இருவரும் நின்ற இடத்தை விட்டு வெகுநேரம் அசையவில்லை. இதயமெல்லாம் பூக்கள் மலர்வதை போன்றொரு சுகந்தம்.
புன்னகையுடன் தலைசாய்த்து நின்றவள் வெகுநேரம் அவனுக்கு பதில் பார்வை பார்த்து முடியாமல்,
“கோ மேன்…” என்றாள் சத்தமாக.
“ஷ்ஷ்…” ஆகர்ஷன் அங்கிருந்து சுட்டுவிரலை இதழ்களின் மேல் வைத்து உதடுகளை உள்மடித்து கண்களை சுருக்கி பார்த்தான் மிரட்டலாவும், கொஞ்சலாகவும்.
“ஹப்பா பயந்துட்டேன்…” பாவனை கான்பித்தவள் காதில் மெல்லிய ரீங்காரமாய் அவளின் கைப்பேசி அழைப்பு.
“போன்…” என்று தன் கைகளை கொண்டு பேசுவதை போல தலையசைத்து வருவதாய் சொல்லி செல்ல ஆகர்ஷனின் புன்னகை மேலும் விரிந்தது.
பால்கனி விட்டு அவள் அகன்றதும் தானும் உள்ளே சென்றுவிட பிரத்யுக்ஷா கைப்பேசியை எட்டி சென்று எடுத்தாள்.
பார்த்ததும் விழிகள் பெரிதாய் அகன்றது. கூடவே யோசனையும் சேர்ந்தே வர புருவச்சுளிப்புடன் அதனை ஏற்பதற்குள் அடித்து ஓய்ந்து மீண்டும் அடுத்தநொடி அடுத்த அழைப்பு.
இத்தனை முறை ஸ்ரீவத்சன் அழைத்ததே இல்லை. அதிலும் ஒருமுறை அழைத்தால் பார்த்துவிட்டு அழைக்கட்டும் என்று விட்டுவிடுவார்.
இவ்வளவு தூரம் எல்லாம் அழைப்புக்கள் வந்தவண்ணம் இருந்ததே இல்லை இத்தனை வருடங்களில்.
அதுவே பிரத்யுக்ஷா மனதில் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்ய அழைப்பு நிற்கும் முன் ஏற்றாள்.
“டாட்…” என அவள் பேச எல்லாம் அவர் இடமளிக்கவே இல்லை.
“எங்க போன பிரத்யு?…” கடுமையான குரல் அவரிடமிருந்து.
ஆகர்ஷனுடனான தன் நேசத்தை சொல்லிய பொழுது இத்தனை கடுமை காண்பித்தவர்.
அதன்பின் பேச்சுக்கள் குறைந்துவிட்டது. முன்புமே பெரும்பாலும் அவளாகத்தான் அழைக்கும்படி பேசும்படி இருக்கும்.
அதன்பின் அவர்களின் காதல் விஷயம். அப்போதும் முறுக்கிக்கொண்டு தான் முகம் காண்பித்தார் மகளிடம்.
அவருக்கு விருப்பமில்லை. ஆகர்ஷன் எத்தனை தான் நல்ல நிலையில், நல்ல முறையில் இருந்திருந்தாலும் தன் விருப்பங்களை களைந்து மகள் தானே ஒரு முடிவெடுப்பதா?
அத்தனை ஆவேசம். ஒருவிதத்தில் அதில் தன்னை மகள் அவமதித்ததை போல தான் உணர்ந்தார்.
“என் பொண்ணுக்கு நல்லா தெரியும் நான் தான் அவ எதிர்காலத்தை முடிவு செய்வேன்னு. தெரிஞ்சும் என்கிட்டையே வந்து இப்படி சொல்றாளே? அப்போ நான் யார்?…” என காவேரியிடம் கோபத்தை காண்பித்திருந்தார்.
ஸ்ரீவத்சனை போலவெல்லாம் காவேரிக்கு எவ்வித வெறுப்பும் இல்லை ஆகர்ஷன் மீது.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் அவனின் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் அத்தனை அன்பும், நன்மதிப்பும் தான் இருந்தது காவேரிக்கு.
அவருக்கு மகளின் விருப்பத்தில் எவ்வித வருத்தமும் இல்லை. என்ன ஓன்று இது ஸ்ரீவத்சனும் மனமுவந்து சம்மதித்தால் மட்டுமே நடக்கக்கூடியது என்பது தான் அவரின் கவலை.
அது நிச்சயம் சாத்தியமா என்றால் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் ஸ்ரீவத்சன் பேச்சுக்கு எதிர்பேச்சு இருந்ததில்லை.
ஆனால் மகள் அதுவும் அவளின் எதிர்காலத்தின் முக்கிய முடிவை எடுத்திருப்பதில் கணவனின் கோபம் இன்னுமே எல்லையை தொட்டிருக்கும்.
கிட்டத்தட்ட அது ஈகோவை சீண்டுவதை போல் தான் என்று நினைத்தார் காவேரி.
அவரின் வேண்டுதல் ஒன்றுதான். கணவர், மகள் இருவருமே எந்தவித மனக்கசப்பிற்கும் ஆளாகாமல் இந்த விஷயத்தில் சுமூகமாக போகவேண்டும் என்பது மட்டுமே.
காவேரியை போன்ற எந்த யோசனைகளும் ஸ்ரீவத்சனை தொடவில்லை. முன்பே மகளின் முடிவு தன்னை மீறியது என்பதில் அதிருப்தி.
அதைவிட மேலாக அவர் அறிந்துகொண்ட அந்த விஷயம். தற்போது மனதை அரிப்பதும் அதுவாகவே தான் இருந்தது.
ஆகர்ஷன், கௌசல்யாவின் உறவும், உரிமையும் அவரை இன்னுமே யோசிக்க செய்தது.
எத்தனை இருப்பினும் பின்னாளில் மகளின் திருமணம் ஆகர்ஷனுடன் என்றால் எந்த சூழ்நிலையிலாவது விஷயம் வெளிப்பட்டுவிட்டால்?
அதன்பின் வரவிருக்கும் எதையுமே அவர் விரும்பவில்லை. அடுத்தவர்களை விட குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் என்று அவரின் முன் நின்று பேசக்கூடுமே.
‘ஸ்ரீவத்சன் மருமகன் ராம்நாத்தோட சம்சாரத்தோட மூத்த மகனாம். கௌசல்யாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புருஷன் தவறி இப்ப ரெண்டாவதா ராம்நாத்தை கல்யாணம் பண்ணிருக்காளாம்’ இப்படியான பேச்சுக்கள் வரும்.
அதை துளியும் ஸ்ரீவத்சன் விரும்பவில்லை. அதற்காக ராம்நாத்தை மன்னிக்கவும் அவர் தயாராக இல்லை.
எந்த சூழ்நிலையிலும் ராம்நாத் செய்தது உணர்வுகளின் உயிர் வதை. அதை எப்போதும் நியாயப்படுத்த போவதில்லை.
அது தனக்கு தேவையும் அற்றது. அதற்காகவே அவரிடம் பேச்சுக்கள் எதையும் வைத்துக்கொள்ளாமல் அறவே தவிர்த்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
ஆனால் அதை காவேரியிடம் தெரிவிக்க தான் மனது ஒப்பவில்லை. இந்த விஷயம் யாருக்கும் தெரிவதையும் அவர் விரும்பவில்லை.
அது தனக்கும் இழுக்கு என்று நினைத்தாரோ என்னவோ மூச்சு விடவில்லை ஸ்ரீவத்சன்.
இப்போதும் மகளுக்கு அழைத்தவர் ஆகர்ஷன் அங்கே வந்திருக்கும் பதட்டத்தில் அவளை கண்டிக்க பார்க்க பிரத்யுக்ஷா நிதானமாய் பதிலளித்தாள்.
“சீனியர் வந்திருக்கார் டாடி. அவர்கிட்ட பேசிட்டு வந்தேன்…” என ஸ்ரீவத்சன் எதை குறித்து கேட்கிறார் என்று தெரியாமல் உண்மையை உரைக்க,
“பிரத்யு…” என்றார் கடுங்கோபத்துடன்.
“சொல்லுங்க டாடி, ஏன் இவ்வளோ டென்ஷன்?…” என்றவள்,
“மம்மீ எப்படி இருக்காங்க?…” என இலகுவால் கேட்க ஸ்ரீவத்சனிடம் அந்த இலகுத்தன்மை சுத்தமாய் இல்லை.
“நீ எதுக்காக அங்க போன? அதுவும்…” என்றவர் வார்த்தைகளை சிதறிவிடாமல் இருக்க தன்னை கட்டுப்படுத்த முயன்றார்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்க டாடி? அதை சொல்லுங்க. நேரடியா பேசுங்க…”
பிரத்யுக்ஷாவிற்கு புரிந்துவிட்டது ஸ்ரீவத்சன் கோபம் ஏன் எதற்கு என்று. சட்டென மனம் இறுகியது.
நம்பிக்கை. இந்த வார்த்தை தகப்பனிடத்தில் தன் மீதான அந்த எண்ணத்தை உடைத்துவிடுமோ என்று உள்ளூற ஒருவித அச்சம்.
இல்லை என்று சொல்லவில்லை ஸ்ரீவத்சன். தினேஷ் மீதான அச்சப்பார்வை இன்னும் எச்சரிக்கையுடன் மகளை தொடரத்தான் செய்தது.
அவனின் தலையீடு அவ்வப்போது இருப்பதை உணர்ந்துகொண்டு தான் இருந்தார் ஸ்ரீவத்சன்.
அதற்காகவே மகளை கவனித்து வந்தவருக்கு இப்போது ஆகர்ஷன் மேலும் கவனம் வலுக்க துவங்கி இருந்தது.
அதன்பொருட்டு ஆகர்ஷன் அங்கே சென்றிருப்பதும் அவருக்கு தெரியாமல் இல்லை.
அது ஆகர்ஷனும் அறிந்திருந்தான் என்பதனையும் அவர் சாருலதாவின் திருமணத்தில் தான் தெரிந்துகொண்டார் ஸ்ரீவத்சன்.
“உங்களோட ஆள் கரெக்டா வாட்ச் பண்ணி இன்பர்மேஷன் குடுக்காரா ஸார்? உங்களுக்கு சிரமம் இல்லைன்னா நானே குடுத்திடுவேன். ஆனா உங்களுக்கு பிடிக்காது பாருங்க…” என அவனே சிரித்தபடி திருமண வீட்டில் சொல்லியிருந்தானே.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.