உண்மைக்கும் அவன் அல்லாடி தான் போனான். ஒரே நேரத்தில் தாய் தந்தை இருவருமே இப்படி இருக்க அவனை நிதானத்தில் வைக்க சற்றே சிரமமாக தான் இருந்தது.
“கௌரவ் நீங்க ஓகே தானே?…” என்று அவன் அமர்ந்த நிலை கண்டு கிருஷ்ணகுமார் கேட்க கௌரவ்வின் விழிகள் கலங்கி சிவந்திருந்தது.
“ஹாங், ம்ம்ம்…” என்று ஆழ்ந்த மூச்செடுப்புடன் தன் மனதை திடப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தவன்,
“ப்ரசீட் பண்ணுங்க. என் சைன் வேணும் இல்லையா?…” என்று கேட்க பிரத்யுக்ஷா அவனை தான் பார்த்தபடி இருந்தாள்.
நிச்சயம் இந்த சூழ்நிலையில் வேறு யாராக இருந்திருந்தாலும் கொஞ்சமேனும் தடுமாறி தவித்திருப்பார்கள்.
லேசாய் குனிந்தான். மூச்செடுத்தான். உடனடியாக நிமிர்ந்து திடமாய் எதிர்கொண்டுவிட்டான் என்று ஆச்சர்யத்துடன் பார்க்க,
“என் பிள்ளை. கிருஷ்ணா. அவ்வ,, அவன் குழந்தை. எங்கிட்ட தாங்க. வேணாம் ம்மா வேணாம்…” என கௌசல்யாவிடம் சப்தம்.
அனைவரின் கவனமும் அங்கே குவிய அவரின் வார்த்தைகள் கோர்வையின்றி அழுகையுடன் வெளிவர,
“ம்மா, நான் இங்க இருக்கேன்…” என்று கௌசல்யாவின் கையை பிடித்தான் கௌரவ்.
“கிருஷ்ணா….” என்று மீண்டும் மீண்டும் சொல்லியவரின் உடல்நிலையில் மாற்றம் மூச்சு சீரற்று பெரிதும், சிறிதுமாய் குறைய,
“காட், ஆன்ட்டி அத்தைக்கு பல்ஸ் அப்நார்மல்….” என்ற பிரத்யுக்ஷா பதறி கௌசல்யாவின் இன்னொரு கையை பிடித்து பார்த்து சொல்ல, சடுதியில் அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு கலவரம்.
கொஞ்சம் கொஞ்சமாய் கௌசல்யாவின் நாடித்துடிப்பு குறைய துவங்க அவரையும் அவசரசிகிச்சை பிரிவிற்கு மாற்றி அதற்கான சிகிச்சையை கவனித்தனர்.
“என்ன கிருஷ்ணா, ஏன் ஏன் இப்படி? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு இவங்களை பார்க்கனுமா நான்? இப்ப அண்ணியோட நிலைமை. என்னால முடியலையே. என் ஆகர்ஷன். என் மகன். அவன் என்ன பாடுபடுவான்?..” என்று ஷ்யாமளா உடைந்துவிட்டார் கிருஷ்ணகுமாரிடம்.
“ஷ்யாமா, காம் டவுன். காம்டவுன்…” என்ற கிருஷ்ணகுமார்,
“நீ இங்க இரு ஷ்யாமா. நான் போய் ஆகர்ஷனை பார்க்கறேன்…” என்று சொல்லிவிட்டு கௌரவ்விடம் திரும்பியவர்,
“ஒன்னும் பயப்பட வேண்டாம் தம்பி. எல்லாம் சரியாகிடும். இப்ப வந்திடறேன். அப்பறம் உங்கப்பாவுக்கு சர்ஜரிக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடறேன்…” என்று சொல்லி செல்ல கௌரவ் ஷ்யாமளாவிடம் திரும்பினான் அவர் சென்றதும்.
“அண்ணின்னா? என் அம்மாவா? அம்மாவையா அண்ணின்னு சொன்னீங்க?…” என கத்தியின் கூர்மையை போன்ற வார்த்தைகள் அவனிடமிருந்து வந்தது.
“ஆன்ட்டி ப்ளீஸ், என்ன நடக்குது? நீங்க எங்களுக்கு தெரிஞ்சவங்களா? சொந்தமா?…” என்றாள் பிரத்யுக்ஷா.
ஷ்யாமளாவால் உண்மையை சொல்லவும் முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை.
கௌரவ், பிரத்யுக்ஷா நின்றதை பார்த்தவருக்கு மறைக்கவும் கூடும் என்று தோன்றவில்லை.
“எல்லாம் முடியட்டும். அவங்க நல்லபடியா எழுந்து வரட்டும். இதை நாம அப்பறம் பேசலாம்…” என கண்ணீரை துடைத்துவிட்டு அங்கிருந்து செல்லவே பார்த்தார் ஷ்யாமளா.
“ஆன்ட்டி ப்ளீஸ் நில்லுங்க. என்னவோ இருக்கு. எனக்கு பயமா இருக்கு. உங்க பிள்ளை…” என்ற பிரத்யுக்ஷா கௌரவ்வை பார்த்துவிட்டு,
“நான் பேசிட்டு சொல்றேனே. நீங்க…” என்று அவனை கிளம்பும்படி சொல்லும் முன்,
“ஷட்அப்…” என்றான் கௌரவ்.
அவனின் அதட்டலில் பிரத்யுக்ஷா உடல் தூக்கிவாரி போட அவனை திடுக்கிட்டு பார்க்க அவனின் பார்வை இப்போது ஷ்யாமளாவிடம்.
“டாக்டர், இது உங்க ஹாஸ்பிட்டலா இருக்கலாம். ஆனா இங்க வந்த பின்னாடி தான் என் அம்மாவுக்கு இப்படி ஆகியிருக்கு. அம்மா சொன்ன கிருஷ்ணா, இப்போ போனாரே கிருஷ்ணா அவரா?…” என கேட்க,
“என்ன பேசற? அந்த கிருஷ்ணா…” என்றவர் வாயடைக்க,
“அதைத்தான் சொல்லுங்கன்னு சொல்றேன். யார் கிருஷ்ணா? கிருஷ்ணான்னா இப்போ போனாரே அவரை நீங்க அப்படித்தானே கூப்பிட்டீங்க…” என்று அவன் அழுத்தமாய் கேட்க அதில் உண்மை வந்தே ஆகவேண்டும் என்பதை போலிருந்தது.
“ட்ரீட்மென்ட்க்கு வந்திருக்கீங்க. அதை பாருங்க. இப்ப நகர்ந்து நில்லுங்க…” என்று ஷ்யாமளா அந்த அறையிலிருந்து கிளம்ப பார்க்க,
“முடியாது….” என பிடிவாதமாய் நின்றவன்,
“என்னோட அம்மா இத்தனை வருஷத்துல அழுது நான் பார்த்ததில்லை. இன்னைக்கு பதறி, அழுது, மயங்கி, தன்னிலை மறக்கற அளவுக்கு போனாங்கன்னா. எனக்கு தெரியனும். சொல்லுங்க…” என்று நின்றவன்,
“இப்போ நீங்க சொல்லியே ஆகனும்….” என்றான் விடமுடியாது என்பதை போல.
“இந்த கிருஷ்ணாவை காப்பாத்த தான் நீங்க எதுவும் சொல்லலையா?…” என்றும் வேறு அவன் கேட்க,
“என்ன பேசறீங்க நீங்க?…” என்று பிரத்யுக்ஷா சத்தம் போடும்பொழுதே,
“என்னோட அண்ணா தான் கிருஷ்ணா. போதுமா. உன் அம்மா சொல்ற கிருஷ்ணா என்னோட அண்ணா. என்னோட கூடப்பிறந்த அண்ணா கிருஷ்ணக்குமார். போதுமாப்பா…” என்றவர் மடங்கி அங்கிருந்த சேரில் அமர்ந்துவிட்டார்.
“ப்ளீஸ் ப்பா. புரிஞ்சுக்கோ. இத்தனை வருஷத்துக்கு அப்பறம்….” என்றவரை பார்த்து ‘இல்லை’ என்பதை போல தலையசைத்தவன்,
“நான் வரும்போது அம்மான்னு ஒருத்தர் உங்க முன்னாடி நின்னாரே. அது யார்?…” என அடுத்ததாய் கேட்க ஷ்யாமளாவிற்கு இனி எதையும் மறைக்க இயலாது என்று தோன்றியது.
ஆனால் அவனிடம் சொல்லவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. சொல்ல கூடாதென்று மனதை திடப்படுத்திக்கொண்டவர் அதைவிட பிடிவாதமாய் மறுப்பாய் தலையசைத்தார்.
“இதுக்குமேல சொல்ல எதுவும் இல்லை. நானுமே இங்கயே இருக்கறேன்…” என்று அவரும் கை கட்டி அமர்ந்துவிட கௌரவ் முகத்தில் கடுமை.
“ப்ளீஸ், நீங்க போய் மாமாவை பாருங்க. இப்பவே ஏன் இவ்வளோ பிடிவாதம்?…” என்று பிரத்யுக்ஷா சொல்ல சிலநொடிகள் ஷ்யாமளாவை வெறித்து பார்த்தான் கௌரவ்.
கௌசல்யாவின் அருகே சென்றவன் அவரை நின்று பார்த்துவிட்டு மற்ற இருவரின் முகம் பாராமல் கதவை திறந்துகொண்டு வெளியேறினான் வேகமாய்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.