மேஜை மேல் மயங்கி சரிந்த நிலையில் காணப்பட்டாள் கங்கா.
ஏக காலத்தில் எல்லோரும், “ஆம்புலன்ஸை வரச் சொல்லுங்கள்” என்று கத்தி கூச்சலிட, அதற்குள் அவள் அருகே சென்ற வசுந்தரா, “கங்கா கங்கா” என்று அழைக்க, அவள் அசைவற்று கிடந்தாள்.
“மேடம் நீங்கள் தொட்டு விடாதீர்கள் முதலில் ஆம்புலன்சும் போலீசும் வரட்டும்” என்று வசுந்தராவை தடுத்தார் தலைமை ஆசிரியர்.
“அதுவரை இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா” என்று அவர் கோபமாகப் பேசி முடிக்கும் முன் கங்காவை நெருங்கிய சந்துரு அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு வேகமாகக் காரை நோக்கி நடந்தான்.
கங்காவை பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு காரை எடுத்தவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அருகில் இருந்த பெரிய மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். அங்கேயும் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு உள்ளே ஓடியவன், மருத்துவரிடம் விரைவாக விபரத்தை கூறவும் உடனடியாக அவளுக்குச் சிகிச்சை தொடங்கப்பட்டது.
கங்கா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். சந்துரு வேதனையும் தவிப்புமாக வெளியே அமர்ந்திருந்தான்.
வசுந்தரா, தலைமை ஆசிரியர் ராஜு என ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
மீண்டும் தலைமை ஆசிரியர் “மேடம் போலீசுக்கு இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை இன்னும் தாமதித்தால் அதுவே ரிஸ்க் ஆகிவிடும்” என்று நினைவு படுத்தினார்.
அவரைச் சொல்லியும் தவறில்லை அது அவருடைய கடமை. அதுமட்டுமின்றி இந்த மாதிரி விஷயத்தில் அது தான் முறையும் கூட.
ஆனால் சந்துருவுக்குக் கங்காவை தவிர வேறு யாரைப் பற்றியும் கவலையில்லை. எந்த நேரத்தில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவனுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.
“என்ன பெரிய ரிஸ்க்? எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் எல்லோரும் இங்கிருந்து கிளம்புங்கள்” என்று இரைந்தான்.
“சந்துரு பொறுமையாகப் பேசு” என்று அவனைக் கட்டுப்படுத்த முயன்றார் வசுந்தரா.
அப்போது அங்கே வந்த செவிலியர், “சார் பேஷண்ட்டுக்கு அட்மிஷன் ஃபார்ம் பூர்த்திச் செய்ய வேண்டும்” என்று அழைக்கவும் அவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.
எல்லா விஷயங்களையும் முடித்துவிட்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தவன் கங்காவைப் போல உணர்வற்றவனாகவே இருந்தான். அவன் நினைவில் கங்காவை தவிர வேறு எதுவும் நிலைக்கவில்லை. அவளுக்கு எதுவும் ஆகாக் கூடாது, உலகின் ஏதோ ஒரு மூலையிலாவது கங்கா உயிருடன் இருக்க வேண்டும். அவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் குத்தி குதற்வதற்காகவும் அவள் உயிருடன் இருக்க வேண்டும். அச்சமின்றி அவனை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்க அவள் அவனுக்கு வேண்டும். இனி அவள் இல்லை என்ற வார்த்தையை அவன் கேட்டு விடக்கூடாது என்று அவனுக்குள் ஏதோ ஒன்று துடித்தது.
அவள் உணர்வுகளை என்றைக்கோ கொன்று விட்டு இப்போது அவள் உயிரை காப்பாற்றி என்ன பயன் என்று அவன் யோசிக்கவில்லை. துடிக்கத் துடிக்க அவள் மனதை சாகடித்த போது இந்த வலி அவனுக்கு ஏற்படவில்லை. அவளைக் குற்றுயிராய் காணும் வரையில் கூட இப்படிப்பட்ட உணர்வுகள் அவனுக்குள் எழுந்ததே இல்லை. அவளை மரணத்தின் பிடியில் நிற்க வைத்த பிறகு தான் அவன் தொலைந்து போன பல உணர்வுகளை மீட்டெடுத்தான்
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தத் தவிப்பு கூட எதனால் ஏற்படுகிறது என்று அவன் இன்னும் உணரவில்லை. தானாக உணர்ந்து கொள்ளாததைக் காலம் உணர்த்தி விட்டுச் செல்லும். ஆனால் காலத்தால் அதை உணரும்போது எல்லாம் கை மீறி போய் இருக்கும் இதை உணர்ந்தவர்கள் தோற்றதில்லை உணராதவர்கள் ஜெயித்ததில்லை. இது தான் இயற்கையின் நியதி.
“டாக்டர் உங்களை அழைக்கிறார், மாஸ்க் அணிந்து கொண்டு வாருங்கள்” என்று ஒரு நர்ஸ் வந்து கூறவும் சந்துருவும் வசுந்தராவும் உள்ளே சென்றனர்.
மருத்துவரிடம், “கங்கா எப்படி இருக்கிறாள்?” என்று பதற்றத்துடன் வினவினான் சந்துரு.
“ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார்கள்” என்று அவர் கூறியதை கேட்ட பின்னர் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்வதை வசுந்தராவும் கவனித்தார்.
டாக்டர் மேலும் பேசினார், “ஏசி கேஸ் கசிவினால் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக இன்னும் அரை மணி நேரம் தாமதித்திருந்தால் கூடப் பேஷண்டைக் காப்பாற்றி இருக்க முடியாது ஆனால் ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினார்.
“என்ன டாக்டர்?” என்றான் சந்துரு.
“உண்மையிலேயே இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலை முயற்சியா?” என்று அவர் கேட்ட போது வசுந்தராவுக்கும் அது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் டாக்டர்?” என்று கேட்டார் அவர்.
“பகல் நேரத்தில் ஸ்கூல் கேம்பசில் இப்படி ஒரு விபத்து எப்படி நடந்திருக்க முடியும்? முதலில் ஏசி கேஸ் கசியும்போதே ஒருவித வாடை வீசி இருக்கும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு வெளியே வந்திருக்க முடியும். ஆனால் அந்தப் பெண் உள்ளே இருந்திருக்கிறாள் என்றால் ஒருவேளை இது தற்கொலை முயற்சியாகக் கூட இருக்கலாம் மற்றபடி ஒரு கெமிக்கல் கேஸ் கசிநது கொண்டிருக்கும் இடத்தில் யாராலும் உள்ளே இருக்கவே முடியாது” என்றவர் “ஒருவேளை வெளியே வர முடியாத படி கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததா?” என்று கேட்டார்.
“இல்லை கதவு உட்புறமாகத் தான் பூட்டி இருந்தது” என்றார் வசுந்தரா.
“அப்படியானால் மற்ற விஷயத்தை அந்தப் பெண் தான் கூற வேண்டும். நீங்கள் தெரிந்தவர்கள் என்பதால் நான் போலீசுக்கு தகவல் சொல்லவில்லை. அந்தப் பெண் செய்த அசட்டுத்தனத்தில் ஸ்கூலுக்கு அவப்பெயர் வரக் கூடாது என்று நான் நினைக்கிறேன்”
“இப்போது அவள் எப்படி இருக்கிறாள்? நாங்கள் பார்க்கலாமா” என்று கேட்டார் வசுந்தரா.
“பிபி, பல்ஸ் எல்லாம் இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறது. ஆனால் இன்னும் மயக்கத்தில் தான் இருக்கிறாள். எதற்கும் நாளை காலை வரை அப்சர்வேஷனில் இருக்கட்டும், பிறகு டிஸ்சார்ஜ் செய்கிறேன். நீங்கள் போய் அவளைப் பார்க்கலாம்” என்று முடித்தார்
கங்கா உயிருடன் இருக்கிறாள் என்கிற ஒற்றை வாக்கியமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் கங்காவின் இந்த நிலை வசுந்தராவை கலக்கமடையச் செய்தது. ஆயினும் அப்போதைக்கு அவர் யாரிடமும் எதைப் பற்றியும் பேசவில்லை வெளியே வந்தவர் தலைமை ஆசிரியரிடம், “கங்கா நார்மலாக இருக்கிறாள் வெறும் ஸ்ட்ரெஸினால் ஏற்பட்ட மயக்கம் தான் என டாக்டர் கூறிவிட்டார்” என்று பொய்யுரைத்தார்.
யாரோ ஒரு மருத்துவருக்குப் பள்ளியின் மேல் இருக்கும் அக்கறை அதன் மேனேஜிங் டைரக்டருக்கு இருக்காதா என்ன. வெளியே தவறான செய்தி பரவாமல் இருப்பதற்காக இதுபோல் மாற்றிக் கூறினார் வசுந்தரா.
“தேங்க் காட்” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட தலைமை ஆசிரியர், “சரி மேடம் நான் கிளம்புகிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டார். அவர் சென்ற பின்னரும் கூட ராஜு கண்ணீருடன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
ராஜுவிடம் திரும்பிய வசுந்தரா, “ரிலாக்ஸ் ராஜு, கங்கா நலமுடன் தான் இருக்கிறாள்” என்றார்.
“மேடம் நான் ஒருமுறை கங்காவை பார்க்கலாமா?” என்று அவரிடம் அனுமதி வேண்டி நின்றான் ராஜு.
வசுந்தரா “சரி” என்று சொல்லி முடிக்கும் முன், “மாஸ்க் அணிந்து கொண்டு போ” என்று கூறினான் சந்துரு.
ராஜுவும் அவளைப் பார்த்துவிட்டு வந்ததும், “இங்கே நிறையப் பேர் இருக்க முடியாது ராஜு, நீங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள். கங்காவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறினார் வசுந்தரா.
தயக்கத்துடன், “இல்லை மேடம் நானும் இங்கேயே இருக்கிறேன்” என்று அவன் கூறிய போது,
“இல்லை ராஜு, அது மருத்துவமனை ரூல்ஸ். அட்டெண்டராக ஒருவர் தான் இருக்க முடியும், இப்போது கங்கா எங்கள் பொறுப்பு” என்றார் தன்மையான குரலில்.
சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “சரி மேடம்” என்று கிளம்பி விட்டான் ராஜு.
அவன் சென்றவுடன், “நீங்களும் கிளம்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வசுந்தராவிடம் கூறினான் சந்துரு.
சந்துரு தான் மட்டும் அங்கே இருக்க நினைப்பது அவருக்குப் புரிந்தது. இந்தத் தனிமை இப்போது அவனுக்கு மிக அவசியமானது என்பதை உணர்ந்து, அவனிடம் “சரி” என்று கூறிவிட்டு கிளம்பிய வசுந்தரா சற்றுத் தூரம் நடந்து விட்டு அவனைத் திரும்பி பார்த்தார்.
சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த சந்துருவின் கண்களில் கண்ணீர் வழிந்தது, பிறர் பார்க்கும் முன் அதைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டருந்தவனைப் பார்த்து முதல் முறையாக அவனுக்காகப் பரிதாபப்பட்டார் வசுந்தரா.
அருகே சென்று அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் இருந்த வசுந்தராவின் கண்களும் நனைந்தன.
இரவு டியூட்டி மாறிய நர்ஸ், “மிசஸ் கங்காதேவி சிவசந்திரன் அட்டெண்டர் யார்?” என்று கேட்ட போது, “சொல்லுங்கள் சிஸ்டர்” என்று எழுந்து வந்தான் சந்துரு அல்ல சிவசந்திரன்.
அட்மிஷன் படிவத்தில் தந்தை அல்லது கணவர் பெயர் என்ற இடத்தில் தந்தை பெயரை அழித்து விட்டு சிவசந்திரன் என்ற தன்னுடைய பெயரை எழுதிக் கொடுத்தவனே அவன் தான்.
“பேஷண்டுக்கு இப்போது இந்த மருந்துகள் ஏற்ற வேண்டும், பார்மசி யில் போய் வாங்கி வாருங்கள்” என்று மருந்து சீட்டு கொடுத்தாள் நர்ஸ்.
நர்ஸ் கேட்ட மருந்துகளை வாங்கி வந்து கொடுத்தவன் நொடிக்கொரு முறை கங்காவை பார்த்துவிட்டு வந்தான்.
இரவு முழுவதும் கண் உறங்காமல் மனைவியைச் சுற்றி வந்த சிவசந்திரனை பார்த்து, “என்ன சார், வைஃப் மேல் இவ்வளவு பாசமா? இப்படித் தவிக்கிறீர்களே” என்று நகைத்துக் கொண்டே கேட்டதற்கு அவனிடம் பதிலில்லை.
“உங்கள் மனைவி கண் விழித்ததும் நான் வந்து அழைக்கிறேன், நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
“இல்லை சிஸ்டர் அவள் கண் விழிக்கும் வரை என்னால் கண் மூட முடியாது” என்றான் அன்புக் கணவனாக.
அவனுடைய அக்கறையும் கரிசனத்தையும் கண்டு அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டுக் கொண்டாள் நர்ஸ்.
மயக்கம் தெளிந்து அதிகாலையில் கண்விழித்தாள் கங்காதேவி. மெல்ல மெல்ல சுய உணர்வு வரப் பெற்றவள் மருத்துவமனை சூழலை கண்டு, அவளுக்கு என்ன நடந்தது எப்படி இங்கே வந்தாள் என்று நினைவு படுத்திப் பார்க்க முயன்றாள். ஸ்டாஃப் ரூமில் மற்ற ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தது அதன் பிறகு அவள் வினாத்தாள் தயாரித்துக் கொண்டிருந்தது பிறகு தலைவலி வந்தது வரை மட்டும்தான் நினைவு வந்தது. அதற்கு மேல் நினைவு படுத்த முயன்ற போது நர்ஸ் வந்து “கண் விழித்து விட்டீர்களா நான் போய் உங்கள் ஹஸ்பண்டை அழைக்கிறேன்” என்ற விட்டு சென்றாள்.
“ஹஸ்பண்டா!” என்று திகைத்துப் போனாள் கங்கா.
சொன்னது போலவே நர்ஸ் சென்று சிவசந்திரனை அழைத்து வந்தாள்.
உள்ளே வந்தவன், “இப்போது எப்படி இருக்கிறது” என்று கேட்டான்.
“பரவாயில்லை” என்றாள் அவள் சோர்வுடன்.
“ஒரு காப்பி வாங்கிக் கொடுங்கள், குடித்தால் கொஞ்சம் தெம்பு வரும்” என்றாள் நர்ஸ்.
அவன் காப்பி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த போது அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும், “உன் உடம்பு இருக்கும் நிலையில் இந்தப் பிடிவாதம் தேவை தானா?” என்று கடிந்து கொண்டான் சிவசந்திரன்.
அப்போதும் அவள் அவன் புறம் திரும்பவில்லை, “இப்போது நீயாகக் குடிக்கிறாயா அல்லது நானே குடிக்க வைக்கட்டுமா?” என்று அவன் மிரட்டவும், அவள் முறைத்துக் கொண்டே காப்பியை வாங்கி அருந்தினாள்.
“கவலைப் படாமல் குடி இதற்கான தொகையை உன் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்கிறேன்” என்றான் அவன்.
அவள் காபி குடித்துவிட்டுக் கப்பை மேஜை மேல் வைத்தவுடன், “ஏசி கேஸ் கசிவது கூடத் தெரியாமல் உள்ளே அப்படி என்ன செய்து கொண்டிருந்தாய்” என்று கேட்டான்.
அவனுடன் பேச பிடிக்காமல் அவள் மௌனம் காக்கவும், “எனக்குப் பதில் சொல்லாவிட்டால் போலீஸிடம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்” என்று எச்சரித்தான் சிவசந்திரன்.
“என்னது?” என்றாள் அவள் கடுப்புடன்.
“ஏசி கேஸ் கசியும் போது நீ உள்ளே பூட்டிக் கொண்டு இருந்ததால் இது தற்கொலை என்று வழக்கு பதிவாகி இருக்கிறது. அநேகமாக அடுத்தக் கட்ட விசாரணை காவல் நிலையத்தில் தான்! என்னிடம் உண்மையைச் சொல்லிவிட்டால் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் அது கூட உனக்காக இல்லை எங்களுடைய பள்ளிக்காக” என்று போட்டு வாங்கினான்.
எரிச்சலுடன், “தற்கொலையாவது இன்னொன்றாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை இது வெறும் கவனக்குறைவு அவ்வளவுதான்” என்று உண்மையைக் கூறினாள் கங்கா.
காலையில் டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார்.
அவளுடைய மறுப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் அவனே அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
மாலையில் வீடு திரும்பாத கங்காவைப் பற்றிக் கவலையுடன் வசுந்தராவிடம் அவள் முறையிட, “கங்காவுக்கு உடம்பு சரியில்லை அதனால் மருத்துவமனையில் இருக்கிறாள்” என்று கூறி இருந்தார் வசுந்தரா.
சிவசந்திரனுடன் காரில் வந்து இறங்கிய கங்காவை பார்த்த சிந்தாமணி கண்ணீருடன் ஓடி வந்தாள்.
கங்காவிடம், “இன்று நீ பள்ளிக்கு வர வேண்டாம் ரெஸ்ட் எடு” என்ற சிவசந்திரன், சிந்தாமணியிடம் திரும்பி “உடனிருந்து கவனித்துக் கொள் சிந்தாமணி” என்று கூறிவிட்டுச் சென்றான்.