அழுது, சோர்ந்து, யோசித்து, மனதால் அவனை யாசித்து என்று மீண்டும் காய்ச்சல் கண்டுவிடும்போலாக கண் மூடி உறக்கத்தை கெஞ்சி வரவழைத்ததை போல் அவளறியாமல் தளர்ந்து தான் உறங்க ஆரம்பித்தாள் பிரத்யுக்ஷா.
———————————————
கதவை திறந்துகொண்டு வீட்டினுள் நுழைந்தவனுக்கு என்றுமில்லாத ஒரு வெறுமை.
ஆகர்ஷனின் கண்கள் தன்னைப்போல பக்கவாட்டிலிருக்கும் வீட்டின் மீது படிந்து மீண்டது.
அவள் இல்லை. நிஜம் புரிந்தாலும் அங்கிருந்து கையசைக்கும் கால் முளைத்த பூச்செண்டை தேடி மனம் அலைய மெல்லிய புன்னகை அவன் இதழோரம்.
அவனுள்ளம் இப்போதும் பிரத்யுக்ஷா அவனிடம் கூறிய வார்த்தைகளில் தடதடத்தது.
‘அம்மாவையே விட்டுட்டு போறது மாதிரியா?’ இன்னும் பெரிதாய் சிரித்துக்கொண்டான் ஆகர்ஷன்.
உடை மாற்றவும் தோன்றாமல் அப்படியே சோபாவில் சென்றமர்ந்தவன் கால்களை டீப்பாயின் மீது நீட்டிக்கொண்டான்.
வீட்டில் கிருஷ்ணகுமார் இல்லை. காலையே அங்கே வேறு ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டிருந்தார்.
தனியாய் எத்தனையோ நாட்கள் அல்லாது வருடங்களாய் அந்த வீட்டில் வசிப்பவன் தான்.
ஆனால் என்றுமே இதனை உணர்ந்ததில்லை. என்னவோ போலிருந்தது. நெஞ்சை பிசைந்தது.
பிரத்யுக்ஷாவிற்கு புரிய ஆரம்பித்துவிட்டதன் அறிகுறியில் ஆகர்ஷன் தான் தடுமாறி போனான்.
நிமிர்ந்தமர்ந்தவனின் கண் பார்வையில் முதல்நாள் பிரத்யுக்ஷா கொண்டுவந்த பூங்கொத்து விழுந்தது.
சோபையான புன்னகை இப்போது பளீரென்று விரிய கை நீட்டி அதனை எடுத்தான் ஆகர்ஷன்.
முதல்நாள் மாலை அதனை கொண்டுவந்து தந்திருந்தாள் பிரத்யுக்ஷா. வருகையில் கண்கள் சிவந்து மூக்கின் நுனி எல்லாம் செவ்வானம் பூத்திருந்தது.
“எப்பவும் நீங்க தானே எனக்கு வாங்கிட்டு வருவீங்க சீனியர். இந்ததடவை நான் வாங்கிட்டு வந்திருக்கேன். உங்களுக்காக தான்…” என வெள்ளை தாமரை மொட்டுக்களை அவனிடம் நீட்டி நின்ற பெண்ணை கண் சிமிட்டாது பார்த்தவன் பதிலின்றி மௌன புன்னகையுடன் அதனை வாங்கிக்கொண்டான்.
“எங்க உங்களை பார்க்க முடியாமலே ஊருக்கு போய்டுவேனோன்னு பயந்துட்டேன்…” லேசாய் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நிற்க கண் சுருக்கி பார்த்தவன்,
“ஃபீவரா பிரத்யு?…” என்றான் ஒற்றை பார்வையில் கவனித்து.
“ஹ்ம்ம்…” என தலையசைத்தவள்,
“எங்க அங்கிளை காணும்?…” விழிகளால் வீட்டை அலசினாள்.
“எங்கயும் போகலை. உள்ள தான் தூங்கறாங்க. நீ வந்து உட்கார்…” என்று அவளை அமர சொல்ல,
“டேப்லேட் போட்டுட்டேன் சீனியர்…” என்றாள் அவள் அமராமல்.
“உன்னை உட்காருன்னு மட்டும் தான் சொன்னேன்…” என்றவன் உள்ளே சென்று மெடிக்கல் கிட்டை எடுத்து வந்தான்.
பிரத்யுக்ஷா விழிகள் அவன் பேசுவதிலும், ஊசியிலுமாய் இருக்க அவ்வப்போது வாசலையும் பார்த்துக்கொண்டாள்.
“இன்னும் நின்னுட்டிருக்க நீ?…” என கை பிடித்து அமர செய்தவன்,
“ஷோல்டரை காமி பிரத்யு…” என்றான் அவளிடம்.
“ப்ச், சரியான டாக்டர்ப்பா நீங்க…” என்றவள் டிஷர்ட்டின் கை பகுதியை உயர்த்தி காண்பித்ததோடு கண்மூடி தலையை திருப்பிக்கொள்ள அவளின் செயலில் சிரித்துக்கொண்டே போட்டுவிட்டவன்,
“தேய்ச்சுவிடு பிரத்யு…” என்றான்.
“நாளைக்கு ட்ராவல் பண்ணனும். இப்படி இருக்கே ஃபீவர்…” எனவும் அவன் சொல்ல,
“அலைச்சல். அதோட இங்க வந்ததுல இருந்து தூக்கமும் இல்லை. நீங்க எப்போ வருவீங்கன்னு பார்த்துட்டே இருந்தேன்…” கையை தேய்த்துவிட்டபடி சொல்லியவளை மென்னகையுடன் பார்த்தான்.
“என்கிட்ட சொல்லிட்டு தான் போகனுமா என்ன? எப்படியும் நான் இல்லைன்னாலும் நீ கிளம்ப தான் போற. இதுல தேடினியாம்…” என கிண்டல் பேசியவனை பார்த்தவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“நிஜமாவே தேடுனேன். ரொம்பவே…” என்று சொல்ல கண்ணீர் இறங்கிவிட்டது கன்னத்தில்.
“அச்சோ, என்னடா நீ?…” என அவளின் கண்ணீர் துடைத்தவன் முகமும் கசங்கிவிட்டது.
மௌனமாய் அவளின் நெற்றியில், கன்னத்தில் கைவைத்து காய்ச்சலை அளவீடு செய்தவன்,
“காய்ச்சல் லேசா தான் இருக்கு. நாளைக்கு சுத்தமா விட்டுடும். உன் விருப்பப்படி உன் எதிர்பார்ப்புப்படி நீ சந்தோஷமா உனக்கு பிடிச்ச இடத்துக்கு, பிடிச்சவங்களோட இருக்க போற. ஆனா முகம் அப்படி இல்லையே?…” என்றான் அவளிடம்.
உண்மை தான். தேவான்ஷ், ஸ்வேதா இருவரும் வந்ததில் இருந்து பிரத்யுக்ஷாவிற்கு அப்படி ஒரு குதூகலம்.
கையில் பிடிக்கமுடியவில்லை பிரத்யுக்ஷாவை. அண்ணன் மகளை கையில் வைத்துக்கொண்டு அத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருந்தாள் அவள்.
ஆனால் நாள் நெருங்க நெருங்க எதையோ மனம் இழப்பதை போல் உணர ஒன்றும் பிடிபடவில்லை.
இத்தனை வருடங்கள் இந்த நாட்டில் இருந்துவிட்டு செல்வதனால் என்று நினைத்துக்கொண்டு அவளை அவளே சமாதானம் செய்தாள் பிரத்யுக்ஷா.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டவளின் ஆழ்மனம் காண்பிக்கும் பிம்பத்தை உணரமுடியவில்லை.
முதல்நாள் நள்ளிரவிலிருந்து காய்ச்சல். அத்தனை காய்ச்சலிலும் எங்கே ஆகர்ஷனை பார்க்காமல் கிளம்பிவிடுவோமோ என்று அவள் பயந்தது அன்றைய நாளில் தான்.
இத்தனை வருடங்கள் அங்கே இருந்திருக்கிறாள். ஆனால் என்றுமே இப்படியெல்லாம் தோன்றியதே இல்லை.
அன்று மட்டும் அவனின் வீட்டை எத்தனை முறை பார்த்திருப்பாள் என்று அவளுக்கே கணக்கில்லை.
ஆகர்ஷனின் வரவில் ஒத்துழைக்காத உடலையும் இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்ததை போலிருக்க அவனின் கேள்வியில் மனம் கலங்கியது.