ஆகர்ஷனின் பார்வை சரிந்திருந்த கௌசல்யாவையும், ஷ்யாமளாவையும் மாற்றி மாற்றி பார்க்க,
“ஆர்ஷ்…” என தன் அருகில் வரும்படி ஷ்யாமளா தலையசைக்க மறுப்பாய் தலையசைத்தான் ஆகர்ஷன்.
விழிகளில் மிதமிஞ்சிய உயிர் வலி. எதற்கு அஞ்சி, எதற்காக, யாருக்காக அந்த நாட்டை விட்டே சென்றிருந்தானோ அவர் இதோ அவரின் உறவுகள் சூழ.
கௌரவ்வின் ‘அம்மா’ என்னும் அழைப்பும், தீனமான குரலாக இருந்தாலும் அவர் அவனை அழைத்த ‘கௌரவ்’ என்னும் அழைப்பும், அதில் தேங்கி நின்ற சொந்தமும் இவனை உயிரோடு கொன்றது.
யாரோ அவனின் குரல்வளையை இறுக்கி பிடிப்பதை போல மூச்சிற்கு சிரமப்பட்டவன் விழிகளில் நீர் நிறைந்துவிட,
“ஆர்ஷ்…” என சட்டென எழுந்து வந்த ஷ்யாமளா,
“அம்மா இருக்கேன் ஆர்ஷ். அம்மா…”
“ம்மா…” என்றவன் கண்ணீரோடு அவரை அணைத்துக்கொள்ள,
“நீ வா. அவங்களுக்கு பர்ஸ்ட் என்னன்னு பார்ப்போம்…” என்று சொல்லி மகனின் கண்ணீர் துடைத்துவிட்டு திரும்பி கௌசல்யாவிடம் வந்தார் ஷ்யாமளா.
கௌரவ்விற்கு தன் தாய், பிரத்யுக்ஷா இருவரையும் தவிர்த்து மற்றவர்கள் யார் என்று புரியவில்லை.
அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் என்று மட்டும் உடையை வைத்து கண்டுகொண்டவன்,
“பிரத்யுக்ஷா…” எனும்பொழுதே,
“பிரத்யு, நர்ஸ், வார்ட் பாய் கூப்பிடு. ஸ்ட்ரேக்சர் கொண்டுவர சொல்லு. க்விக்…” என சொல்லிவிட்டு கௌசல்யாவின் நாடித்துடிப்பை கவனித்தார்.
“பல்ஸ் ரேட் ஓகே தான். நீங்க இவங்களை உட்கார வைங்க…” என்று கௌரவ்விடம் சொல்ல,
“எங்க போகனும் டாக்டர்?…” என்ற கௌரவ் கௌசல்யாவை தன் கைகளில் ஏந்திக்கொண்டான்.
ஏன் என்றே தெரியாமல் அவனின் பார்வை மண்டியிட்டு அமர்ந்திருந்த ஆகர்ஷனை கவனிக்க,
“என்னோட வாங்க…” என ஷ்யாமளா சொல்ல, கிருஷ்ணகுமாரும் வந்துவிட அங்கிருந்த இன்னொரு அறையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை துவங்கியது.
கௌரவ் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை பிரத்யுக்ஷாவினால்.
“முதல்ல என்ன ப்ராப்ளம்ன்னு தெரிஞ்சுப்போம். அப்பறம் சொல்லலாம்…” என்று சொல்லிவிட்டு முடிந்தது என்பதனை போல அவளை தவிர்த்துவிட்டு ராம்நாத்தை அனுமதித்திருந்த அறையின் முன்பு வந்து நின்றான்.
அவனை பார்த்தவளுக்கு அப்படி இருக்க முடியவில்லை. தன் கைப்பேசியில் உடனடியாக ஸ்ரீவத்சனுக்கும், விக்ரமிற்கும் அழைத்து சொல்லிவிட்டாள்.
“ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நார்மலாகிடுவாங்க…” என பிரத்யுக்ஷாவும் கூற இருவரையும் பார்த்தவன்,
“அதிர்ச்சியாகற அளவுக்கு இங்க என்ன நடந்தது?…” என்றான் கௌரவ்.
ஷ்யாமளா என்ன சொல்வதென்று தெரியாமல் பார்க்க, பிரத்யுக்ஷா திகைத்தாள் இந்த நேரத்திலும் இவன் என்ன யோசிக்கிறான் என்று.
“புரியலையா? என்கிட்ட அப்பாவுக்கு இப்படின்னு சொல்லும்போது அழுது பயந்தாங்க. இந்த ஹாஸ்பிட்டல் வந்திருக்கேன்னு சொல்லும் போதும் கூட ஓகே. அப்பாவுக்கும் இன்னும் எதுவும் சொல்லலைன்னு பிரத்யுக்ஷா சொன்னா. அதான் என்ன பிரச்சனைன்னு கேட்டேன். எதுக்காக அதிர்ச்சி?…”
மொத்தமாய் இத்தனை கேள்விகளையும் அவன் கேட்க பிரத்யுக்ஷாவிற்கும் அதே இருந்தாலும், அவளுக்குமே தெரியாத ஒன்றில் அவள் என்ன சொல்ல முடியும்?
“நீ சொல்லு…” என்றான் பிரத்யுக்ஷாவிடம்.
அவன் கேட்கவும் விழித்தவள் ஷ்யாமளாவை பார்க்க கௌசல்யாவிடம் மெல்லிய அசைவு.
குரல் உள்ளடங்கி இருந்தாலும் உதடுகள் என்னவோ ஒன்றை சிரமத்துடன் உச்சரித்தது.
“என்ன ஆன்ட்டி? செலேய்ன் போய்ட்டிருக்கு. இன்னும் மயக்கம் தெளியலை. ஆனா…” என்ற பிரத்யுக்ஷா ஷ்யாமளாவிடம் கேட்க கௌரவ் தாயின் அருகில் வந்து நின்றான்.
அவனின் செவியை அடைந்த அந்த வார்த்தையை அவரின் உச்சரிப்பை கூர்ந்து கவனித்துவிட்டு அவர் முகம் பார்க்க மூடிய விழிகளில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.
இத்தனை வருடத்தில் அவர் அழுது அவன் பார்த்ததே இல்லை. ஏன் கண்கள் கலங்கி கூட கண்டதில்லை.
அப்படியிருக்க இந்த அழுகையும், கண்ணீரையும், தவிப்பும் அவர் உச்சரிக்கும் பொழுது வெளிப்படும் வேதனையும் கௌரவ்விற்கு பயத்தை உண்டாக்கியது.
“கிருஷ்ணா…” என்றான் கௌரவ்.
“என்ன?…” பிரத்யுக்ஷா கேட்க,
“கிருஷ்ணான்னு சொல்றாங்க…” என்றான் மீண்டும்.
அவன் சொல்லியதை கேட்ட ஷ்யாமளாவின் விழிகள் கட்டுப்படுத்தியிருந்த கண்ணீரை கொட்ட ஆரம்பிக்க மெல்லிய கேவல் அவரிடம்.
“இவங்க தான் அத்தையோட மூத்த மகன். இன்னும் ரெண்டுபேர் இருக்காங்க. வந்திருவாங்க…” என்று சொல்ல கிருஷ்ணகுமார் வந்துவிட்டார்.
“பேஷண்ட் கூட வந்ததவங்க எங்க?…” என்ற கிருஷ்ணகுமார்,
“பிரத்யு நீ அவங்க பேமிலிக்கு இன்பார்ம் பண்ணிட்டியா?…” என்றார்.
“கிருஷ்ணா அவர் எப்படி இருக்கார்?…” என்றார் ஷ்யாமளா.
“அங்கிள், இவர் தான் ராம்நாத் மாமாவோட பையன்…” என்று பிரத்யுக்ஷா அவரிடம் கௌரவ்வை அறிமுகம் செய்து வைக்கவும், தான் கௌசல்யாவையும் அவனையும் கவனித்தார்.
“ஷ்யாமா…” கிருஷ்ணகுமாருமே கலங்கி போயிருக்க,
“அப்பா எப்படி இருக்காங்க டாக்டர்?…” என்றான் கௌரவ்.
அவனை, கௌசல்யாவை வந்ததுமே அவர் கவனிக்கவில்லை. எமர்ஜென்ஸி என்று அழைப்பு வந்ததுமே ஷ்யாமளா சொல்லியதன்பெயரில் அவரும் மற்ற மருத்துவர்களும் ராம்நாத்தை கவனிக்க சென்றுவிட்டதில் கவனம் இங்கில்லை.
இப்போது நர்ஸ் ஒருவர் இவர்கள் இங்கே இருப்பதை கூறியதும் நேராக கிருஷ்ணகுமார் வந்துவிட்டார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.