சூழ்நிலை என்றாலும் ஸ்ரீவத்சன் தங்கிவிடுவார் என்று யாருமே நினைக்காத பொழுது உடைந்து மகள் கிடைத்துவிட்ட செய்தி வந்துவிடாதா என வார்த்தையற்று அவர் அமர்ந்திருந்த காட்சிகள் எல்லாம் அவர்களது கனவாகிவிட கூடாதென்னும் கவலையில் சேரும் தகுதி பெற்றது.
ஆகர்ஷன், கிருஷ்ணகுமார் சொல்லியதும் செய்ததும் என்று இதோ இங்கே வரை அவரை தாங்கி பிடித்திருந்தது அவர்கள் தான்.
இப்போது மீண்டும் பார்வை ஆகர்ஷன், கௌரவ்வை தான் சென்று சேர்ந்தது.
உடன்பிறந்தவர்களை போல என்னவொரு பாந்தமான பந்தம் என்று பார்த்திருக்க அவரின் பார்வை உறுத்தலில் அவர்கள் இருவருமே ஒரே நேரம் திரும்பி பார்த்தனர்.
என்ன ஒன்று ஆகர்ஷன் முகத்தில் மெல்லிய புன்னகையும், கௌரவ் முகத்தில் எப்போதும் போலான அமைதியும்.
“ஓகே, நானும் கிளம்பறேன். ஒரு ரெண்டுநாள் கழிச்சு ஹாஸ்பிட்டல் வர்றேன், அம்மாவோட…” என்று சொல்லி கௌரவ் கை நீட்ட,
“எதிர்பார்த்துட்டிருப்பேன்…” என ஆகர்ஷனும் கை குலுக்கினான்.
“கௌரவ்க்கு தெரியுமா? தெரியாதா?…” என ஸ்ரீவத்சன் பிரத்யுக்ஷாவிடம் கேட்க,
“அதுதான் எனக்கு தெரியலை. ஆனா தெரிஞ்சா இத்தனை அமைதியா இருக்க முடியுமா? ம்ஹூம், தெரியலை…” என பிரத்யுக்ஷா சொல்லி சலிப்பாய் பார்க்க, ஒன்றும் புரியாமல் அவர்களை தலையை பிய்த்துக்கொள்ள வைத்தான் கௌரவ்.
அனைவரும் வீட்டிற்கு கிளம்ப அன்றே கோவை கிளம்பிவிடலாம் என்று தேவான்ஷ் காவேரி ஸ்ரீவத்சனிடம் பேச,
“நான் உங்கப்பாட்ட கொஞ்சம் பேசனும். நான் பேசவும் புறப்படறதை பத்தி டிஸைட் பண்ணலாம்…” என்றான் ஆகர்ஷன்.
அப்போது தான் வீடு வந்தே சேர்ந்திருந்தனர். அதுவரை ஸ்ரீவத்சனிடம் எதையுமே ஆகர்ஷன் பேசியிருக்கவில்லை.
பிரத்யுக்ஷா கிளம்பி வந்ததோடு இப்போது வரை அவளின் நலன், அதற்கடுத்து செய்யவேண்டியவை என்று தான் பரபரப்புடன் நிமிடங்கள் நகர்ந்ததே தவிர வேறு விஷயங்கள் பேசவும், கலந்துரையாடவும் எந்தவித சூழ்நிலையும் அமையவில்லை.
இப்போது ஆகர்ஷன், கிருஷ்ணகுமாருக்கு நன்றிகளை சொல்லிவிட்டு தேவான்ஷ் கிளம்பவேண்டும் என்று கூற ஸ்ரீவத்சன் யோசிக்க ஆகர்ஷன் இடையில் வந்துவிட்டான்.
“தனியா பேசலாமா? இல்ல, இங்கயே பேசலாமா?…” என கேட்க, ஸ்ரீவத்சன் அவனின் நேரடி கேள்வியில் தடுமாறி பார்த்தார்.
“சரி வாங்க…” என்றவன் முன்னே நடக்க,
“பேசிட்டு வர்றேன்…” என்று அவன் செல்லும் திசையில் ஸ்ரீவத்சன் செல்ல பிரத்யுக்ஷா ஆகர்ஷனை தவிப்புடன் பார்த்தாள்.
அவளின் பார்வையும், பதட்டத்தையும் கண்டு கண் சிமிட்டியவன் லேசாய் தலைசாய்த்துவிட்டு அறைக்குள் செல்ல ஸ்ரீவத்சன் வரவும் அமர செய்து தானும் அருகே அமர்ந்தான்.
“பாலிஷ்டான எந்த பேச்சும் வேண்டாம். ஸ்ட்ரெய்ட்டாவே பேசலாம். நான் கௌசல்யா பையன்றது தான் உங்க பிரச்சனையா?…” என்றான் ஆகர்ஷன்.
அவன் இத்தனை நேரடியாக கேட்பான் என்று ஸ்ரீவத்சன் எதிர்பார்க்கவில்லை.
அவர்களின் காதல், இருவரின் அன்பு என்று இதைக்கொண்டு ஆரம்பிப்பான் என்று நினைத்தால் கொஞ்சமும் தளைந்து பேசாமல் நிமிர்வுடன் அவரிடம் நேரடியாக கேட்டவனை எதிர்கொள்ள கொஞ்சமே தடுமாற்றம் தான் ஸ்ரீவத்சனுக்கு.
“என் அம்மாவுக்கு அந்த கல்யாணம் ரெண்டாவதுன்றது நெருடலா? இல்லை முதல் கல்யாணத்துல குழந்தை இருந்தது மறைக்கப்பட்டது நெருடலா? இதுல எந்த விஷயம் ஒரு கல்யாணமே வேண்டாம்ன்னு உங்களை முடிவுக்கு வர சொல்லுச்சு?…” என்று கேட்க பதிலில்லை அவரிடம்.
“என் அம்மா வாழ்ந்தது மரியாதையான வாழ்க்கை. அது எந்தவகையில உங்களுக்கு சங்கடமா தெரியுது? ஏன் செகென்ட் மேரேஜ் அத்தனை பெரிய க்ரைமா?…” என்று கேட்க,
“இல்ல நான் அந்த வகையில சொல்லலை…” என்றார் ஸ்ரீவத்சன்.
மகளிடம் அத்தனை ஓங்கி பேசியவரால் இப்போது இந்த சூழ்நிலையில், இத்தனை நடந்த பின்னும் அதேபோல பேச முடியவில்லை.
“யாருக்கு பதில் சொல்லனும்ன்னு பயப்படறீங்க நீங்க?…” என அடுத்ததாய் கேட்க இதற்கும் மௌனம் தான்.
“நீங்க கேட்ட கேள்விகள் தான் இது எல்லாமே. இதுக்கு உங்ககிட்டயே பதில் இல்லைன்னும்போது நீங்க பன்றது தர்க்கம்ன்னு உங்களுக்கு புரியுதா?…” என்றான்.
அதுவரை அத்தனை திடமாய் பேசிக்கொண்டிருந்தவன் முகமும், பார்வையும் மாற, அவனுடல் லேசாய் தளர்ந்தது.
“அவங்க என் அம்மா ஸார். என்னால அவங்க நிம்மதியை குறைக்கிற விதமா நடந்துக்கவே முடியாது. அப்படி இருக்கும்போது அவங்களை பத்தி இந்தமாதிரி பேசின உங்களை நான் இத்தனை அமைதியா ஹேண்டில் பன்றதே பெரிய விஷயம்….” என்றவன்,
“எல்லாத்துக்கும், எல்லாத்துக்கும் ஒரே காரணம் பிரத்யுக்ஷா…” எனும்பொழுதே அவன் குரல் தழுதழுத்தது.
“என் அப்பா பிறந்தநாள்ல தான் எனக்கு இன்னொரு உறவா உங்க பொண்ணு கிடைச்சா. என்னை மாதிரியே தாயை தேடற பிள்ளையா கண்ணீரோட. இந்த நிமிஷம் வரை எனக்குள்ள அந்த நாள் ஓடிட்டே தான் இருக்கு…” என்றவன்,
“காவேரி ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அன்னைக்கு பிரத்யு தான் எல்லாரோடையும் இருந்து போகலாம்ன்னு சொல்லி கேட்டதாவும், அவளுக்காக தான் அவங்க அன்னைக்கு இருந்ததாகவும், அதனால அந்த ஆக்ஸிடன்ட் நடந்ததாவும் சொன்னா. அன்னைக்கு நான் இருக்க சொல்லலைன்னா அம்மாவுக்கு அப்படி நடந்திருக்காதுன்னு சொல்லிட்டே இருப்பா…” என்றவன்,
“உங்களோட வற்புறுத்தலுக்காக மட்டும் தான் சிட்னி வந்து படிச்சா. அம்மாவை பிரிய முடியாமா அங்க அவ பட்ட கஷ்டம். ப்ச், உண்மையா உங்கமேல இப்பவும் எனக்கு அந்த கோபம் இருக்கு. பிள்ளைங்க மனசை, உணர்வை புரிஞ்சுக்க கொஞ்சமும் நீங்க முயற்சி பண்ணலையேன்னு…” என்றான் வெளிப்படையாக.
ஸ்ரீவத்சன் மௌனம் மேலும் நீண்டது. அவன் பேச பேச தான் தன் குடும்பத்தை நடத்தியவிதத்தில் அமைதியாகிவிட்டார்.
“இவ்வளோ பிடிச்ச அம்மாகிட்ட திரும்ப போகும்போது அந்த சந்தோஷத்துக்கு இணையா சிட்னியை விட்டு போறோமேன்னு வேதனையுமே இருந்தது பிரத்யுக்கிட்ட…” என்றதும் ஸ்ரீவத்சன் நிமிர்ந்து பார்க்க,
“அம்மாவை விட்டுட்டு போறது மாதிரியே தோணுதுன்னு சொன்னா என்னை பிரியும் போது. அவ என்னோட பிரத்யு. எப்படி விட சொல்றீங்க?…” என்றவன்,
“ம்ஹூம், விடமுடியாது. கொஞ்சம் உங்களோட ஈகோவை விட்டு வெளில வந்து பாருங்க. மனசுனா என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க…” என்றான்.
“உங்களுக்கு உங்க வொய்பை ரொம்ப பிடிக்கும்ன்னும் சொன்னா பிரத்யு. அவங்களை எப்படியெல்லாம் பார்த்துப்பீங்கன்னு. அப்படி இருக்கும்போது உங்களால பிரத்யுவை ஏன் புரிஞ்சுக்க முடியலை?…” என்று கேட்க ஸ்ரீவத்சன் ஆடிப்போனார்.
ஒவ்வொரு வார்த்தைகளும் இப்போதிருக்கும் மனநிலையில் அவரை பெரிதும் பாதித்தது.
“வேலிடான ஒரு ரீஸன் இல்லை. அதுக்காக நாங்களும் சரின்னு போகமுடியாதே. யோசிங்க. வீட்டுல கலந்து பேசுங்க. நாம எடுக்கற எல்லா முடிவுமே எல்லா நேரமும் சரியாகிடாது. நல்ல பதிலை எதிர்பார்க்கறேன். நல்ல பதிலா தான் வரும்ன்னு நம்பறேன்….” என்றவன்,
“திரும்ப பசியோட என்னால பிரத்யுவை பார்க்க முடியாது. நீங்க பேனிக் ஆகறதுக்காக இதை சொல்லலை நான். ஆனாலும் சொல்லனும். இல்லையா?….” என்று சொல்லி எழுந்துகொண்டான்.
“பேச நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா இப்போவே எல்லாம் பேசிட்டா உறவான பின்னாடி பேச எதுவுமிருக்காதே. மெதுவா பேசலாம். பொறுமையா, நல்ல சூழ்நிலையில், சந்தோஷத்தோட, முக்கியமா உரிமையோட பேசலாம்…” என்று சொல்லியவன்,
“நீங்க ஏதாவது கேட்கனுமா?…” என்று கேட்க அவர் எங்கே அவனிடம் கேட்பது?
வாயடைத்து போயிருந்தார் ஸ்ரீவத்சன். அவரின் முகம் கண்டவன் மீண்டும் மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டான்.
“என்னோட அடையாளம் ஆகர்ஷன். கிருஷ்ணகுமார் தான் அப்பா, அம்மா ஷ்யாமளா. இதுல எந்த மாற்றமும் இல்லை. உறவால, உணர்வால எல்லாமே. ஆனா அதுக்கும் மேல ஒரு ஆத்மபந்தம், உயிரால அது கௌசல்யா, கிருஷ்ணகுமார். என்னைக்கும் அது மாறாது….” என்றவன்,
“தெய்வத்தோட சந்நிதில அந்த தெய்வத்தின் பாதத்துல எரியற தூங்காவிளக்கு மாதிரி. ஆராதிக்க கூடிய கற்பூர தீபம் மாதிரி. இந்த எங்களோட பந்தம், ப்ச், அது என் கஸ்தூரி மானுக்கு புரியும்….” என்றான் சின்ன சிரிப்புடன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.