“ஹ்ம்ம், நானுமே பார்த்ததில்லை. இதுவும் வாழ்க்கையில ஒரு பகுதி தானே? முணுமுணுன்னு இங்க என்னவோ குத்திட்டே இருக்கு. ஆனா சிலநேரம் அது தேவையாவும் இருக்கு. கிட்டத்தட்ட போதை மாதிரி…”
“ஆர்ஷ்…”
“எனக்கும் அவக்கிட்ட சொல்லனும் தான் டாடி, ஆனா வேண்டாம்….” என்றவன்,
“அவ என்னை,…,,, என்கிட்ட அவளோட அம்மாவை தான் தேடறா. தெரியும் தானே?…” என்றான் அவரிடம்.
“நல்லது தானேப்பா?…”
“எது நல்லது? நான் இங்க ஒன்னு ரெண்டுமாசம் இல்லைன்னாலும் என்னை தேடமாட்டா. தேடலைன்னா எப்படி சொல்ல?…” என்று அவரின் முகம் பார்த்து சங்கடமாய் புன்னகைத்தவன்,
“என்னை பார்க்காம இருக்க முடியாதுன்ற ஒரு தாட் பிரத்யுக்கிட்ட இல்லை டாடி. அதேநேரம் நான் கூட இருக்கும் போது யாரையுமே மிஸ் பன்றதா நினைக்கமாட்டா. இரண்டையுமே அவ உணரனும். அது நான் சொல்லி இல்லாம. எனக்கு தோணிச்சே, பிரத்யுக்குள்ள நான் என் சந்தோஷத்தை பார்க்கனும்ன்னு, அப்படி….” என்று சொல்லியவன் முகம் வெகுவாய் உணர்வுகளை கொட்டிக்கொண்டிருந்தது.
“ஒருவேளை தோணாமையே போய்ட்டா? நீ சொல்றதனால கூட பிரத்யு உன்னை அந்த ஆங்கிள்ல பார்க்கலாம் இல்லையா?…” என்று எத்தனை சொல்லியும் அவன் மறுத்துவிட்டான்.
“லீவ் இட். சரி சொல்லுங்க. எத்தனை நாள் இருப்பீங்க? இந்தத்தடவையும் என்னை விட்டுட்டு ரெண்டுமூணு நாள்ல ஓடிருவீங்களா?…” என்றான்.
“ம்ஹூம். பத்துநாள் இருக்கலாம்ன்னு ப்ளான். ஆனா..”
“கிளம்பிடுவீங்க? அதானே?…”
“உண்மை கசக்கத்தான் செய்யும் மை சன். பார்க்கலாம்….”
“பார்க்கலாம்…” என்றான் அவரிடம்.
“இன்னொரு முக்கியமான விஷயம் பத்தி தான் நான் பேச வந்தேன். உன்னை பார்த்தமாதிரியும் ஆச்சு. இதுவுமாச்சு…” என்று சொல்ல,
“முதல்ல டின்னர். அப்பறம் மத்தது…” என்று இரவு உணவை தயாரிக்க ஆரம்பிக்க கிருஷ்ணகுமாரும் சேர்ந்துகொண்டார்.
பேசவேண்டிய விஷயங்கள், பகிரவேன்றிய நிகழ்வுகள்,தெரியப்படுத்தவேண்டிய பிரச்சனைகள் என்று ஒவ்வொன்றும் இருவரும் கலந்துரையாட இடையில் வீட்டிலிருந்தும் அழைப்பு.
பிரத்யுக்ஷா பற்றிய எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு அதில் கவனம் செலுத்தினான் ஆகர்ஷன்.
அந்த வாரம் இறுதிவரை பிரத்யுக்ஷாவை பார்க்கவும் முடியவில்லை. தன் அண்ணன் குடும்பத்துடன் ஊர் சுற்ற கிளம்பியிருந்தாள்.
அன்று பிரத்யுக்ஷா இந்தியா கிளம்பவேண்டிய நாள். விமான நிலையத்தினுள் தான் ஆகர்ஷனும் அமர்ந்திருந்தான்.
கிளம்புவதற்கு முதல்நாள் அவனை பார்த்ததும், அதன் பின்னான நிகழ்வும், மனம் கனக்க செய்திருக்க, பிரத்யுக்ஷா கிளம்பும்முன் அழைப்பு விடுத்து பார்த்துவிட்டு அவன் எடுக்கவில்லை என்றதும் செய்தி அனுப்பிவைத்தாள்.
“நான் கிளம்ப போறேன் சீனியர். என்னை அனுப்பிவைக்க வருவேன்னு சொல்லியிருந்தீங்க. ப்ராமிஸ் மீற கூடாது. தப்பில்ல…” என்று மெல்லிய குரலில் கண்ணீருடன் பேசி அனுப்பியிருக்க ப்ளூடூத்தில் கேட்டபடி அமர்ந்திருந்தவன் தன்னை தேடி தவித்தபடி விழிகளை அலைபாயவிடும் பெண்ணை பார்வையால் அரவணைத்திருந்தான்.
“போய்டு பிரத்யு. இப்படி அழுதுட்டே இல்லாம…” என சத்தமின்றி முனங்க தான் முடிந்தது.
“எனக்கு பை, டேக் கேர் சொல்லவாவது செய்யலாமே?…” மீண்டும் குறுஞ்செய்தி.
இப்போது குரலாக இல்லாமல் எழுத்தாய் வர நிமிர்ந்து பார்த்தவன் அவள் கைபேசியை பார்ப்பதும், சுற்றிலும் பார்ப்பதுமாக இருக்க அதற்குமேல் தாளமுடியவில்லை.
எழுந்து நின்றவன் அவளின் பார்வை படும் தூரத்தில் தெரிய இன்னும் கவனிக்கவில்லை அவள்.
அழைப்பு விடுத்துவிட்டான் பிரத்யுக்ஷாவிற்கு. தானிருக்கும் இடம் சொல்லியதும் வேகமாய் சுழற்றி பார்த்தவள் முகம் ஆயிரம் ஒளிக்கற்றைகளை அவன் மீது வாரி இறைத்தது.
அவள் அருகில் தேவான்ஷ் ஸ்வேதா இருவரும் குழந்தையை சமாதானம் செய்துகொண்டிருந்தனர்.
அவர்களிடம் என்னவோ சொல்லிவிட்டு பிரத்யுக்ஷா அவனை நோக்கி வேகமாய் ஓடி வந்தாள்.
வந்தவேகத்தில் அவனின் கைய்யோடு தான் கைகளை கோர்த்துக்கொண்டவள் கண்களில் நீர் பொங்கி நிற்க,
“ப்ராமிஸ்…” என்று மட்டும் பேசியவளுக்கு தொண்டை அடைத்தது காரணமின்றி.
இருநாட்கள் முன்பு வரை சந்தோஷத்தில் கூத்தாடியவள் தான். முதல்நாள் ஆகர்ஷனை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து வெறுமையை சுமப்பதை போல் தாங்கமுடியாத கனம்.
இதோ இந்தநொடி அவனை கண்டதுமே புன்னகையுடன் கண்ணீரும் பொங்கி வர கீழுதட்டை மடித்து கடித்தவள் கண்ணீரை அடக்க முயன்றாள்.
“ப்ச், பிரத்யு…” என்றவன் அவள் பிடித்த கையை இன்னும் வலுவாய் பற்றியவன் தன்னருகில் நிறுத்தினான்.
அங்கிருந்து அவனால் தேவான்ஷை காணமுடியும். அவர்களின் மீது ஒரு பார்வையை வைத்துக்கொண்டு பிரத்யுவை பார்த்தவன்,
“இப்போ காய்ச்சல் போய்டுச்சா?…” என்றான் அவளின் நெற்றியில் இன்னொரு கையை வைத்து பரிசோதிப்பதை போல,
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என்று இன்னுமே வார்த்தையின்றி தலையசைத்தவளை பார்த்தவன் புன்னகை பெரிதாய் விரிந்தது.
“என்னடா?…” என்றான் அவளிடம் தலைசாய்த்து அவள் போல கண் சிமிட்டி.
“நீங்களும் வாங்களேன்….” என்று ஒருவாறு குரலை திரட்டி அழைத்துவிட்டாள் அவனை.
“நானா?…” வார்த்தைகளில் மட்டுமல்ல பார்வையில் செயலிலும் அவனிடம் அத்தனை நிதானம்.
இது ஆராவாரம் செய்யும் நேரமல்லவே. இதோ பட்டாம்பூச்சியாய் கிளம்புவதில் ஆர்ப்பரித்து நின்றவள் கண்களில் அவன் எதிர்பார்த்த அந்த தேடல்.
“நீங்கன்னா நீங்க தான். வாங்க போவோம்…” என்றாள் அவனின் கை பிடித்து இழுத்து.
“நீ தான் கிளம்பற. நான் ஏன் வரனும் பிரத்யு?…” ஆகர்ஷனின் குரலில் இருந்ததென்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.
“வரலாமே?…” என்று மட்டுமே சொல்லியவள் திணறி போய் பார்த்தாள்.
“அதான் ஏன்னு கேட்கறேன்…” என்றவன்,
“எதுக்கு இத்தனை அழுகை? உனக்கு பிடிச்ச மாதிரி கிளம்பற. உன்னோட அம்மாக்கிட்ட போற. சந்தோஷமா போவன்னு பார்த்தா…” என்று சிரித்தவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு சுட்டுவிரலால் கண்ணீர் ஈரத்துடன் அவளின் நாசியில் புள்ளி வைத்தான்.
“ஆமா, அழறேன். போகனும் தான்…” என்று அவன் கேட்டதற்கு பதிலை தேடியவள் அழுகையை அடக்கமுயன்று விக்கிக்கொண்டு நின்றாள்.
அவனின் முகத்தையே அளவெடுத்தவள் மனதினுள் புதிதாய் ஒரு போராட்டம் துவங்கியது போலிருந்தது.
மீண்டும் விமான பயணத்தின் அறிவிப்பு. சட்டென்று மனம் படபடக்க உயிரை விட்டு செல்லும் உணர்வுடன் கண் மறையும் வரை அவனை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவள் மனதின் ஆராய்ச்சியில் நிலைகுலைந்து போயிருந்தாள் பிரத்யுக்ஷா.
அவளின் பார்வை அவனிடத்தில் இடம் மாற ஆரம்பித்திருக்க எதிர்காலத்தின் தடங்கள் அவர்களின் பாதச்சுவட்டினை மடி தாங்க பசித்திருந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.