உடலை விட்டு உயிர் பிரியும் நிலை என்னவென்று கண்கூடாய் காண்பதை போலொரு சூழ்நிலை.
கௌசல்யா பார்வை இரு மகன்களையும் மாற்றி மாற்றி பார்க்க அந்த பார்வையின் தவிப்பில் கௌரவ், ஆகர்ஷன் இருவருமே துடிதுடித்து போயினர்.
கௌரவ் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. இதயத்துடிப்பு வலியுடன் ஏகத்திற்கும் துடிக்க, ஆகர்ஷனின் குரல்வளையை நெறுக்கும் உணர்வு தாயின் பார்வையில்.
“ஆர்ஷ்…” என்ற கிருஷ்ணகுமாரின் அழைப்பில் தான் தன்னை நிதானப்படுத்த முனைந்தான் அவன்.
உணர்வுகளை கவனமாய் கையாளவேண்டிய சூழ்நிலை. கௌசல்யாவின் அருகில் நிற்பவர்களையும் கண்டான்.
ஒருபுறம் விக்ரம், மறுபுறம் சாருலதா. அருகில் பிரத்யுக்ஷா. சற்று பக்கத்தில் ஷ்யாமளா என்று நின்றிருக்க இப்போது கௌரவ்வை தான் அவன் பார்த்தான் நேரடியாக.
கௌசல்யாவின் மீதிருந்த கௌரவ்வின் கவனத்தை ஆகர்ஷின் பார்வை ஈர்க்க அவனும் திரும்பி பார்க்கவும் லேசாய் முறுவலிக்க முயன்றான் ஆகர்ஷன்.
முயற்சியில் வெற்றிபெறுவதை போல விழிகளின் கலக்கத்தை மனதினுள் புதைத்தவன் தொண்டையை செருமிக்கொண்டான்.
“யாப், ஐ’ம் ஆல்ரைட்…” என்று கிருஷ்ணகுமாரின் புறம் சொல்லியவன் வலிந்து புன்னகைத்து அங்கே நின்றவர்களை பார்த்து ஒரு தலையசைப்புடன் சிறுபுன்னகையை கொடுத்துவிட்டு அவர்களை தாண்டி சென்றுவிட்டான் விறுவிறுவென்று.
அவனால் நின்று அவர்களிடம் பேசி, கடக்கமுடியும் என்ற மனநிலை சுத்தமாய் இல்லை.
அதிலும் பெற்றெடுத்த வலியை கண்களில் காட்டி நின்ற தாயின் ஏக்கம் ததும்பிய முகம். உயிரை கீறியது.
அவன் கடந்து சென்றதும் கௌசல்யாவின் பார்வையும் மகனின் பின்னால் சரணடைய கௌரவ்வின் மனது வெகுவாய் கலங்கியது.
இத்தனை நாட்கள் அவன் அனுபவித்த அனைத்திற்கும் சொந்தமானவனின் பிரசன்னம். யாரிடமும் சொல்லமுடியாமல் கதறும் மனதை இறுக்கி பிடித்தான்.
“ம்மா, நடந்துடுவீங்களா? இல்லை வீல் சேர் கொண்டுவரட்டுமா?…” என விக்ரம் கேட்க,
“ஹாங், எங்க?…” என்றார் கௌசல்யா பிள்ளைகளை பார்த்து ஒன்றும் புரியாமல், உணரமுடியாமல் மலங்க விழித்தபடி.
“அப்பாவை பார்க்க….” சாருலதா கூற,
“ஆமா, அப்பா. ஹ்ம்ம்…” என மழலையாய் அவர் தலையசைத்துவிட்டு தன் தலைமகனை திரும்பி பார்க்க அவரின் பார்வையை திரும்பாமலே ஆகர்ஷனால் உணரமுடிந்தது.
அந்த தளத்தில் இருக்கும் மருத்துவர் குழுவிற்கான அறையினுள் நுழைந்துகொண்டான் ஆகர்ஷன்.
பார்வையிலிருந்து அவன் மறைந்ததுமே கௌசல்யாவின் முகம் சுருங்கி, கண்களில் மீண்டும் விழிநீர்.
“போய்ட்டானா?…” தனக்குள் பேசிக்கொள்வதை போல அவர் மெல்லிய குரலில் தன்னையறியாமல் கூற,
“யாரும்மா?…” என்றான் விக்ரம்.
“அதான், டாக்டர். போய்ட்டாங்களான்னு கேட்டாங்க. இப்போ போனாங்களே. அந்த டாக்டரை தான்…” என்று பிரத்யுக்ஷா தான் சமாளித்தாள்.
“ஓஹ்…” என்று விக்ரம் சொல்ல,
“முதல்ல போய் உங்க அப்பாவை பாருங்க…” என்றாள் பிரத்யுக்ஷா.
கௌசல்யா பிள்ளைகளின் கை பிடித்து நடந்தவர், மனதினோரம் மீண்டும் வலி தோன்ற கௌரவ்வை பார்த்தவர் அவன் தள்ளி நிற்க கண்டு அவனிடம் தன் கையை நீட்டினார்.
மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சிலை போல் நின்றவன் பதிலேதும் கூறவில்லை.
தாயை நெருங்கி வந்து அவர் நீட்டிய விரல்களை கெட்டியாய் பிடித்ததோடு இன்னொரு கையினால் தோளோடு அவரை அணைத்துக்கொண்டான் கௌரவ்.
“பார்த்தியா பிரத்யு?…” என்று அதனை காண்பித்து சிரித்த விக்ரம் ஷ்யாமளாவும் இருக்க கண்டு,
“எங்கம்மாவுக்கு எப்பவும் அண்ணா தான் ஸ்பெஷல். நாங்க எல்லாம் அண்ணா இருக்கும்போது அம்மா கண்ணுக்கே தெரியமாட்டோம்…” என கூறவும் கௌரவ்வின் மனதோரம் சுருக்கென்னும் வேதனை.
‘எனக்கான ஆறுதல் கௌரவ் தான். எனக்கு எல்லாமுமா அவன் இருந்தான்’ என்ற கௌசல்யாவின் வார்த்தைகள் அவன் உயிர் இருக்கும் வரை அவனைவிட்டு தொலைய போவதில்லை.
இரவல் சொந்தம். எத்தனை பாசம் கொடுத்து வளர்திருந்தாலும் தாயின் அன்பில் இன்னொருவனுக்கான அடையாளம் இருப்பதை தவிர்க்க முடியாதே.
ஆனால் எத்தனை இருப்பினும், கௌசல்யா. அவரை அவனால் ஒருநொடியும் தள்ளி வைத்து எண்ணிவிடமுடியாது.
தகப்பனை போல் வளர்ந்திருக்கிறான் என்று பார்ப்பவர்கள், அறிந்தவர்கள் அனைவரும் கூறினாலும், ராம்நாத்தை விட கௌசல்யா மீதான கௌரவ்வின் அன்பு அளப்பறியாதது.
தாய் என்றாலே அன்பு தானே எனும் கூற்றிற்கும் அதிகமாய் அவரின் சிறு பார்வையில் கூட அவன் உயிர் அசையும்.
அத்தனைக்கும் சிகரம் போல் இடையில் ஒருவன் வந்திருக்க தான் எதுவுமற்ற நிற்பதை போல் எழும் துளி எண்ணத்தை அவனால் விலக்க முடியவில்லை.
“கௌரவ்…” என்றார் மீண்டும் மெல்லிய குரலில் கௌசல்யா.
“ம்மா…” உருகும் குரலில் அவன் அழைக்க, கரகரத்து வந்த அந்த வார்த்தையிலும் கண்ணீரின் துவர்ப்பு.
மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு அவரின் உடலுக்கு தேவையானவற்றை அதன்மூலம் செலுத்திக்கொண்டிருந்தனர்.
படுக்கையில் கிடந்த ராம்நாத்தை கௌரவ் ஒரு மனநிலையிலும், கௌசல்யா ஒருமனநிலையிலும் பார்த்தனர்.
‘ஒரு பொம்பளைக்கு ரெண்டாம் கல்யாணம் எல்லாம் அத்தனை சாதாரணமா கௌசி? நான் பாரு, உன்னை ராணி மாதிரி வச்சிருக்கேன். நீ எனக்கு காலத்துக்கும் நன்றியோட இருக்கனும். இன்னொருத்தனோட வாழ்ந்தவன்னு தெரிஞ்சாலும் பெருந்தன்மையா உன்னோட வாழ்ந்துட்டிருக்கேன்.’ என்று கனிவு போல கசப்பை கக்கிய மனிதனின் குரல் இப்போது அவரின் காதின் அருகில்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மட்டுமே. அந்தரங்கங்கள் புனிதமானது மட்டுமல்ல. புதைமணலை போன்றதும் கூட.
பேசிவிடலாம் நீ மட்டும் என்ன என்று. ஆனால் பேசும் வார்த்தைகளை அவர் வெளிப்படுத்தவே இல்லை. பேச தைரியமற்று இல்லை. இதற்குமேல் பேசி என்ன என்பதை போலான மனநிலையாகி போனது.
எத்தனை பேசினாலும் பொறுமையாய், மௌனமாய், அமைதியாய், சாந்தமாய் நிற்கும் கௌசல்யா எனும் உணர்வற்ற ஜடத்தினை அத்தனை பிடித்தது ராம்நாத்திற்கு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.