“ஹ்ம்ம்…” என்று மட்டும் தான் ஆகர்ஷன் அவள் சொல்லியதற்கு தலையை அசைத்து பார்க்க அதுவரை இருந்த கோபம் எல்லாம் எங்கோ சென்றுவிட்டது.
மடமடவென்று காஞ்சிபுரத்தில் சாருலதாவின் நிச்சயதார்த்தம் பற்றிய விஷயங்களை அனன்யாவிடம் சொல்லியதை போல ஆகர்ஷனிடமும் பிரத்யுக்ஷா கூற புன்னகையுடன் பார்த்தான் அவன்.
“எல்லாருமே ஒரே போல இருப்பாங்களா என்ன? இது ஒரு விஷயமா பிரத்யு?…” என்றான் அவன்.
“விஷயம் இல்லையா? மத்தநேரம் வேற. கல்யாணம்ன்றது, ப்ச். கல்யாண வீடுனா என்ன? எப்படி இருக்கனும்?…” என்றவள் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க உள்ளுக்குள் ஒரு உதறல்.
ஆகர்ஷனிடம் அதனை கூறவேண்டுமே என தவிப்புடன் அனன்யாவை பார்த்தபடி விழிகளை திருப்பினாள்.
“என்ன பிரத்யு?…” ஆகர்ஷன் வாஞ்சையுடன் கேட்க,
“ம்ஹூம். எதுவுமில்லை…” மீண்டும் மௌனம் சாதித்தாள் பிரத்யுக்ஷா.
இருவரின் பார்வை பரிமாற்றம் கண்ட அனன்யா சிரிப்புடன் எழுந்துகொண்டாள் தன் கைப்பேசியுடன்.
“பேசிட்டிருங்க, வர்றேன்…” என்று பால்கனி பக்கம் சென்றுவிட அவள் செல்வதை பார்த்திருந்துவிட்டு பிரத்யுவின் புறம் திரும்பினான் ஆகர்ஷன்.
“ஹ்ம்ம், இப்போ சொல்லு…” என்று கேட்க,
“நீங்க ஏன் என்னை அவாய்ட் பண்ணுனீங்க சீனியர்?…” என்றாள் பிரத்யுக்ஷா மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு.
“வாட்?…” என்றவன் சிரித்துவிட,
“சிரிக்காதீங்க. நான் தேடினேன். ரொம்ப ரொம்ப…” கண்கள் கசிய கூறியவளை இதழ்விரியா புன்னகையுடன் பார்த்தவன்,
“வெய்ட்….” என்று சொல்லி தனது கைப்பேசியை பார்த்தான்.
“அப்பா தான்….” என்றபடி சத்தமில்லாமல் அதிர்ந்து வந்த அழைப்பை ஏற்றவன்,
“ஹ்ம்ம், ப்பா. அனுப்பிவிடுங்க. இங்க அனன்யா ரூம்க்கு. ஆமா நானும் தான் இருக்கேன். ஓகே…” என்று சொல்லி வைத்துவிட்டு,
“ஹ்ம்ம், என்ன சொன்ன?…” என்றான் அதே புன்னகையுடன்.
“சொல்லலை. கேட்டேன்….”
“சொன்னியே. நீ கேள்வி கேட்டது முதல்ல. லாஸ்ட்டா நீ பதில் சொன்ன, என்னை தேடினதா. அதுவும் ரொம்ப ரொம்ப…” என்றான் கைகளை விரித்து காண்பித்து.
எத்தனை நாட்கள் ஆகிற்று இப்படி அவனருகில் அமர்ந்து பேசி, அவன் தன்னை கவனித்து என்று எண்ணங்கள் பயணித்த பாதையில் கூடவே நாணமும் இப்போது ஒட்டிக்கொண்டது.
முன்பிற்கும், இப்போதிற்குமான வேறுபாடுகளை மனம் அலச தானாய் ஒரு வெட்கபுன்னகை.
மௌனமாய் விழிகளை திருப்பியவள் பார்வையில் கண்ணாடி கதவின் அப்பால் அனன்யா போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
கல்யாணப்பெண். அத்தனை களையாய் அதன் பூரிப்பில் சந்தோஷமாய் நின்றிருக்க பிரத்யுக்ஷாவின் கண்கள் கனவில் மிதந்தது.
தன் திருமணத்திற்கு இப்படித்தான் இருக்குமா? என யோசித்தவளுக்கு தங்களின் திருமணம் எப்படி இருக்கும் என்று நினைக்கையில், சந்தோஷமும் கூடவே பீதியும் சேர்ந்தே வந்தது.
பிரத்யுக்ஷாவின் முகபாவனைகளை துளியும் சிந்தாமல் சிதறாமல் கவனித்து உள்வாங்கிக்கொண்டவன் மனதினுள் அவள் எண்ணங்களின் வீதி உலா.
காதல் விழா கொள்ளும் அன்றைய நாளினை எண்ணி இரு உள்ளங்களும் மோனநிலையில் தள்ளாட துவங்க கதவு தட்டப்படும் சத்தம்.
திடுக்கிட்டு என்னவென திரும்பி பார்த்தாள் பிரத்யுக்ஷா. நிசப்தமான அந்த நேரத்தில் அவளிருந்த மனநிலைக்கு அந்த சத்தம் லேசாய் அதிர்வை உண்டாக்க,
“ரிலாக்ஸ் பிரத்யு…” என அவளின் தோளை தட்டிவிட்டு எழுந்து சென்றவன் கதவை திறந்து அதனை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தான்.
ஆகர்ஷனின் கையில் இருந்தவற்றை பார்த்த பிரத்யுக்ஷாவின் விழிகள் விரிந்துகொண்டதோடு ஒருவிதமாய் அல்லாடிவிட்டது.
“கஸ்தூரிமானுக்கு ஹாட் சாக்லேட்….” என்று அவளிடம் அவன் நீட்டவும் வாங்கமாட்டாமல் அவனையே கண்ணெடுக்காது பார்த்தாள் பிரத்யுக்ஷா.
“இரு அனன்யாவுக்கு குடுத்துட்டு வர்றேன்…” என அவளுக்கு வாங்கியதையும் எடுத்து சென்று தந்துவிட்டு வந்து,
“இன்னும் குடிக்கலையா பிரத்யு?…” என்று கேட்டு அவளின் கையில் தந்தவன்,
“அவ்வளோ கோவமா என் மேல?…” என்றான் அவளை நோக்கி குனிந்து லேசாய் முகம் சாய்த்தபடி.
மௌனமாய் அமர்ந்திருந்தாள் பிரத்யுக்ஷா. இன்னும் அவன் தங்களின் வாழ்க்கை விருப்பம் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை.
அப்படியிருக்க தான் எந்தவிதத்தில் இதனை கூறுவது என்று யோசனையில் ஆழ்ந்திருக்க தன்னை பார்க்காமல், நிமிராமல் அமர்ந்திருந்த பிரத்யுக்ஷாவின் நாசியை தொட்டு முகம் நிமிர்த்தினான் ஆகர்ஷன்.
“நிஜமாவே வேணும்ன்னு தான் உன்னோட தனியா நான் பேச வரலை பிரத்யு. காரணமா தான். உனக்கு கோவமா இருந்தா, ஹ்ம்ம். இன்னும் ரெண்டுநாள் இதை இழுத்து பிடிச்சுக்கோ. கோவமாவே இரு…”
அவன் என்ன சொல்ல வருகிறான் என யோசனையுடன் அவனை பார்த்தவள் அதற்கும் பதில் கூறவில்லை.
“இன்னும் ரெண்டு நாள். ப்ளீஸ், தனியா பேசவேண்டாம். மூணாவது நாள். அதாவது அனன்யா கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவதுநாள், நாளை மறுநாளுக்கு அடுத்த நாள். அன்னைக்கு பேசறேன். அன்னைக்கு உன்னோட என் நாள் துவங்கற விதமே நம்ம சந்தோஷத்தோட அடுத்த படியா இருக்கனும்ன்னு ஆசைப்படறேன்…” என்றான் ஆகர்ஷன்.
அப்போதும் பிரத்யுக்ஷா வார்த்தைகள் இன்றி அவன் பேசுவதை தான் கேட்டபடி இருந்தாள்.
“அந்தநாள் உன்னோட தனிமையை எனக்கு குடு. எல்லாமே பேசலாம். இதுவரை பேசாத எல்லா விஷயங்களும், பார்க்காத எல்லா பக்கங்களும், விடுபட்ட அத்தனை நாட்களும் அன்னைக்கு நிறைஞ்சிரும். பரிபூரணமாகிடும். வெய்ட் பண்ணலாம் தானே?…” என்றான் சிரிப்புடன் அவளிடம்.
அதற்குமே மௌனம் தான் பிரத்யுக்ஷாவிடம். எதுவும் பேசாமல் மௌனமாய் தலையசைக்க,
“இன்னும் என்னவாம் பிரத்யு? ஹாஸ்பிட்டல் நம்மோடதுன்னு தெரிஞ்சன்னைக்கு அந்த சண்டை கூட எப்பவோ ஓவர்….” என்றவனுக்குமே அவளை பார்த்துவிட்டு விலகி இருந்திருக்க கூடாதோ என்று தோன்றியது.
புடவையில் அவளை அவனுக்காகவளாய், தன் மணமகளாய் தான் பார்க்க முடிந்தது ஆகர்ஷனுக்கு.
நெருங்கி இருந்தாலும், அவளின் மூச்சுக்காற்றை சுவாசித்திருந்தாலும், அவளின் சுட்டுவிரலை பற்றியிருந்தாலும் கூட நிச்சயம் மொத்தமாய் எந்தவித கட்டுப்பாடும் இன்றி அள்ளியிருப்பான் என்பதில் அத்தனை நிச்சயம்.
அவனுக்கு அவனே பயந்து தான் அவன் விலகி சென்று தள்ளி நின்று அவளை தனக்குள் அள்ளிக்கொண்டதுமே.
இத்தனை மாதங்கள் கழித்து பார்க்கையில் அவனுக்குமே அது பேரவஸ்தை தான்.
“ஆஹ், சொல்லாதீங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள…” என பல்லை கடித்து தலையை பிடித்தவளின் செயலில் ஆகர்ஷன் மௌனமாய் பார்க்க,
“ப்ச், சாரு அண்ணி எங்கேஜ்மென்ட்க்கு வந்திருந்த ரிலேட்டிவ்ல சிலர் எங்க வீட்டுல அடுத்த கல்யாணம் பத்தி பேசினாங்க….” என்று கூற ஆகர்ஷனின் முகத்தில் இப்போதும் அமைதி.
“அடுத்த கல்யாணம்ன்னா எனக்கும்,…” என்றவள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு அவனை பார்த்தாள்.
“ஹ்ம்ம், முழுசா சொல்லுங்க மேடம்…” இலகுவாய் அவன் கேட்க,
“எவ்வளோ ஈஸியா பேசறீங்க. எனக்கு தாய்மாமா பையன் இருக்காங்க. ப்ச், இந்த கல்யாணம்ன்னாலே இப்படித்தான் பேசுவாங்களா? யார் விசேஷத்துக்கு வந்திருக்கோமோ அதை மட்டும் பார்க்காம…” என்றாள் பொடுபொடுவென்று
“சரி, இப்போ என்ன நடந்திருச்சுன்னு இவ்வளோ டென்ஷன்?…” என்றவன்,
“ஏன் இன்னைக்கு என்னையும் தான் கேட்டாங்க. இது யூஸ்வல் தான் பிரத்யு…” என்றான் அத்தனை சாதாரணமாய்.
“இது உங்களுக்கு சாதாரணமா?….” கோபமாய் அவள் கேட்க,
“அதைவிடு, இதுக்கு என்ன சொன்னார் உங்கப்பா?…” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.