் யாரோ செய்த பாவத்திற்கு இந்தப் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று அதற்காகத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
டியூஷன் நேரம் எல்லாம் முடிவானவுடன், “சரி கங்கா தினமும் உன்னை அழைத்து வர எங்கள் வீட்டில் இருந்து கார் வரும். டியூஷன் முடிந்ததும் மீண்டும் காரிலேயே நீ வீட்டுக்கு வந்து விடலாம்” என்றாள் சுசீலா.
“காரெல்லாம் வேண்டாம். நான் ஸ்கூட்டியிலேயே வந்து விடுகிறேன்” என்று மறுத்தாள் கங்கா.
ஆனால் சுசீலாவோ, “இல்லை கொஞ்ச நேரம் தாமதமானாலும் நீ இரவில் தனியாக வர வேண்டி இருக்கும் அதனால் காரிலேயே வந்து போவது தான் உனக்கும் நல்லது” என்று முடித்தாள்.
கங்கா டியூஷனை தொடங்கிச் சில நாட்கள் ஆகி இருந்தது. தினமும் மாலை அவளை அழைத்துச் செல்வதற்குக் கார் வந்துவிடும். அங்கே சென்றால், மாலை சிற்றுண்டியுடன் எல்லோரும் அவளுக்காகக் காத்திருந்தனர்.
“இதெல்லாம் வேண்டாம்” என்று அவள் எவ்வளவோ மறுத்துரைத்த போதிலும் அவர்கள் கேட்பதாக இல்லை. அவளையும் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பாவித்தனர். இளம் பெண்களோ டியூஷன் நேரம் முடிந்த பின்னர் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டு ஏதேனும் வளவளத்தனர்.
“நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அக்கா,எங்களுக்கும் உங்கள் அழகு குறிப்புகளைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள். இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்களே, ரொம்பவும் டயட் முறையை பின்பற்றுவீர்களா” என்பாள் ஒருத்தி.
“உங்கள் சருமம் வெல்வெட் மாதிரி இருக்கிறதே எப்படி” என்பாள் மற்றொருத்தி.
“நாங்கள் எவ்வளவு ஒப்பனை செய்து கொண்டாலும் எங்கள் முகத்தில் கிராமத்து சாயல் அப்பட்டமாய்த் தெரிகிறது. ஆனால் உங்கள் முகத்தில் மட்டும் பட்டிக்காட்டுத் தனம் தென்படவில்லையே” என்று வியப்பாள் இன்னொருத்தி.
இப்படி அந்த வீட்டில் வயதான பெண்களுக்கும் வயது பெண்களுக்கும் உற்ற நல்லுறவாய் மாறிவிட்டிருந்தாள் கங்கா.
எல்லோருக்கும் உரிய பதில் கொடுத்து விட்டு புறப்படுவதற்குள் கங்காவின் பாடு திண்டாட்டமாகி விடும். ஆனாலும் இயல்பான வெகுளி தனத்துடன் பழகும் அவர்களிடம் முகம் சுளிக்காமல் புன்னகையுடனே பேசுவாள் கங்கா.
அவள் டியூஷன் சொல்லிக் கொடுத்த ரம்யா மலர் மற்றும் பாரதி அடுத்து வந்த பரீட்சையில் முன்பை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தது எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அடுத்தொரு நாள் பள்ளி நேரம் முடிந்ததும் சந்துருவின் தங்கைகள் மூவரும் வீட்டிற்குக் கிளம்பாமல் அவன் கார் அருகே காத்திருப்பதைப் பார்த்துவிட்டு “ஏன்?” என்று விசாரித்தாள் கங்கா.
அன்று சகோதரர்கள் தினமாம் அதனால் தங்கள் அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காகக் காத்திருக்கின்றனர் என்றாள் பெரியவளான ரம்யா.
“காலையிலிருந்து ஏன் கட்டவில்லை, இப்போது வீட்டுக்கு தாமதமாகிறதல்லவா?” என்று மென்மையாகக் கடிந்து கொண்டாள் கங்கா.
“ஸ்கூல் நேரத்தில இதெல்லாம் செய்தால் பெரியம்மா திட்டுவாங்க மிஸ், அண்ணனும் வீட்டுக்கு வர மாட்டார் அதனால் தான் இங்கே காத்திருக்கோம்” என்று அவள் கூறிய போது கங்காவுக்கு உருகி விட்டது.
அதற்குள் சந்துரு அங்கே வந்துவிடப் பிள்ளைகளுக்குச் சந்தோஷமாகிவிட்டது.
ஆளுக்கு ஒரு கயிறுடன் தமையனை சுற்றி நின்றபடி, “ஹேப்பி ரக்ஷா பந்தன் அண்ணா” என்று வாழ்த்து கூறினர்.
அப்போது ஓசையின்றி நழுவ முயன்ற கங்காவை தடுத்தாள் ரம்யா.
“மிஸ் மிஸ், இருங்க. உங்களுக்கும் ராக்கி கொண்டு வந்திருக்கோம்” என்றாள்.
“எனக்கா, எதற்கு?” என்று திகைத்து விழித்தவளிடம், “நேத்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்க தானே சொன்னீங்க, உங்க பிரதர் இங்கே இல்லைன்னு, அதனாலே இப்போ எங்க அண்ணனுக்கு ராக்கி கட்டுங்க மிஸ்” என்று அவளிடம் ராக்கி கயிறு ஒன்றை எடுத்து நீட்டினாள்.
வீட்டுப் பெரியவர்கள் எல்லாம் கங்காவை தங்கள் வீட்டில் ஒருத்தியாகக் கருதுவதால் ரம்யாயும் அவளைத் தங்கள் மூத்த சகோதரிகளில் ஒருத்தி எண்ணி விட்டிருந்தால் போலும். அதனால் அவள் தங்கள் அண்ணனுக்கு அவளும் ராக்கி கயிறு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
அவளிடமிருந்து ராக்கியை பெற்றுக் கொள்ளாமல் கங்கா அவனை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, சந்துரு எப்போதும் போல் அவளைக் குரோதத்துடன் பார்த்தான்.