“என்னால என்னால இங்க இருக்க முடியும்ன்னு தோணலை. ம்மா ப்ளீஸ், நான் கிளம்பறேன்…”
“ஆர்ஷ்…”
“என்னால முடியலை. ப்ளீஸ், இங்க இருந்தா அவங்க குடும்பத்தை உடைச்சு எனக்கு அவங்க பக்கம் வரனும்ன்னு தோணிடும். போலாம். போறேனே…” என்றான் இறைஞ்சுதலாய்.
“ஏன்டா, ஏன் இப்படி நினைக்கிற? ப்ளீஸ் ஆர்ஷ்…” என்றவரை பார்த்தவன் மெல்ல எழுந்து சென்று அங்கிருந்த கண்ணாடியில் தன்னுருவம் பார்த்தான்.
‘கிருஷ்ணா மாதிரி. அப்படியே கிருஷ்ணாவை உரிச்சு வச்சிருக்கான்’ என்ற வார்த்தைகள் எப்போதும் அவனை தொடர்ந்துகொண்டிருந்தது.
தன் பதினைந்தாவது வயது வரை அதன் பின்னிருக்கும் பொருளை அறிய தோன்றவில்லை.
பள்ளி படிப்பு, வளர்ந்தது எல்லாம் மகாராஷ்ட்ராவில். கிருஷ்ணகுமார், ஷ்யாமளா இருவரும் அங்கே மருத்துவராக அங்கிருக்கும் தங்களின் மருத்துவமனையை நிர்வகித்து வர அங்கிருந்த அனைவருக்குமே ஆகர்ஷன் அவர்களின் பிள்ளையாக மட்டுமே தெரியவந்திருந்தான்.
எப்போதாவது விடுமுறைக்கு சென்னைக்கு வருவதும், பாட்டியை பார்ப்பதும், செல்வதும்.
அப்போது உறவுகளுடன் பெரிதாய் நெருக்கமிருந்ததில்லை. காணும் ஓரிருவரும் நலம் விசாரிப்பதோடு வேறெதையும் பேசியதுமில்லை என்பதனால் அவனுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பத்தாம் வகுப்பு விடுமுறையில் அந்த வருட பிறந்தநாள் கொண்டாட என்று வந்திருந்தவன் குடும்பத்துடன் கோவிலுக்கும், அதனை ஒட்டி இருந்த கடற்கரைக்கு செல்ல அங்கே எதிர்பாராதவிதமாய் சந்தித்துக்கொண்டனர் தாயும் மகனும்.
நிச்சயம் தெய்வாதீனம் என்றுதான் சொல்லவேண்டும். கோவிலுக்கு அருகில் இருந்த கடையில் அனன்யாவுடன் விளையாடிபடி வர, குழந்தை கையில் கடல் மணலை எடுத்து அவன் மீது வீச என்றிருக்க இடையில் வந்தவரை கவனிக்கவில்லை ஆகர்ஷன்.
மணல் அவரின் முகத்தில் பட்டு கண்களை நிறைக்க சட்டென ஆகர்ஷன் ஓடி சென்று உதவ முற்பட்டான்.
“காட், ஸாரி ஸாரி ஆன்ட்டி…” என்றவன் அவரை குனிந்து பார்க்க,
“இருக்கட்டும்ப்பா…” என்னும் மெல்லிய குரல்.
கண்களில் விழுந்திருந்த தூசியினால் அவரால் கண்ணை திறந்து பார்க்க முடியவில்லை.
“ஸாரி, என் பாப்பா விளையாட்டா…” என்று சொல்லிக்கொண்டிருக்க, வந்துவிட்டார் ஷ்யாமளாவின் தாய்.
“கிராண்ட்ம்மா இவங்க…” என்று அவன் காண்பிக்கவும் அதிர்ந்து அவர் பார்க்க, அங்கே நின்றது கௌசல்யா.
“பரவாயில்லை தம்பி…” என கௌசல்யாவே, அவர் பேசும் முன் அவ்விடம் விட்டு கண்ணை கசக்கியபடி நகர ஷ்யாமளாவும் வந்துவிட்டார்.
“ஆர்ஷ் நீ அனுவை கூட்டிட்டு காருக்கு போ…” என்றவர் பிள்ளைகள் நகரவும்,
“எப்படி போறா பார்த்தியா? என்னவோ அன்னைக்கு நீ இவளுக்காக பரிதாபப்பட்ட. இப்ப பாரு எப்படி வாழ்ந்துட்டு இருக்கான்னு. பெத்த மகனை கூட அடையாளம் தெரியாம எப்படி போறான்னு. நான் தான் என் பிள்ளையை பறி குடுத்துட்டேன்….” என்று கண்ணீர் விட,
“ம்மா, அண்ணி ஆகர்ஷனை பார்க்க கூட இல்லை. கண்ணெல்லாம் மண்ணு விழுந்துருச்சு. அவங்க வேண்டாம்ன்னு அவனை மட்டும் தூக்கிட்டு வந்தது நீங்க. இப்ப அண்ணியை குறை சொல்றீங்க?…” என்றவர்,
“வாங்க கிளம்புவோம். அவங்க நல்லா இருக்கட்டும். நிம்மதியா வாழ்ந்திட்டிருக்கறவங்க கண்ணுல பட்டு நம்ம ஞாபகம் வர வேண்டாம்…”
“நாம ஏன் போகனும்? எங்க நம்மளை பார்த்துட்டு என் பேரனை உரிமை கொண்டாடிடுவாளா அவ?…” என்று ஆத்திரம் தீராமல் அவர் பேசிக்கொண்டிருக்க அதனை கவனித்தது ஆகர்ஷன் மட்டுமின்றி, ராம்நாத்துமே தான்.
எங்கே கௌசல்யா அந்த குடும்பத்தினை பார்த்துவிடுவாரோ என்று பிள்ளைகளுடன், காவேரியையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்ப பதட்டம் பயத்தை கிளப்ப, என் குடும்பத்தினுள் வேறு ஒருவருக்கும் இடமில்லை என்னும் எண்ணம் மட்டுமே ராம்நாத் மனமெல்லாம் வியாப்பிக்க, கவனம் சிதறியது.
விளைவு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி காவேரியின் கால்கள் பறிபோனது.
இப்போது ஆகர்ஷனால் அந்த நாளை மறக்க முடியாது. தன்னை பெற்றவர்களை அவன் அறிந்துகொண்ட நாள்.
பழைய நினைவுகளின் ஞாபக சரத்தை அறுத்தெறிவதை போல் அந்த அறையின் அலைபேசி சிணுங்கியது.
“ஷ்யாமா உனக்கு தான் போன். பிரத்யு….” என்றார் கிருஷ்ணகுமார் எடுத்து பேசிவிட்டு.
அவரிடம் போனை வாங்கி பேசியவர் தான் வருவதாய் சொல்லிவிட்டு ஆகர்ஷனை திரும்பி பார்த்தார்.
கண்ணாடியில் தன்னை பார்த்தபடி நின்றவனுக்கும், அந்த அறையில் ஓரத்தில் புகைப்படத்தின் இருந்தவருக்குமான வித்தியாசங்களை சற்று சிரமத்துடன் தான் கண்டுகொள்ளவேண்டும் என்பதை போலான உருவ ஒற்றுமை.
தன் அண்ணனை அப்படியே உரித்துவைத்து பிறந்திருக்கும் அண்ணன் மகன், ஆகர்ஷன். தன் மகன் ஆம், அவன் எப்போதும் தன் மகனே என்று இப்போதும் அவர் ஸ்திரமாய் நம்பினார்.
“ஆர்ஷ், கௌசல்யா கண்ணு முழிச்சிட்டாங்களாம். பிரத்யு தான் கூப்பிட்டா…” என்றார் அவனிடம்.
“பார்த்துக்கோங்க ம்மா. பத்திரம்…” என்றுமட்டும் சொல்லியவன் மீண்டும் தன் தந்தையின் புகைப்படம் முன் வந்து அமர்ந்தான்.
“கிருஷ்ணா…” என தன் கணவரை ஷ்யாமளா ஆயாசத்துடன் பார்க்க,
“நான் பார்த்துக்கறேன். நீ போய்ட்டு வா….” என்று அனுப்பினார் கிருஷ்ணகுமார்.
மகனின் மனநிலை இப்போது எத்தனை தூரம் ரணப்பட்டிருக்கும் என்பதனை சற்றுமுன் அவன் ஷ்யாமளாவிடம் தன் தாயின் வாசம் தேடியதிலிருந்தே உணர்ந்துகொண்டார்.
எத்தனை வருடங்களானால் என்ன? தாய்க்கு பிள்ளைகள் எப்போதும் குழந்தைகள் தானே.
மனமெல்லாம் மருகியது அவர்களை நினைத்து. இது என்ன காலத்தின் சிக்கல் என்று தான் தோன்றியது.
ஷ்யாமளா பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பி கௌசல்யா இருக்கும் அறை நோக்கி செல்ல இப்போது கௌரவ் அருகே இரண்டுபேர் நின்றிருந்தனர்.
அவர்களை பார்த்துவிட்டு ஷ்யாமளா அந்த அறைக்குள் நுழைய கௌசல்யா சாய்ந்து அமர்ந்திருந்தார் இப்போது.
கௌசல்யாவின் கையிலிருந்து இன்னும் மருந்து அந்த உடலுக்குள் செலுத்தப்பட்டுக்கொண்டு இருந்தது.
சற்றுநேரத்தில் தேகமே கூடாகி போகும் என்று சொன்னால் அது கௌசல்யாவிற்கு பொருந்தும்.
ரத்தபசையின்றி அவர் அமர்ந்திருந்த கோலம் நெஞ்சை அறுத்தது ஷ்யாமளாவிற்கு.
“ஹ்ம்ம்…” என்றவர் தானும் வந்து பார்த்துவிட்டு அங்கிருந்த நர்ஸை வெளியில் இருக்கும்படி சொல்லியவர்,
“வெளில இன்னும் ரெண்டுபேர் இருக்காங்களே பிரத்யு. அவங்க யார்?…” என்றார் ஷ்யாமளா.
கௌசல்யாவிடம் பேசாமல் பிரத்யுக்ஷாவிடம் பேசினாலும் அவரின் பார்வை கௌசல்யாவிடம் தான்.
தன்னை கண்டதுமே மீண்டும் அவரின் முகத்தில் அலைப்புறுதல். அது மீண்டும் அவரை உணர்ச்சிவசப்பட செய்யும் என்பதனால் கொஞ்சம் நிதானமாகவே அவரை அணுக முற்பட்டார் ஷ்யாமளா.
ஆனால் கௌசல்யாவின் கண்கள் அறையின் வாசலை பார்ப்பதும், ஷ்யாமளாவை பார்ப்பதுமாகவே இருந்தது.
அவரின் உடல்நிலை குறித்து சிலநொடிகள் பேசியவர் அதற்கு மேலும் கௌசல்யாவை தவிக்க விடாமல்,
“ஓகே பிரத்யு, நீ வெளில இருடா. நான் பேசிட்டு வர்றேன்…” என்றார்.
“ஹ்ம்ம் ஓகே ஆன்ட்டி…” என்றவள்,
“அத்தை, நாங்க எல்லாரும் வெளில இருக்கோம். அப்பாவும், அம்மாவும் வந்திட்டிருக்காங்க. தைரியமா இருங்க…” என்று சொல்லிவிட்டு அவரின் கன்னம் வருடிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
பிரத்யுக்ஷா வெளியே வந்ததுமே கௌரவ்வின் காதுகள் இன்னும் கூர்மையடைந்தது.
“விக்ரம்…” என தன் தம்பியை அழைத்தவன்,
“நீங்க போய் அப்பா கூட ஐஸியூக்கு வெளில இருங்க. நான் அம்மாவோட இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
அவன் ஷ்யாமளா கௌசல்யா இருக்கும் அறை நோக்கி செல்ல, பிரத்யுக்ஷா பின்னால் வந்தாள்.
“நீங்க உட்காருங்க. டாக்டர் பேசிட்டிருக்காங்க அத்தை கூட…” என்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் விறுவிறுவென்று கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் அதற்குள் இருக்கும் அறைக்கு செல்லவில்லை.
கண்ணாடி கதவிற்கு இந்தபக்கம் அமர்ந்துகொண்டான் கௌரவ். பிரத்யுக்ஷா ஷ்யாமளாவை பார்க்க அவர் அவளை செல்லும்படி தலையசைத்தார்.
அந்த கதவினை தாண்டி எந்த பேச்சுக்களும் வெளியில் கேட்காது என்று தெரியும். அதனால் எதுவும் சொல்லவில்லை அவரும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.