அடர்ந்த பசுமை போர்த்திய அடவியாகக் காட்சியளிக்கும் மலை… வளைந்து நெலிந்து செல்லும் கரிய நிற சாலையில் ஏற்காட்டின் முகட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது அந்த ஜீப்.
பின்னால் அமர்ந்திருப்பவள்… அந்த பசுமையையும், நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் காட்டு மரங்களையும், மேலே செல்ல செல்ல கீழே தெரியும் பள்ளத்தாக்கையும் இன்று தான் புதிதாக பார்ப்பதைப்போல் சன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தாள் வெண்ணிலா.
ஓட்டுநர் இருக்கையில் குமரன், அவனுக்கு அருகில் குணா.
வழக்கமாக மூவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களில் சிரிப்பிற்கும் பேச்சிற்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இப்போது முற்றிலும் மாறாக அவர்களிடம் பேரமைதி.
மாலை ஐந்து மணிபோல் வெண்ணிலாவின் வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்காது வீட்டையே வெறித்திருந்தான் குமரன்.
அவனது உள்ளமும், விழிகளும் அவனவளை கண்டிட அலைப்பாய்ந்தது. ஆனால் உள்ளே சென்று அவளின் முகம் பார்த்திட மட்டும் துளியும் தைரியம் வரவில்லை.
மனதோடு குமைகின்றான். தான் உதிர்த்த வார்த்தைகளை எண்ணி எண்ணி மாய்ந்து கொண்டிருக்கிறான். தன்னையே நித்தமும் நிந்தித்து திரிகிறான். நொடி நொடியாய் தன்னவளிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டி ஜெபம் போல் மன்றாடிக் கொண்டிருக்கின்றான்.
அவன் உள்ளத்து காரணம் என்னவோ? காதலை மறுத்து வார்த்தையால் வதைத்து விட்டான். ஆனால் உண்மையில் அதிக வதை கொண்டது அவளினும் அவன் தான்.
தான் பேசிய வார்த்தைகள் தனக்கே இத்தனை வலியை கொடுக்குமென்று அவன் அறிந்திருக்கவில்லை.
விலக்க நினைத்து பேசியவனுக்கு, பேசிய பின்னர் விலக மனமின்றி தவிக்கின்றான்.
அவன் வார்த்தைகளை நிறுத்தியதும் பட்டென்று வெண்ணிலா அழைப்பைத் துண்டித்ததிலே மொத்தமாக துவண்டு போனான். நின்ற இடத்தில் அப்படியே சரிந்து, ஒரு கால் நீட்டி, மற்றொரு கால் மடக்கி அதன் முட்டியில் ஒற்றை கை வைத்து தரையில் அமர்ந்தவன் விடியும் வரை தன்னிலையை மாற்றவில்லை.
கண்கள் கண்ணீரை வெளியேற்றவில்லையேத் தவிர அவனின் இதயத்தில் குருதி கசிந்தது.
“அம்மாடி… மாமாவை வெறுத்துட்டியா?”
வெறுக்க வைக்க நினைத்ததே தான் தான் என்பதை மறந்தானோ?
அக்கணம் வெண்ணிலாவின் காதலை மறுப்பதற்காக அவனுக்குள் அவனே சொல்லிக்கொண்ட காரணங்கள் யாவற்றையும் ஒதுக்கிவிட்டு, வெண்ணிலாவின் காதலில் தஞ்சம் கொள்ள வேண்டுமென நினைத்தவன் இமைப்பொழுதில் மாற்றம் பெற்றான்.
அதற்கு அஜய்யின் அன்றைய செயலே முக்கியக் காரணமாகும்.
சுவற்றில் மாட்டியிருக்கும் அவனது படத்தையே வெறித்திருந்தான். அவனை கடந்து அவனுள் அவள் பிம்பமாக அவனது கருவிழிகளுக்குள் கண்ணீர் முகத்தோடு காட்சியளித்தாள் கதிரின் நிலவுப்பெண்.
“அம்மாடி…” இரு கைகளால் தன் முகத்தை அறைந்து கொண்டான்.
‘இப்போது தான் பேசியதன் கனம் தாங்காது வைத்துவிட்டாள். ஆனால் விடியலில் வழமைப்போல் தனக்கு தகவல் அனுப்புவாள். எப்போதும் போல் என்னிடம் பேசுவாள். மாமா என்று அழைப்பாள்.’
அவளுக்காக அவன் வலி உணர்ந்த போதும் அவளை அழைத்து பேசும் திடம் மட்டும் அவனுக்கு வரவில்லை.
இரவு பொட்டு உறக்கமின்றி இருந்தவன், அவன் ஆலைக்கு செல்லும் நேரம் கடந்தும் வெண்ணிலாவிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை என்றதும் மொத்தமாக உடைந்து போனான்.
‘அம்மாடி… ரொம்ப காயப்படுத்திட்டனா?’
அன்றைய நாள் முழுக்க வேலைக்கும் செல்லாது, வீட்டிலிருப்பவர்களையும் தவிர்த்தவனாக அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான்.
வீட்டிலிருந்த மூவரும் என்னவோ ஏதோவென்று பயந்து தனித்தனியாக சென்று விசாரிக்க… உடல் நிலை சரியில்லை என்று பொய்யுரைத்தான்.
அன்றைய பொழுது யாவும் வெண்ணிலாவை திட்டியதற்காக வருந்தி சோர்ந்தவன்… அடுத்த நாள், முயன்று வரவழைக்கப்பட்ட தன்னிலையோடு வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.
‘என்னை விலக்கி வைத்துவிட்டாள்.’
‘இதைத்தானே நீ எதிர்பார்த்தாய்?’
ஒரு மனம் தவிக்க ஒரு மனம் கொட்டியது. அதில் அடங்கித்தான் போக முடிந்தது.
‘காதலென்று தன் பின்னால் சுற்றக்கூடாதென நினைத்தோம். நினைத்தது நடக்கும்போது ஏன் வருந்த வேண்டும்?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன் உற்சாகம் தொலைத்து கடமையேயென நடமாடினான்.
நாட்களை எப்படி கடத்தினானோ?
‘வார இறுதியில் அத்தை வரேன்னு சொல்லியிருக்கு. அப்போ வெண்ணிலாவும் வருவாள்.’ இதை வைத்தே தவிக்கும் மனதிற்கு சமாதானம் கூறிக்கொண்டான்.
‘உன்னை பார்க்காமல் உன்னிடம் பேசாமல் இருக்க முடியாதுன்னு தெரியும். இப்படி வலிக்கவும் செய்யுமென்று இப்போது தான் தெரிகிறது.’ அவள் நினைத்த பித்து நிலையில் அவன் பிதற்றினான்.
‘வேண்டாம்… வேண்டாம்… இது வேண்டாம்.’ தனக்குள் உரு போட்டவனாகத் தன்னை மீட்டான். மீண்டுவிட்டானா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
வீரபாண்டி, கமலத்தின் மருத்துவ அறிக்கைகளை வாங்குவதற்காக… அடுத்த நாள் மருத்துவமனை கல்லூரிக்குச் சென்ற குமரன், முதலில் சென்றது வெண்ணிலாவைத் தேடித்தான்.
கலைந்த ஓவியமாக கண்ணீர் கரையோடு ஹேமாவின் தோளில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் உயிர் வேதனையை கொடுத்திட… தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு கனத்த மனதுடன் திரும்பியிருந்தான்.
இப்படியாவது தன்னைவிட்டு ஒதுங்கி இருக்கட்டுமென்று.
முதல்முறையாகத் தனக்கும் அஜய்க்கும் நடுவில் உறவு சுமூகமாக இருந்திருக்கிலாமென நினைத்தான்.
அதன் பின்னர் வெண்ணிலாவின் ஒதுக்கம் வருந்தச் செய்தாலும், புதிதாகத் துவங்கிய குளம்பித்தூள் தொழில் அவனை தன்னுள் வளைத்துக்கொள்ள தன்னை அதனுள் பொருத்திக் கொண்டான்.
வெண்ணிலாவின் குரலையாவது கேட்டிட முடியாதா என ஏங்கினான். அலைப்பேசியை மணிக்கு பலமுறை எடுத்து அதிலிருக்கும் அவளின் முகத்தை கண்களில் நிரப்பினான்.
‘ஒரே ஒரு மெசேஜ் பண்ணுடா நிலா!’
மனம் அரற்றினாலும் தன் வேலையில் மட்டுமே கண்ணாக இருந்தான்.
இன்று குணா சேலம் வந்துவிட்டதாக அழைக்கும்போது கூட நகரவே முடியாதபடி வேலைகள் சூழ்ந்திருக்கவே, குணாவையே ஆலைக்கு வந்துவிடுமாறு கூறினான். இல்லையென்றால் பேருந்து நிலையத்திற்கு அவனே சென்றிருப்பான்.
காந்தள் ஏற்காட்டிற்கு கிளம்பும்போது குமரனிடம் சொல்லாததால், அவர் நாளைத்தான் வருகின்றாரோ என எண்ணியே குணா வெண்ணிலாவின் வீட்டிற்கு செல்கிறேன் என்றபோது அவன் மறுத்து ஏதும் சொல்லவில்லை. அத்தோடு குணாவோடு காந்தளையும் கூட்டிக்கொள்ளலாம் என நினைத்தவன் அதனை சொல்லிட அவனின் அத்தைக்கு அழைக்க, அவர் ஏற்கனவே தான் ஏற்காட்டில் இருப்பதாக சொல்லியதோடு வெண்ணிலா வீட்டில் இருப்பதைக்கூறி வரும்போது அழைத்து வந்துவிடுமாறு கூறி வைத்துவிட்டார்.
காந்தள் ஏற்காட்டிற்கு கிளம்பினால், வெண்ணிலா தான் முந்திக்கொண்டு வருவாள். ஆனால் இன்று அவளே செல்லவில்லை என்ற செய்தி குமரனை வெகுவாக பாதித்தது.
அவன் செய்த ஒன்று அவள் செய்யும் போது பலமடங்காக வலித்தது அவனுக்கு.
இருப்பினும் எதிர்பார்த்து செய்ததுதானே என்று தன்னை தேற்றிக்கொண்டான்.
அதனால் குணா மாலை வெண்ணிலா வீட்டிற்கு வர சொல்லியபோது மிகுந்த ஆர்வத்துடனே அங்கு சென்றான்.
வீட்டின் கதவு திறந்திருந்ததால் குளம்பி நீர் தயாரித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவிற்கு குமரனின் வண்டி சத்தம் நன்கு கேட்டது.
‘ஹை… மாமா!’ அவனது வரவில் அனைத்தும் மறந்து குதுகளித்த அவளின் மனம் நொடியில் நத்தையாய் சுருண்டது. வெளியே செல்ல நகர்ந்த கால்களை இழுத்து பிடித்து நின்றாள்.
நிமிடங்கள் பல சென்றே வண்டியிலிருந்து இறங்கிய குமரன், திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
வீடு அமைதியாக இருக்க பார்வையை சுழலவிட்டான்.
வெண்ணிலா அடுக்களைக்குள் இருக்கும் அரவம் கேட்டிட, அவளை எட்டிப்பார்த்திட முயன்ற கண்களுக்கு கடிவாளமிட்டு கூடத்து இருக்கையில் சென்று அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் ஆவி பறக்கும் கோப்பையை அவன் முன் வைத்தவள், அவனை நிமிர்ந்தும் பாராது… மற்றொரு கோப்பையோடு அவனை கடந்து குணா உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.
அடுக்களையிலிருந்து வெண்ணிலா வெளிப்பட்டது முதல் குமரன் வெண்ணிலாவின் மீதே தான் தன்னுடைய விழிகளை பதித்திருந்தான்.
தன் முகத்தை பார்த்திடக்கூடாது என்கிற முனைப்பு, தன்னை நெருங்கும்போது நடையில் தடுமாற்றம், தனக்கு முன் கோப்பையை வைத்திடும்போது கையில் ஏற்பட்ட சிறு நடுக்கம் என அவளின் அனைத்தையும் கவனித்தவனின் நெஞ்சம் விம்மியது.
தன்னைக் கண்டதும் புள்ளி மானாய் துள்ளி ஓடிவரும் அவனது நிலவை வெகுவாய் எதிர்பார்த்து ஏமாந்து போனான்.
உள்ளே குணாவிடம் பேசும் அவளின் குரல் அவனைச்சேர, மாமா என்று ஆர்பாட்டமாகத் தன்னை அழைக்கும் அவளின் குரல் ஒலித்து அடங்கியது அவனுள்.
‘இனி தன்னை அழைக்கவே மாட்டாளா?’
கண்களை மூடி இருக்கையின் பின் தலை சாய்த்துக் கொண்டான்.
“குணா எழுந்திருடா!”
“டேய்…” அவனை அவள் உலுக்கிய பின்னரே மெல்ல அசைந்தான்.
“நிலா குட்டி கொஞ்ச நேரம் தூங்கிக்கிறனே! நைட் ஷிப்ட் ஆரம்பிச்சதுல இருந்து சரியாவே தூங்கல…”
“எழுந்திரு குணா.”
புரண்டு உருண்டு படுத்தவன் எழுவதாகவே இல்லை.
“ம்ப்ச்…” சலித்தவளாக அவனருகே அமர்ந்துவிட்டாள்.
அருகிலிருந்த தண்ணீர் போத்திலை பார்த்தவள் ‘கவிழ்த்து விடலாமா’ என்ற யோசனையில் அவனையும் போத்திலையும் மாற்றி மாற்றி பார்த்தவள் போத்திலை கையிலெடுத்தாள்.
சட்டென்று இருவரின் குரலும் அடங்கியிருக்க, கண்களைத் திறந்த குமரன்… இதைத்தான் அவள் செய்வாளென்று சரியாக கணித்து, குணாவின் முகத்தில் அவள் நீரை கவிழ்க்க முனைந்த கணம்,
“குணா…” என்று விளித்திருந்தான் சத்தமாக.
அண்ணனின் ஓசை செவி நுழைந்ததும், அத்தனை நேரம் தூங்க விடுமாறு வெண்ணிலாவுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தவன், உறக்கத்தை விரட்டியவனாக தன்னருகில் அமர்ந்திருந்த வெண்ணிலாவையும் கண்டுகொள்ளாது இடிக்கு முன் பாயும் மின்னலென அறையிலிருந்து ஓடி வந்திருந்தான்.
“குமரா” என்றவன் தன்னை கண்டதும் எழுந்து நின்ற சகோதரனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“எப்போடா வந்தாய்?” என்று குமரனிடம் கேட்டவன், தனக்கு பின்னால் அறையிலிருந்து வெளிவந்த வெண்ணிலாவிடம் திரும்பி, “இவன் வந்திருக்கான் சொல்ல வேண்டியது தானே நிலா?” என்றான்.
கவனமாக குமரனின் முகம் பார்ப்பதை தவிர்த்தவளாக, குணாவை முறைத்தவள்… “அதுக்கு முதலில் எழுந்திருத்திருக்கணும்” என்று காட்டமாக சொல்லிவிட்டு அவனுக்கான கோப்பையை டீபாயின் மீது வைத்துவிட்டு தனதறைக்கு செல்ல மாடியேறினாள்.
“உனக்கும் அவளுக்கும் சண்டையா?” என்று குமரனிடம் வினவிய குணாவே, “இருக்காதே… அவளாவது உன்னிடம் சண்டை போடுவதாவது” என்றதோடு, “குச்சி மிட்டாய் வாங்கித்தரலன்னு கோச்சிக்கிட்டாளா?” எனக் கேட்டு சிரித்தான்.
“அப்படிலாம் இல்லை.”
“அப்புறம் ஏன் உன்கிட்ட பேசமால் போறாளாம்?”
இதற்கு குமரன் என்ன பதில் சொல்லிடுவான்.
“அநேகமாக உன் மேலிருக்கும் கோபத்தை தான் என்கிட்ட காட்டிட்டு போகிறாள்” என்ற குணா இன்னமும் குமரனை அணைத்தபடியே இருந்தான்.
குணாவின் அன்பு எப்போதுமே குமரனுக்கு அதீத சந்தோஷம் தான். அதனால் அவனை விலக்க மனமே இல்லாது அவனது நெருக்கத்தில் அடங்கியிருந்தான்.
“வரலன்னு சொன்ன?”
“அண்ணன் மேல் திடீர் பாசம். அதான் ஓடோடி வந்தேன்” என்றவன், குளம்பி நீர் அடங்கிய கோப்பைகளை கவனித்து… “நீயும் இன்னும் குடிக்கலையா?” என்றவாறு குமரனை தன்னிலிருந்து பிரித்து விடுத்தான்.
“ஆறிப்போயிருந்தாலும் குடிச்சிடுவோம். நிலாகுட்டி இதை ரொம்ப கஷ்டப்பட்டு போட்டிருக்கும்” என்ற குணா ஒரே மூச்சில் குடித்து காலி செய்தான்.
வந்ததிலிருந்து சலசலத்தபடி இருக்கும் குணாவின் பேச்சில் குமரனிடம் மென் புன்னகை நிரந்தரமாக குடிக்கொண்டது.
“எத்தனை நாள் விடுமுறை?”
“அவனுங்க எங்க கொடுத்தானுங்க நானே எடுத்துக்கிட்டேன். மண்டே எமர்ஜென்சின்னு மெயில் பண்ணிக்கலாம். ஒரு நாலு நாள் உன்னோடு இருந்துட்டு தான் போவேன். திரும்பப் போனால் மீண்டும் வர எப்போ நேரம் கிடைக்குமோ?”
“ம்ம்ம்…” என்ற குமரன், “திரும்ப வர மாதிரி இருக்கும்” என்றான்.
“அப்போ உன் அப்பாவிடம் சொல்ல சொன்னதை மறந்துட்ட? இப்போ ஏற்பாடு பண்ணிட்டு சொன்னாக்கா தையாத்தக்கான்னு அடவு கட்டப்போறாரு” என்ற குமரனுக்கு ராஜேந்திரனை நினைத்து இப்போதே ஆயாசமாக வந்தது.
அவரிடம் ஒன்றை சொல்லி, அவரை சரியான கோணத்தில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குள் பாதி உயிர் போய்விடும்.
“சில் ப்ரோ. நைட் வீட்டுக்கு போனதும் நீயே பேசிடு” என குமரன் தனக்கு கொடுத்த வேலையை லாவகமாக அவனிடமே திருப்பிவிட்டான்.
குமரன் தம்பியை முறைத்திட…
“நானெல்லாம் சொல்லி கேட்கும் ஆளாடா திரு.ராஜேந்திரன்?” என்ற குணாவின் பாவனையில் குமரன் சிரித்துவிட்டான்.
சரியாக அச்சமயம் கீழே வந்த வெண்ணிலாவுக்கு குமரனின் சிரிப்பு இன்னும் வலியை கொடுத்தது.
‘அவர் சொல்லியதைப்போல் நான் அவர் வாழ்வில் இருந்தாலும், இல்லையென்றாலும் ஒன்று தானா? உண்மையில் என்னை அவ்வாறு பேசியதில், என் வருத்தத்தை நினைத்து சிறு கவலையும் அவரிடம் இல்லையா? இருந்திருந்தால் அவரால் இப்படி சிரிக்க முடியுமா?’ சட்டென்று கலங்கத் துடித்த விழிகளை இமை தட்டி சரி செய்தாள்.
“ஹேய் நிலா எங்க போயிட்ட? வா… வா!” தான் அழைக்க அருகில் வந்தவளை தன்னுடைய இருக்கையின் கை வளைவில் அமர்த்திக்கொண்டான் குணா.
குமரனின் முன்பு அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. ஒருவித அவஸ்தையில் அவள் அமர்ந்திருந்தாள். குணா அவளின் படிப்பை பற்றி வினவ கவனமேயின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தையே நேர்கொண்ட பார்வையாக பார்த்திருந்த குமரனால் அவளின் மனநிலையை கணிக்க முடிந்தது.
“குணா கிளம்பலாமா?” எனக் கேட்டான்.
குணா குமரனின் பக்கம் திரும்பிட,
“இதுக்குமேல போனால் இருட்டிடும் குணா. மலையேற கொஞ்சம் சிரமமாக இருக்கும்” என்று சூழலை காரணம் காட்டினான் குமரன்.
“டைம் ஆச்சுல… நிலாவும் நம்மோடு தானே வரப்போகிறாள். அதை மறந்திட்டு நான் பேசிட்டு இருக்கேன்” என்று குணா எழ,
“நான் எப்போ வரேன் சொன்னேன் குணா? நான் வரல” என்று வேகமாக மறுத்துக் கூறினாள்.
“நீ தனியா இங்கிருந்து என்ன செய்யப்போகிறாய்?”
“எனக்கு படிக்கிற வேலையிருக்குடா!”
“ஆஹான்… நாளைக்கு என்ன டே தெரியும்ல?”
குமரனின் பக்கம் தாவும் கருவிழியை பிடித்து குணா மீது வைத்தாள்.
குமரனின் அழுத்தமான பார்வையை உணர்ந்தே இருந்தாள்.
“ஹேமா வரேன் சொல்லியிருக்கா(ள்) குணா. நோட்ஸ் கொஞ்சம் எடுக்கணும்.” உறுதியின்றி அவளிடமிருந்து காரணம் வெளி வந்தது.
“உண்மையாவே உங்களுக்குள்ள ஏதோ இருக்கு.” இருவரையும் சுட்டிக்காட்டி கூறியவன், “என்னிடம் எதையாவது மறைக்கிறீங்களா?” என்று வினவினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா” என வேகமாக சொல்லிய குமரன்,
“அவ(ள்) வருவாள்… நீ போயிட்டு உன் பேக் எடுத்துட்டு வா” என்று குணாவை அறைக்குள் அனுப்பி வைத்தான்.
இப்போது என்ன செய்வதென்று வெண்ணிலா தலையை குனிந்து மேல் கண்களால் அவனை முறைத்து பார்த்திருக்க…
“வெயிட் பண்றேன்!” எனக்கூறி வெளியேறியிருந்தான். அவனின் குரலில் இருந்த அழுத்தமே நீ வந்துதான் ஆகணும் என்று சொல்லாமல் சொல்லியிருந்தது.
“ஓய்… என்ன நின்னுட்டே இருக்க? வருண், யாழ் பேபிலாம் வருவாங்களே! நீயில்லாமல் எப்படிடா? சீக்கிரம் கிளம்பி வா” என்று தன்னுடைய பையினை எடுத்துக்கொண்டு வந்த குணா அப்படியே நின்றிருந்த வெண்ணிலாவை விரட்டினான்.
‘அவர் ஒருத்தருக்காக எல்லோரையும் ஏன் தள்ளி வைக்கணும்’ என நினைத்தவள், உண்மையிலும் குமரனின் பார்வைக்காகவும் வார்த்தைக்காகவும் தான் செல்ல முடிவெடுத்தாள்.
“அவ்வளவு தான். இதில் கிளம்ப என்ன இருக்கு. என்னோட திங்க்ஸ் அங்கையும் இருக்கு. போகலாம்” என்று வீட்டினை பூட்டுவதற்கு சாவியை கையில் எடுத்தாள்.
“மொபைல்?”
குணா கேட்ட பின்னரே அறைக்குள்ளிருந்த அலைப்பேசியை எடுத்துக்கொண்டாள்.
அன்று குமரனிடம் பேசிய பின்னர் கீழே வைத்தது. இப்போது தான் கையில் எடுக்கின்றாள். அலைப்பேசியை கையில் எடுத்தாலே குமரனுக்கு அழைக்கவோ தகவல் அனுப்பவோ கைகள் பரபரத்திட நான்கு நாட்களாக அதனைத் தொடவே இல்லை. மொத்தமாக அணைத்து வைத்திருந்தாள். காந்தள் ஏற்காடு கிளம்பிய பின்னர் தான், அவர் எப்போதாவது அழைப்பார் என்ற எண்ணத்தில் உயிர்பித்திருந்தாள்.
“நீ போ! வண்டியில் உட்காரு. நான் பூட்டிட்டு வருகிறேன்” என்ற குணா வெண்ணிலாவை முன் அனுப்பி வைத்து, வெளிவாசல் இரும்பு கம்பி கதவினையும் பூட்டிவிட்டு வண்டியில் ஏறினான்.
அப்போது ஆரம்பித்த அவர்களின் மௌனம் பாதி மலை ஏறிய பின்னரும் தொடர்ந்து கொண்டிருந்தது.
குமரனும் வெண்ணிலாவும் பேசமாலிருக்க காரணம் இருந்திட…
‘இவர்களுக்குள் என்னவாக இருக்கும்?’ என்கிற யோசனை குணாவை அமைதியாக இருக்க வைத்தது.
வண்டியின் கண்ணாடி வழியே வெண்ணிலாவை கண்ட குமரன் கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான்.
அவளை எப்போதும் அவன் சோகமாக கண்டதே இல்லை. குணாவிடம் பேசிடும் போதும் மறைக்கப்பட்ட அவளின் சோகத்தை அவனால் உணர முடிந்தது.
அதற்கு காரணம் தான் என்கிற காரணமே குமரனுக்கு அதீத அழுத்தத்தை கொடுத்தது.
காதலை சிலர் சொல்லத் தவிக்கிறார்கள். சிலர் சொல்லிவிட்டுத் தவிக்கிறார்கள். இதில் வெண்ணிலா இரண்டாவது.
காதலை சிலர் மறக்கத் தவிக்கிறார்கள். சிலர் மறைக்கத் தவிக்கிறார்கள். குமரனின் மனமும் இரண்டாம் நிலையே!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.