“என்ன ஆன்ட்டி என்ன நடக்குது இங்க? அத்தையை எப்படி தெரியும் உங்களுக்கு? என்கிட்டயாவது சொல்லுங்க ப்ளீஸ்…” என்று பிரத்யுக்ஷா கேட்க,
“கதவை அடைச்சிட்டு வா பிரத்யு…” என்ற ஷ்யாமளா கௌசல்யாவின் அருகில் வந்தமர்ந்தார்.
“எப்பவுமே உங்களுக்கு கஷ்டம் தான் இல்ல அண்ணி?…” என்று அவரின் கையை லேசாய் பற்றிக்கொண்டவர்,
“நான் அண்ணின்னு கூப்பிட்டா பதறிடுவீங்களே, பெரியவங்க அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்லி. உங்களோட காலம் முழுக்க சேர்ந்து வாழ எங்களுக்கு குடுப்பினை இல்லாம போச்சே….” என்று சொல்ல பிரத்யுக்ஷா அதனை கேட்டபடி வந்துவிட்டாள்.
“என்ன சொல்றீங்க ஆன்ட்டி?…” என அவள் வரவும்,
“இவங்க கௌசல்யா. கௌசல்யா கிருஷ்ணக்குமார். ஆகர்ஷனோட அம்மா…” என அலுங்காமல் குலுங்காமல் பெரும் பூகம்பத்தை பிரத்யுக்ஷாவின் மனதில் உண்டாக்கிவிட்டார் ஷ்யாமளா.
“ஆன்ட்டி…” நம்பமுடியாமல் அவள் அதிர்ந்து பார்க்க,
“என்னன்னு சொல்லுவேன் பிரத்யு. நர்சிங் முடிச்சிட்டு என் அண்ணா வொர்க் பண்ணின ஹாஸ்பிட்டல்ல தான் வேலை பார்த்தாங்க. ரொம்ப பிடிச்சு அம்மாட்ட சொன்னப்போ என் அம்மா ஒத்துக்கலை. அண்ணி வீட்டுலையும் ஒத்துக்கலை…” என்றவர்,
“அவங்களை விட நான் வயசு ஜாஸ்தின்னு என்னை அண்ணின்னு சொல்லாம கௌசின்னு கூப்பிட சொல்லுவாங்க. ரொம்ப சாஃப்ட். எல்லாத்துக்கும் பயப்படுவாங்க….” என்றார் வேதனையுடன்.
“அந்த பயம் தான் இந்தளவுக்கு வந்திருக்கு. யாரும் ஒத்துக்கலை. கல்யாணம் பண்ணிட்டு வேற ஊர்ல இருந்தாங்க. எனக்கும் அண்ணாவுக்கு முன்னாடியே அப்போ கல்யாணம் முடிஞ்சிருந்தது பிரத்யு. எனக்கு அண்ணியை பிடிச்சாலும் அம்மாவை மீறி எங்களால எதுவும் செய்ய முடியலை…”
“ஆகர்ஷன் பிறந்தப்போ தான் போய் பார்க்க போனோம். அதுவும் என் அம்மாவுக்கு தெரியாம. ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அண்ணான்னா அவங்களுக்கு உயிர்ன்னு சொல்றதா, இல்லை அண்ணாக்கு எல்லாமே அவங்க தான்னு சொல்றதா என்னவோ. மொத்த வாழ்க்கைக்குமான சந்தோஷத்தை அந்த கடவுள் அவங்க வாழ்ந்த சொற்ப நாட்கள்ல அள்ளி குடுத்துட்டார் போல…”
“அது அண்ணாவை மொத்தமா எடுத்துக்க தான்னு யாருக்குமே புரியாம போயிருச்சு பிரத்யு. ஆர்ஷோட பர்ஸ்ட் பர்த்டே அன்னைக்கு எங்களுக்குமே அண்ணா வரும்படி சொல்லிருந்தாங்க. நாங்களும் போயிருந்தோம். ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வர்ற வழில ஆக்ஸிடென்ட். என் அண்ணா…” என்று முகத்தை மூடி அழுதவரின் அழுகை ஓயவில்லை.
“ஆன்ட்டி ப்ளீஸ்…” என்றவளால் எந்த வார்த்தைகள் கொண்டும் சமாதானம் செய்ய முடியுமென்று தெரியவில்லை.
“கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு. அம்மா கடைசி வரை அண்ணியை ஏத்துக்கவே இல்லை. குழந்தையை பார்த்துட்டு போனவங்க தான். அண்ணியோட அம்மாவும், அப்பாவும், தம்பியும் வந்து கூட்டிட்டு போனாங்க….”
“ஆறு மாசம் ஆகலை. அப்பப்போ நாங்க தான் போய் பார்த்துட்டு வந்திட்டிருந்தோம். என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அண்ணி திடீர்ன்னு போன் பண்ணினாங்க எங்களுக்கு. வீட்டுல கல்யாணம் பேசறாங்க. எனக்கு விருப்பமில்லை. என்னை கூட்டிட்டு போயிருங்கன்னு சொல்லி கெஞ்சி அழுதாங்க. அம்மாவுமே கிளம்பினாங்க….”
“அங்க போகவும் தான் தெரிஞ்சது அந்த ஆறுமாசம் அவங்க பட்ட கஷ்டம். இங்க இருக்கறவங்க பார்க்கிறவங்க பார்வை சரியில்லை. எங்கையாவது போகலாம்ன்னா வீட்டுல விடலை. காப்பாத்துங்கன்னு கையெடுத்து கும்பிட்ட மனுஷியை அங்க யாருக்குமே புரியலை பிரத்யு….”
“அவங்களுக்கு இன்னொரு வாழ்க்கை தேவை தான். அவசியமும் தான். ஆனா அதுக்கு அவகாசமே இல்லாம துடிக்க துடிக்க வேதனை படுத்தலாமா? ஆனா அதையும்விட பெரிய பாவம் நாங்க செஞ்சோம் பிரத்யு. என்னோட அம்மா வந்தது அண்ணியை கூட்டிட்டு வர்றதுக்கு இல்லை. குழந்தையை வாங்கிட்டு வர….”
“அம்மாவோட வாரிசு, என் அண்ணா குழந்தை இன்னொருத்தர் வீட்டுல வளர கூடாதாம். உங்க பொண்ணை எப்பவும் என்னால ஏத்துக்க முடியாது. அதேநேரம் என் பேரனை, என் வீட்டு வாரிசை விட்டுக்குடுக்க முடியாதுன்னு சொல்லி ஆகர்ஷனை தூக்கிட்டு வந்துட்டாங்க…” என்று சொல்ல பேரதிர்ச்சி பிரத்யுக்ஷாவிற்கு.
“இதுல என்ன கொடுமை தெரியுமா பிரத்யு. நீ சொல்றியே உன் மாமா. அவரோட ரெண்டுமாச கை குழந்தையை பார்த்துக்க இந்த கல்யாணம். அவர் பிள்ளையை பார்த்துக்க கல்யாணம் பண்ணிப்பாங்கலாம். ஆனா அண்ணி அவங்க குழந்தையோட வர கூடாதாம்….” என்று அடுத்தடுத்து சொல்ல சொல்ல அதனை தாங்கும் சக்தி பிரத்யுக்ஷாவிற்கு இல்லாது போனது.
அதிர்ச்சி அவளுக்கு மட்டுமன்றி அதனை கேட்டுக்கொண்டிருந்த கௌரவ்விற்கும் தான்.
அந்த அறையில் தனது கையடக்கத்தில் சின்னதாய் இருக்கும் கைப்பேசியை வேண்டுமென்றே விட்டு சென்ற கௌரவ்விற்குமே அவனின் அடிமன வேர்களை ஆட்டம் காண செய்துவிட்டது ஷ்யாமளா சொல்லிய விஷயம்.
“என்ன சொல்றீங்க ஆன்ட்டி? எனக்கு பயமா இருக்கு. ராம்நாத் மாமா, கௌரவ் அத்தான்…”
“உன் மாமாவோட மூத்த சம்சாரத்து மகன். அவங்கம்மா உடல்நிலை சரியில்லாமல் மஞ்சள்காமாலையால இறந்துட்டதா சொன்னாங்க. வேற எந்த விவரமும் தெரியலை. அன்னைக்கு குழந்தையை தூக்கிட்டு கிளம்பும்போது அம்மாவோட காலை பிடிச்சு அழுதுட்டே வந்தாங்க கௌசல்யா அண்ணி….”
“மனுஷாங்களா பிறந்து என்னத்தை சாதிச்சுட்டாங்க? பச்சை குழந்தை தகப்பனும் இல்லாம, அம்மாவையும் விட்டு பிரிஞ்சு. ஆகர்ஷன் பட்ட பாடு இருக்கே…” என்றவன் பிரத்யுக்ஷாவின் கையை மார்போடு பிடித்துக்கொண்டார்.
“தாய்ப்பாலுக்காக ஏங்கி அழுது அழுது அவன் அம்மாவை தேடும் போதெல்லாம் உயிரே போயிடும். எனக்குமே அந்தநேரம் தைரியம் இல்லாமல் போச்சு. எல்லாமே என் அம்மாவோட முடிவு தான். எதுவுமே செய்ய முடியலை…”
“அதுல ஒரு சின்ன சுயநலமும் இருக்குனு வச்சுக்கோயேன். எனக்கும் குழந்தை இல்லை பிரத்யு. என் பிள்ளையா தான் அவனை வளர்த்தேன். அப்படித்தான் வளர்க்கனும்ன்னு அம்மாவும் சொன்னாங்க. இங்க யாரும் அந்த தெய்வம் நடத்தின பொம்மலாட்டத்துல சிக்கலை. மனுஷங்களோட சுயநலத்தால உறவுகள் சிதைஞ்சு போச்சு பிரத்யு…”
“மகன் இல்லை. ஆனா மகனோட வாரிசு மட்டும் போதும்ன்னு சொன்ன என் அம்மா. மகளுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா போதும், ஆனா மகளோட குழந்தையை பார்த்துக்க முடியாதுன்னு கையை விரிச்ச கௌசல்யா அண்ணியோட அம்மாப்பா, தம்பி. தன்னோட குழந்தையை பார்த்துக்க இன்னொரு மாற்றாந்தாயை தேடின மனுஷனுக்கு, அதேபோல தகப்பனில்லாத குழந்தையை தானும் பார்த்துக்கனும்ன்னு நினைக்காத உன் மாமா ராம்நாத்….”
“என்ன பிரத்யு இதுல கடவுள் இருக்காரு? அவங்கவங்க மனசாட்சிக்கு கூட யாருமே உண்மையா நிக்கலையே. என் ஆகர்ஷுக்கு நாங்க இருந்தோம். என் அம்மா கூட்டிட்டு வந்தாங்க. வளர்த்தோம். அப்படி யாருமே இல்லாம போயிருந்தா?…” என்றவர் கௌசல்யாவை திரும்பி பார்த்தார்.
“இவங்க நல்லா இருக்கனும்ன்னு தான் ஆகர்ஷனுக்கு விஷயம் தெரிஞ்சப்பவே அவன் இந்தியாலயே இருக்க முடியாதுன்னு சொல்லி கிளம்பி போனான்….” என்றவர்,
“உனக்கு ஒன்னு தெரியுமா ப்ரத்யு? ஆகர்ஷனோட முதல் பிறந்தநாளன்னைக்கு அவன் அப்பாவை இழந்தான். பத்தாவது வகுப்பு முடிச்சு அந்த வருஷ பிறந்தநாள் அன்னைக்கு தன்னோட தாய் தகப்பன் யாருன்னு தெரியவந்து அவங்களை தொந்தரவு செய்ய கூடாதுன்னு இந்த நாட்டை விட்டு போனான். இன்னைக்கு இன்னைக்கு…” என்றவர் பிரத்யுக்ஷாவை அணைத்துக்கொண்டு கதற கண்ணீர் உடைப்பெடுத்தது அவளுக்கும்.
“உன்னோட பிறந்தநாள் தான் என் அண்ணா கிருஷ்ணகுமார் பிறந்தநாளும் கூட. தெரியுமா?…” என்றும் ஷ்யாமளா சொல்ல இன்னும் உடைந்துகொண்டிருந்தாள் பிரத்யுக்ஷா.
“இதை எல்லாம் எப்படி அந்த பையன்கிட்ட சொல்லுவேன். சொன்னா அவன் மனசு என்ன பாடுபடும்? என்னால முடியாதுடா….” என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே கௌரவ் வேரொடிந்த மரமென தளர்ந்து அமர்ந்துவிட்டான் அந்த இருக்கையில்.
தாயின் நிலைக்கு என்ன காரணம் என்று யோசித்து தெரிந்துகொள்ள காத்திருந்தவனின் எதிர்பார்ப்பில் அவனது வாழ்வில் தெரியாத பக்கமும் தெரிய வந்திருந்தது அவனுக்கு.
‘கௌசல்யா என்னை பெத்த என்னோட அம்மா இல்லையா?’ என நினைத்தவனுக்கு இன்னும் அவர் அனுபவித்த வேதனையின் சுவடுகள் அவன் அறிவதற்கென்றே காத்திருந்தது.
ஒரு அறையில் ஆகர்ஷன் தனித்திருக்க, இங்கே கௌரவ் எல்லாம் இருந்தும் தனியாய் இருந்தான்.
முந்தைய மனிதர்களது எண்ணங்களினால் திசைமாற்றம் பெற்று வர்ணங்கள் கலைந்திருந்தது இவர்களின் வாழ்க்கையில்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.