ஆகர்ஷன் மனதினுள் அத்தனை வேதனை. கண்ணுக்குள் வைத்து தாங்கவேண்டும் என்று காத்திருந்தவன் மனதினை அடுத்தடுத்த நிகழ்வுகள் சுக்குநூறாய் உடைத்திருக்க எல்லாமவனின் கை மீறிவிட்ட அவலம்.
“நீங்க தான் சர்ஜரி பன்றதா சொன்னாங்க டாக்டர் ஷ்யாமளா…” என ஆகர்ஷனிடம் கேட்க,
“எஸ், நான் தான்….” என்றவன் கேள்வியாய் பார்க்க,
“வெல், நான் வந்த விஷயத்தை கேட்டுறேன். நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் ஓகே…” என்ற கௌரவ்,
“சர்ஜரி முடியவும் என் அப்பா இங்க எத்தனை நாள் இருக்கனும்ன்னு தெரிஞ்சுக்கலாமா?…” என்று கேட்க ஆகர்ஷனும், கிருஷ்ணகுமாரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அன்ட், சர்ஜரி முடிஞ்சதனால அவர் எந்த அதிர்ச்சிக்கும் ஆளாகாம இருக்கனும், ரொம்ப கேர்ஃபுல்லா பார்த்துக்கனும் இப்படி ஏதாவது இருக்கா? ஐமீன் அவர் மனசு நோகாம பார்த்துக்கனும் அப்படி ஏதாவது?…” என்றான் கௌரவ் ஒளிவு மறைவு இன்றி.
முகத்தில் எவ்வித சோர்வோ, சோகமோ, கவலையோ எதுவுமே தெரியவில்லை. எதையும் கண்டுகொள்ளவும் முடியவில்லை.
அப்படி ஒரு பார்வையும், தோரணையும். குரலில் ஏகத்திற்கும் அழுத்தம் அதிகரித்து இருந்தது அவன் கேட்க கேட்க.
“கௌரவ்…” என ஆகர்ஷன் திகைப்புடன் பார்க்க,
“இல்ல என்னோட அப்பா இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை வேற. இனிமே தான் அவர் நிறைய பார்க்கனும். அதான் அவர் எவ்வளோ ஸ்ட்ராங், நாங்க எப்படி பார்க்கனும் இதெல்லாம் தெரிஞ்சுவச்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு…” என்று அலட்டிக்கொள்ளாமல் அவன் சொல்லும்பொழுதே கௌரவ்வின் புஜங்கள் இறுக்கம் காண்பித்தது.
கௌரவ்வின் உடல்மொழியை ஆகர்ஷன் கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.
என்னவோ கோபம். ஏதோ வெளிக்காண்பிக்க முடியாத அழுத்தம். அவனின் முகத்தில் எதையோ மறைக்கும் ஆவேசம்.
ஆனால் என்னவென்று புரியவில்லை. கிருஷ்ணகுமார் கௌரவ்வின் கேள்விகளுக்கு பதிலளிக்க அவரின் பதில்களில் ஒவ்வொன்றிலும் கௌரவ் ஆகர்ஷனின் முகம் பார்த்தான்.
“ஓகே டாக்டர். தேங்க் யூ…” என்று மேஜையில் லேசாய் தட்டிவிட்டு எழுந்து நின்ற கௌரவ்,
“ம்க்கும்…” என குரலை செருமிக்கொண்டவன் பார்வை மீண்டும் திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த கௌசல்யாவை பார்த்தது.
“தேங்க்ஸ் அகைன்…” என்று ஆகர்ஷனிடம் கூறிய கௌரவ் கிளம்ப பார்க்க,
“கௌரவ்…” என்றான் ஆகர்ஷன்.
அவனின் அழைப்பில் நின்றுவிட்ட கௌரவ்வின் மனம் இப்போதும் ராம்நாத் மீதான அடக்கப்பட்ட சீற்றத்தில் தடதடத்தபடி தான் இருந்தது.
“சொல்லுங்க டாக்டர்…” என்று அவன் திரும்பவும் ஆகர்ஷனின் கைகள் உயர்ந்து அவனிடம் நீண்டது.
“நைஸ் டூ மீட் யூ கௌரவ்…” என்று சொல்லி புன்னகைக்க கௌரவ்வின் கண்களில் நொடிநேர வலி.
“ரியலி…” என்று வந்தது கௌரவ்வின் குரல் மிக மெலிதாய்.
யாருக்கும் கேட்கவில்லை என்றாலும் கௌரவ் காண்பித்த அந்த பாவனையில் ஆகர்ஷன் மனம் கலங்கியது.
“அப்கோர்ஸ்….” என்றான் ஆகர்ஷன்.
இன்னுமவன் கரம் கௌரவ்வினை நோக்கி நீண்டிருக்க, பின் அவன் கரமும் உயர்ந்து உடன்பிறவாதவனுடன் இணைந்தது.
“நைஸ் டூ மீட். ஹ்ம்ம், அப்படித்தான் இருக்கனும்ன்னு நானும் விரும்பறேன்…” என்று சொல்லி கையை குலுக்கியவன் பிடியும் வலுத்தது.
இருவரின் கரமும் பிரிய முடியாமல் இணைந்திருக்க, இருவரது விழிகளும் தாமாய் கௌசல்யாவிடம் சென்றது.
“அம்மாவை நான் பார்த்துக்கறேன்….” கௌரவ் தானாய் கூற திடுக்கிட்டு திரும்பினான் ஆகர்ஷன்.
“அப்பாவை பத்தியே பேசறேன், கேட்கறேன்னு நீங்க நினைக்க கூடாது இல்லையா? அதான். எப்பவுமே எனக்கு எல்லாரை விட அம்மா தான் முதல்ல. பார்த்துப்பேன்….”
எதற்கென்றே தெரியாமல் கௌரவ் கூற இதனை கேட்ட ஆகர்ஷனின் நெஞ்சத்தினுள் பெரும் பிரளயம்.
ஒரு மூச்செடுப்புடன் தலையசைத்த ஆகர்ஷன் புன்னகைத்து தன் கரத்தினை பிரித்தான்.
“ஹ்ம்ம், பத்திரம்…” என்றான் ஆகர்ஷன் ஆழ்ந்த குரலில்.
கிருஷ்ணகுமார் இருவரையும் பார்த்திருக்க, கௌரவ் விடைபெற்று வெளியே செல்லும்பொழுது மீண்டும் ஆகர்ஷனை பார்த்து லேசாய் இதழ் வளைத்துவிட்டு கிளம்பினான்.
அருகில் நின்ற கௌரவ்வின் காதுக்குமே தாயின் தவிப்பான குரல் கேட்கத்தான் செய்தது.
ஆகர்ஷன் வருவான் என்று எதிர்பார்த்திருக்க அவன் வரவில்லை என்பதில் தாயின் முகம் காணமுடியவில்லை கௌரவ்வினால்.
அங்கே நடந்தவற்றை எல்லாம் சேர்த்தே கிருஷ்ணகுமார் சொல்லியிருக்க வேண்டாம் வேண்டாம் என்று கிளம்ப ஆயத்தமாகிவிட இதோ எதிர்பாராதவிதமாய் பிரத்யுக்ஷாவின் வருகை.
அவளுக்காகவும் தானே அவன் ஓடி ஒளிந்து அவள் காணாமல், அவளை காணாமல் கிளம்பி வந்தது.
தன்னை தேடி வந்ததுமின்றி கண்ணீரில் உயிர் கரைக்கும் அவளை எந்தவிதத்தில் விலக்கி வைப்பது என்று தெரியாமல் இயலாமையில் கத்திவிட்ட ஆகர்ஷன் அவள் முன்னிலையில் தன்னை தானே நொந்துகொண்டு நின்றான்.
இதுவரை இத்தனை தூரம் குரல் உயர்த்தி உச்சஸ்தானியில் அவன் பேசி பார்த்திராதவள் ஸ்தம்பித்து நிற்க,
“சொல்லிட்டேன்ல. கிளம்பு…” என்றான் மீண்டும்.
ஆகர்ஷனால் பிரத்யுக்ஷாவின் முகத்தினை காணவே முடியவில்லை. லேசாய் வாடி நின்றாலும், அவ்விழிகளில் கவலை அப்பியிருந்தாலுமே பொறுக்காதவன்.
இன்று அவனே அதில் வழியும் விழிநீருக்கு காரணமாய் நிற்க ‘என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை?’ என்று தன்னையே எண்ணி நொந்து, வேகும் நெருப்பில் நின்றான்.
“கிளம்புன்னா? எப்படி? நான் போகனுமா? போயிடவா? சீனியர், பிரத்யு. நான் உங்க பிரத்யு தான?…” என்று கேட்கையில் நெஞ்சை கசக்கியது அவளின் குரல்.
“பேசுங்க டாக்டர். எவ்வளோ பேச்சு? எவ்வளோ கன்வின்ஸ்? ஹப்பா இந்தளவுக்கு உங்களால பேச முடியுதே? இப்பவும் பேசுங்க….” என்றாள் அவனின் அமைதியில் இப்போது பரிகாசமாய்.
“ப்ச்…” என்று சலித்தவன்,
“உன்னை கிளம்புன்னு சொன்னேன். இன்னும் உன் ரிலேட்டிவ் டிஸ்சார்ஜ் ஆகலையே. அங்க இருக்காம இங்க என்ன? கிளம்பு…” என்றான் மீண்டும்.
“முடியாது…” என்றாள் பிடிவாதமாய்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.