பெரு மலையாக எழுந்து அச்சுறுத்தும் குடும்பத்திற்கும் மனதில் லேசாக தடம் பதித்து ‘உன்னை பிடிச்சிருக்காம்’ என்னும் வார்த்தையை நினைவுகூறும் போதெல்லாம் சின்ன சிரிப்பை மின்னல் கீற்றுப் போல் உதட்டில் தூவிச் செல்லும் சலனத்துக்கும் இடையே, அவள் மனம், எந்தப் பக்கம் சாய என தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தது.
ஒரு மனம், ‘என்ன ஆச்சு ராது உனக்கு, அதான் வேண்டாம், சரி வராது, வீட்டுக்கு தெரிஞ்சா உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவாங்கன்னு தெளிவா சொல்லிட்டியே… அப்புறம் எதுக்கு சுபி சொன்னதை நினைச்சு ஏமாத்தமா உணர்ற? அவளே தெளிவா சொல்லிட்டாளே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு. இன்னும் என்ன எதிர்பார்க்கிற’ அவளை உள்ளிருந்து தலையில் கொட்ட,
மற்றொரு மனமோ, ‘அதெப்படி பார்த்ததும் புடிச்சு, நான் வேணான்னதும் சரினு விடமுடியும்… இதுவே நான் பிடிச்சிருக்குனு சொன்னதும் பின்னாடி வந்திருப்பாங்க தானே. இப்போ மட்டும் என்னவாம்?’ என முதல் முதலாக அவளுக்கு பிடிவாதத்தை கற்றுக் கொடுத்து கேள்வி மேல் கேள்வி கேட்க, விடை தான் அவளிடமில்லை.
தன் கூச்சத்தை விடுத்து சுபஷ்வினியிடமும் இதைப் பற்றி கேட்க முடியவில்லை ராதாவால்! அவள் இயல்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை. தாழ் போட்ட இதழ்கள் தன் தயக்கம் துறக்க மறுத்தது.
மனம் மட்டும், தானொரு மரம் தாவும் குரங்கென்று நிரூபிக்கும் விதமாக தெளிந்த நீரோடை போலிருந்த அவள் மனதில் கல்லெறிந்து, குழம்பிய குட்டையில் மீன் பிடித்தது.
அது மறுநாளும் தொடர்கதையாக, ராதா அன்றிரவு தூக்கத்தை தொலைத்தாள். விளைவு, எப்போது உறக்கத்திற்குள் ஆழ்ந்தோம் என்பது நினைவில்லாமல் விடிகாலையில் தான் கண்ணயர்ந்த ராதா, காலை அரக்க பறக்க எழுந்து ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக,
அம்பிகா, இளைய மகளை கவனித்துக் கொண்டு இருந்தார்.
அவளை உறுத்து விழித்து, “என்னடி கண்ணெல்லாம் சிவந்திருக்கு, ராத்திரி முழுக்க தூங்கலையா நீ” என்று வினா தொடுக்க, மாற்றுடையுடன் குளியலறைக்குள் நுழையவிருந்த ராதா, பதிலில்லாமல் முழித்தாள்.
“என்னடி, திரு திருன்னு முழிக்கிற, கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லாம என்னத்த மென்னு முழுங்குற… ஏன் கண்ணு சிவந்திருக்கு? ராத்திரி எந்நேரம் தூங்கின” அம்பிகா விடாமல் கேட்க,
முதல் முதலில் தவறு செய்த குற்றக் குறு குறுப்பு. இதயம் தட தடத்தது. பொய் சொல்ல தெரியவில்லை, மெய் சொன்னால் அம்பிகா அவளை அடித்து துவைத்து நெம்மியெடுத்து விடுவார்.
“த…தலைவலி என்னனு தெரியலை. பாரமா இருக்கு, கண்ணெல்லாம் வேற எரியுது” என அவள், அவளின் நிலையை பொத்தம் பொதுவாக சொல்ல
மகளின் முகமும் அதை உண்மையென்று உணர்த்தியதில் சற்று குளிர்ந்த அம்பிகா “முதல்லயே சொல்றதுக்கு என்னடி, இரு கஷாயம் போட்டு கொண்டாரேன். ஸ்கூலுக்கு போக வேண்டியதில்லை, வீட்டிலயே ரெஸ்ட் எடு. உனக்கு பிடிச்ச இடியப்பமும் குருமாவும் செஞ்சு தாரேன், சாப்ட்டு மாத்திரையை முழுங்கி, தூங்கி எழும்பு, எல்லாம் சரியாகிடும்” என்றார்.
மற்றதை விடுத்து ‘ஸ்கூலுக்கு போக வேண்டியதில்லை’ என்பது மட்டும் பூதாகரமாக தோன்ற, “இ…இல்லம்மா, எக்ஸாம்ஸ் வருது, ரிவிஷன் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க, போ…போகாம இருக்க முடியாது” என்றவள் அம்பிகா மேலும் ஏதும் தடுத்துக் கூறினால், நிச்சயம் அதை மறுத்துப் பேசும் தைரியம் இல்லாதவள் குளியலறைக்குள் நுழைந்து தாள் போட்டாள்.
“வர வர சொல் பேச்சு கேக்க மாட்டேங்கற, எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்கிறேன். உன் அக்காக்காரி வரட்டும்” பல்லை நெறித்த அம்பிகா, குளியல் அறை கதவை முடிந்த மட்டும் முறைத்து விட்டு, இடியப்பத்திற்கு மாவை பிழிய சென்றார்.
உள்ளே, மூடிய கதவில் சாய்ந்து நின்ற ராதாவின் மனதில் பலத்த இடியும் முழக்கமும். அதற்கு போட்டியாக உடல் முழுசும் நடுங்கியது. மைதிலி, அம்பிகாவின் மூத்த மகள், ராதாவின் அக்கா, நூறு அம்பிகாவுக்கு சமம். அவளை நினைக்கும்போதே ராதாவுக்கு அடி வயிற்றை பிசைந்தது.
‘இ…இது இந்த உணர்வு உனக்கு தேவைதானா ராதா… நிம்மதியை முழுங்கி ஏப்பம் விட்டுடுமே. பயந்து பயந்து போராட்டமான வாழ்க்கை தானா உனக்கு காலத்துக்கும்’ அவள் மனம், அவளை பற்றி நன்கு தெரிந்து கேள்வி கேட்க,
எச்சிலை கூட்டி விழுங்கினாள் ராதா.
வேண்டாம் வேண்டாம் என்று துரத்த துரத்த வந்து ஒட்டிக்கொண்டு இம்சிக்கும் கள்ளத்தனத்துக்கு பேர் தானே காதல்! அது இந்த ராதாவையும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் கொல்லியாக தாக்கிற்று.
‘உன்னை பிடிச்சிருக்காம்!’ அத்தனை கலவரத்திலும் அவள் காதில் சுபஷ்வினியின் குரல் மயிலிறகால் வருடியது போல் ஒலித்து, அவள் அகத்தில் மத்தாப்பூவை மலரச் செய்தது.
வெட்கமும் கூச்சமும் சரிபாதியாக அவளை வந்து ஒட்டிக்கொள்ள, மெல்ல மெல்ல தலை உயர்த்தியவள், முகம் பார்க்கும் கண்ணாடியில் முதன் முறையாக தன் முகத்தை ரசனையுடன் பார்த்தாள். கைகள் தன்னைப் போல் உயர்ந்து உச்சியிலிருந்து புருவங்களை வரைந்து, கண்களை தீண்டி, நாசியில் பயணித்து கன்னங்களை வருடி, இதழில் இறங்க, உதட்டை பற்கள் சிறைபிடித்தது.
அழகாகத்தான் இருந்தாள். ‘ஹேய் ராது, அழகா இருக்கடி’ என தோழிகள் விழிகளை விரித்து சொல்லும் போதெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை, அதில் அவளுக்கு ஆர்வமும் இல்லை. இன்று தான், அவளே அவளை ரசிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ‘அவன் கண்களுக்கு நான் அழகா தெரிந்தேனாமா…?’ அதி முக்கியமான கேள்வி ஒன்று அவளுள் எழ, அதுவே அவளின் இதயத்தின் இயக்கத்தை பலமடங்கு அதிகரிக்க, கண்களை மூடி நடுங்கும் உள்ளங்கையால் மார்பை அழுத்தி பற்றியவள், அப்போதும் அதன் பட படப்பு குறையாமல் மறுகையால் இன்னும் அழுத்தம் கொடுத்தாள்.
அதற்குள் அம்பிகா பட படவென குளியல் அறை கதவை தட்டி “இன்னும் முடியலையா” என்க,
“ஆங்… இ இதோ” என்றவள் வாளியில் நீர் இறைத்து தலைக்கு ஊற்றினாள். குளிர்ந்த நீருக்கு உடல் நடுங்க, நிமிடத்தில் குளித்து மாற்று உடையில் வெளியே வந்தவள் சீருடைக்கு மாறி, தலைவாரி, மீண்டும் ஒரு தடவை புத்தகங்கள் எல்லாம் பைக்குள் சரியாக இருக்கிறதா என சரி பார்த்து முடிய, தட்டுடன் வந்தார் அம்பிகா.
“வெறும் வயிறா போகாம தின்னு செரிச்சி, மாத்திரை முழுங்கிட்டு போ” என்றார்.
அவசர கதியில் தட்டுடன் அமர்ந்தவளை இரண்டு நிமிடத்திற்கு மேல் நிம்மதியாக உண்ண விடவில்லை அம்பிகா. “ஒன்னுத்துலையும் வேகம் இல்ல” என தன் அர்ச்சனையை தொடங்க, வாய்க்குள் திணித்த உணவு தொண்டைக்குள் சிக்கியது. அதற்கும் பேச்சு வாங்க வேண்டி வருமோ என அவள், தண்ணீரை விழுங்கி உணவை உள்ளே அடைத்து கை கழுவி வர, மாத்திரை அட்டையில் இரண்டை எடுத்து நீட்ட, வாய்க்குள் போட்டு நீரை விழுங்க,
“சண்முகம் அண்ணே வந்தாச்சுடி, வா வா” விரட்டினார்.
உடனே பையை அள்ளி தோளில் போட்டுக்கொண்டு அரக்க பறக்க ஆட்டோவில் ஏறி அமர்ந்த ராதா, வீட்டை தாண்டி கிளம்பியதும் தான் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டாள்.
பெருமலையை தாண்டி வந்த அயர்ச்சி உடலை ஒட்டிக்கொள்ள, மனதின் சஞ்சலம், சரியான உறக்கமின்மை என வெகுவாக சோர்ந்திருந்தாள் ராதா. ஸ்கூலுக்குள் நுழைந்ததும் அந்த இதமான சூழலில் இறுக்கம் தளர்ந்து சொந்தமான இடத்திற்கு வந்து சேர்ந்த நிம்மதி அவளை இலகுவாக்கியது.
வகுப்பறையை நோக்கி நடக்கும் தூரத்தை சுபஷ்வினியை காணும் ஆர்வத்தில் வழமைக்கு மாறான வேகத்தில் கடந்தவள் உள்ளே நுழைய,
வகுப்பில் எப்போதும் சுபஷ்வினி அவள் அருகில் அமர்வது வழக்கம். அன்று அவள் தாமதமாக வந்ததால் பின்னிருக்கையில் மட்டுமே இடம் இருக்க, அது ராதாவின் இலகு தன்மையை சற்றே சோர்ந்து போகச் செய்தது.
அருகில் ரமா அமர்ந்திருந்தாள். வெளியூரில் இருந்து மாற்றலாகி வந்திருந்தாள். ‘அப்பா பேங்கில் வேலை, வருஷத்துக்கு பாதி நாள் இப்படி தான்’ என்று அவள் யாரிடமோ சொல்ல கேட்டிருந்தாலும் அவளாக சென்று இதுவரை பேசியதில்லை ராதா. அவளுக்கு அப்படி எதுவும் இல்லை போலும்!
“ஹாய்” என்று மலர்ந்து சிரித்தாள் ரமா.
பதிலுக்கு இதழை பிரித்து வலுக்கட்டாயமாக சிரிப்பொன்றை சிந்திய ராதா, முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் சுபஷ்வினியை பார்க்க, அவளும் “என்னடி இன்னிக்கு லேட், வரமாட்டியோன்னு நினைச்சேன்!” என்றவள் வகுப்பாசிரியர் வரவும் திரும்பிக் கொள்ள, ராதாவுக்கு தான் அன்று வகுப்பே பிடிக்கவில்லை.
“எக்ஸ்ட்ரா பென் இருக்கா?”
“போர்ட் வெளங்கல, உன் நோட்டை கொஞ்சம் காட்டுறியா, ப்ளீஸ்”
“இது புரியலை, உனக்கு புரிஞ்சிடுச்சுன்னா எனக்கு கொஞ்சம் க்ளாரிஃபை பண்றியா…” ரமா, ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் கேள்விகளாவது கேட்டிருப்பாள். அவள் வாயோயாமல் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் ராதாவிடம் மௌனம் மட்டுமே.
சல சலவென பேசிக்கொண்டே இருந்தவளை பார்த்து “கொஞ்சம் வாயை மூட்றியா” என கத்த வேண்டும் போல் இருக்க, அவளது இயல்பு அதற்கு தடை விதித்தது.
மதிய இடைவேளை வரை பொருத்துக் கொண்டவள் டிஃபன் பாக்ஸுடன் வழக்கமாக அமரும் வாகை மரத்தடியில் சென்று ஒதுக்குப்புறமாக அமர்ந்து கொண்டாள்.
என்னவோ அன்று நாளே சரியில்லை போலும்! மனச்சோர்வும் உடற்சோர்வும் வழக்கத்திற்கு மாறாக அவளை பந்தாட, பிரித்த உணவை உண்ண மறந்து அசதியில் கண் சாய்த்தவளை தொட்டு எழுப்பிய சுபஷ்வினி, அவள் கொண்டு வந்த உணவை எடுத்து ஊட்டி விட, வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.
“எதையும் வாயை திறந்து சொல்ல மாட்டியா ராது? உன்கிட்ட நானா வந்து தான் கேக்கனுமா, ஏன் நீயா என்கிட்ட வந்து சொல்ல மாட்டியா உன் மனசுல எது ஓடுது, என்ன தோணுதுன்னு… நமக்குள்ள என்னடி ஈகோ வேண்டி கெடக்கு…” என்றவளின் உரிமையான அதட்டலில் நட்புக்கும் மேலானதொரு வாஞ்சை இருந்தது.
வாயில் உணவு தொண்டைக்குள் இறங்க மறுக்க, சுபஷ்வினி நீரை எடுத்து நீட்டவும் பருகிய ராதா, அதற்கு மேல் தாளமாட்டாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.
மௌனமாக சாய்ந்து கொண்டவளை அதே மௌனத்துடன் அரவணைத்து கொண்டாள் சுபஷ்வினி.
அவள் கண்களில் பொங்கிய நீர் சுபஷ்வினியின் யூனிஃபார்மை தாண்டி அவள் தோளில் இறங்கியது. ஒரு கை உணவில் இருக்க, மறுகையால் அவள் முதுகை தடவிக் கொடுத்தாள்.
“ப…ப பயமா இருக்கு சுபி, வ்வீட்டை… வீட்டை நினைச்சாலே மூச்சடைக்குது. அன்னைக்கு நா…நான் சொன்னது அத்தனையும் உண்மை டி, ஆனா அதே உறுதி இப்பவும் இருக்கான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை, சொல்லவும் தெரியலை. வேணும்னு மனசு சொல்லுது வேணாம்னு மூளை மறுக்குது… என்ன பண்ணனு தெரியாம அல்லாடுறேன் டி” என்றவளின் கேவலில் சுபஷ்வினியின் கண்களும் கலங்கியது.
‘தப்பு பண்ணிட்டேனா…’ என்னும் கேள்வி பூதாகரமாக தோன்ற, ரமணா சொன்னது ஞாபகம் வந்தது. ‘அவனுக்கு அவள் தான்னு இருந்தா அதை யாராலும் மறுக்க முடியாது’ என தனக்குள் பதிய வைத்து கொண்ட சுபஷ்வினி “இங்க பாரு ராது, உன் மனசு என்ன சொல்லுதோ அதைக் கேளு. அவனுக்கு நீதான்னு இருந்தா ஒருக்காலும் உங்களை பிரிக்க முடியாது, அவனும் அப்பிடித்தான் நம்புறான். நீ வீணா மனச போட்டு குழப்பிக்காத… என்ன பிரச்சினை வந்தாலும் அவன் பார்த்துப்பான்” என்றவள் கடவுடளை குறிப்பிட்டாளா அவள் மாமனை குறிப்பிட்டாளா என புரியாத போதும்
அதுவரை மனதை அழுத்திப் பிடித்து வைத்திருந்த கண்ணுக்கு புலப்படாத எதுவோ ஒன்று பட்டென்று உடைந்து சிதறியதில், வறண்ட நிலத்தில் மழை நீர் பட்டுத் துளிர்த்த செடியாக, அவள் மனதில் காதலின் விதை மிக மிக ஆழமாக வேர் விட தொடங்க, அழுகை கடந்த சிறு சிரிப்பு, ராதாவின் முகத்தை அணிகலனாக அலங்கரித்தது.