“முக்கியமான விஷயம் மட்டுமில்லை, நம்ம குடும்ப கௌரவமும் கூட…” என்றவர்,
“இங்க பாரு பிரத்யு, நீ அந்த ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. மனசுக்கு சரியா படலை…” என்றார்.
“உங்களுக்கு ஏன் மாமா பிடிக்கனும்? வேலை பார்க்கிறது நான்….” என்றுவிட்டாள் பட்டென்று.
ராம்நாத் இதனை எதிர்பார்க்கவில்லை. சொன்னால் யோசிப்பாள், ஏன் என பணிவுடன் கேட்பாள் என்று பார்த்தால் பட்டென்று கூறிய பதிலில் ராம்நாத்தின் முகம் சுருங்கியது.
“விஷயம் அவ்வளவு தானா? நான் போகலாமா மாமா?…” என பிரத்யு எழுந்துகொள்ள,
“இல்லம்மா, உட்கார். அவசரப்படாம நான் சொல்றதை கேளு. உனக்கு சின்ன வயசு. அதனால தான் புரியாம பேசற. என் அனுபவத்துல நான் சொல்றேன்…”
“புரியும்படியாவே பேசுங்க. கேட்போம்…” என பிரத்யுக்ஷா அவரே விஷயத்திற்கு வரட்டும் என்று காத்திருந்தார்.
“உனக்கு எப்படி சொல்லி புரியவைக்க? அந்த மனுஷங்க யாரும் சரியில்லம்மா. அந்த புருஷன் பொண்டாட்டி டாக்டர்ங்க என்னமோ உன்னை பன்றாங்க….” என்றவர்,
“அதுவும் அந்த ஆகர்ஷன். அவன் சரியில்லை பிரத்யு. அவன் உன்னை பார்க்கிறதும், சிரிக்கிறதும். ப்ச், வேண்டாம். நான் சொல்றேன்ல. ஏற்கனவே நீ அங்க வேலைக்கு போறதுக்கு முன்னாடியே உன் அப்பாக்கிட்ட சொல்லி பார்த்தேன். ஆனா எங்க?…” என்று கூற,
“ஆகர்ஷன் என்னை பார்த்ததை, சிரிச்சதை நீங்க எப்போ பார்த்தீங்க?…” என எதிர்கேள்வி எழுப்பினாள் பிரத்யுக்ஷா.
ராம்நாத் திடுக்கிட்டு போனார். இப்படி யோசித்து கேள்வி கேட்பாள் என்று நினைக்கவே இல்லையே.
“பிரத்யு…”
“நீங்க பார்த்ததை கேட்டேன் மாமா. சர்ஜரி பண்ணினதுக்கு அப்பறம் ஒருதடவை தான் ஆகர்ஷன் அந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்தாங்க. அதுவும் நான் இல்லாதப்போ. அப்படி இருக்கும்போது எதுக்காக இந்த பொய்?…” என்றாள் அப்போதும் நிதானத்துடன்.
“நான் பொய் சொல்லலை. ஒருசிலரை பார்த்தாலே தெரியாத அவங்க குடும்ப லட்சணமும், ஒழுக்கக்கேடும். அந்த ஆகர்ஷனும், அவனுக்கு அப்பாம்மான்னுட்டு இருக்கிறதுங்களும்….” என்று சொல்லிய ராம்நாத்,
“அதுங்க அவனோட பெத்தவங்களே இல்லையாமே. என்ன கன்றாவிக்கு பிறந்தானோ…” என்று முடித்தவரின் முன்னிருந்த அலங்கார உருளி தூக்கி வீசப்பட்டது பிரத்யுக்ஷாவினால்.
“மனுஷனாய்யா நீயெல்லாம். யாரை யார்க்கிட்ட என்ன பேசறோம்ன்ற விவஸ்தை இல்லாத ஜென்மம். ச்சை…” என்று சொல்ல,
“பிரத்யு…” என்று கத்தினார் ராம்நாத்.
“மூச், வாய திறந்த இருக்கிற கோவத்துக்கு நான் என்ன செய்வேன்னே தெரியாது…”
“என்னம்மா வாய் நீளுது. கை நீளுது. நான் உன் தாய்மாமன். மரியாதையா பேசு. உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும்ன்னு தெரியும்ல…”
“என்ன பயம் காட்டுறீங்களா? எங்கப்பாவுக்கு நீ என்ன சொல்றது? நான் சொல்றேன். ஆகர்ஷனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுவேன்….” என்று கூற ராம்நாத்தின் பொறுமை முற்றிலும் பறந்தது.
“அறிவுகெட்டத்தனமா பேசாத பிரத்யு. போயும் போயும் அவனை போய். சரியான ஏமாத்து கும்பல். அவங்கல்லாம் நம்ம குடும்பத்துக்குள்ள வரவே தகுதி இல்லாதவங்க…” என சொல்ல,
“ஏன் அவருக்கு என்ன?…” என்றவள்,
“ஆமா ஆகர்ஷனை பெத்தவங்க அவங்க இல்லைன்னா வேற யாராம்? சரி அப்போ அவரை பெத்தவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமோ?…” என்றாள்.
எந்த பதிலும் சொல்லமுடியாதே. அவசரப்பட்டு பேச்சை துவங்கிவிட்டோமோ என்று ராம்நாத் அவளை வெறித்து பார்த்தார்.
“அப்பறம் என்ன சொன்ன? தகுதி? அந்த தகுதி உனக்கு இருக்கா? அவங்களை பேசற தகுதி இவ்வளோ இவ்வளோவாச்சும் இருக்கா?…” என்று தன் கைவிரல்களை காண்பித்து அவள் கேட்க,
“பிரத்யு. யார்க்கிட்ட பேசறோம்ன்னு யோசிச்சு பார்த்து பேசு. நாம உறவுக்காரங்க. நாளைக்கு இந்த வீட்டுக்கு உன்னை எடுக்க கூடிய சூழ்நிலை வரும்…” என்றார் எச்சரிப்பதை போல.
“ஓஹ் இந்த நினைப்பு வேறையா? சரி அந்த விஷயத்துக்கு அப்பறம் வர்றேன்…” என்றவள்,
“அப்பறம் என்ன சொன்ன? யார்க்கிட்ட பேசறோம்ன்னு யோசிக்கனுமா? யோசிச்சிட்டா போச்சு. பேசவேண்டாம்ன்னு நினைச்சேன். தப்பா இருக்கும் போல பேசாம இருக்கறது…” என மீண்டும் சோபாவில் அமர்ந்தாள்.
“ராம்நாத், தி கிரேட் ராம்நாத் ட்ராவல்ஸ் ஓனர். ஆமா எந்த தைரியத்துல தகுதி பத்தி எல்லாம் நீ பேசற? யாரும் சொல்லலைன்னா யாருக்கும் எதுவும் தெரியாதுன்னா?…” என கேட்கும்பொழுதே ராம்நாத்திற்கு நெஞ்சை பிளந்தது.
ஆகர்ஷனை விரும்புகிறாள் என்றால் அவன் சொல்லியிருக்க கூடுமே என்றும் தெரிய பதட்டமாய் அவளை பார்த்தார்.
“என் தங்கச்சி பொண்ணு நீ, நான் தூக்கி வளர்த்த பொண்ணு. இப்படி மாத்திட்டாங்களே உன்னை. நீயா பிரத்யு இப்படி பேசற? காவேரியை விட உன் மேல தானம்மா அத்தனை பாசமும் வச்சிருந்தேன்…”
“அதனால தான் ஆகர்ஷனை கௌசல்யாத்தை பார்த்திட கூடாதுன்னு அவசரமா அன்னைக்கு எல்லாரையும் கூட்டிட்டு போய் ஆக்ஸிடென்ட் நடக்க காரணமானேங்களா?…” என்றாள் கண்கள் நீரில் தளும்ப.
பிரத்யுக்ஷாவின் கேள்வியில் ராம்நாத் ஆடிப்போக அதுவரை வெளியே நின்றிருந்த ஸ்ரீவத்சனுமே நிலைகுலைந்து போனார்.
கோவிலுக்கு பூஜையில் வைத்து காணிக்கை செலுத்துவதற்கு வைத்திருந்த திருமாங்கல்யத்தை ஸ்வேதா வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்றதனால் அதனை எடுக்க வந்திருந்தவர் அனைத்தையும் கேட்டிருந்தார்.
“சொல்லுங்க, காவேரி என் தங்கச்சின்னு அத்தனை பேசுவீங்களே இப்போ வாய் திறந்து அப்படி இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்…” என்றாள் பிரத்யுக்ஷா.
ராம்நாத் பேச்சற்று திக்பிரம்மையுடன் பார்த்திருந்தார். எங்கே தான் எதுவும் பேசினால் இன்னும் என்னென்ன பேசுவாளோ என்று மௌனமாய் பார்க்க,
“இத்தனை வருஷமா என்னோட அம்மா வில் சேர்ல இருந்தாங்களே. அப்பாவும் கூட உங்களுக்கு உறுத்தவே இல்லைல. இப்ப என்னன்னா வாய் கூசாம இன்னொருத்தரோட பிறப்பை பத்தி பேசறீங்க. வெக்கமாயில்ல?…” என்றாள்.
“அப்பறமென்ன? ஆகர்ஷனுக்கு பெத்தவங்க தெரியாதா? நான் சொல்லட்டுமா? ஓஹ் தகுதி வேணும்ல. அந்த தகுதியோடவே சொல்றேனே….” என்றவள்,
“ஆகர்ஷனோட வொய்பா, கௌசல்யா கிருஷ்ணகுமாரோட மருமகளா உங்களை கேள்வி கேட்க எனக்கு முழு தகுதி இருக்கு. இது போதுமா? இல்லை இன்னும் சொல்லனுமா?…” என்றதும் ராம்நாத்தின் முகம் வெளுத்துவிட்டது.
“நீங்க பெத்த பிள்ளைக்காக இன்னொரு குழந்தையோட தாயை வலுக்கட்டாயமா அந்த குழந்தைய விட்டு பிரிச்சு, அபகரிச்சு உங்களோட சுயநலத்துக்காக கல்யாணம் பண்ணி இப்ப வரைக்கும் உங்க கைப்பாவையா வச்சிருக்கீங்களே? வெக்கமாயில்லையா இதெல்லாம் பேச?…” என்றவள்,
“நீங்க கௌசல்யாத்தையை கல்யாணம் நிஜமாவே குழந்தைக்காகவா? அப்படி இருந்திருந்தா பசில கதறி அலற குழந்தைக்கு பசியாத்த விடாம சத்தியம் பண்ண வச்சிருப்பீங்களா? உங்களுக்கு அடங்கி இருக்க பொண்டாட்டி தேவை. அதக்கு குழந்தை ஒரு சாக்கு. உங்களை போய் எங்கம்மா நல்லவர்ன்னு நினைக்காங்களே…” என்றதில் ஸ்ரீவத்சன் வீட்டினுள் நுழைந்துவிட்டார்.
“பிரத்யு…” என்று உள்ளே வந்தவரை இருவருமே திடுக்கிட்டு பார்க்க, அதுவரை கோபத்துடன் ஆவேசமாய் பேசிக்கொண்டிருந்த பிரத்யுக்ஷா தந்தையை கண்டதுமே தளர்ந்து அமர்ந்துவிட்டாள்.
“என்ன நடக்குது இங்க? என்ன பேசற நீ?…” என்றவர் மகளிடம் கேட்க,
“மாப்பிள்ளை…” என்றழைத்தார் ராம்நாத்.
“ஷட்அப். எதாச்சும் நீங்க பேசினீங்க. அவ்வளோ தான்…” என ஸ்ரீவத்சனின் கோபம் எல்லை மீற இருந்தது.
“நீ சொல்லு பிரத்யு…” என மகளிடம் அவர் கேட்க,அதற்குமேல் மறைக்க முடியாமல் அனைத்தையும் கடகடவென்று ஒப்பித்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
ஷ்யாமளாவிடம் கௌசல்யா பகிர்ந்த விஷயங்களை அவர் சொல்லியதாக கூறாமல் அவர் மயக்கத்தில் இருக்கையில் நடந்த சிகிச்சையின் மூலம் கூறப்பட்டதாக மாற்றி சொல்லிவிட்டாள்.
எங்கே இதனால் கௌசல்யாவின் சிறு நிம்மதிக்கும் பங்கம் வந்துவிடுமோ என்று சொல்லியிருக்க,
“என் பர்மிஷன் இல்லாம எப்படி கௌசிக்கு மயக்கத்துல ட்ரீட்மென்ட் குடுத்து ஆழ்மனசுல இருந்ததை தெரிஞ்சுக்கிட்டாங்க. நான் இதை சும்மா விடமாட்டேன். கேஸ் போடுவேன்…” என ராம்நாத் குதிக்க,
“நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைன்ட் பண்ணுவேன். எங்கம்மாவை ஆக்ஸிடன்ட் பண்ணி கொள்ள முயற்சி பண்ணுனீங்கன்னு. போலாமா?…” என்றாள் சீறும் வேங்கையென பிரத்யுக்ஷா.
“ச்சீ இதுக்குமேல ஒருவார்த்தை கூட நீங்க பேச கூடாது.உங்களை எல்லாம்…” என சொல்லிக்கொண்டிருக்க காவேரியிடம் இருந்து அழைப்பு.
“சொல்லும்மா, இப்ப வந்திருவேன். பிரத்யுவும் வந்துட்டா. கூட்டிட்டு வர்றேன்…” என பேசி வைத்த ஸ்ரீவத்சன் அருவருப்பாய் பார்த்தார் ராம்நாத்தை.