அந்த கடைசி இரவை வரவேற்க வண்ண வண்ண விளக்குகள் அந்த பிரம்மான்டமான ஹோட்டல் முழுவதுமாக பளிச்சிட்டன.
மெல்லிய இசை, கண்ணை கவரும் தோரணங்கள், பலூன்கள், குளிர் பான வகைகள். நாவுக்கு சுவையூட்டி அமிலங்களைச் சுரக்க வைக்கும் கமகம வாசனை கொண்ட உணவு வகைகள் என்று அனைத்தும் அந்த புது வருடத்தை வரவேற்கத் தயார் நிலையில் இருந்தன.
அது மட்டுமா.. டிஜே, மதுபானங்கள், டிஸ்கோ விளக்குகள் என்று மனதைக் கவரும் உத்திகள் அனைத்துடனும் அந்த உயர்தர ஹோட்டல் கோலாகலமாக தயார் நிலையில் இருந்தது.
ஆனால் காரில் இருந்து திரள் திரளாக விஐபிக்களும் மேல் தட்டு மக்கள் மட்டுமே வந்து இறங்கினர். ஆமாம் ஒரு டிக்கெட்டின் விலை மட்டுமே லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், யாரால் அங்கு துணிந்து வர முடியும்?
அப்போது அந்த ஜாகுவார் கார் பார்க்கிங்கில் வந்து நிற்க, அதில் இருந்து ஒரு ஆடவன் இறங்க அவன் தோளில் சாய்ந்தபடி அவன் கரத்தை தன் கைகளுக்குள் வளைத்துப் பிடித்தவாறு இறங்கினாள் அந்த நவநாகரீக நங்கை.
சின்ன கவுன் மட்டுமே அவள் அணிந்து இருக்க, அவள் இளமை அழகும் திரண்ட காலின் அழகும் பளிச்செனத் தெரிந்ததில் அவள் அருகில் இருந்தவன் தான் உக்கிரமாகிக் கொண்டு இருந்தான்.
அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அப்படித்தான் உடை அணிந்து இருந்தார்கள். ஆனாலும் அங்கு பணி புரிபவர்கள் பார்வை அவ்வப்போது அவள் மேல் மெலிதாகப் படிந்து சென்றன. அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளா விட்டாலும் அவன் தான் சங்கடப்பட்டுப் போனான்.
“நீத்து. ப்ளீஸ் டா இனிமே இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் இங்கே வரும் பொழுது போடாதே டா!!”.. என்று மனதுக்குள் கோபம் இருந்தாலும் அவளிடம் பணிவாகவே கேட்டான் நமது நாயகன் அன்புச் செல்வன்.
“அன்பு.. உங்க பெயரைப் போலவே நீங்க இன்னும் பட்டிக்காடாகத் தான் இருக்கீங்க. இந்த மாதிரி இடத்தில இப்படி ட்ரெஸ் பண்ணலைன்னா தான் வித்தியாசமாகப் பார்ப்பாங்க. ஐ ஆம் சாரி அன்பு. இன்னொரு தடவை என்னோட பெர்சனல் விசயத்துல நீங்க மூக்கை நுழைச்சா.. ஐ வில் ஹேவ் டூ திங்க் அபவுட் அவர் ரிலேஷன்ஷிப்.”
“ம்.. ஆவுன்னா இதை ஒன்னு சொல்லி என்ன ஆஃப் பண்ணிடுவா!. எல்லாம் என் நேரம்!!”.. என்று மனதுக்குள் புலம்பியபடி பெருமூச்சு எடுத்துக் கொண்டவன் வாயிலையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன அன்பு.. யாரைத் தேடுறீங்க?”
“இல்ல.. என் பிஸினஸ் பார்ட்னர்ஸ் வரேன்னு சொல்லி இருந்தாங்க நீத்து!!”
“எதுக்கு அன்பு அந்த வேஸ்ட் ஃபெலோஸை எல்லாம் கூப்பிட்டீங்க. நான் அந்த டிக்கெட்டை என் பாய் பிரண்ட்ஸ் யாருக்காவது கொடுத்து இருந்தா.. ஒரே ஃபன் ஆக இருந்து இருக்கும். “ என்றவள் ஒரு கிளாஸ் மது பானத்தை எந்த தயக்கமும் இன்றி குடித்து முடித்து இருந்தாள்.
அடுத்ததாக டிஜே ஆரம்பமாகி விட, போட்ட ஆங்கிலப் பாட்டுக்கு ஏற்ப நீத்து அவனையும் இழுத்துக் கொண்டு ஆடத் துவங்கி இருந்தாள். அவன் அவள் இடுப்பை பற்றாமல் ஆடிக் கொண்டு இருக்க..
“ஹோல்ட் மீ டைட் என்று அவள் அவனுடன் ஒட்டிக் கொள்ள, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சற்று விலகி நின்றவன் மேல் இப்போது மின்சாரம் பாய்ந்த உணர்வு.
அவன் காதலிக்கும் பெண் தான். இருந்தும் இப்படி பொது இடத்தில் அவ்வளவு நெருக்கம் கூடாது என்று கட்டுப்பாட்டுடன் விலகி நின்று இருந்தான். ஆனால் அவள் கொடுத்த உரிமையில் இப்போது அவன் கரம் அவளது இடையை இறுகப் பற்றிக் கொண்டது.
அதே நேரம் மேடையில் ஒரு ஏ. ஆர். ரஹ்மானின் புதிய பாடல் ஆர்ப்பரிக்க, அந்த பரிட்சயமான குரல் கேட்டு அன்பும் மேடையைப் பார்த்தான். அங்கு புடவை உடுத்தி எழிலாக நின்றபடி பாடியது வேறு யாரும் அல்ல-ஆதிரை தான்.
அவளைப் பார்த்ததும் நீத்துவின் இடை மீது இருந்த அவன் கரத்தை சட்டென உருவிக் கொண்டான். “ஐயோ இவா இங்கே என்ன பண்ணிட்டு இருக்கா?. இவளுக்கு நீத்து பத்தி தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரி ஆகிடும்மே. !!”.. என்று பதட்டத்துடன் அவள் பார்வையில் இருந்து அவன் தப்ப நினைக்க..
அதே நேரம் போதையின் உச்சத்தில் இருந்த நீத்துவோ அவன் விலகல் பிடிக்காமல், அதற்கு தண்டனையாக சட்டென அவன் இதழ்களை கவ்விக் கொண்டாள். அவள் கொடுக்கும் முதல் இதழ் முத்தம். ஆனால் அவனால் தான் அதை ரசிக்க முடியவில்லை.
அவள் பார்க்கப் போகிறாள் என்ற பதட்டம் ஒரு பக்கம். அவன் நண்பர்கள் வரும் நேரம் என்ற கலவரம் ஒரு பக்கம் அவனை திக்கு முக்காடச் செய்தது. அவள் விலகியதும் அப்பாடா.. என்று அவன் பார்வை ஆதிரையை நாடிச் சென்றது.
“ஐயோ அவள் பார்த்து இருக்க கூடாது என்று வேண்டியபடி அவன் அவளைப் பார்க்க, அவள் என்னவோ அவர்களையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் பார்வையில் கூசிப் போனான் அவன்.
நீத்து ஏதோ மதுபானம் வாங்கச் சென்று இருக்க.. “டேய் மச்சான்.. ரொம்ப பிசியா இருக்க போல”.. என்று அவன் நண்பர்கள் சேகரும் விமலும் சிரிப்பை மறைக்க முடியாமல் உதடுகளைக் கடித்தபடி அவன் எதிரில் வந்து நின்று இருந்தனர்.
“போச்சு.. இவனுகளும் பார்த்துட்டானுகளா!!.. உன் மொத்த மானமும் போச்சு”.. என்று அன்பு மனதுக்குள் புலம்பிக் கொண்டான்.
“டேய் அன்பு.. நான் கூட கவலைப்பட்டேன். ஆனா நீ இருக்கிற ஸ்பீடைப் பார்த்தா.. இன்னும் ஒன்பது மாசத்துலே.. உனக்கு வாரிசு வந்திடும் போல. “.. என்று சேகர் கலாய்க்க..
“டேய் சும்மா இருங்கடா.. அந்த லூசுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. இப்படியா ஒரு பொது இடத்தில் வச்சு கிஸ் பண்ணுவா!”.. என்று அவன் சங்கடத்துடன் சொல்ல..
“டேய் மாப்பிள்ளை இது எல்லாம் அனுபவிக்க நீ கொடுத்து வச்சு இருக்கணும். இதுக்கு ஏண்டா ஃபீல் பண்ற”.. என்று விமல் சொல்ல..
“டேய்.. அவள் என்ன கிஸ் பண்றதை ஆதிரை பார்த்துட்டா டா!!”.
“ஆதிரையா??.. அந்த ரவுடி எப்படிடா இங்க வந்தா?”
“ அங்க பாரு. பாட்டு பாடிட்டு இருக்கா!! போச்சு !.. என் மானம் எல்லாம் போச்சு. இவள் மட்டும் போய் என் தங்கச்சி கிட்ட சொன்னா போதும். அந்த லூசு எங்க அப்பா கிட்ட சொன்னா அவ்வளவு தான். எனக்கு இன்னைக்கு பெல்ட் அடி உறுதி. !!”.. என்று அன்பு வாய் விட்டே புலம்பிவிட
“டேய் சின்னப் பையன் மாதிரி புலம்பாத!!.. எப்படின்னாலும் உங்க வீட்டுக்கு ஒரு நாள் தெரியத் தான போவுது. இந்த ஆதிரை மூலமா தெரியட்டும்னு விடு டா.”
“ம்.. நல்லா பேசுவீங்கடா.. எல்லாம் உங்களால தான். அங்க பாருங்க நீத்துவ.. டிரஸ்ஸாடா போட்டு இருக்கா?.. “
அப்போது அவள் அருகே வந்த ஒருவன் ஹாய் நீத்து என்று அவளை சிநேகமாக கட்டிக் கொள்ள, அவளும் அவன் கன்னங்களோடு தன் கன்னங்களை ஒத்தி எடுத்தாள்.
“டேய்.. இது வெறும் ஃப்ரன்ட்லி ஹக் தான். தப்பா நினைக்காத!!”
“எங்க அப்பா கிராமத்து ஆளுடா.. அவரால இவளை நிச்சயம் மருமகளா ஏத்துக்க முடியாது.
“அன்பு அப்படி எல்லாம் சொல்லாதடா.. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானா மாறிடுவா. அதுவும் உங்க அப்பா ஒரு மிரட்டல் விட்டா போதும் ஆட்டோமேட்டிக்கா மாறிடுவா!!”.. என்று சேகர் சொல்ல.
“டேய் உன் மனசு ஏன் இப்படி தடுமாறுது.. நாம அவளை முதன் முதலா பார்த்த போது நீ என்ன சொன்ன.. “ச்ச என்ன பொண்ணு!!.. எவ்வளவு அழகான கண்கள்!.. என்ன நிறம்.. என்ன ஃபிகர்!!.. கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ணை தான் கட்டணும் அப்படின்னு நீ சொல்லலை!!”.. என்று விமல் போன மாதம் அவன் சொல்லிய வசனத்தை நினைவு படுத்தினான்.
“நான் மட்டுமாடா சொன்னேன்.. நீங்க என்ன எல்லாம் சொன்னீங்க.. செம கட்டை.. அப்படியே சுண்டி இழுக்கும் செக்ஸி ஃபிகர்..” என்று அன்பு நினைவு படுத்த.
“டேய்.. போதும் போதும் அது எதுக்கு இப்போ.. அண்ணி வந்து விடப் போறாங்க!!”.. என்று விமல் அவசரமாக நிறுத்த..
“அண்ணியா??.. இது உங்களுக்கே ஓவரா இல்லையாடா?”
“மச்சான், என்ன பண்றதுடா நம்ம மூணு பேர்ல நீ தான் நல்லா இருக்க. உன்னத் தான அவளுக்கு பிடிச்சு இருக்கு.
இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் கிடைக்கவே கிடைக்காதுடா. மல்டி மில்லினர்டா அவுங்க அப்பா!!. நீ நினைச்ச நாட்டுக்கு பறக்கலாம். நீ நினைத்ததை வாங்கலாம். ஜாகுவார் கார், லெக்சஸ் கார், அரண்மனை மாதிரி பங்களா, ராஜ வாழ்க்கை. நீ வாழ்க்கையில் வேலையே பார்க்க வேண்டாம்.”
என்று அவன் தோழன் வர்ணித்ததில் அவன் நினைத்தது போலவே அவன் மனதில் உள்ள குழப்பம் குறைந்து அவன் முகம் மெல்ல தெளிவு ஆகி இருந்தது.
“எல்லாத்துக்கும் மேல நம்ம நெருக்கடி தீரும், அதையும் சொல்லுங்க.” என்று அன்பு சொல்ல..
“டேய்.. என்னை எல்லாம் அவள் அக்செப்ட் பண்ணி இருந்தா.. இந்நேரம் நான் கல்யாணம் முடிச்சு.. ஹனிமூன் கொண்டாடப் போய் இருப்பேன்.” என்றான் சேகர்.
“இல்லடா நான் அவளை சின்சியரா தான் லவ் பண்றேன். அதனால தான் அவள் கிட்ட உரிமையா இப்படி ட்ரெஸ் போடாதேன்னு சாஃப்ட் ஆகத் தான் சொன்னேன். அதுக்கு அவள் என்ன சொன்னா தெரியுமா? இப்படி என் ட்ரெஸ் விசயத்துல எல்லாம் நீ மூக்கை நுழைச்சா ப்ரேக் அப் பண்ணி விடுவேன்னு மிரட்டுறா டா”
அவன் நண்பர்கள் அதிர்ந்து விட.. “மச்சான் உன் வாயை வச்சிட்டு சும்மா இருடா. நாம கம்பி எண்ணாமல் தப்பிக்க வேண்டும் என்றால் உன் தேவதையால மட்டும் தான் முடியும்.”.. என்று புலம்ப ஆரம்பித்து விட அதே நேரம் நீத்து இரு மதுபானக் கோப்பைகளுடன் அவர்கள் அருகில் வந்து இருந்தாள்.
அவள் அவர்களை வெறித்துப் பார்க்க, அவள் எண்ணம் புரிந்தவர்கள் தள்ளி இருந்த டேபிளுக்கு விறுவிறுவென்று மாறிச் சென்று விட்டார்கள். ஒரே ஒரு பார்வையிலேயே ஓடி விட்டார்களே.. என்று அன்பு மனம் தான் தவித்தது.
“ நீத்து.. அவங்க கிட்ட ஒரு ஹலோ வாவது சொல்லி இருக்கலாமே!!”.. என்றான் அவன் மென்மையாக.
அவனுக்கு அப்படி எல்லாம் பேச வராது. அவளுக்காக தன் குணத்தை மாற்ற படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தான்.
“சாரி அன்பு. எனக்கு அவனுகளைப் பார்த்தாலே பிடிக்கலை என்று முகத்தைச் சுழித்தவள், கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் உங்களுக்கு வேண்டாம் அன்பு. நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி என் பாய் பிரெண்ட்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அவங்க உங்களுக்கு நல்லா கம்பெனி கொடுப்பாங்க. ” என்று அவளே எளிதாக சொல்லி முடித்தாள்.
வெளியில் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்த அன்புவின் மனமோ உள்ளுக்குள் உலையாகத் தான் கொதித்துக் கொண்டு இருந்தது.
தன் உணர்ச்சிகள் அனைத்தையும், தான் ஆசையுடன் நிறுவிய தன் நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சகித்துக் கொண்டு இருந்தான்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.