அழுது ஓய்ந்திருந்தார் ஷ்யாமளா. பிரத்யுக்ஷா தான் கேட்ட விஷயங்களின் தாக்கத்தில் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.
“ஆனா விதியை பார்த்தியா? எங்க சுத்தியும் ஆகர்ஷனும், அவன் அம்மாவும் பார்த்துக்கறதை யாராலும் தடுக்க முடியலை. ஆனா அதை எப்படி ரெண்டுபேரும் தாங்கிக்க போறாங்கனு தான் தெரியலை…” என்றவர்,
“பிரத்யு, நான் என் பையனை பார்க்கனும். ஆர்ஷ் என்ன பன்றானோ? என் பிள்ளை தவிச்சு நின்னானே அவன் அம்மாக்கிட்ட வரமுடியாம…” என்று கண்ணீருடன் அவர் எழுந்துகொள்ள ஆச்சர்யமாய் பார்த்தாள் பிரத்யுக்ஷா.
“எப்படி ஆன்ட்டி உங்களால ஈஸியா சொல்லமுடியுது?…”
“என்னடா? என்ன சொன்னேன்?…” என்று அவர் கேட்க,
“இத்தனை வருஷமும் உங்க பிள்ளைக்கு நீங்க அம்மாவாவே தான் வாழ்ந்திருக்கீங்க. இப்ப கூட ரெண்டுபேரை பத்தி தான் கவலைப்படறீங்க நீங்க…” என்றவள்,
“எனக்கா? நான் ஏன் வருத்தப்படனும்? ஆர்ஷோட மனசுல எப்பவும் நான் அம்மாவா தான் இருப்பேன். ஆனா பெத்த பிள்ளை எப்படி இருக்கானோன்னு கூட தெரியாம அவங்க அனுபவிச்ச வலி, யாராலும் அதுக்கு ஈடு செய்யமுடியாது பிரத்யு….” என்றவர்,
“பால்குடி மறக்காத குழந்தையை இன்னொரு குழந்தைக்காக விட்டுட்டு வர சொன்ன மனுஷங்க இப்ப இவங்களை ஒன்னு சேர விட்டுடுவாங்களா? அட போடா…” என்றார் வேதனையுடன்.
“எனக்கு கௌசி அத்தையோட பாஸ்ட் எதுவுமே தெரியாது ஆன்ட்டி. மம்மீ கூட இதை பத்தி எதுவும் சொன்னதில்லை. நாங்க எல்லாருமே கௌரவ் அத்தான் அவங்களோட மூத்த பிள்ளைன்னு தான் நினைச்சோம்…”
“பிரத்யு, வேண்டாம். இதை நாம பேசவே வேண்டாம். ஆர்ஷுக்குமே இது தெரியும். ஆனா அவன் என்னைக்குமே இந்த உண்மை கௌரவ்க்கு தெரியவேண்டாம்ன்னு நினைச்சான். உங்க குடும்பத்துல என்ன நடந்திருக்கு, கௌரவ்க்கு தெரியுமா இல்லையானு எனக்கு தெரியாதே இதுவரை. அதுதான் எதுவுமே நான் அந்த பையன்கிட்ட சொல்லலை…” என்றவர்,
“தெரியாம இருந்தா தெரியாமலே போகட்டும். இல்லைன்னா பிள்ளை உடைஞ்சிருவான். தன்னை வளர்த்தது தன்னை பெத்தவ இல்லைன்றது தெரியறப்போ அந்த பிள்ளைங்க படறபாடு இருக்கே. கண்ணால பார்த்திருக்கேன் நான்…” என்று சொல்லி,
“சரிம்மா நீ இவங்களை பார்த்துக்கோ. நான் ஆர்ஷை பார்த்துட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு கண்ணாடி கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவர் அதற்கடுத்து இருந்த இன்னொரு கதவை திறந்து வர அங்கே அமர்ந்திருந்தான் கௌரவ்.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. விழிகள் மட்டும் செவ்வரியோடி இருந்தது.
தாய், தந்தையை நினைத்து கவலையிலிருக்கிறான் என்று நினைத்த ஷ்யாமளா நேராக அவனிடம் வந்தவர்,
“வேற யாரும் வரலையா?…” என்றார் அவன் தனித்து அமர்ந்திருக்கும் விதம் காணமுடியாமல்.
ஒருவகையில் அவனுமே ஆகர்ஷனை போல் தானே என்ற எண்ணம் உதிக்காமல் இல்லை.
அதுவே அவன் மீதான பாசத்தை ஊற்றெடுக்க வைத்தது அவருள். அவர் கேட்டதும் ஆழ்ந்த பெருமூச்சுடன் தலையசைத்தவன்,
“வந்திருவாங்க…” என்றான் அவரை பார்த்துக்கொண்டே.
ஆராயும் பார்வையில்லாது அது என்னவகையான பார்வை என்று ஷ்யாமளாவிற்கு கண்டறிய முடியவில்லை.
“ஏதாவது கேட்கனுமாப்பா?…” என்றார் அவனிடம்.
“ஹ்ம்ம், கேட்கனுமா?…” என்றவன் இதழ்கள் லேசாய் வளைந்தது.
“கேட்டாச்சு…” என்றவன்,
“அன்ட் தேங்க்ஸ்…” என்றும் கூற ஷ்யாமளா சிகிச்சைக்காக சொல்கிறானோ என்று பார்த்தார்.
“இது எங்களோட ட்யூட்டி தான்…” என்று அவர் பதிலுரைக்க அதற்கும் தலையசைப்பு மட்டுமே அவனிடம்.
உணர்வுகளை காண்பிக்காத அவனை எந்தவிதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை ஷ்யாமளாவிற்கு.
கௌரவ்வின் விழிகள் உயிரோட்டத்தை இழந்ததை போல தெரிய மனம் பிசைந்தது அந்த பார்வையில்.
“அம்மாவை வேணும்னா போய் பார்க்கலாமே…” என்றதற்கும் அவனிடம் தலையசைப்பு மட்டுமே.
சிலநொடிகள் எதுவும் கேட்பானா பார்ப்பானா என்று நின்று பார்க்க அவனிடம் எவ்வித மாற்றமும் இல்லை.
ஷ்யாமளாவால் அதற்குமேல் நிற்கமுடியாமல் மகனை தேடி நடந்தவர் தன்னை பார்வையில் தொடரும் கௌரவ்வை அவர் உணர்ந்தார்.
திரும்பி அவர் பார்க்க அவனும் அமர்ந்தவாக்கில் கைகளை கட்டிக்கொண்டு அவரை தான் பார்த்திருந்தான்.
தொண்டை அடைத்தது ஷ்யாமளாவிற்கு. திரும்பி சென்றவர் மீண்டும் இரண்டுமுறை திரும்பி பார்க்க அப்போதும் அவன் அப்படித்தான் பார்த்தபடி இருந்தான்.
என்னவென்றே புரியாத ஒரு பயம் நெஞ்சை கவ்வ அதே நடுக்கத்துடன் மகனை தேடி அந்த தளத்தை விட்டு அவர் அகன்றதும் தன் காதினுள் மாட்டியிருந்த பட்டன் வகையிலான ப்ளூடூத்தை கழற்றி உள்ளங்கையில் வைத்து வெறித்து பார்த்தான் கௌரவ்.
ஜீரணிக்கவே முடியாத அந்த உண்மை அவனை வெகுவாய் பொசுக்கிக்கொண்டிருந்தது.
“ம்மா…” என சத்தமின்றி இதழசைத்தவன் உள்ளம் பரிதவிப்பில் துடித்தது.
எதையும் காண்பிக்கவில்லை. காண்பித்தும் பழக்கமில்லை. உணர்வுகளை உள்ளடக்கியபடி அமர்ந்திருந்தான் கல்லாய் கௌரவ்.
ஷ்யாமளா அறைக்குள் நுழைகையில் ஆகர்ஷனின் அருகில் கிருஷ்ணகுமார் அமர்ந்திருந்தார்.
அவர் பேசினாரே தவிர அவனிடம் தலையசைப்புகளை தவிர்த்து வேறு எதுவும் பதில் வரவில்லை.
கண்கள் கலங்கி போய் இருந்தது. எங்கே உடைந்து தாயை தேடி சென்றுவிடுவோமோ என்னும் பயம்.
தன்னால் அவரின் வாழ்வில் எந்தவித இடையூறும் வேண்டாம் என்று முன்பை போலவே இப்போதும் முடிவெடுத்தவனால், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவரை நோக்கி செல்ல துடிக்கும் கால்களை அடக்குவதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டியதாக இருந்தது.
“ம்மா…” அத்தனைநேரம் இல்லாமல் அப்போதுதான் வாய் திறந்தான்.
“அம்மா இங்க தான் இருக்கேன்…” என்று வந்தவர் அவனின் மறுபக்கம் அமர மருந்தின் வாசனையை தாண்டிய ஒரு மணம் ஷ்யாமளாவிடம்.
ஆகர்ஷனின் உள்ளம் அந்த மணத்தினை நுகர்வதை போன்றொரு பிரம்மை. என்றோ அவன் உணர்ந்த தாயின் சூட்டினை இப்போது அவனுயிர் வெகுவாய் தேடியது.
தன்னருகில் அமர்ந்தவரின் கைகளை எடுத்து பிடித்தவன் மெதுவாய் தொட்டு பார்த்து துடிக்கும் இதழ்களை கடித்தபடி தன் கன்னத்தின் அருகில் கொண்டுசென்றான்.
“ஆர்ஷ்…” தாளமுடியவில்லை ஷ்யாமளாவிற்கு.
“என்னை கண்டுபிடிச்சிட்டாங்க தானே?…” என கண்ணீரை அடக்கிக்கொண்டு அவன் கேட்டவன் தாயின் புடவையின் முந்தானையை தொட்டு பார்த்தவன்,
“அவங்க வாசம் இதுல இருக்க மாதிரியே தோணுதேம்மா…” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
தன்னை கண்டதும் துவண்டு விழுந்த பெற்றவளை அள்ளி தூக்கிக்கொண்டு செல்லும் உரிமையற்றவனாகி போனோமே என கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வுகளை எரித்துக்கொண்டிருந்தான் ஆகர்ஷன்.
இனி என்னவாகும்? நினைக்கவே அத்தனை அச்சம். தாயின் நிம்மதி பறிபோகுமோ என எண்ணி பதறாமல் இருக்க முடியவில்லை.
தன்னை கண்டதும் தன்னுருவத்தில் தன் தந்தையை பார்த்துவிட்ட தாயின் மனநிலையில் வெகுவாய் கலங்கி போனான்.
“அப்பாவை இன்னும் ஞாபகம் இருக்குல அவங்களுக்கு…”
“அம்மான்னே சொல்லு ஆர்ஷ்….” என்ற ஷ்யாமளாவின் கண்ணீரை துடைத்தவன்,
“என்னை பார்த்தவங்களுக்கு என் பேரை ஞாபகம் இருக்காதா என்ன? என்ன சொன்னாங்க? கௌரவ். ஹ்ம்ம், அம்மான்னு சொன்னா தானா? உணர்ந்தா போதாதா ம்மா?…” என்றவன் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க போராடினான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.