அவர்கள் கிளம்பவும் செய்திருந்த பாயாசத்தினை ஆகர்ஷனுக்கும், ஷ்யாமளா, கிருஷ்ணகுமாருக்கும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் பிரத்யுக்ஷா.
கிளம்பும் முன்னரே அத்தனை முறை தன்னை கண்ணாடியில் சரிபார்த்துக்கொண்டாள் அவள்.
“சேரி கட்டலாமா?…” என காலை அதில் ஒன்று எடுத்து தன் மேல் வைத்து பார்த்துவிட்டு,
“ம்ஹூம் வேண்டாம். எப்பவும் நார்மலா குர்தி செட்ல தான போவோம். வித்தியாசமா இருக்கும்…” என அதனை தவிர்த்தாள்.
“அதுக்குன்னு சாதாரணமாவா போறது?…” என தலையை உடைத்தவள் குர்தி, லாங் ப்ராக் டைப், சுடிதார் என்று ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துவிட்டு எல்லாவற்றிலும் ஒன்றை தேர்வு செய்து இறுதியாய் ஒரு சாராரா டைப் உடையை தேர்வு செய்துகொண்டாள்.
அதிகமாய் ஆடம்பரமாக இல்லாத காட்டனில் சிக்கன்காரி வொர்க்கில் எளிமையும், பாந்தமுமான அந்த ஆடையை தேர்வு செய்துகொண்டு கிளம்பிவிட்டாள்.
எப்போதும் போல போனியில் அடக்கும் கூந்தலை க்ளிப் செய்து விரியவிட்டிருந்தவள் தன்னை நன்றாய் பார்த்து திருப்தியான பின்னர் தான் வீட்டிலிருந்தே கிளம்ப ஆயத்தமானாள்.
கிளம்பும் தருவாயில் தான் ராம்நாத் அழைத்ததும், ஸ்ரீவத்சன் அழைத்து அவர்கள் வருவதாய் கூறியதும்.
அப்போதும் ஸ்ரீவத்சனிடம் சொல்லிவிட்டு தான் ராம்நாத் அங்கே வரவே செய்தார்.
‘திருந்தவே மாட்டாங்க’ என்று தான் எரிச்சலானது அவளுக்கு அவர் செய்ததில். ஆனாலும் காத்திருந்து வரவேற்று கவனித்து அனுப்பியும் வைத்து இதோ கிளம்பிவிட்டாள்.
விழிகள் துறுதுறுவென்று இங்குமங்குமாய் சுற்றி திரிய இதழ்களில் புன்னகை மலர்ந்தே இருந்தது.
எப்போதும் சந்தோஷத்துடன் தான் அவளின் முகம் இருக்கும். இன்று அதனையும் தாண்டிய ஒன்று.
ஒருவழியாய் மருத்துவமனையும் வந்துவிட்டாகிற்று. நேராக ஷ்யாமளாவின் அறைக்கு சென்றவள் தான் கொண்டுவந்த பாயாசத்தை வைத்துவிட்டு தான் வேலை செய்யும் தளம் நோக்கி விரைந்தாள்.
வந்துவிட்டதாய் மீண்டும் ஒரு குறுஞ்செய்தியை ஆகர்ஷனுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் வரும்வரையில் வேலையில் வந்தமர்ந்தாள்.
“என்ன பிரத்யு இன்னைக்கு ஸ்பெஷலா இருக்கியே?…” என உடன் பணிபுரியும் சாக்ஷி கேட்க,
“பார்த்தா அப்படி தெரியுதா?…” குறும்புடன் பிரத்யுக்ஷா.
“ஆமா…” என்றாள் சாக்ஷி.
“அப்போ ஸ்பெஷல் தான். இதோ நீ கண்டுபிடிச்சிட்டியே…” என்று கண் சிமிட்ட,
சிரிப்புடன் வேலைகள் நடக்க ஆகர்ஷனிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்க, ‘ஹாஸ்பிட்டல் வந்துட்டேன். இன்னும் பிப்டீன் மினிட்ஸ்’ என்று வெள்ளை தாமரை பூங்கொத்தை படமெடுத்து அவளுக்கு அனுப்பியிருந்தான் ஆகர்ஷன்.
“இன்னுமா?…” சத்தமாய் சொல்லிவிட்டவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“என்னாச்சு?…” என்ற சாக்ஷிக்கு மறுப்பாய் தலையசைத்து தோளை குலுக்கிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
எப்போதடா பதினைந்து நிமிடம் கரையுமென்று பார்த்திருக்க அவளின் அலைபேசிக்கு அடுத்த அழைப்பு.
ஆகர்ஷன் தான் என்று நினைத்து பரபரப்பாய் எடுத்து பார்க்க அழைத்திருந்தது கௌசல்யா.
“அத்தை…” என்றதுமே,
“பிரத்யு மாமா. மாமாவுக்கு….” என அழுதுகொண்டே கௌசல்யா பேச,
“மாமா நெஞ்சுவலின்னு இங்க தான் நீ இருக்கற ஹாஸ்பிட்டலுக்கு…” என்று சொல்லிக்கொண்டிருக்க அதே பதட்டத்துடன் எழுந்தவள்,
“சாக்ஷி பார்த்துக்கோ, இப்ப வந்திடறேன்….” என்று விவரம் சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்தாள்.
அவள் கீழே தரை தளத்திற்கு வர கௌசல்யா வந்துகொண்டிருந்தார். ஸ்ட்ரேக்சரில் கிடத்தப்பட்ட நிலையில் ராம்நாத்.
“பிரத்யு…” என கண்ணீருடன் கௌசல்யா அவளை பார்த்ததும் இன்னும் கதற,
“ஒன்னும் இல்லை அத்தை. பதட்டப்படாதீங்க. பயப்படாதீங்க…” என்றவள் துரிதமாய் செயல்பட்டு அவரை அனுமதிக்க ஏற்பாடு செய்து என்று சுழல கௌசல்யா அழுதுகொண்டே நின்றார்.
ராம்நாத்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை துவங்கி இருக்க,
“எல்லாமே பெஸ்ட் டாக்டர்ஸ். நீங்க பயப்படாம இருங்க த்தை…” என்று சொல்லிக்கொண்டிருக்க ஆகர்ஷனிடம் இருந்து அழைப்பு.
“பிரத்யு…” என்றதும்,
“நான் இங்க தேர்ட் ஃப்ளோர்ல இருக்கேன் சீனியர். இங்க என் மாமாவுக்கு அட்டாக்…” என்று சொல்ல இரண்டாம் அழைப்பில் ஸ்ரீவத்சன்.
“டாடி கால் பன்றாங்க…” என்று அவனின் அழைப்பை துண்டித்துவிட்டு அவரிடம் பேச துவங்க ஆகர்ஷன் அங்கே கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு தகவல் சொல்லிவிட்டு கௌசல்யாவின் அருகில் பிரத்யுக்ஷா அமர்ந்திருக்க,
“பிரத்யு…” என்றழைத்தார் ஷ்யாமளா.
அந்த தளத்தை பார்வையிட வந்திருந்தவர் தூரத்தில் பிரத்யுக்ஷா இருக்க கண்டு அருகே வந்து அழைக்கவும்,
“ஆன்ட்டி…” என்று அவள் எழ, அவளோடு கண்ணீருடன் நிமிர்ந்து யார் என்று பார்த்தார் கௌசல்யா.
“என்னம்மா, யாருக்கு என்னாச்சு? இவங்க…” என்ற ஷ்யாமளா அப்போதுதான் கௌசல்யாவை கூர்ந்து கவனித்தார்.
“இவங்க…” என மீண்டும் ஷ்யாமளாவின் பார்வை கூர்மையடைய உடலெல்லாம் நடுக்கம்.
உயிர் பதற தான் காண்பது அவரை தானா என்பதை போல கண்கள் அகல பார்க்க கௌசல்யாவுக்குமே அதே அதிர்வு தான்.
ஷ்யாமளாவின் முகத்தை ஆழமாய் பார்த்தார். ஆழ்ந்து பார்த்தார். தொண்டையில் நீர் வற்றி போக பார்த்தார் கௌசல்யா.
“இவங்க என்னோட அத்தை. என் தாய்மாமாவுக்கு தான் ஹார்ட் அட்டாக் ஆன்ட்டி…” என அவர்களின் அதிர்ச்சியை புரியாமல் பார்த்தபடி பிரத்யுக்ஷா கூற,
“கௌசல்யா…” என்றார் ஷ்யாமளா.
ஷ்யாமளா கேட்டதும் இன்னும் அழுகையுடன் தள்ளாடும் உடலோடு கௌசல்யா ஆமாம் என தலையசைக்க, அதேநேரம் அங்கே வந்துவிட்டான் ஆகர்ஷன்.
பிரத்யுக்ஷாவையும் ஷ்யாமளாவையும் பார்த்ததும் கண்டுகொண்டவனால் அவர்கள் மறைத்து நின்ற பெண்மணியை கவனிக்கமுடியவில்லை.
“அம்மா…” என்றவன் அழைப்பில் முதலில் பிரத்யுக்ஷா திரும்ப, ஷ்யாமளா அசையாது நின்றுவிட்டார்.
“ம்மா…” என்றான் மீண்டும் ஆகர்ஷன்.
அவன் நெருங்கி வர வர ஷ்யாமளா கௌசல்யாவை விட்டு விலகி திரும்பி மகனை பார்க்க, ஆகர்ஷனின் நடை அப்படியே நின்றது.
“ம்மா…” என்ற அழைப்பு இப்போது சத்தமின்றி, உயிர் இன்றி, உணர்வின்றி வர கௌசல்யாவின் விழிகளில் அசைவில்லாது போனது ஆகர்ஷனை கண்டதும்.
“ஆர்ஷ்….” என்ற ஷ்யாமளா கண்ணீருடன்,
“ஆகர்ஷன்….” என்றழைத்துவிட்டு மகனை பார்த்தபடியே நிற்க, அவர் சொல்லிய பெயரை கேட்டு வேரோடு சாய்ந்தார் கௌசல்யா.
ஒருநொடியில் எல்லாம் நிகழ்ந்திருக்க, நிற்கமுடியாமல் கௌசல்யா நெடுமரமாய் அப்படியே சாய்த்துவிட அவரை சுதாரித்து பிடித்துக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
அவள் கௌசல்யாவை தாங்கவும், ஷ்யாமளா சேர்ந்து உதவிக்கு வரவும் இன்னொருவனும் வந்துவிட்டான் தாயை தாங்கி பிடிக்க.
“ம்மா…” என்றவனின் அழைப்பில் கௌசல்யா ஆகர்ஷனை பார்த்துக்கொண்டே, தன்னை பிடித்திருந்த மகனை உணர்ந்து,
“கௌரவ்…” என்ற வார்த்தையோடு மொத்தமாய் மூர்ச்சையடைந்திருந்தார்.
“ம்மா…” என மீண்டும் சத்தமின்றி அழைத்த ஆகர்ஷன் உள்ளம் நொறுங்க மடிந்து மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.