மேடையை நெருங்கிவிட்ட பிரத்யுக்ஷா ஆகர்ஷனை பார்த்துக்கொண்டே படியேறி ஷ்யாமளாவின் அருகில் வந்துவிட்டாள்.
“எப்படி கரெக்ட் டைம்க்கு வந்தேனா?…” என்று புருவம் உயர்த்தி கண் சிமிட்ட,
“இது கரெக்ட் டைமா? மோதிரம் மாத்திக்க இன்னும் சிலநிமிஷம் தான் இருக்கு. பேசறா பாரு…” என்றாள் அனன்யா கோபம் போல.
“அங்க பங்க்ஷன் முடிச்சு தானே பிரத்யுவும் கிளம்பி வர முடியும்?…” என்றார் ஷ்யாமளா தன் மகளிடம்.
“அப்படி சொல்லுங்க ஆன்ட்டி…” என்ற பிரத்யுக்ஷா,
“ஏன் என் பேச்சுக்கு என்ன அனு அக்கா? நான் பேசுவேன். ஏனா வருவேன்னு உங்ககிட்ட சொன்னேன். யார் மாதிரியும் சொல்லாம வரலையே?…” பார்வை ஆகர்ஷனை ஒருநொடி தொட்டுவிட்டு அவர்களிடம் வந்தது.
“ஓஹ், கோபமாக்கும்? உன் சீனியர் மேல உள்ள கோபத்தை எல்லாம் நீ அப்பறமா காமிச்சுக்கோ பிரத்யு. இப்ப என் பக்கம் வா…” என இழுத்து நிறுத்திக்கொண்டாள் அனன்யா.
குடும்பமாய் நிறைவாய் இருந்தது அதனை பார்த்த கிருஷ்ணகுமாருக்கு. ஆகர்ஷனும் மென்னகையுடன் வந்து கிருஷ்ணகுமார் அருகில் நிற்க அனன்யாவின் புகுந்தவீட்டு மனிதர்களும் பிரத்யுக்ஷாவை பார்த்தனர்.
“என்னோட க்ளோஸ் க்ளோஸ் ப்ரெண்ட் பிரத்யுக்ஷா. என்னோட தான் சிட்னில படிச்சா….” என மணமகன் பிரவீனிடம் கூற,
“ஹலோ…” என்றான் அவனும்.
அனைவருக்கும் துரிதகதியில் பிரத்யுக்ஷாவை பற்றி அறிமுகம் செய்துவிட்டு நிச்சயதார்த்தத்தை ஆரம்பித்தனர்.
அதன்பின் அனைவரின் கவனமும் அதில் பதிய இனிதே நடந்தேறியது அந்த வைபவம்.
மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டு இருவரும் மாலையும் மாற்றிக்கொள்ள அடுத்ததாய் பெரியவர்களின் ஆசிர்வாதம்.
ஆகர்ஷனின் குடும்பம் இத்தனை பெரிதென்று பிரத்யுக்ஷா தெரிந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரும் அனைவரிடமும் பழகியவிதம், மற்றவர்களிடம் ஆகர்ஷனின் குடும்பத்தினர் பழகியவிதம் என ஒவ்வொன்றுமே பிரத்யுக்ஷாவை வெகுவாய் கவர்ந்தது.
அத்தனை தன்மை, மரியாதை, வந்தவர்களை பெரிதாய் கௌரவித்தல் என்று நெகிழும் விதம்தான் அனைத்தும்.
இதுவே தன் வீட்டில் என்றால் அவளின் தந்தையிடம் கர்வம் தான் மிதமிஞ்சி தெரிந்திருக்கும்.
உள்ளுக்குள் சின்ன சின்னதாய் பயம் இப்போதெல்லாம். இன்னும் ஆகர்ஷனிடம் வெளிப்படையாய் அவள் விருப்பத்தை சொல்லியிருக்கவில்லை.
சொல்லும் சமயங்களில் எல்லாம் அவன் அழகாய் தவிர்த்து பேச்சை மாற்றி இருந்தவன் ஒருகட்டத்தில்,
“சிலவிஷயங்கள் நேர்ல தான் சொல்லனும் பிரத்யு. வெய்ட் பண்ணு…” என்றுவிட்டான்.
அதற்குமேல் அவளும் சொல்ல நினைக்கவில்லை. நேரில் என்றால்? எப்போது என கேட்கவும் தோன்றவில்லை.
பார்க்கலாம், எத்தனை தூரம் அவன் செல்கிறான் என்று பிரத்யுக்ஷாவின் பிடிவாதமும் வலுத்தது.
தான் சிட்னி செல்ல போவதில்லை. அவன் வருவது எல்லாம் சாத்தியமா என கலங்கி தவிக்கையில் அனன்யாவின் திருமண செய்தி.
யாருக்கு எப்படியோ பிரத்யுக்ஷாவிற்கு அத்தனை சந்தோஷம். இப்போது எப்படியும் வந்து தானே ஆகவேண்டும் என்று.
நாளும் பொழுதும் காத்திருக்க திருமணத்திற்கு ஒருவாரம் இருந்துமே ஆகர்ஷன் வரவில்லை.
எப்போது வருகிறான் என்றும் சொல்லாததில் மனதோரம் கோபமும், ஆதங்கமும். ஆனாலும் காண்பிக்கவில்லை.
இதோ இன்று பார்த்துவிட்டாள். கிட்டத்தட்ட நான்குமாதங்களை முழுதாய் விழுங்கிக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான் ஆகர்ஷன்.
சட்டென்று தொண்டை அடைக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல், அவனின் கைகளை கோர்த்துக்கொள்ள முடியாமல் தத்தளித்தவள் அவன் மீதான கோபத்தினை இழுத்து பிடித்து நின்றிருந்தாள் நடக்கும் விசேஷத்தை பார்த்தப்படி.
“எப்படி இருக்க பிரத்யு?…” என மெதுவாய் அவளருகில் வந்து நின்றவனின் விழிகள் ரசனையாய் அவளை வாரிக்கொண்டது.
“வர்றேன்னு சொல்லாதவங்ககிட்ட எல்லாம் என் நலனை நான் சொல்றதில்லைன்னு பாலிஸி வச்சிருக்கேன்…” என்றாள் இடக்காக.
“நல்ல பாலிஸி, கீப் இட் அப் கஸ்தூரிமானே…” என தோளை குலுக்கிக்கொண்டவன் அதே புன்னகையுடன் நகர்ந்து நிற்க,
“நான் நல்லாவே இல்லை. போதுமா?…” என்றாள் அவன் விலகளை பொறுக்காமல்.
“பார்த்தா அப்படி தெரியலையே…” என அவளை நன்றாகவே பார்வையிட்டுக்கொண்டே.
பேச்சு அவளிடம் என்றாலும் பார்வை மற்றவர்களை வரவேற்பாய் பார்த்து வைத்தது.
பார்ப்பவர்களுக்கு இருவரின் அருகாமையும் சாதாரண பேச்சுக்களை போல தான் தெரியும்.
அதுவும் அத்தனை வருடங்கள் கழித்து வந்திருந்தவனை பார்த்தவர்கள் அனைவருமே அவர்களுக்குள் கிசுகிசுத்தனர்.
“எத்தனை வருஷம் ஆச்சுல இவனை பார்த்து. அப்படியே கிருஷ்ணாவை உரிச்சு வச்சிருக்கான். அச்சு அசலா இல்ல இருக்கான் அப்பாவை மாதிரி…” என்று பேசிக்கொண்டனர்.
அனைத்துமே ஆகர்ஷனின் காதில் விழ, கிருஷ்ணகுமாரை திரும்பி பார்த்தவன் கண்கள் சிரிக்க அருகில் வந்துவிட்டார் அவரும் மகனின் பார்வையில்.
விடிந்தால் அனன்யாவின் திருமணம்.அனைவருக்குமே அது உறங்காத இரவாக இருந்தது.
பலமாதங்களுக்கு பிறகு ஆகர்ஷனை சந்தித்த பிரத்யுக்ஷா அவனுடனான தனிமையை வெகுவாய் எதிர்பார்த்து காத்திருக்க அவன் விரும்பியே அதனை தவிர்த்து வந்தான்.
“அனு அக்கா எங்க உங்க அண்ணா? நான் எங்க தேடினாலும் பார்க்கிற இடமெல்லாம் டூ மினிட்ஸ்ன்னு சொல்லி கண்ணுலையே சிக்கலை…” என தேடி அலுத்து, சலித்து இரவு உறங்கும் நேரம் அனன்யாவிடம் கேட்டாள் பிரத்யுக்ஷா.
“இதென்ன பேமிலி கெட் டூ கெதரா மேடம்? எல்லாரும் உக்கார்ந்து அரட்டை அடிக்க? கல்யாணம். எவ்வளோ வேலை இருக்கும்?…” என்று கிண்டலாய் அனன்யா பேச,
“ஆமா, தெரியும் தான். ஆனாலும் நான் கோவமா இருக்கேனே. அதைபத்தி எதுவுமே பேசலை சீனியர். நான் எப்போ சமாதானம் ஆக?…”
“வர்றேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை….” என்று கூற, அனன்யா அதற்குள் ஆகர்ஷனுக்கு செய்தி அனுப்பிவிட்டாள் இங்கே பிரத்யுக்ஷா உறங்காமல் இருப்பதை பார்த்து.
“அதான் வந்துட்டான்ல. சரி அதை விடு. உன் மாமா பொண்ணு நிச்சயதார்த்தம் எப்படி போச்சு? செம்ம ஃபன்னா?…”
“நல்லா கேட்டீங்க போங்க. அதுவும் என் டாடியும், மாமாவும் இருக்கிற இடத்துல ஃபன்…” என தலையை உலுக்கிக்கொண்டவள்,
“அதுலயும் அங்க ரெண்டுபேர் சேர்த்து ஒரே உருவமா ஒருத்தர் இருக்கார். கௌரவத்துக்கு பெயர்போன கௌரவ். ஹப்பா. ப்ரோக்ராம் பண்ணின நிச்சயதார்த்தம் மாதிரி நடத்தினார். நாங்களும் அப்படியே இருந்தாச்சு. அப்படி ஒரு எங்கேஜ்மென்ட் நீங்க பார்த்திருக்கவே முடியாது…” என்றாள் பிரத்யுக்ஷா.