அத்தனை கலாட்டாக்கள் தான் செய்திருந்தார் ஸ்ரீவத்சன். சென்னையில் ஏகே மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் பணியில் சேர இருப்பதாய் சொல்லியதற்கே அத்தனை சுலபத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
யோசிக்கிறேன் என்று சொல்லியதனை நம்பி பிரத்யுக்ஷாவும் எப்படியும் கிளம்பிவிடுவோம் என நினைத்திருக்க அதற்கு நேர்மாறாய் அவர் அத்தனை முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்தார்.
ஒவ்வொன்றையும் சமாளித்து முதலில் தனக்கொரு அனுபவம் வேண்டுமென்றும், ஷ்யாமளா தனக்கு வழிகாட்டியாய் இருப்பார் என்றும் அவரின் மனதை இளக்குவதற்குள் போதும் போதும் என்றானது.
“எந்த எக்ஸ்பீரியஸும் இல்லாம ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்க முடியாது டாடி. முதல்ல அந்த ஹாஸ்பிட்டல்ல என்னக்கு ஜாப் ஆப்பர்சுனட்டி வர்றதே பெரிய விஷயமா. என்னவோ ஷ்யாமளா ஆன்ட்டி இருக்கறதால அவங்களும் ஹெல்ப்…”என்று சொல்லி முடிக்கும்முன்,
“அவங்க யார் உனக்கு ஹெல்ப் பண்ண? யாரோட உதவியை வாங்கற அளவுக்கு நீ இறங்கிடலை. புரியுதா? நீ படிச்சிருக்க. அதுக்கான மதிப்பு குடுத்தா போகலாம். ரெக்கமண்டேஷன் எல்லாம் நோ வே…” என்றவர்,
“இந்த நிமிஷம் நான் நினைச்சா ஹாஸ்பிட்டல் ஆரம்பிச்சு எத்தனை பேருக்கு வேலை போட்டு தரமுடியும். நீ என்னடான்னா இன்னொருத்தர்கிட்ட வேலை பார்க்கனும்ன்னு சொல்ற?…” என்று பொங்கி தட்டிவிட்டார் ஸ்ரீவத்சன்.
“ப்ளீஸ் டாடி, முதல்ல ஹாஸ்பிட்டல் நடத்தறது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது. அது உங்க பிஸ்னஸ் மாதிரியும் இல்லை. உயிர் சம்பந்தப்பட்டது…” என்றவள்,
“உங்களுக்கு தெரியாததா டாடி. நம்மோட கன்ஸ்ட்ரக்ஷன் பீல்ட்ல என்னென்ன நெளிவு சுளிவு இருக்குன்னு எத்தனை நுணுக்கமா நீங்க தெரிஞ்சு வச்சிருக்கீங்க? நீங்க ஏன் நான் இன்னொருத்தர்க்கிட்ட வேலைக்கு போறேன்னு நினைக்கறீங்க? நாம ஆரம்பிக்கபோற புது ஹாஸ்பிட்டலை எப்படி மேனேஜ் பன்றதுன்ற ட்ரெய்னிங்க்கு போறேன்னு நினைக்கலாமே?…” என்று அவளும் விடாது பேசத்தான் செய்தாள்.
அத்தனை பேச்சுக்களுக்கு பின் ஒருவழியாக மகள் சொல்லியதில் உள்ள விஷயத்தை புரிந்துகொண்டவருக்கு அவளுமே இதில் எத்தனை உறுதியாய் இருக்கிறாள் என்றும் புரிந்தது.
“ஹ்ம்ம், ஓகே. அங்க ஸ்டே….” என்று ஸ்ரீவத்சன் ஆரம்பிக்க,
“நீங்க எங்க சொல்றீங்களோ அங்க இருந்துக்கறேன் டாடி. உங்க விருப்பம் தான்…” என்று அடுத்து அவர் சொல்லியவைக்கு எல்லாம் தலையாட்டிவிட்டாள்.
எப்போதும் ஸ்ரீவத்சன் கண்டிப்பு தான். இப்போது இன்னுமே மகளை எச்சரித்தே அனுப்பி வைத்தார் சென்னைக்கு.
“நம்மளோட கெஸ்ட்ஹவுஸ்ல தங்க வேண்டாம். ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கற அப்பார்ட்மென்ட்ல உனக்கு ப்ளாட் பார்த்துட்டேன். ட்யூப்லேக்ஸ் லக்ஷுரி டைப் தான். நீ ஜாயின் பன்றப்போ போய் ரிஜிஸ்டர் பண்ணிடலாம்….” என்று கூற,
“கெஸ்ட்ஹவுஸ் இருக்கும்போது எதுக்கு டாடி பிளாட்?…” என்ற தேவான்ஷிடம்,
“அவ நல்லதுக்கு தான். அப்பார்மென்ட்ல இருந்தா பக்கத்துல ஆளுங்களும் இருப்பாங்க. பாதுகாப்பும் இருக்கும்…” என்ற ஸ்ரீவத்சன் மனதினுள் தயாளராஜ், தினேஷ் பற்றிய எண்ணங்கள் தான்.
எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தான் இந்த ஏற்பாடும். இதற்கென்றே மகளை அங்கே அனுப்ப யோசித்தவர், இப்போது அவர்களுக்கு என்ன பயமா? என்று துணிந்து அனுப்பி வைத்தார்.
இப்படியாக சென்னை வந்து சேரும்முன் பிரத்யுக்ஷா தான் அந்தலைசிந்தலையாகி போனாள்.
நாளும், பொழுதும் எச்சரிக்கை எச்சரிக்கை என்று ஸ்ரீவத்சன் மகளை வாட்டி எடுக்க, காதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கழற்றி கொடுக்காத குறையாக தான் படாதபாடுபட்டுவிட்டாள்.
சென்னை வந்து ஸ்ரீவத்சன் அவருக்கு பிடித்தவிதமாய், பெரும்போடாய் அனைத்தையும் வீட்டிற்கென, மகளுக்கென வாங்கி குவித்தவர் துணைக்கு வேலைக்கு ஒரு பெண்மணியும் அமர்த்திவிட்டு தான் சென்றார்.
“எதுவா இருந்தாலும் டாடிக்கிட்ட உடனே சொல்லிடனும்…” என்று கிளம்புகையில் மகளிடம் கூற,
“அப்படியே டாக்டர் ஷ்யாமளாவை பார்த்துட்டு போவோமே. ஒருவார்த்தை சொல்லிடுவோம்…” என்றார் காவேரி.
கணவரின் இத்தனை பரபரப்பிற்கும் காரணம் தினேஷ் என்ற விஷயம் அறிந்தவர் அதனை கூற,
“ஏன்? அத்தனை தூரத்துல இருக்கும்போதே என் பொண்ணு அவளை பார்த்துக்கிட்டா. இங்க ஒரு போன் அடிச்சா உடனே வந்திருவேன். அதெல்லாம் நான் பார்த்துப்பேன்…” என்று சொல்லி கிளம்பினார் ஸ்ரீவத்சன்.
“யார்கிட்டயும் எதுக்கும் போய் நிக்க கூடாதுன்ற ஆணவம் இருக்கே. பாரு பெருசா எதுலையாச்சும் எங்கயாச்சும் போய் நிக்கவேண்டிய அவசியம் வர போகுது…” என்று பல்லை கடித்தார் காவேரி.
இதற்கு கூட யாரையும் அண்டமாட்டேன் என்னும் மனிதனை எண்ணி சிலநேரங்களில் வெறுத்தும் போய்விடும் அவர் மனம்.
ஸ்ரீவத்சனுக்கு தெரியாமல் பிரத்யுக்ஷாவின் எண்ணில் இருந்து ஷ்யாமளாவை தொடர்புகொண்டு பேசியவர் அவரை விசாரித்துவிட்டு மகளையும் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிய பின்னர் தான் நிம்மதியானது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் பிரத்யுக்ஷா ஆகர்ஷனிடம் சொல்லி நிம்மதி பெருமூச்சு விட்ட தருணத்தை இன்றளவும் மறக்க இயலாது ஆகர்ஷனால்.
இப்போதும் அதனை நினைத்து பார்த்து பிரத்யுக்ஷாவிடம் விசாரிக்கவும் கேலி செய்யவும் முறைத்தவண்ணம் தான் பார்த்தாள்.
“சரி, ஹாட் சாக்லேட் இப்ப சில் சாக்லேட்டா மாறிருக்கும். இதை நீ சிப் பண்ணு. அனன்யா ரொம்பநேரமா பால்கனில இருக்கா. நான் கிளம்பறேன்…” என்றவன் பிரத்யுக்ஷா அவனை நிமிர்ந்து பார்த்த பார்வையில்,
“என்னடாம்மா, நான் தான் சொன்னேன்ல…” என்றான் ஆதுரமாய்.
“ப்ச், ஓகே. நான் எதுவுமே கேட்கலை. போதுமா?…”
“ஹ்ம்ம், பார்க்கவும் வேண்டாம். நான் பக்கத்துல வரலை, பேசலைன்னும் நினைக்க கூடாது. புரியுதா பிரத்யு?…” என்று சொல்லி இருவிரலால் அவளின் கன்னத்தை லேசாய் தட்டிவிட்டு, அனன்யாவை ஒருபார்வை பார்த்துவிட்டு வெளியேறினான் ஆகர்ஷன்.
அவன் சென்ற ஐந்துநிமிடம் கழித்து தான் அனன்யா உள்ளே வந்தாள். சிரிப்புடன் வந்ததும்,
“ஹ்ம்ம், சில்லாகிட்ட போல? கன்னமெல்லாம் ஜில்லுன்னு இருக்கே?…” என பிரத்யுக்ஷாவின் கன்னம் தொட்டு பார்த்து கேட்டவள்,
“இப்போவாச்சும் தூங்கலாமா? நான் நாளைக்கு கல்யாண பொண்ணுடா. ப்ளீஸ்…” என்று சொல்லி கொஞ்சி, சீண்டி என்று புன்னகையுடன் இருவரும் உறங்க ஆயத்தமாகினர்.
மறுநாள் அனன்யா திருமணம். கோலாகலமாக நடந்தேறியது. மதியம் வரை மட்டுமே பிரத்யுக்ஷாவினால் அங்கே இருக்க முடிந்தது.
ஷ்யாமளாவிடம் சொல்லிவிட்டு அவள் புறப்பட ஆயத்தமாக ஆகர்ஷன் தூரத்தில் இருந்தே விழிகளால் அவளுக்கு விடைகொடுத்தான்.
இருவரின் நெஞ்சமும் அடுத்த ஒருநாள் நிறைய காத்திருந்தது. நேரத்தை விரட்டி தள்ளியும் கூட செல்வேனா என்பதை போல தான் நகர்ந்தது.
மறுவீடு விசேஷம் என்று அனன்யா புகுந்தவீட்டிற்கு சென்றுவிட அன்று ஆகர்ஷனின் பிறந்தநாள்.
காலை நேரமே எழுந்து குளித்து கிளம்பி வந்தவனுக்கு தடபுடல் விருந்து தயாராய் இருந்தது.
திருமண விழாவை போல அவனின் பிறந்தநாளுக்கும் வீடே விழாக்கோலத்தில் தயாராய் இருந்தது.
அந்தவீட்டின் அரசனாகிற்றே அவன். எத்தனை வருடங்கள் கடந்து அந்த வீட்டில் கொண்டாடும் அவனின் பிறந்தநாள்.
அவர்களின் வாழ்நாளுக்கும் மறக்கவே முடியாத நாளும் அல்லவா. மகன் அங்கே தான் இருக்கிறான் என்று பார்த்து பார்த்து நெகிழ்ச்சியில் விழிகள் கலங்க சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார் ஷ்யாமளா.
“நீ இன்னும் ஹாஸ்பிட்டல் கிளம்பலையா ஷ்யாமா?…” என மனைவியிடம் கிருஷ்ணகுமார் கேட்க,
“அனுவும், மாப்பிள்ளையும் ஹனிமூன் கிளம்பறாங்க நாளைக்கு. அதான் இன்னைக்கு வந்து பார்த்துட்டு போறேன்னு சொல்லிருக்கா. வரவும் மதியம் தான் கிளம்பனும்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்க,
“அனு வர்றாளா?…” என்றான் ஆகர்ஷன்.
“ஆமா ஆர்ஷ், மாப்பிள்ளையோட வர்றா. இப்போ தான் கால் பண்ணினா. மதியம் லன்ச் இங்க தான்…” என்று சொல்ல,
“ஓஹ்…” என்றவனுக்கு அப்போது கிளம்ப முடியாதோ என்று தோன்றியது.
“என்ன ஆர்ஷ், முக்கியமான விஷயம் எதுவுமா? நீ வேணா கிளம்பேன். நாங்க பார்த்துக்கறோம்…” என்று சொல்ல,
“இல்லம்மா, நான் இருக்கேன்…” என்று சொல்லியவன் சாப்பிட அமர்ந்துவிட்டான்.
கைப்பேசியில் இன்னும் இரண்டுமணிநேரத்தில் மருத்துவமனை வந்துவிடுவதாய் பிரத்யுக்ஷாவிடம் இருந்து குறுஞ்செய்தி.
இன்னும் சற்றுநேரம். பொறு மனமே பொறு என மனதினை ஆர்ப்பரிக்காமல் அடக்கி வைக்க முயன்றான்.
அனுவை பார்த்துவிட்டு அதன்பின் கிளம்பிவிடுவோம் என்று நினைத்தவன் இதயமெல்லாம் சுகமான அலைப்புறுதல்.
இருவரின் காத்திருப்பும் கனிந்துவரும் அந்த ஷணத்தினை எதிர்நோக்கி காதல் தேன் சிந்தும் பூந்தோட்டமாய் முல்லைப்பூ வாசத்துடன் இதயக்கோவிலில் வாசம் செய்தது.
அன்று அனைவரின் வாழ்வின் முக்கிய நாள். இந்த திருநாள் அவர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருப்பத்தையும் தேக்கிவைத்து காத்திருந்தது ஆகர்ஷனின் வருகைக்காகவே.
பொம்மலாட்டத்தின் அத்தனை முடிச்சுக்களும் ஒற்றை நூலின் பிடியில் இழுபட சிக்கல்கள் விலகாமல், பிடிமானங்கள் மொத்தமாய் அறுந்து விழுந்தது.
ஆகர்ஷன் அனு வந்துவிட்டு செல்லவும் அவர்களின் மருத்துவமனை நோக்கி கிளம்பினான்.
ஷ்யாமளாவையும் அழைத்துக்கொண்டு உள்ளம் முழுவதும் நேசம் தூவ சந்தோஷத்துடன் சென்றுகொண்டிருந்தான்.