“என்ன காவேரி திரும்ப திரும்ப இதையே சொல்லிட்டு. அண்ணன் சொல்றேன், என் பொண்ணை கௌரவ்க்கு குடுத்தே ஆகனும்னு நீ சொல்லு. உனக்காக சம்மதிப்பார் மாப்பிள்ளை…” என்று கூறியவரை திடுக்கிட்டு பார்த்தார் காவேரி.
இதென்ன பேச்சு என்பதை போல அவரின் முகத்தில் விருப்பமின்மையும், இதெல்லாம் ஒரு பேசா என்பதை போன்றான முகச்சுளிப்பும்.
“எப்படி எப்படி? என் கல்யாணத்துக்கு டாடி சம்மதிச்சே ஆகனும்ன்னு மம்மியை மிரட்ட சொல்றீங்க. அதானே? எனக்கு புரிஞ்சது. ஆனா உங்க தங்கச்சிக்கு தான் ஷாக். தன் அண்ணனா இப்படின்னு…” என்று வந்தாள் பிரத்யுக்ஷா.
அவளின் வரவை ராம்நாத் எதிர்பார்க்கவில்லை. இதற்கு தானே அவர் தனியே பேசவேண்டும் என்றது.
இப்படி இடையிட்டு வந்து நிற்பாள் என்று நினைக்கவில்லை ராம்நாத். அவளின் தலையீட்டில் கோபம் வேறு.
“இங்க பாரு பிரத்யு, இது பெரியவங்க விஷயம். எல்லாம் நல்லதுக்கு தான். நீ போ…” என்றார் ராம்நாத்.
“யாரோட நல்லதுக்கு? பெரியவங்க விஷயம்ன்னா அதுக்குள்ள என் எதிர்காலம் எப்படி வந்துச்சு? என் வாழ்க்கையை பத்தி முடிவுக்கு வரும்போது நான் இல்லாம எப்படி?…” குரல் உயர்ந்தது பிரத்யுக்ஷாவிற்கு.
“பிரத்யு, கோவப்படாத. நான் பேசறேன்…” என காவேரி அவளை சமாதானம் செய்ய பார்க்க,
“என்ன மம்மி பேச போறீங்க? என் பொண்ணுக்கு விருப்பம் இருக்காது இந்த கல்யாணத்துல. அதனால இந்த பேச்சு வேண்டாம்ன்னு சொல்லமாட்டீங்களா?…” என்றாள் காவேரியிடம்.
“பிரத்யு, என்ன பேசற நீ? அதென்ன விருப்பம் இருக்காது? உனக்கு என்ன தெரியும்? முடிவெடுக்கற அளவுக்கு பெரியமனுஷியா?…” என ராம்நாத் இரைய,
“கல்யாணம் பண்ணிக்க வைக்க மட்டும் பெரியமனுஷியா இல்லைன்னாலும் பரவாயில்லயா என்ன?…” என்றாள் பிரத்யுக்ஷாவும் நக்கலாய்.
ராம்நாத் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. ஆகர்ஷன் என்றொருவன் இல்லை என்றால் இந்த சம்பந்தத்தை தான் ஏன் தேடி வரவேண்டும்?
எந்த சூழ்நிலையிலும் எந்த வகையிலும் ஆகர்ஷன் அவர்களின் பந்தத்தினுள் வந்துவிடவே கூடாதேன்று நினைத்தார் ராம்நாத்.
அதற்காகவென்றே இந்த திருமண பேச்சு. அதுவும் பிரத்யுக்ஷா வந்ததும். கனிந்து வந்தால் சூட்டோடு சூடாக திருமணத்தையும் நடத்திவிட வேண்டும்.
திருமணம் முடிந்துவிட்டால் இன்னொரு கௌசல்யாவாக பிரத்யுக்ஷா கௌரவ்விற்கு அடங்கி இருக்கவேண்டியது தான். அவன் பார்த்துக்கொள்வான் என்று நினைத்திருந்தார்.
இப்போதும் இதை எல்லாம் பேச விடாமல், காவேரியின் தடுமாற்றம் வேறு, பிரத்யுக்ஷாவின் மறுப்பு வேறு என்று பதட்டம் கூடியது ராம்நாத்திற்கு.
“உங்க கல்யாணம் எல்லாம் பெரியவங்க எங்களோட முடிவு தான் பிரத்யு. இதெல்லாம் புரியாது. அம்மாப்பா சொல்றமாதிரி கேட்டு நடந்துக்கோ. நாங்க பேசிக்கறோம்…” என்றார் ராம்நாத்.
“எனக்கு இஷ்டம் இல்லை. என் இஷ்டம் இல்லாம என் வாழ்க்கையில எதுவும் இல்லை. அதனால இந்த பேச்சை நீங்க தொடராம இருக்கறது தான் சரி…” என்றாள் இறுக்கத்துடன்.
“ஏன் கௌரவ்வை கல்யாணம் பண்ணிக்க உனக்கு கஷ்டம்ன்னா வேற என்ன எண்ணம்? என்ன நினைப்புல இருக்க? அந்த அவன்….” என்று உணர்சிஸ் வேகத்தில் ராம்நாத் பேச காவேரி மேலும் அதிர்ச்சிக்குள்ளாக பிரத்யுக்ஷா அசரவில்லை.
“ஆமா, அந்த அவன் தான். அந்த ஆகர்ஷன் தான். அவங்க மேல தான் இஷ்டம். இதை நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டதா ஞாபகம்…” என்றுவேறு போட்டுடைக்க காவேரி என்ன நடக்கிறதென்று பார்த்தார் பயத்துடன்.
“அதத்தான் வேண்டாம்ன்னு சொல்றேன்ல. அவன் இந்த குடும்பத்துக்குள்ள வரவே கூடாது. அன்னைக்கு ஏதோ சின்ன பொண்ணு பேசறன்னு பொறுத்து போனா ரொம்ப பேசற பிரத்யு…”
“அப்படித்தான் பேசுவேன். இந்த குடும்பம்ன்றதுல நீங்க சேர்த்தி இல்லை. நீங்க என் சொந்தம். என்னோட தாய்மாமா. அவ்வளோ தான். இந்த குடும்பத்துக்குள்ள யார் வரனும், வரவேண்டாம்ன்னு நீங்க சொல்லாதீங்க…” என்றாள் அதைவிட கோபத்துடன்.
வார்த்தைகள் முற்ற காவேரியை ராம்நாத் மறக்க பேச்சுக்கள் வலுத்து மொத்த விஷயமும் காவேரியின் முன்பே வெளிப்பட்டு போக அவமானப்பட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினார் ராம்நாத்.
“கௌரவ் வேண்டாம். வேற இடம் பார்க்கறேன். நீ திரும்ப சிட்னி கிளம்பும் போது கல்யாணம் முடிஞ்சு தான் போகனும்…” என உறுதியாக கூறிய ஸ்ரீவத்சனின் பேச்சில் மொத்தமாய் உடைந்துபோனாள் பிரத்யுக்ஷா.
“கல்யாணம் தானே? ஏற்பாடு செய்ஞ்சுக்கோங்க. அதுக்கு நான் இருந்தா தானே?…” என்றவள் கோவையிலிருந்து சென்னையை நோக்கி பயன்பட அனைவரின் கண் பார்வையிலிருந்தும் பிரத்யுக்ஷா என்பவள் மறைந்திருந்தாள்.
இதனை ஸ்ரீவத்சன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. கோபம் ராம்நாத் மேல் அத்தனை கோபம்.
அதன்பொருட்டு மகளிடம் கடுமை காண்பிக்க இயலாமையையும், கண்ணீரையும் கண்களில் காண்பித்தவள் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்க சென்ற இடமும், தடமும் தெரியவில்லை.
முதன்முறையாக ஸ்ரீவத்சன் நொறுங்கி செய்வதறியாமல் நின்ற சூழ்நிலை அதுவாக தான் இருக்கும்.
ஒருபுறம் காவேரி மீண்டும் சுகவீனத்திற்கு ஆளாக, மறுபுறம் மகளை காணவில்லை.
ஸ்ரீவத்சன் சென்று நின்றதென்னவோ ஆகர்ஷனிடம் தான். தன்னால் ஆனா அனைத்தையும் செய்தவருக்கு இதை தவிர வேறு அடுத்ததாய் தோன்றவில்லை.
“தினேஷ்…” என பல்லை கடித்த ஆகர்ஷன் அடுத்ததாய் தொடர்புகொண்டது ஹோம் மினிஸ்டர் தயாளராஜை தான்.
கண் சிமிட்டும் நேரங்களில் என்ன ஏதென்று தெரிவதற்குள் அடுத்தடுத்த நடவடிக்கைகள்.
ஆகர்ஷனின் பாதுகாப்பினுள் பிரத்யுக்ஷா வந்து சேர அப்போது தான் அனைவருக்குமே உயிர் வந்தது.
பிரத்யுக்ஷா கிடைத்த மறுநாளே தலைப்பு செய்தியில் வரிசையாக தயாளராஜ் தினேஷ் பற்றிய செய்திகள் இடம்பெற்றது.
இதற்கு அவரின் மகன் தினேஷும் உடந்தை. காவல்த்துறை பிடியிலிருந்து தப்பித்த தினேஷ் நாக்பூர் சாலையில் லாரி ஒன்றில் அடிபட்டு உயிருக்கு போராட்டம்.
நடந்த விபத்தில் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட இருவரின் உடல்நிலை கவலைக்கிடம்.
இப்படியாக செய்திகள் காட்டுத்தீயாக பற்றிக்கொண்டது. புறநகர் சாலையில் தன் கருப்பு நிற கிராண்ட் செரோகியின் பானேட்டின் மீது அமர்ந்திருந்த கௌரவ்வின் கைப்பேசி இசைத்தது.
“என்ன பண்ணியிருக்க கௌரவ்? அதுவும் என்னை கேட்காம இதென்ன பழக்கம்? இது நம்ம பிஸ்னஸ்க்கு மட்டுமே பயன்படுத்தறது. அவள காப்பாத்த நீ எதுக்கு மெனக்கெடனும்? அதான் உன்னையே வேண்டாம்ன்னு சொன்னாளே?…” என்று படபடவென்று பொரிந்தார் ராம்நாத்.
“உங்ககிட்ட எனக்கு பிரத்யுவை கேளுங்கன்னு சொன்னேனா?…” நிறுத்தி நிதானமான வார்த்தைகள் அவனிடமிருந்து வர தடுமாறினார் ராம்நாத்.
“இப்போலாம் நீ ரொம்ப மாறிட்ட கௌரவ். உன்னை வேண்டாம்ன்னு சொன்னவளை காப்பாத்த நினைச்சதோட இப்ப நீயும் சிக்கல்ல மாட்டி இருக்க. அந்த ஹோம் மினிஸ்டர் என்னவேணாலும் செய்வான்…”
“செய்யும் போது பார்த்துக்கலாம். அப்பறம் என்ன சொன்னீங்க? அது உங்க தங்கச்சி பொண்ணில்லையா? அவளை காப்பாத்தனும்ன்னு உங்களுக்கு ஏன் தோணலை?…” என்றான் அவரிடம் தெளிவாக.
“அது… அது…”
“எதுவும் இருக்கட்டும். இது பிரத்யுக்ஷாவுக்காக மட்டும் இல்லை. ஆகர்ஷனுக்காகவும்…” என்று சொல்ல ராம்நாத் நெஞ்சே வெடித்தது.
“ஆமா, உங்க உயிரை காப்பாத்தின ஆகர்ஷனுக்கு என்னால முடிஞ்சது. அதுவும் இல்லாம பிரத்யுக்ஷா நம்ம வீட்டு பொண்ணு. சாருக்கு ஒண்ணுன்னா இப்படித்தான் பேசுவீங்களா?…” என்று கண்டனத்துடன் அவன் கேட்க இவருக்கு தான் நெஞ்சம் வலித்தது.
நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது இந்த உயிர் ஆகர்ஷன் தந்தது என்று கௌரவ் அவரிடம் சொல்லாமல் இருந்ததே இல்லை.
அந்த வார்த்தைகளை அறவே வெறுத்தார் ராம்நாத். நன்றியோடு இருக்கவேண்டும் என்னும் அறிவுரை வேறு.
இப்போதும் அவன் அதனை கூற, மகனிடம் அதிகம் வாதாடமுடியாமல் அவர் திகைத்திருக்க,
“செகென்ட் லைன் கால் வருது…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் கௌரவ்.
“சாரே போட்டோ அனுப்பிருக்கேன் பாத்தீயளா?…” என்றொரு கட்டை குரல் அவனுக்கு மறுபுறம் இருந்து.
“நான் பார்த்துக்கறேன்…” என்றவன்,
“ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க?…” என்றான் அவன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்துக்கொண்டே.
“நீங்க சொன்னமாதிரி அவனோட உசுர் போவாம லேசா தட்டி போட்டேன். பொறவு அந்த வண்டில இருந்த கேமராவ எல்லாம்கழட்டினது எங்கையில தான் இருக்கு. நேரா வந்து தாரேன்…”
“Harley Davidson பைக்…” கௌரவ்வின் இதழ்கள் முணுமுணுத்தது.
அவன் பேசிக்கொண்டிருக்க கௌரவ்வின் பார்வை முதலில் விபத்தாகியிருந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அதன் பின் மருத்துவமனையில் இருந்தவளின் புகைப்படத்தையும் அடுத்தடுத்து புருவச்சுளிப்புடன் பார்த்தது.
“யார் என்னன்னு விவரம் தெரிஞ்சதா?…” என்றான் கௌரவ்.
“பொண்ணு மெட்ராஸ் தான். வருஷத்துக்கு ஒருக்கா இப்படி தானா ஒத்தையில கெளம்பிரும் போல இமாச்சலம் வரைக்கும் வண்டில. எம்புட்டு தெகிரியம் பார்த்துக்கிடுங்க….”
“ஹிமாலயன் ரைடர்…” மீண்டும் சத்தமின்றிய வார்த்தைகள் அவனிடம்.
“நாக்பூர்ல அந்த பயல தட்ட வந்த கேப்புல இது வம்பா சிக்கிடுச்சு. இன்னும் மயக்கம் தெளியல…”
“ஹ்ம்ம்…” என்றான் கௌரவ்,
“பொறவு, அந்த புள்ள பேர் கூட த…”
“ப்ச், அநாவசியங்கள் தேவையில்லை. அங்க என்ன நடக்குதுன்னு மட்டும் சொன்னா போதும்…” என்று அழைப்பை துண்டித்தான் கௌரவ்.
அவளைப்பற்றி எதையும் அறிந்துகொள்ளும் அவசியம் இல்லை என்றவன் கவனத்தை கடும் கோபத்துடன் திரும்பி பார்க்க வைத்தாள் அவள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.