ஆகர்ஷனுக்கும் தன் அறைக்கு எதிரிருக்கும் அறையில் தான் அவள் இருக்கிறாள் என்பதும் தெரிந்திருந்தது.
அவ்வப்போது அதன் வழியே கேட்கும் அந்த ஒற்றை பாடல் தான் அவனை அதிகத்திற்கும் எரிச்சல் மூட்டியதும் கூட.
“இந்த பொண்ணுக்கு வேற பாட்டே தெரியாதா? இடியட்…” என்று கடுப்பாகியும் இருக்கிறான்.
ஏழுமாதங்கள் வரை இப்படி தான் சென்றிருந்தது பிரத்யுக்ஷா பற்றி அவனின் எண்ணங்கள் முழுவதும்.
அன்றிரவு நள்ளிரவாகி இருந்தது அவன் வீடு வர. காரை விட்டு இறங்கியதும் அந்தநேரத்திலும் கஸ்தூரி மான்குட்டியாம் பாடல் அவனின் காதினுள் வந்தமர,
“இன்னைக்கு தூங்கின மாதிரி தான்…” என்று பல்லை கடித்தான்.
காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும்முன் சுஷ்மா வீட்டு கார்டனில் ஏதோ ஒரு உருவம் துணியை சுற்றிக்கொண்டு வருவதை கண்டவன் புருவங்கள் இடுங்கியது.
யார் என்று தெரியவில்லை. அப்படியே விட்டு செல்லவும் மனதில்லை. அத்தனை பாதுகாப்பான பகுதி அது.
சட்டென கண்டுகொள்ளவும் முடியாமல் சத்தமின்றி கார்டனுக்குள் தாவி இறங்கிவிட்டான்.
அத்தனை உயரம் இல்லாததனால் அவனுக்கு அது சுலபமாகவும் இருக்க வந்தவன் அந்த மெல்லிய வெளிச்சத்தில் யார் என்று பார்க்க முயல, மெல்லிய விசும்பல் சத்தம்.
பெண்ணோ என்று நினைத்து அவளை பிடித்து நிறுத்தும் முன் அங்கிருந்த கம்பியில் கால் இடிக்க பொத்தென்று கீழே விழுந்தவள் முகம் ஜன்னல் வெளிச்சத்தில் அப்போது நன்றாகவே தெரிந்தது.
“மம்மீ…” என மெல்லிய அலறலுடன் எழுந்து அமர்ந்தவள் முழங்கையிலும் சிராய்ப்பு.
“ஹேய், என்ன பன்ற நீ?…” என்று வேகமாய் அவளை நெருங்கி ஒற்றை காலை ஊன்றி குனிந்தமர்ந்தான்.
“ஓஹ், அதான் தனியா இருக்க பயமா இருந்ததா?…” என்றான் பொறுமையாய்.
“அதெல்லாம் இல்லை…”
“பின்ன?…”
“இன்னைக்கு என் பர்த்டே. என் மம்மீ ஊர்ல….” என்று சொல்ல அழுகை தொண்டையை கவ்வியது.
பிரிவின் துயர் சிறுபெண்ணை வெகுவாய் தாக்கி இருக்க அவளின் பெற்றோர் மீது அத்தனை கோபம் எழுந்தது ஆகர்ஷனுக்கு.
“சரி அதுக்கு இங்க என்ன பன்ற? அதுவும் இப்படி பூதம் மாதிரி சுத்தினா என்னாகும்?…” என்றான் அதே கோபத்துடன்.
“ரூம்ல தான் சுத்துனேன். என் மொபைல் பால்கனி வழியா கைநழுவி விழுந்துருச்சு இங்க. அதான் கீழ வந்தேன்…” என்றவள் நெற்றியில் அடுக்கடுக்காய் விபூதி, குங்குமம், சந்தானம், மஞ்சள் எல்லாம் வீற்றிருந்தது.
“அப்போ தனியா இருந்துப்ப? பயமில்லை, ஹ்ம்ம்….” என்றான் அவளிடம் மெல்லிய சிரிப்புடன்.
“ம்ஹூம், அது இருக்கும். ஆனா இல்ல…” என்றவளுக்கு தனது கைப்பேசியை தேடும் கவலை.
“அதை அப்பறம் தேடலாம். இப்போ போய் தூங்கு…” என்றவன் அனுப்ப பார்க்க,
“இல்ல, மம்மீ விஷ் பண்ணுவாங்க. மம்மியை பார்க்கனும்…” குழந்தையே தான் என்று நினைக்க வைத்தவனின் மனதையும் உருக்கியது அவளின் கண்ணீர்.
“சரி, என் மொபைல்ல பேசு…” என்று சொல்லியதற்கு அமைதியாக அவள் பார்க்க இன்னும் மாடியில் பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அவள் பேசுவாள் என்றும் நம்பிக்கை இல்லை. அனன்யாவிற்கு அழைத்தவன் எழுந்து வெளியே வரும்படி வரவழைக்க, வந்தவள் பிரத்யுவிடம்,
“சரி போலாம் வா வா…” என அவளை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வந்ததுமே ஆகர்ஷன் முதலுதவி பெட்டியை எடுத்து வந்ததும் தான் அனன்யா அவளுக்கு என்ன என்றே பார்த்தாள்.
காலில் நகம் லேசாய் உடைந்திருக்க, கையில் வேறு தோல் உரிந்து சிராய்ப்பு.
“குழந்தையா நீ? விழுந்து வாரியிருக்க?…” என கேட்க,
“அனு ஹாட் வாட்டர் எடுத்துட்டு வா…” என்று சொல்லி தங்கையை அனுப்பியவன் தானே பிரத்யுக்ஷாவிற்கு சிகிச்சையளித்தான் ஆகர்ஷன்.
“அம்மான்னா ரொம்ப இஷ்டமோ?…” என்று ஒரு கேள்வி தான் கேட்டிருப்பான்.
அத்தனை பதில்கள் தன் அம்மா அப்படி, இப்படி என்று காவேரியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவள் பேசியதோடு தனக்கும் தாய்க்குமான பந்தத்தை அழகாய் கண்கள் கசிய ஏக்கத்துடன் கூறினாள்.
“ப்பாஹ் படமே பார்த்த மாதிரி இருக்கு…” என அனன்யா கேலி பேச,
“ப்ச், அனு…” என்ற ஆகர்ஷன்,
“ஆமா, அது என்ன எப்ப பார்த்தாலும் இந்த ஸாங்?…” என்று கேட்க,
“என்னோட அம்மா எனக்கு இதை தான் டெய்லி பாடுவாங்க. சாப்பிட, தூங்க, சமாதானம் செய்யன்னு. ரொம்ப புடிக்கும்….” என்றாள் முகம் ஜொலிக்க.
“அம்மா பேர் கஸ்தூரியா?…” ஆகர்ஷன் கேட்க,
“ம்ஹூம், காவேரி. நான் அங்க இருந்திருந்தா இவ்வளோ நேரம் நான் சாப்பிடலைன்னா தாங்கியிருக்கவே மாட்டாங்க, தெரியுமா?…” கீழுதடு துடிக்க மீண்டும் கண்ணில் நீர்.
“இன்னுமா நீ சாப்பிடலை?…” என அண்ணன், தங்கை இருவரும் ஒருசேர கேட்க திருதிருவென்று விழித்தாள் பிரத்யுக்ஷா.
“அனு ஆம்லேட் போட்டு பிரட் டோஸ்ட் எடுத்துட்டு வா….” என்றான் பிரத்யுக்ஷாவை முறைத்துக்கொண்டே.
“அவ வெஜிடீரியன்….” என்று அனு கூற,
“இல்ல எதுவும் வேண்டாம். நான் வீட்டுக்கு போறேன்…” என்று எழுந்துகொள்ள பார்த்தாள்.
“உதை படுவ ராஸ்கல். தனியா இருக்க, இங்க உன்னை நீ பார்த்துக்க வேண்டாமா? பேசாம உட்கார்…” என்ற அனன்யா,
“ண்ணா எதாச்சும் லைட்டா கொண்டுவாயேன். விட்டா இவ ஓடிடுவா…” என்று சொல்ல ஐந்துநிமிடத்திற்குள் வந்துவிட்டான் ஆகர்ஷன்.
சூடாக காய்ச்சிய பாலில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை எல்லாம் குட்டி குட்டியாய் நறுக்கி சேர்க்கப்பட்டு நாட்டு சர்க்கரை கலந்திருந்தது.
“பிடி இதை சாப்பிடு…” என்றான் ஆகர்ஷன்.
“வாங்கிக்கோ பிரத்யு…” என அனுவும் கூற, பிரத்யுக்ஷா மௌனமாய், சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.
“உன் அம்மா குடுக்காங்கன்னு வச்சுக்கோயேன். பர்த்டே பேபி பசியோட இருந்தா உன் கஸ்தூரி மான்குட்டிக்கு அங்க கஷ்டமா இருக்காது? சாப்பிடு…” என்று மென்மையாய் சொல்லி ஆகர்ஷன் தர, மறுக்கமுடியாமல் வாங்கிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
“தேங்க்ஸ்…” என்று வாங்கியவள் முதல் ஸ்பூனை விழுங்க,
அங்கே வந்ததில் அவளுக்கு வந்த முதல் பிறந்தநாள் வாழ்த்து. அதுவும் அவன் சொல்லி தந்த வார்த்தைகள் இன்னுமே பிரத்யுக்ஷாவை நெகிழ்த்தி இருந்தது.
அவளுக்கான சமாதானமாய் சொல்லியதாலோ என்னவோ அவன் அவளை கவனிக்கும் ஒவ்வொன்றும் காவேரியோடு தான் பார்க்க நினைத்தது.
அனன்யாவின் எண்ணிலிருந்து தாய்க்கு அழைக்க முயன்றவள் அவர் எடுத்ததும் விழிநீர் கசிய விசும்பலுடன் பேசி சிரித்த காட்சிகள் மனதின் ஓவியமாய் படிந்துபோனது ஆகர்ஷனுக்கு.
ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டே அனன்யாவையும் காண்பிக்க, பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வந்திருப்பதாய் எண்ணி காவேரியும் பேசினார் அவளிடம்.
விழுந்தது, வாரியது, அங்கே வந்தது என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஓரிடத்தில் அமர்ந்து பேசியிருக்க அது சுஷ்மாவின் வீடில்லை என்றும் அவருக்கு தோன்றவில்லை.
“விழுந்தேன்னு சொல்லி அவங்களையும் கலவரப்படுத்தாம நல்ல புள்ளையா பேசனும்…” என்று சொல்லியே தான் அழைக்க செய்தாள் அனன்யா.
“யூ க்னோ, நான் எப்பவுமே குட் கேர்ள் அனு அக்கா…” என்று தன் கண்ணீரை துடைத்துவிட்டு பிரத்யுக்ஷா காண்பித்த பாவனையில் ஆகர்ஷனின் கண்கள் புன்னகைத்தது.
அவள் அவள் வீட்டினரிடம் பேச பேச பார்த்தவன் கண்களுடன் மனதும் பனித்து தான் போனது.
காலத்திலும், எத்தனை ஜென்மத்திலும் மறையாத முகமாகி பதிந்திருந்தது அவளின் கண்ணீர் முகம் பன்னீர் பூவாய்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.