“இங்க பாரு பிரத்யு, எமோஷன்ல எடுக்கற எந்த முடிவும் சரியா மட்டுமே இருக்காது. வாழ்க்கை, உன் கைல தான் இருக்கு. அதுக்குன்னு இஷ்டத்துக்கு சட்டுன்னு டிஸைட் பண்ணிடுவியா நீ?…” என்று கூற,
“இது ஒரு ஆப்ஷன்னு சொன்னேன். ஒருவேளை அங்க தான் வருவேன்னா வந்திருவேன்….” என்றவள்,
“ஹ்ம்ம், இது என் வாழ்க்கை. யோசிக்காம முடிவெடுக்கவும் கூடாது. இஷ்டப்பட்டு முடிவுக்கு வரனும். கண்டிப்பா சரியான முடிவு தான் எடுப்பேன்…” என்றாள் ஸ்திரமாக அவனிடம்.
ஆகர்ஷனுமே அவள் சொல்ல சொல்ல மனதினுள் அவளின் பேச்சினலான எதிர்பார்ப்பு கரைகளை கவனமாய் கட்டமைத்துக்கொண்டிருந்தான்.
“ப்ச், ஷூப். நான் கேட்கனும். பதில் மட்டும் சொல்லுங்க நீங்க…” என்று சொல்லியவள் ஒற்றை விரலை தன் இதழ்களின் மேல் வைத்து அவனை நோக்கி அதே போல் சுட்டுவிரல் நீட்டி காண்பித்து அவனையும் அப்படி வைக்க சொல்ல தலையசைத்தான் ஆகர்ஷன்.
பிரத்யுக்ஷா சொல்லியதை போல ஆகர்ஷனின் வலது கையின் சுட்டுவிரல் அவனின் அதரங்களில் குறுக்கே நின்றதும்,
“என்ன பதில் வேணும்? என்னோட பர்த்டே தான் உனக்கு தெரியுமே பிரத்யு…” என்றான் இப்போதும் இளமுறுவலுடன்.
“நான் வருஷம் கேட்டேன்…”
“அதுதான் ஏன்? என்ன திடீர்ன்னு?…” என்றவன் அவள் என்ன சொல்வது என்று யோசிக்க,
“பதில் தானே, சீக்கிரம் சொல்லிடலாம்…” என கூற பிரத்யு அவன் இதனை எப்படி எடுத்துக்கொண்டானோ என்று பார்த்தாள்.
மேலும் பேசும் முன் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க பிரத்யுக்ஷாவின் கவனம் அங்கே திரும்பியது.
ஸ்வேதா தான் அவளை வெளியில் இருந்து அழைத்துக்கொண்டிருந்தாள். ஸ்ரீவத்சன் வந்துவிட்டிருப்பார் என்று புரிய, ஆகர்ஷனிடம் விடைபெறும் நேரம் வந்துவிட்டதாய் அவனை பார்த்தாள் பிரத்யுக்ஷா.