வீட்டிற்கு வந்த கண்ணபிரானை அன்போடு வரவேற்றார் ராஜேந்திரன்.
“எப்படிடா இருக்க? அம்மா, அப்பா எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” கேட்டுக்கொண்டே தம்பியின் தோள் மீது கைபோட்டபடி உள்ளே அழைத்துச் சென்றார்.
“உட்காருடா. இதோ வந்துவிடுகிறேன்.
“வாங்க தம்பி.” செல்வி வரவேற்றிட,
“எப்படி இருக்கீங்க அண்ணி?” என்று புன்னகை முகமாக வினவினார்.
“அப்பா நல்லா வச்சிருக்கிறாரா கேளுங்கப்பா” என்று அவரின் காதில் கிசுகிசுத்தான் குணா.
“அதெல்லாம் அவர் நல்லாத்தான் பார்த்துக்கிறார். வந்ததும் ஆரம்பிக்காமல் உன் வேலையைப் பார்” என்று மகனின் முதுகில் அடித்தார் செல்வி.
“ஹாய் ப்பா…” கண்ணனை கண்டு உற்சாகமாக அவரின் அருகில் ஓடி வந்தாள் தீக்ஷி.
“வாடா கண்ணு” என்றவர், “அண்ணாவோட நீயும் வந்திருக்கலாமே?” எனக் கேட்டார்.
“நான் இந்த வருடம் தான் உங்க அண்ணா கண்ணுக்கு பெரிய பொண்ணா தெரிஞ்சிருக்கேன் போல. வயசுப்பொண்ணா லட்சணமா ஊர் சுத்தாமல் இங்கேயே இருன்னு சொல்லிட்டார்” என்று மென் குரலில் அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தொண்டையை செருமியவராக அங்கு வந்தார் ராஜேந்திரன்.
“ஓகேப்பா. அப்புறம் பேசுவோம்” என்றவள் நகர,
“தீக்ஷி நில்லு. குமரன் கொடுக்க சொன்னான்” என்று பையிலிருந்து கிரிஸ்டல் ரோஸ் கோல்ட் கை கடிகாரத்தை எடுத்து கொடுத்தான்.
“வாவ்… சூப்பர் டா. எப்பவோ அண்ணாகிட்ட சொன்னேன். ஞாபகமா வாங்கிக் கொடுத்திருக்காங்க. நீயும் தான் இருக்கியே” என்றவள் அப்போதே அதனை கையில் கட்டி, புகைப்படம் எடுத்து குமரனுக்கு அனுப்பி வைத்ததோடு… “தேன்க்ஸ் ண்ணா! பிடிச்சிருக்கு. நல்லாயிருக்கா?” என்று புகைப்படத்திற்கு கீழே குரல் பதிவை அனுப்பி வைத்தாள்.
“தீக்ஷிம்மாக்கு என்ன போட்டாலும் நல்லாயிருக்குமே.” அடுத்த நொடி குமரன் அனுப்பியிருந்தான்.
குமரனின் குரல் பதிவு ஒலித்திட…
ராஜேந்திரன் தன்னிருப்பை நினைவூட்டினார்.
‘இவரை மறந்துட்டோமே.’ கண்களை உருட்டி விழித்தவள், “ஆபீஸ் போக டைம் ஆச்சுப்பா” என்று வேகமாக வெளியேறியிருந்தாள்.
“பசங்க எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்தான்.” கண்ணபிரான் பெருமையாகக் கூறினார்.
“வருமானம் நிறைய வந்தால், பணத்தோட அருமை தெரியாதாம். இப்படித்தான் வீண் செலவு செய்ய வைக்கும்.” க்கு வைத்து பேசினார் ராஜேந்திரன்.
அவர் குமரனை பாராட்டுவது உழைப்பு விடயத்தில் மட்டுமே.
“இது வீண் செலவு கிடையாதுண்ணா. அவனோட அன்போட வெளிப்பாடு. இது யாருக்கு புரியலன்னாலும், பசங்க புரிஞ்சிக்கிட்டு ஒற்றுமையாத்தான் இருக்காங்க. அவங்களுக்குள்ள எந்த வேறுபாடும் கிடையாது” என்று முதல் முறையாக தன்னுடைய அண்ணனுக்கு பேச்சின் மூலம் கொட்டு வைத்தார் கண்ணபிரான்.
குணா உள்ளுக்குள் விசிலடித்துக் கொண்டான்.
“உன் பையனை நீ விட்டுக்கொடுக்க மாட்டியே! என்ன விடயம்டா? காரணமில்லாமல் நீ வரமாட்டியே?” என்றார்.
“அம்மா அப்பாக்கு சதாபிஷேகம் பண்ணலான்னு ஒரு யோசனைண்ணா. அதான் உன்னை கேட்டு செய்யலான்னு.” அவரை முதன்மை படுத்தி பேச ராஜேந்திரன் நன்கு நிமிர்ந்து அமர்ந்தார்.
“நல்ல விடயம் தானே. காந்தளும் பேசுச்சு. நான் இங்கிருந்து அங்க என்னடா பண்ண முடியும். நீங்க ஆகுறதை பாருங்க. நான் முதல் நாள் வந்துவிடுகிறேன்” என்றார்.
“நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும் ண்ணா. அதான் கையோட தேதி குறிச்சிட்டு வந்தால், உங்களுக்கு தோதுபடும் தேதியை கேட்டுக்கலான்னு ஜோதிடரை பார்த்துட்டு வந்தேன். ரெண்டு தேதி சொன்னாரு, உங்களுக்கு எது சரி வரும் பாருங்க” என்று தேதிகளைக் கூறினார்.
ராஜேந்திரனும் இரண்டாவது தேதியையே தேர்ந்தெடுக்க, அவரை சமாளித்துவிட்ட நிறைவு கண்ணபிரானிடம்.
“வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னு கிளம்பிடாதே! ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்” என்றார்.
“இல்லைண்ணா நான் நாளை காலையில் கிளம்புறேன். குமரன் ஒத்தையா ரெண்டு ஆலைக்கும், பண்ணைக்கும் அல்லாடுவான்” என்றார் கண்ணன்.
“பய தொழிலில் புலியாய் இருக்கான் போல. எம்பிரான் சொன்னான். லோனெல்லாம் முடிச்சிட்டான்னு. வங்கி கணக்கிலும் எக்கச்சக்க பணம் புழங்குதாமே! இவ்வளவு வரி கட்டுறான்னு சொன்னான். வருமானத்தையெல்லாம் சொல்லல. வரித் தொகையை வச்சு நானே யூகிச்சிக்கிட்டேன். உழைப்பில் அப்படியே துரை மாதிரி” என்று குமரனைப்பற்றி ராஜேந்திரன் சொல்லிக்கொண்டே போனார்.
வேலையின்றி வெறிச்சோடி காட்சியளித்த தன் ஆலையை வெறித்தபடி பழனிச்சாமி அமர்ந்திருந்தார்.
அன்று தான் கைது செய்யப்பட்ட நிகழ்வே அவரின் கண்முன் தோன்றி அவரை வதைத்துக் கொண்டிருந்தது.
அத்தோடு குமரனின் செயலில் அவர் கூனிக் குறுகிப்போனார்.
எப்பேர்ப்பட்ட பாதகமான விடயம் குமரனுக்கு அவர் செய்தது.
‘அதையெல்லாம் மறந்து எப்படி தனக்கு உதவ முடிந்தது அவனால்?’ அவன் முன் தன்னை சிறுமையாக உணர்ந்தார்.
‘சிறியவனிடம் இருக்கும் பெருந்தன்மை தன்னிடமில்லாமல் போனதே.’ மன வேதனையில் குமைந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை,
தங்கள் தோட்டத்தில் விளையும் மிளகு மற்றும் ஏலக்காயினை பழனிச்சாமியின் ஆலையில் தான் பதப்படுத்தி ஏற்றுமதி செய்து கொண்டிருந்தான் குமரன்.
மற்ற பண்ணையத்தார்கள் போலவே தன்னுடைய சரக்கிற்குரிய பணத்தை பழனிச்சாமி உறவென்று அவரிடம் சலுகையெல்லாம் எதிர்பார்க்காது சரியாகக் கொடுத்து வந்தான்.
குமரனின் மிளகு மற்றும் ஏலக்காயிற்கு தனி மவுசு தான். அவனின் சரக்கிற்கு வெளியில் மற்றவர்களுடையதைக் காட்டிலும் பணமதிப்பு அதிகம்.
பழனிச்சாமியின் ஆலை தொய்வில்லாது இயங்கிட முக்கிய காரணமே குமரனின் சரக்குகள் தான்.
குமரனால் தான் அவருக்கு நல்ல லாபம் என்றும் சொல்லலாம்.
கொள்முதல் செய்ய வருபர்கள், குமரனின் சரக்கினையே எதிர்பார்த்திட பழனி தனக்குள் பல கணக்குகள் போட்டார்.
குமரன் தன்னுடைய சரக்குகளை மொத்தமாக பழனியிடம் விற்றிட மாட்டான். பதப்படுத்தலுக்கு மட்டுமே அவரின் ஆலைக்கு அனுப்பி வைப்பான். பதப்படுத்தலுக்கு உரிய பணத்தை கொடுத்துவிட்டு மிளகு மற்றும் ஏலக்காயினை தானே சந்தைப்படுத்துவான் அல்லது விறப்பனைக்கு பெரிய பெரிய நிறுவனுங்களுக்கு விற்றிடுவான். இதில் பழனிக்கும் வருமானம் வரும் வகையில் தான் குமரன் செயல்பட்டான்.
அதனை பழனிச்சாமி தான் புரிந்துகொள்ளவில்லை.
“பதப்படுத்தலுக்குன்னு இல்லாமல், உன்னுடைய சரக்கை எனக்கே கொடேன் குமரா. நல்ல விலைபோட்டு கொடுக்கிறேன்.”
பழனிச்சாமி அவ்வாறு கேட்க குமரனால் மறுக்க முடியவில்லை. வேறு யாரேனும் கேட்டிருந்தால் நிச்சயம் கொடுத்திருக்க மாட்டான்.
தன்னுடைய மாமன் என்பதாலேயே ஒப்புக்கொண்டான்.
இது தெரிந்த வீரபாண்டி, கண்ணபிரான் கூட… “நமக்கு நட்டமாச்சே குமரா?” என்று கேட்டிட…
“நம்ம அத்தைக்காகத்தானே! நாம் கொடுக்கலைன்னாலும், மத்த வியாபாரிகளிடம் மொத்தமாகத்தானே கொள்முதல் செய்கிறார். இப்போ என்ன நாம் இதுநாள் வரை நம்ம சரக்கை பதப்படுத்தி தரம் பிரித்து கொடுப்பதற்காக அவருக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருந்தோம். இனி அப்படியில்லாமல், சரக்கை அவர் வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை நமக்கு கொடுக்கப்போகிறார்” என்று எளிதாக சொல்லி அவர்களை அடுத்து பேசவிடாது செய்துவிட்டான்.
உண்மையில் இந்த முறையில் குமரனுக்கு நட்டம் தான்.
பதப்படுத்தி விற்பனையை இவனே செய்திட, பதப்படுத்தலுக்கு உண்டான செலவு போக மீதி அனைத்தும் இவனுக்கு லாபம். அத்தோடு பதப்படுத்துவதற்கு முன்பு விற்கப்படும் சரக்கு பதப்படுத்திய சரக்கைகாட்டிலும் மலிவு விலை. அந்த வகையில் குமரனுக்கு வரவு கம்மியாகும்.
குமரன் இதனை அறிந்தே இருந்தான்.
“இதற்காகத்தான் நாம் ஒரு ஆலை ஆரம்பிக்கலாம் சொன்னேன்” என்று ஆதங்கமாகக் கூறினார் கண்ணபிரான்.
“என்னப்பா இது… நம்ம அத்தையோட ஆலையிருக்கும் போது கூடுதல் லாபத்துக்காக நாம் ஆலை நடத்தினால், மாமாக்கு போட்டியாகத் தெரியாதா? குடும்பத்துக்குள் விரிசல் ஏற்பட நாமே காரணம் உண்டு பண்ணலாமா?” என்று கண்ணனை கடிந்து கொண்டான்.
“வீணாப்போகாது தாத்தா. எல்லாம் குணவதி அத்தைக்குத்தானே. நம்ம மதிக்குத்தானே மாமா சேர்க்கிறார். அந்த வகையில் யோசித்து பாருங்க. இனி இதைப்பற்றி பேச ஒன்றுமில்லை.”
அவனின் அழுத்தமான குரலுக்கு பின்னர் இருவராலும் பேசிட முடியாது போனது.
காந்தள் சொன்னால் கேட்பானென்று அந்த வகையில் முயற்சித்தும்…
“மாமாவே கேட்கும்போது எப்படி அத்தை முடியாது சொல்றது?” என்று கேட்க, காந்தளிடம் குமரனின் இக்கேள்விக்கு பதிலில்லாமல் போனது.
மேற்கொண்டு பேசினால் தனக்கும் குணவதிக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டு விடுமோ என்று எதுவும் பேசவில்லை அவர்.
எம்பிரானும் நடப்பை எடுத்து சொல்ல…
“எனக்கு தொழிலில் நட்டம் வந்தால், நீங்க தூக்கி நிறுத்த உதவமாட்டிங்களா சித்தப்பா?” என்ற ஒரே கேள்வியில் அவரை சமாதானம் செய்து விட்டான்.
“பழனி பணம் விடயத்தில் நிறையவே சுயநலவாதி குமரா. பார்த்து இருந்துக்க. உழைப்புக்கான பலனில்லாமல் போச்சுன்னா நிறைய வலி கொடுக்கும்” என்று அப்போதும் அவனை எச்சரிக்கவே செய்தார்.
குணாவும், வெண்ணிலாவும் கூட தங்களுக்குத் தெரிந்த வகையில் பேசிட…
“அவ்வளவு வளர்ந்துட்டீங்களா நீங்க? குடும்பமென்றால் எல்லோருக்கும் ஏற்ற வகையில் வளைந்து கொடுத்துதான் செல்ல வேண்டும். அப்போதுதான் உறவு நீடிக்கும்” என்று அவர்களிடம் பேசியவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, எந்த உறவுக்காக தனக்கு நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என இதனை ஒப்புக்கொண்டானோ அந்த உறவே இந்த தொழில் தொடர்பால் மனதால் இல்லாமல் போகப்போகிறது என்று.
விடயம் கேள்விப்பட்ட குணவதி கூட…
“அந்த மனுஷன் கிறுக்கு பிடிச்ச ஆளு. நீ கொஞ்சம் சூதானமா இருந்துக்கோ குமரா” என்று சொல்லவே செய்தார்.
தொழிலால் தாய்வீட்டு உறவு இல்லாமல் போய்விடுமோ என்று குணவதி பயந்தார். அதனாலேயே குமரனிடம் தன்னுடைய கணவனென்றும் பாராது பழனையைப்பற்றி அறிந்தவராகக் கூறினார்.
முதல் இரண்டு முறை பழனிச்சாமி சரியாகவே நடந்து கொண்டார். சரக்கினை தோட்டத்திற்கு வந்து பணம் கொடுத்த பின்னரே எடுத்துக்கொண்டார்.
மூன்றாவது முறை குமரனையே லோடு ஏற்றிக்கொண்டு வரும்படி கூறினார். நான்காவது முறை லோடு ஏற்றிவருவது என் கணக்கில் வராது. அதற்கு பணம் கொடுக்க முடியாதென்றுக் கூறி சரக்கிற்கு மட்டும் பணம் அளித்தார். அடுத்தடுத்த முறை இப்படி ஏதேனும் பல காரணங்களை முன் வைத்து பணத்தின் அளவை குறைத்தார்.
அவரின் தகிடுதத்த வேலையை எல்லாம் பொறுமையாகத் தாங்கிக்கொண்டவன், மௌனமாகவே இருந்தான்.
“அவர் இன்னும் எத்தனை தூரம் செல்ல முடியுமோ செல்லட்டும். ஒருமுறை கூடவா அவரின் துரோகம் அவருக்கு புரிந்துவிடாது, குற்றவுணர்வை ஏற்படுத்தாது?” என்று கேட்டு பார்க்கிறேன் என்ற கண்ணபிரானை அடங்கினான்.
“ஒருத்தரோட தப்பை பொறுத்து போவது பெரிய தப்பு குமரா.” அதற்குமேல் அவனிடம் எப்படி என்ன சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை.
குமரனின் பொறுமையும் ஒருநாள் எல்லை கடந்தது.
அம்முறை பெரிய நிறுவனம் ஒன்று மிளகு கேட்பதாக பழனிச்சாமி குமரனின் மிளகுத் தோட்டத்திலிருந்து தானே சரக்கினை லோட் ஏற்றிக்கொண்டார். பணம் பின்னர் தருவதாக சொல்லியிருந்தார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிந்தும் பணம் ஏதும் அவர் கொடுக்கவில்லை.
அந்நாளில் காப்பி ஆலையில் கொட்டைகள் யாவும் மழையில் சேதமாகிவிட பெரும் இழப்பு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்ய பணம் வேண்டும். கையில் இருக்கும் தொகைக்கு மேல் தேவை நீண்டது.
அப்போதும் குமரன் “வெளியில் யாரிடமாவது வாங்கலாம் இல்லையென்றால் வங்கியில் கடன் பெறலாம்” என்று சொல்ல…
கண்ணபிரான் தான் “பழனியிடம் நமக்கு கொடுக்க வேண்டிய பணமே பல லட்சங்கள் இருக்கும்போது நாம் ஏன் கடன் வாங்க வேண்டும்?” என்றதோடு குமரன் மறுத்து சொல்ல சொல்ல கேட்காது பழனியை அவரது ஆலையில் வைத்தே சந்தித்தார்.
“வாங்க மச்சான் என்ன இந்தப்பக்கம்?”
கண்ணபிரான் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரடியாக முகத்திற்கு நேராக உள்ளதை பேசினார்.
“சரக்குக்கு பணம் கொடுக்கலையே மாமா?”
“எந்த சரக்கு… என்ன பணம்?”
“உங்களுக்கு நினைவில்லைன்னு நினைக்கிறேன்” என்ற கண்ணபிரான் தேதி முதல் கொண்டு… அந்த தினத்தில் அவசரமென எந்தெந்த நேரத்தில் எத்தனை லோடு வண்டி ஏற்றிச்சென்றார் என்பது வரை கணக்கை புள்ளிவிவரமாகக் கூறிட… பழனி அதிர்ந்து தான் போனார். எல்லாம் சில நொடிகள் மட்டுமே.
“சரி… அதுக்கு நான் எதுக்கு பணம் கொடுக்கணும்?”
“வெளியில் வாங்கியிருந்தால் ஒரு வாரத்தில் கணக்கை முடித்து இருப்பீர்கள் தானே?” கண்ணபிரான் விடுவதாக இல்லை.
பழனி ஏமாற்ற நினைப்பது அவரின் பேச்சிலேயே கண்ணபிரான் விளங்கிக் கொண்டார்.
“அதே தான் நானும் சொல்றேன் மச்சான். வெளியில் என்றால் பணம் கொடுத்து வாங்கலாம். இது என் மாமனார் வீட்டுடையது தானே, எனக்கும் பங்கிருக்கே… என் பொண்டாட்டி மூலமாக” என்றார்.
“ஆனால் உழைப்பு முழுக்க குமரனுடையது. நீங்களோ, குணவதியோ வந்து ஒருநாள் ஒரு பொழுது கொடி ஏத்தலையே?” சுருக்கென்று தான் கேட்டார். பழனியின் முகம் கருத்தது.
“கணு கிள்ளியதும் இல்லை. இப்போ வந்து உரிமை பேசுவீங்களோ? தோட்டத்தில் பங்கு வேணுன்னா உழைப்பிலும் பங்கு இருக்கணும்.” கண்ணபிரான் விடுவதாக இல்லை.
“அப்போ உங்க சொத்தில் என் பொண்டாட்டிக்கு எதுவுமில்லைன்னு சொல்றீங்களா?” தன் தவற்றை மறைத்திட பேச்சின் போக்கை திசைதிருப்பிட முயன்றார் பழனி.
“நான் என்ன சொல்றன்னு உங்களுக்கு புரியும்” என்ற கண்ணபிரான், “இப்போ இது பேச்சில்லை. கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்க. நான் கிளம்புறேன்” என்றார்.
“என்ன பணம்?”
மீண்டும் முதலிலிருந்தா என்று கண்ணனுக்கு ஆயாசமாக வந்தது.
“உங்களால் இப்போ கொடுக்க முடியாதுன்னா வேறெப்போ கொடுக்க முடியும் சொல்லுங்க?”
அந்நேரம் கண்ணபிரான் பழனியை சந்திக்கச் சென்றிருக்கிறார் என்பது அறிந்து குமரன் வந்து சேர்ந்தான்.
“நான் கொடுக்க எதுவும் இல்லை.”
“சொந்தங்களுக்குள்ளே இப்படி ஏமாத்த பாக்குறீங்களே, நாளை பின்ன எப்படி எங்க முகம் பார்த்து நடப்பீங்க?”
“ஹேய்… உனக்கு அவ்வளவு தான் மரியாதை.”
“ஏமாத்தி பொழப்பு நடத்தும் உங்களுக்கே மரியாதை பற்றியெல்லாம் தெரிந்திருக்கே!” கண்ணபிரானிடம் எள்ளல்.
இதுவரை தனக்கு அடங்கி இருந்த கண்ணன் இன்று எதிர்த்து பேசுவதோடு, வார்த்தைக்கு வார்த்தை தாக்கி பேசிட… பழனியின் ஆத்திரம் அக்கணம் எல்லை மீறியது. கண்ணனை அடிக்க கரம் உயர்த்திய நொடி குறுக்கே குமரன் புகுந்திட அவனின் கன்னத்தில் அடி விழுந்தது.
“மாமா?”
கண்ணபிரான் கத்திய கத்தல் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்ற நிலையில் இருமாந்து நின்றிருந்தார் பழனி.
“குமரா!”
“எனக்கு ஒண்ணுமில்லைப்பா. வங்க போவோம்!”
“என்னடா நாடகம் போடுறீயா? முன்ன அவனை அனுப்பி பணம் கேட்க சொல்லிட்டு பின்னாலே நீ வந்து ஒண்ணும் நடக்காத மாதிரி போவ, பார்க்குறவன் பார்வையில் நான் கெட்டவனாகத் தெரியணும். அப்படித்தானே!” பழனியின் பேச்சு சுத்தமாகா நல்லாயில்லை.
இந்நிலையில் என்ன பேசினாலும் அவருக்கு புரியாது என்றுணர்ந்த குமரன்,
“ஒன்னுத்துக்கும் ஆவாத பூச்சி பிடிச்ச சரக்கை கொடுத்து என்னை ஏமாத்தி நட்டம் ஏற்படுத்தியதுக்கு நீங்கதான் எனக்கு நட்ட ஈடு கொடுக்கணும்” என்றவரின் முணு முணுப்பில் திரும்பிய கண்ணபிரான்…
“இந்த ஏற்காடு மேற்குத்தொடர்ச்சி மலைக்கே தெரியும், தரமான சரக்கு அப்படின்னாலே குமரனுடைய பெயர் தானென்று. நீங்க சொல்வதால் பொய் உண்மையாகிடுமா என்ன? உங்களைப்பற்றி தெரிஞ்சும் உங்களுடையப் பேச்சினை நம்பி சரக்கு கொடுத்த நாங்க தான் நொந்துக்கணும்.
குமரன் பொறுமையா போவது குணவதி அக்கா முகத்துக்காக” என்று வார்த்தையால் சாடியவர் இறுதியாக…
“இது நல்லதுகில்லை மாமா?” என்றார்.
“தொழிலில் எல்லாம் சரிதான் போடா” என்று அசராது பதில் கொடுத்தார் பழனிச்சாமி.
தொழிலில் கால் பதித்தது முதல் நேர்மை என்ற ஒன்றை மட்டுமே மூச்சாய் கொண்டு முன்னேறி வருபவனுக்கு பழனியின் இந்த பதில் சுத்தமாக பிடிக்கவில்லை. தொழிலில் எல்லாம் சரியென்பது நேர்மைக்கும் உண்மைக்கும் ஒத்துவராதே!
“என்னுடைய அமைதியை நீங்க ஏமாளித்தனம் நினைத்தால் அது உங்களுடைய முட்டாள் தனம். நீங்க என்னுடைய சொந்தம் என்பதற்காக மட்டும் தான் என் பொறுமை” என்று வாய்திறந்து அழுத்தமாக மொழிந்தான் குமரன்.
“சொந்த பந்தம், உறவுமுறையெல்லாம் தொழிலில் ஒத்துவராது.” பழனிச்சாமியின் வார்த்தைகள் குமரனுக்கு பெரும் இடியாய் உள்ளிறங்கியது. அவன் சொந்தமென்று அனைத்தும் துறந்திட, அவர் சொந்தமென்பதை எந்நிலையிலும் கருத்தில் கொள்ளவில்லை என்பது அவனுள் பெருத்த ஏமாற்றமே!
அதன் பின்னர் ஒரு நொடியும் அங்கு நிற்காது கண்ணனுடன் வந்துவிட்டான்.
விடயமறிந்து மற்ற குடும்பத்தாரை இதைப்பற்றி பேசக்கூடாதென்று தன் பார்வையாலேயே கட்டிப்போட்டுவிட்டான்.
அடுத்து அவன் சோர்ந்து போகவெல்லாம் இல்லை. தன்னுடைய முயற்சியில் ஆலையைத் தொடங்கி முன்னேற்றம் கண்டான்.
அன்று பழனி கொடுத்த ஏமாற்றத்தால் உண்டான காயம் அப்போதுதான் சரியாகியது. அதன் வடு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அதனின் ரணமே அன்று மிளகு ஆலையில் குமரன் திருப்பிக் கொடுத்தது.
காவல்நிலையத்தில் வைத்து கண்ணன், வியாபாரி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திடலாம் எனும்போது… கொடுப்பதற்கு உண்மையிலேயே அவரிடம் பணமில்லை.
கடந்த பல மாதங்களாகவே அவரின் தொழில் நலிவில் தான் சென்றது. அதனை சரிசெய்திட கடன் வாங்கியிருந்த இடத்தில் அந்த வியாபாரி கொடுத்த பணத்தை கொடுத்திருந்தார். கடன் வாங்கிய இடத்தில் அதனை கேட்க முடியாதே. இதனை கண்ணனிடம் சொல்லி தன்னை கீழிறக்கிக்கொள்ள முடியாமலே பணம் திருப்பிக்கொடுக்க முடியாது என்றுவிட்டார்.
அனைத்தையும் நினைத்துப்பார்த்த பழனிக்கு தன்னை நினைத்தே சிறுமையாக இருந்தது.
குமரனுக்கு அன்று அவர் கொடுத்த ஏமாற்றத்தின் பலனை இன்று அனுபவித்தார். கண்முன்னே ஆளின்றி முடங்கியிருக்கும் அவரது ஆலை அத்தனை வலியை கொடுத்தது அவருக்கு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.