அளவான பேச்சுக்கள் தான் எப்போதும். இப்போதும். அது ஷ்யாமளாவிற்கு அத்தனை பிரியத்தை கூட்டியது அவன் மேல்.
“ஓகே அந்த குட்நியூஸ் சொல்லிடலாமா?…” என ஆகர்ஷன் அவர்களின் கவனத்தை திருப்பினான் தன்மேல்.
“இன்னுமா சொல்லலை?…” என்று கேட்க,
“நீங்க இல்லாமலா? அதான் கூப்பிட்டேன்…” என்ற ஆகர்ஷன் கௌசல்யாவை பார்த்தான்.
“எனக்கு கல்யாணம் பண்ணிவைக்கலாம்ன்னு வீட்டுல முடிவு பண்ணியிருக்காங்க கௌசிம்மா…” என ஆகர்ஷன் சொல்ல,
“அடப்பாவி…” என்றார் ஷ்யாமளா.
அவரின் அதிர்வில் கௌரவ் நமுட்டு சிரிப்புடன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு இருக்கையில் பின்னால் சாய்ந்தமர கௌசல்யா முகத்தில் அத்தனை ஆனந்த கூத்தாடல்.
அவரின் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் திக்குமுக்காடி போய் அமர்ந்திருக்க ஷ்யாமளா இப்போது கௌசல்யாவை தான் பார்த்தார்.
போதும் இந்த பிறவிக்கு இவர் அனுபவித்தது. அடுத்த பிறவி ஒன்று இருந்தால் மகனோடு அவரின் வாழ்வு வலியின்றி சந்தோஷம் நிறைக்க இருக்கவேண்டும் என்றுதான் வேண்டிக்கொண்டார்.
“பொண்ணு பார்த்தாச்சா?…” ஆசையுடன் கௌசல்யா கேட்க,
“ஹ்ம்ம், ஆமா பார்த்துட்டாங்க…” என்ற ஆகர்ஷனின் மனதில் அத்தனை துள்ளல்.
“ஓஹ்….” என்றவர் தலையசைக்க,
“நீங்க பார்க்க வேண்டாமா? அவ்வளோ தானா? ஓஹ், இதென்ன ரியாக்ஷன்?…” அன்று அத்தனை பேசினான் அவருடன்.
கௌசல்யா தான் திணறி போய் அமர்ந்திருந்தார். கௌரவ் எப்படி எடுத்துக்கொள்வான் என்று ஒருபுறம் மனம் பதறியது.
கௌசல்யாவை பொறுத்தவரை கௌரவ்விற்கு இந்த அன்பு ராம்நாத்தை காப்பாற்றியதனால் ஆகர்ஷன் மீதும், அவனை சார்ந்தவர்கள் மீதும் உண்டான அன்பு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்.
கௌரவ்விற்கு எல்லாம் தெரிந்து என்று அவருக்கு தோன்றவும் இல்லை. தோன்ற கௌரவ் விட்டதும் இல்லை.
இப்போது தன் அதீத சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் முடியாமல், கட்டுப்படுத்தவும் முடியாமல் ஒருவிதமான மனச்சோர்வில் விழிகள் கலங்கியது.
“வொய்டா தம்பி…” நிமிர்ந்து பார்த்து வலது கை விரித்து பாவம் போல் சொல்லிய ஆகர்ஷன் மீண்டும் கைப்பேசியில் குனிய, கௌசல்யா திகைப்புடன் பார்த்தார் கௌரவ்வை.
அவன் முகத்தில் அதிர்வோ, திகைப்போ எதுவுமே இல்லாத ஒரு இயல்பான பாவனை தான்.
ஆகர்ஷன் அதனை உணர்ந்தே சொல்லியிருந்தாலும் அந்த அழைப்பும், உரிமையும் பிடித்தது கௌரவ்விற்கு.
ஷ்யாமளாவும் அதனை கவனித்து உணர்ந்தார். எந்த சூழலிலும் கௌரவ்வின் மனதிற்கு சிறு வருத்தமும் நேராமல் அவன் எப்போதும் நன்றாக இருக்கவேண்டும் என்று பிராத்தித்துக்கொண்டார்.
ஆம், கௌரவ் அத்தனையும் ஷ்யாமளாவின் மூலம் நேரடியாக கேட்டு அறிந்திருந்தான். தான் அறிந்துகொண்டதை அவன் தெரியபடுத்திய ஒரே நபர் ஷ்யாமளா மட்டுமே.
அதுவுமே அவனுக்கு இன்னும் முழுதாய் நடந்தவை எல்லாம் தெரியவேண்டியதிருக்க தனக்கும் தெரியும் என்பதை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம்.
“உனக்கு தெரியும்ன்னு நீ சொல்லலைன்னாலும் ஆர்ஷ் எப்படியும் கண்டுபிடிச்சிருவான் கௌரவ்…” என்றவரிடம் சத்தியம் பெற்றுக்கொண்டவன் இன்றுவரை அதனை காப்பாற்றி, ஷ்யாமளாவையும் அவரின் வார்த்தையை காப்பாற்ற வைத்தான்.
இப்போது இயல்பான இந்த அண்ணன் தம்பி உறவில் ஷ்யாமளாவிற்கு உள்ளமெல்லாம் உவகை.
இருவரும் எப்போதும் இப்படியே இருக்கவேண்டும் என்னும் பேரவாவில் நெகிழ்ந்து போய் அவர் அமர்ந்திருந்தார்.
“ஹ்ம்ம், இங்க இருக்கு போட்டோ…” என்று ஆகர்ஷன் கௌசல்யாவிடம் தன் கைப்பேசியை நீட்டி,
“எனக்கு பொண்ணு எப்படி இருக்கனும்னு சொல்லுங்க…” என்று கைப்பேசியை தராமல் அவரிடம் கேள்வி எழுப்ப கௌசல்யா பேச்சற்று பார்த்தார்.
“நான் எப்படி, எனக்கு எனக்கு…” என இரு கைகளையும் மார்பின் குறுக்கே வைத்து தெரியவில்லை என்பதை போல தடுமாறி அனைவரின் முகத்தையும் பார்த்தார் அவர்.
“சும்மா இந்த பையனுக்கு இப்படி தான் பொண்ணு இருக்கனும். இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு எதாச்சும் ஒரு ஐடியா இருக்குமே. அதை சொல்லுங்க…” என்று ஆகர்ஷன் கேட்க அதில் தொனித்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் கௌசல்யாவை சுருட்டியது.
“பொண்ணு…” என்றவர் வார்த்தைகளை தேடி திரட்ட,
“சும்மா சொல்லுங்க. ஒரு பையனுக்கு அவன் அம்மா எப்படி பொண்ணு தேடுவாங்களோ அப்படி….” என ஷ்யாமளா கூற,
“பொண்ணு நல்ல தைரியமா இருக்கனும். கண்ணாவை பத்திரமா பாத்துக்கனும்.கண்ணா கூடவே இருக்கனும். எப்பவும் சந்தோஷமா இருக்கனும். எந்த சூழ்நிலையிலையும் யார்கிட்டயும் துணிச்சலா பேசனும்….” என்று கூறும்பொழுதே தொண்டை அடைத்தது.
“எப்பவும் எல்லா நிலைமையையும் சமாளிக்க கூடிய பொண்ணா இருக்கனும். அன்பா இருக்கனும். கண்டிப்பா பார்த்துக்கனும். எல்லாத்துக்கும் மேல அம்மாவை விட கண்ணாவை கண்ணுக்குள்ள வச்சு தாங்கனும்….” என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் நெஞ்சம் கலங்க அவர் கூறினார்.
மொத்தத்தில் தன்னை போல் அந்த பெண் இருந்துவிட கூடாது என்பதன் மறைபொருளை அவர் உணர்த்த முயன்றதை மற்றவர்கள் உணர்ந்தனர்.
“எல்லாமே சேர்ந்து என் அம்மாவை மாதிரியே ஒரு பொண்ணுன்னா….” ஆகர்ஷன் தொண்டையை செருமிக்கொண்டு கேட்க,
“அம்மா மாதிரியா?…” என்றவரின் மனதை உலுக்கியது அந்த வார்த்தை.
‘தன்னை போல் இன்னொருத்தி சாபம் பெற்றதை போல் வாழவே கூடாதே. இதில் தன்னை போலா?’ என ஒருமனம் அவரை சாய்க்க, ‘ஆகர்ஷனுக்கு இப்போது அம்மா ஷ்யாமளா தானே? அவரை மாதிரி இருக்கட்டும்’ என இன்னொரு மனம் அவரை தாங்கி பிடித்தது.
“ஹ்ம்ம், ஆமா. பாருங்க நீங்களே…” என்றவன் கைப்பேசியை அவரிடம் நீட்ட தயக்கத்துடன் வாங்கி பார்த்தவர் விழிகள் அதிர்ச்சியில் பெரிதாய் விரிந்தது.