“என்ன பார்க்கறீங்க? வாங்க…” என பிரத்யூக்ஷா அழைக்கவும் தான் அவளருகில் வந்தான்.
“அம்மா…” ஆகர்ஷன் அவரை அழைக்க,
“கண்ணா அம்மா, நான்,,, நான்,,, அம்மா…” என்றவருக்கு வேறு பேச முடியவில்லை.
உதடெல்லாம் நடுக்கத்தில் துடிக்க மகனின் முகம் பற்றி அவனின் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டார் கௌசல்யா.
“அம்மாவை மன்னி…” என சொல்லவந்த வார்த்தைகளை அவன் நிறைவுபெற செய்யாமல் தடுத்தவன்,
“என்னோட அம்மா என்னைக்கும் இந்த வார்த்தையை யார்க்கிட்டயும் கேட்கக்கூடாது….” என்றவனின் பேச்சில் இன்னுமே அவர் நிலைகுலைந்து போக,
“கண்ணா…” என்றவர் அவனின் கன்னம் பற்றி மகனையும், கணவரின் புகைப்படத்தையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
அப்போதுதான் பிரத்யூக்ஷாவிற்குமே இது தெரியும் என்றே தெரிய அவளையும் அவர் பரிதாபமாய் பார்க்க,
“என்ன பார்க்கறீங்க? இப்படி ஒரு பிள்ளையை பெத்து குடுத்துட்டு கண்ணீர் வேற? சந்தோஷமா இருங்க த்தை…” என்றாள் அவள் அவரை அணைத்து.
பேசப்படாத அனைத்து உணர்வுகளும் புரிதலோடு கண்ணீரில் பகிரப்பட்டது அங்கே.
சிலவிஷயங்கள் பேசப்படாமல் இருப்பதுவும் அழகும், அமைதியும். கூடுதலாய் இங்கே நிம்மதிக்கு வழி காண்பித்தது.
அந்த அறையில் இருந்த ஒவ்வொன்றையும் ஆகர்ஷன் கௌசல்யாவிடம் காண்பிக்க பார்த்தவரின் மனவுணர்வை வார்த்தைகளால் வரிக்க இயலாதளவிற்கு நுண்ணுணர்வுகள் மையம் கொண்டிருந்தது.
வெகுநேரம் அங்கே இருக்க முடியவில்லை. மீண்டும் கிருஷ்ணாவின் புகைப்படத்தை பார்த்தவர் அதனை கைகூப்பி வணங்க, கௌசல்யாவின் முகம் பார்த்தவர்களுக்கும் நெஞ்சை பிசைந்தது.
எத்தகைய வாழ்வை அவர்கள் வாழ்ந்திருந்தனர் என்றால் இப்படி நெஞ்சில் தெய்வமாய் குடியேற்றி இருப்பார் என்று பார்க்க தோன்றியது.
அந்த அறையிலிருந்து வெளியே வரும்முன் ஷ்யாமளாவுமே வந்துவிட்டார் அவர்களை தேடி.
“நீ கீழ இரு ஆர்ஷ். நான் கொஞ்சநேரத்துல கூட்டிட்டு வர்றேன்…” என்று ஆகர்ஷன், பிரத்யூக்ஷாவை அனுப்பிவிட்டு ஷ்யாமளா கௌசல்யாவை அழைத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்றார்.
“நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க அண்ணி. கீழே பிரத்யூ அம்மாப்பா இருக்காங்க…”
“ஹ்ம்ம்…” என்பதை தவிர வேறு எதையும் பேசவில்லை கௌசல்யா.
“உங்களை கோவில்கிட்ட வச்சு பார்த்தன்னைக்கு தான் ஆர்ஷ்க்கு அம்மா நீங்கன்னு தெரிஞ்சது….” என்றவர்,
“உங்க திங்ஸ் எல்லாம் அம்மா வைக்கவே விடலை. நான் தான் என்னைக்காவது ஆர்ஷ்க்கு விஷயம் தெரியவரும்போது காமிக்கனுமேன்னு பத்திரம் பண்ணி வச்சிருந்தேன். என் அம்மாவுக்கு தெரியாம தான்….” என்றார் சிறு மென்னகையுடன்.
“விஷயம் தெரிஞ்ச அன்னைல இருந்து ஆஸ்திரேலியா கிளம்பற வரைக்கும் அவன் இந்த ரூம்ல தான் இருந்தான். கூட நாங்களும். அப்போ போனவன் உங்களை திரும்ப ஹாஸ்பிட்டல்ல பார்க்கிற வரைக்கும் அந்த ரூம்க்கு போகவே இல்லை. ஆனா இப்போ அந்த ரூம்க்கு போகாம அவன் இருந்ததே இல்லை…” என்றார்.
மகனின் ஒவ்வொரு விஷயங்களும் ஷ்யாமளாவின் மூலம் தெரிய வர கௌசல்யா மீண்டும் தனக்குள்ளேயே மருகினார்.
நடந்துவிட்ட எதற்கும் இப்போது ஈடு செய்ய முடியாத துர்பாக்கியத்தில் தன்னை நினைத்தவர் மௌனமாகி போனார்.
என்ன பேசிவிட, என்ன சொல்லிவிட முடியும்? அதற்குள் கிருஷ்ணகுமார் வந்து அழைத்துவிட அனைவரும் கீழே வந்தனர்.
அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டு வரவேற்பிற்கு கிளம்ப கௌசல்யா மகனை முன்பை விட அதிகத்திற்கும் பார்த்தது.
இந்தவயதில் எத்தனை பக்குவமாய், எவ்வளவு அனுசரணையாய் இருந்திருக்கிறான் என்று.
அவன் முன் தான் ஒன்றுமே இல்லை என்று தோன்ற இன்னும் சோர்ந்துபோனார்.
மண்டபம் வந்திறங்க அங்கே கௌரவ் தயாராய் நின்றான். அவர்களை பார்த்ததும் புன்னகைக்க, அதுவரை ஆகர்ஷனை மட்டுமே எண்ணியிருந்த தாய் மனது இப்போது கௌரவ்வை பார்த்ததும் பெரிதும் தவிக்க துவங்கியது.
என்ன கொடுமை இது என்று இறைவனை சபித்துவிடுவோம் என்பதை போல் மனம் துவண்டுவிட,
“என்னம்மா, டயர்டா, முகமே சரியில்லையே?…” என்றான் கௌரவ் அவரை பார்த்ததும்.
“இல்லப்பா, இல்லையே….” என தடுமாறி சொல்ல,
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க கௌரவ். அதான்…” என்ற ஆகர்ஷன் கௌசல்யாவை பார்த்து கண் சிமிட்டி,
விக்ரமிற்கு தான் மண்டை காய்ந்தது. தகப்பனுக்கும், அண்ணனுக்கும் இடையில் எதுவும் மனஸ்தாபமோ என்று நினைத்தான்.
வரவேற்பு நிகழ்ச்சி இனிதே ஆரம்பிக்கப்பட பிரத்யூக்ஷாவிற்கு மயில்வர்ண நிறத்தில் லெஹெங்காவும், அதே நிறத்தில் ஆகர்ஷனின் உடையும் இருந்தது.
ஆடம்பரமான வரவேற்பு விழா தான். சற்றுநேரத்தில் எல்லாம் விருந்தினர்கள் வருகையால் அந்த இடமே திணறிவிட்டது.
பாதுகாப்பு ஒருபக்கம் கவனமாய் கையாளப்பட பிரபலங்களின் வருகை வரிசையாய் நடந்தேறியது.
அத்தனைபேரும் வாழ்த்திவிட்டு செல்ல ஸ்ரீவத்சன் அனைத்தையும் பார்த்தபடி இருந்தார்.
கௌசல்யாவின் விழிகள் ஆனந்தத்தில் மிதக்க பிள்ளைகளை பார்த்து பூரித்து போனார் கௌசல்யா.
நடந்த அனைத்தும் நிறைவின் நிறைவாய் அரங்கேறி சிறப்புடன் நடந்து முடிந்தது.
வரவேற்பு முடிந்த ஓரிருவாரத்தில் பிரத்யூக்ஷா மீண்டும் படிப்பிற்காக சிட்னி செல்லவேண்டும்.
“இது இந்த முடிவுக்கு ஏன் வந்தீங்க?…” என்றாள் பிரத்யூக்ஷா தனிமையில் கையில் பயண சீட்டுக்களை பார்த்துவிட்டு.
“வேற என்ன பண்ண சொல்றடா? உன்னை தனியா விட்டுட்டு நான் எப்படி இங்க இருக்க?…” என்றான் ஆகர்ஷன்.
ஆம், ஆகர்ஷனும் அவளுடன் சிட்னி கிளம்புவதாய் முடிவெடுத்திருந்தான். பிரத்யூக்ஷா படிப்பு முடியும்வரை அங்கே இருப்பதாய் தீர்மானம்.
ஆனால் அவளால் தான் அதனை ஏற்க முடியவில்லை. தன் கணவன் தன்னுடன் வருவதில் சந்தோஷமே.
அதையும் தாண்டி மாதம் ஒருமுறையேனும் கௌசல்யாவை பார்ப்பதில் அவனுக்கிருக்கும் அந்த சந்தோஷத்திற்கு விலையே இல்லை.
“எனக்காகவா? அப்போ கௌசி அத்தை…” என கேட்க,
“எனக்காகன்னும் வச்சுக்கலாம் பிரத்யூ. ஒருவிஷயம் நம்ம கண்ணுக்கு முன்னாடி இல்லாம, எங்கன்னே தெரியாம இருக்கிற வரை அதை நினைச்சு நமக்கிருக்கிற தவிப்பு கொடுமை. ஆனா அதே இங்க தான் இருக்காங்க, இப்படி தான் வாழறாங்கன்னு நாம கவனிக்கிற இடத்துல இருக்கும்போது ஒரு நிம்மதி….” என்றவன்,
“இப்போ எனக்குமே அந்த நிம்மதி கிடைச்சிருக்கு. இந்தநிமிஷம் அம்மாவுக்கும் எனக்கு உண்மை தெரியும்ன்னு தெரியும். இருந்தாலும் கௌரவ். எனக்கு இதுவே என் வாழ்க்கைக்கும் போதுமானதா இருக்கு பிரத்யூ….”
“நீங்க அம்மாவை தேடுவீங்களே…” சற்றே கேலியும், லேசாய் கசிந்துவிட்ட கண்ணீருமாய்.
“இதோ இந்த குட்டி அம்மா இருக்காங்களே. குட்டி குழந்தையும் தான். உன்னை நான் பார்த்துக்கனும். என்னை நீ கவனிச்சுக்கோ. எனக்கு இந்த அம்மாவும் முக்கியமாச்சே கஸ்தூரிமானே….” என்றான் அவளின் நெற்றியோடு முட்டி உச்சியில் முத்தமிட்டு.
“இவ்வளோ காதலிக்க கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. ஏன் இப்படி பன்றீங்க?…” என்று கேட்டவளை, அந்த அணைப்போடே தூக்கி சுழற்றினான் ஆகர்ஷன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.