ட்ராவல்ஸ் அலுவலகத்தில் பொம்மை போன்று அமர்ந்திருந்தார் ராம்நாத்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட உணரமுடியவில்லை. அவரால் யூகிக்கவும் முடியவில்லை.
அறுவை சிகிச்சை நடந்து ஏழு மாதங்கள் முழுதாய் முடிந்திருக்க ஒய்விற்கென நான்கைந்து மாதங்கள் வெறுமையாய் உப்புசப்பின்றி கழிந்திருந்தது.
அதனை நினைக்கையில் கோபமும், வெறுப்பும் தான் பற்றி எரியும் அவருக்கு.
இந்த மாரடைப்பிலிருந்தே அப்படித்தான் அவர் வாழ்ந்திருந்தார். இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
கோபப்படவும் முடியாமல், கோபம் கொண்டால் ஏன் என கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கும் மூத்த மகனின் துளைக்கும் பார்வையிலிருந்து தன்னை ஒளித்துக்கொள்ளவும் முடியாமல் அந்த பாடாகி போனது.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தவர் ஷ்யாமளா, கிருஷ்ணகுமாரிடம் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.
ஆனால் கௌரவ் கூறினான். அதிலும் ஷ்யாமளாவிடம் அத்தனை நன்றிகள். கூடவே ராம்நாத்தை பார்த்துக்கொள்ள அங்கிருந்தே ஒரு செவிலியரையும் தேர்வு செய்துவிட்டான் கௌரவ்.
“ஏன்? அதான் கௌசி இருக்காளே? அவ என்னை பார்த்துப்பா. நர்ஸ் வேண்டாம் கௌரவ்…” என்று ராம்நாத் மறுக்க,
“உங்களை பார்த்துக்கறேன்னு அம்மா அவங்களை கவனிக்கலை. அவங்களுக்கும் எதுவும்ன்னா என்ன பன்றது? முதல்ல நீங்க முழுசா சரியாகிடுங்க. அம்மா கூட தானே இருப்பாங்க…” என்று சொல்லிவிட்டான் உறுதியாக.
எப்போதும் தன்னை கேட்டு தன் பேச்சிற்கு முடிவெடுக்கும் மகன் இப்போது அவனாய் ஒரு முடிவெடுத்துவிட்டு அப்படித்தான் என்று நிற்க கண்டவருக்குள், ‘தன் மீதான அக்கறை’ என்று தான் எண்ணம்.
தனக்காக தான் சொல்கிறான் என அவரை அவரே தேற்றிக்கொண்டு வீட்டிற்கு வர கௌசல்யாவை அதிகம் பார்ப்பதே அரிது என்பதை போலானது ராம்நாத்திற்கு.
விக்ரமிற்கு பணிகளை கூறிவிட்டு பெரும்பாலும் வீட்டில் இருந்தே தன் வேலைகளை கவனிக்கலானான் கௌரவ்.
“கௌசி…” என்று ராம்நாத் அழைத்தால்,
“என்ன விஷயம் ப்பா…” என்று தான் வந்து நிற்க நொந்துவிட்டார்.
“என்னன்னு சொல்லுங்க ப்பா. அம்மா வேலையா இருக்காங்க. நான் ப்ரீ தான்…” என தன்னருகில் அவன் வந்து அமர்ந்துவிட்டால் என்னவென்று பேசுவார்?
அதிலும் மருத்துவமனையில் ஆகர்ஷன் பேசி சென்றதில் இருந்தே கௌசல்யாவை அவரால் தனியே பார்க்கவும், பேசவும் முடிவதில்லை.
கௌரவ், விக்ரம் என இரு பிள்ளைகளுமே கௌசல்யாவை விட்டு எங்கும் நகர்வதும் இல்லை.
மருத்துவமனையில் தான் அப்படி என்றால் வீட்டிலும் அதே நிலை தொடர அறைக்குள் நர்ஸுடன் எத்தனை பேசமுடியும்.
வயதான ஆண் செவிலியர் தான் அவர். ஏன் என்றதற்குமே கௌரவ் பதிலளித்துவிட்டான்.
“உங்களுக்கு பேச்சுத்துணைக்கும், வாக்கிங் போகவும் தான் ப்பா. உங்க வயசா இருந்தா வேவ்லென்த் கரெக்ட்டா இருக்குமே…” என்று அசராது முகம் மாராமலவன் அளிக்கும் பதில்களில் ராம்நாத்திற்கு மகன் மீதான கோபம் வலுத்தது.
“கௌசியை கூப்பிடு. ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” என்று தனியே அழைப்பதும்,
“எப்பவும் முக்கியமான விஷயம் என்கிட்ட தானே சொல்லுவீங்க. அம்மாவுக்கு எதுவும் தெரியாது. சமையல், பிள்ளைங்களை பார்த்துக்கறதை தவிரன்னு. என்கிட்டையே சொல்லுங்கப்பா…” என்று அமர்ந்துவிடுவான்.
அவர் ஏன் அழைக்கிறார் என்று தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான் கௌரவ்.
இரவுகளில் கூட அவருக்கு எதுவுமும் அவசர உதவி என்றால் என்று விக்ரமையும் அழைத்துக்கொண்டு அவரின் இருபுறமும் காவலாய் மகன்களின் உறக்கம்.
“எங்களுக்கு நீங்க முக்கியம் ப்பா…” என்னும் கௌரவ்வும்,
“ரொம்ப முக்கியம்…” என சத்தமில்லாமல் விக்ரமும் பார்த்துக்கொள்வதுண்டு.
மீண்டும் ஆகர்ஷனின் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு என்று கிளம்ப வரவே முடியாதென்று மறுத்தார் ராம்நாத்.
“ஏன் ப்பா? அங்க ட்ரீட்மென்ட், ஹாஸ்பிடாலிட்டி எல்லாமே பர்பெக்ட் தானே? அப்பறம் என்ன? அன்னைக்கும் இப்படித்தான் கோபமா பார்த்தீங்க டாக்டர்ஸை. எதுவும் பிரச்சனையா? சொல்லுங்க நான் என்னன்னு விசாரிக்கறேன்…” என கை முஷ்டியை முறுக்கிக்கொண்டு கௌரவ் கேட்கையிலே அரண்டு போவார்.
இவர் ஒன்றை சொல்லி மகன் அங்கே சென்று கேட்க என எதுவும் ஏடாகூடமாகி போனால் அனைத்தும் வெளிவருமே.
கௌசல்யாவை மட்டுமே அவரால் அடக்கிவைக்க முடியும். இப்போது மகனின் ஆளுமையில் ராம்நாத் தான் பயந்துகொண்டிருந்தார்.
எந்த முடிவுகளுக்குமே அவரிடமவன் முன் அனுமதி பெறுவதில்லை. தகவலாக இதை செய்துவிட்டேன் என்று வந்து நிற்க ஆரம்பித்திருந்தான்.
தவறாக இல்லை என்றாலும் தன்னிடம் கேட்காமல் தன் கவனத்திற்கு வரும் முன்னரே அங்கே அனைத்தும் நடந்து முடிந்திருக்கும்.
அதன் பின்னர் தான் எங்கே கேள்வி கேட்க? தன் அதிகாரம் தன் கைகளை விட்டு அகல்கிறதோ எனும் பதட்டம்.
ஆனாலும் தன்னிடம் சொல்லிவிடுகிறானே என்றும் சமாதானம் செய்துகொண்டார் ராம்நாத்.
அவரின் சூழ்நிலை இப்படி இருக்கும் சமயம் தான் ஸ்ரீவத்சன் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.
ஒவ்வொரு வருடமும் காவேரி ஸ்ரீவத்சன் திருமணம் நடந்த கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்து காணிக்கைகள், அன்னதானம் வழங்குவது வழக்கம்.
இந்தமுறையும் அதற்காக வந்திருக்க அதற்கென மகளை அழைத்திருந்தார் ஸ்ரீவத்சன்.
மற்றவர்கள் கோவையிலிருந்து வந்துவிட பிரத்யுக்ஷா மட்டும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தாள்.
அன்றைய வாக்குவாதத்திற்கு பிறகு அந்த விசேசத்தில் தான் தகப்பனை காண்கிறாள் பிரத்யுக்ஷா.
நேராக வீட்டிற்கு வர அனைவரும் கோவிலில் இருந்தனர். வீட்டில் ராம்நாத்தும் அவருக்கு துணையாக நர்ஸ் மட்டுமே இருந்தனர்.
முதல்நாள் அதிகளவு ரத்தஅழுத்தம் ஏற்பட்டு இருக்க எங்கும் வரவேண்டாம் என்றுவிட்டான் கௌரவ்.
இருந்தாலும் அனுமதித்திருக்கமாட்டான். சிகிச்சை முடிந்து முழுதாய் ஒருமாதம் ஆகாததினால் வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கக்கூடும்.
துணைக்கேனும் கௌசல்யா இருப்பார் என்று நினைக்க அதற்குமே முட்டுக்கட்டை மூத்தமகனால்.
“மாமா வர்றதே எப்பவாவது. இந்தநேரம் அவங்களுக்கு இங்க என்ன தேவையோ அதை செய்யவேண்டாமா அம்மா? அம்மாவுமே எங்கயும் போறதில்லை. போகட்டும்…” என்று சொல்லிவிட,
“எனக்கும் தான் எங்கயும் போகமுடியலை….” என மகன் தலை மறைந்தபின்னர் தான் புலம்ப முடிந்தது.
இப்போதெல்லாம் அவர் என்ன பேசினாலும் அதற்கென்ன அர்த்தம் என்று துளைக்கிறானே மகன்.
இதோ தனியாய் ஹாலில் அவர் அமர்ந்திருக்க ஷோல்டர் பேக்குடன் வீட்டினுள் நுழைந்தாள் பிரத்யுக்ஷா.
நடுநாயகமாக அவர் அமர்ந்திருக்க கண்டாலும் பிரத்யுக்ஷாவின் கண்கள் வீட்டில் அனைவரையும் தேடியது.
“எப்படி இருக்கீங்க மாமா?…” என்ற கேள்வி அவரிடம் தான்.
ஆனால் பார்வை அவரிடமில்லை. வந்தவள் ஷோல்டர்பெக்கை கழற்றி சோபாவில் வைத்துவிட்டு தன் சார்ஜரை தேடி எடுத்து போனில் பொருத்தினாள்.
“சார்ஜ் போடவே மறந்துட்டேன். நேத்திக்கு ஹாஸ்பிட்டல்ல நைட் ஷிப்ட். காலையில அப்படியே கிளம்பி இங்க வந்துட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அடுக்களை சென்றவள் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு வந்தாள்.
“அதுக்குள்ளையுமா எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்க?…” என்று கேட்க ராம்நாத் பதில் எதுவும் கூறவில்லை.
அவர் மனதில் பிரத்யுக்ஷாவிற்கும், ஷ்யாமளா கிருஷ்ணகுமாருக்குமான நெருக்கம் பற்றிய சிந்தனை தான்.
அங்கே பிரத்யுக்ஷாவிற்கு தரப்படும் முக்கியத்துவம், ஷ்யாமளா காட்டும் அன்பு, கிருஷ்ணகுமாரின் பாசம், அனன்யாவின் அந்நியோன்யம், அதையும் விட அவர்களுக்கடுத்து இவள் என்பதை போன்ற சில பேச்சுக்களும் ராம்நாத்தை யோசிக்க வைத்தது.
இதை குறித்து எண்ணியபடி பிரத்யுக்ஷாவை பார்வையால் தொடர்ந்த ராம்நாத்தின் மனதினுள் ஆகர்ஷன் கூறிய அந்த வார்த்தைகள்.
‘சீக்கிரமே என்னை விலக்கி வைக்கமுடியாத பந்தத்தோட உன் முன்னாடி வருவேன்’ என்றிருந்தானே ஆகர்ஷன்.
‘அந்த பந்தம் இதுவாக இருக்குமோ?’ என்று நினைக்கும்பொழுதே ராம்நாத்தின் கண்கள் சிவந்தது.
ஏற்கனவே பேச்சிற்கு ஸ்ரீவத்சனிடம் சொல்லியிருந்தார் எதற்கு இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்லவேண்டும் என்று சொல்லி.
இப்போதும் அதையே நினைத்தவர் ஒருவேளை பிரத்யுக்ஷாவிற்கு அப்படி எண்ணம் எதுவும் இல்லாமல் இருந்தால்? தன் பேச்சை மதிக்கும் பெண்.
தன் பிள்ளைகளை போலவே தான் ஸ்ரீவத்சன் அவரின் பிள்ளைகளையும் வளர்த்திருக்கிறார். தாய்மாமன் சொல்லை தட்டமாட்டாள் என்று நினைத்தவர்,
“பிரத்யு, இங்க வா…” என்றார் அவளிடம்.
“கோவிலுக்கு போய்ட்டு வர்றேன் மாமா. இந்த லக்கேஜோட போகமுடியாதே? வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க…”
“இருக்கட்டும் பிரத்யு. இப்ப போய்டலாம்…” என்றவர் நர்ஸிடம் வெளியில் செல்லும்படி சொல்ல பிரத்யுக்ஷாவின் விழிகள் இடுங்கியது.
“அப்படி என்ன முக்கியமான விஷயம்?…” என்றாள் அவள் நேரடியாக.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.