“போடி…” என்று சொல்லிய சுகன்யா அவளின் கன்னத்தை தட்டி கையை பிடித்துக்கொண்டார்.
அந்த வீட்டின் தலைமகன் சந்தனநம்பி. அவரின் மனைவி புவனா. மூன்று பிள்ளைகளில் மூத்தவள் கங்கா, இளையவன் ஹரித்திரன், மூன்றாமவள் ஹரிணி.
சந்தனநம்பியின் தம்பி கமலன். மனைவி சுகன்யா. ஒரே மகன் குமரன். இருவரும் ஒரே வீதியில் வசித்தாலும் இப்படியான சுப, அபசுப நிகழ்வுகளில் தான் வெகுநேரம் இருப்பது.
பார்வதி இவர்கள் இருவருக்கும் அக்கா. தாய் அமுதரசியை போல் குணம் கொண்டவர். கணவர் சடகோபன். மகன்கள் மதிவாளன், சிற்பி.
மூத்த தம்பியின் மகளை தன் மருமகளாய் பெண் எடுத்திருக்க, இரண்டாமவன் சிற்பிக்கு ஹரிணியை கேட்கமுடியாது போனது.
“நல்லவேளை ஹரிணி தப்பிச்சா? சிற்பியை விட ரெண்டுவயசு மூத்ததனால. இல்லைன்னாலும் சிற்பி நல்லா கேட்பான் தான். இருந்தாலும் இவனுங்களை நம்பமுடியாது…” என்று சுகன்யா தான் அங்கலாய்ப்பார்.
“ம்க்கும், அந்த வாயாடியை கட்டிட்டு போய் தான் என் வீடு நிறையனுமாக்கும்…” என்று பேசும் பார்வதிக்கும், ஹரிணிக்கும் சுத்தமாக ஒத்துவராது.
“என்ன கேட்டாலும் இவ ஏறுக்குமாறாவே தான் செய்யறா…” என்று பார்வதி புகார் கூறினால்,
“நான் என்ன செஞ்சாலும் ஏறுக்குமாறாவே செய்யறேன்னு சொல்றீங்க. அதை எதுக்கு செஞ்சிக்கிட்டு?…” என்று ஹரிணியும் மறுபுகார் படிப்பாள்.
பார்வதியின் வேலை அங்கே செல்லாது. கமலன் போல முன்கோபி இல்லை சந்தனநம்பி.
ஆனால் மகள் என்று வருகையில் சில சமையங்கள் சந்தனநம்பி பொறுமையும் பரிசோதிக்கப்படும்.
இப்போதும் இங்கே வந்திருந்து நாட்டாமை செய்யும் பார்வதியை அடக்கமுடியாமல் அமைதி காத்தார்.
தாய் அமுதரசி இறந்திருக்க அந்த வீட்டில் தாய்க்கு அடுத்து தனக்கு தான் உரிமை என்று அவர் பேசும் பேச்சுக்களில் கொஞ்சமும் உடன்பாடில்லை சந்தனநம்பிக்கு.
இத்தனைக்கும் எப்போதோ சொத்துக்கள் சமமாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்க இதன்பின்னர் வந்து ‘இது என் தாயுடையது, அதை தா’ என்று அநியாயம் செய்துகொண்டிருந்தார்.
சொந்தங்களையும் வைத்துக்கொண்டு, சம்பந்தியாகவும் இருந்து அவர் செய்பவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கவேண்டியிருந்தவர் மனதெல்லாம் மகனின் வரவை எண்ணி தான்.
“ம்மா கார் வந்திருச்சு…” என்று ஹரிணியின் சத்தம் வெளியில் இருந்தே அடுக்களையை அலறவிட, அனைவருமே போட்டது போட்டபடி வெளியில் ஓடி வந்தனர்.
இரண்டுவருடங்களுக்கு முன் குமரனின் திருமணத்திற்கு வந்துவிட்டு இரண்டு நாட்களில் திரும்பியிருந்தவனை காண காண புவனாவிற்கும், சந்தனநம்பிக்கும் கண்கள் நிறைந்தது.
முன்பும் போலவெல்லாம் அவன் முகத்தில் இலகுதன்மை இல்லை. அவனின் இறுக்கங்களை கண்கள் வெளிக்காட்ட, அழுத்தமான உதடுகள் மீசைக்கடியில் பிரியமுடியாதென்பதை போல பிடிவாதம் காட்டியது.
எத்தனை மாற்றம் தன் மகனிடத்தில். பார்வையிலேயே அத்தனை ஆளுமை. இரண்டுவருடங்களுக்கு முன் வந்த பொழுதில் கூட இப்படி இல்லை.
வருடங்கள் ஓட அவனின் உணர்வுகள் எல்லாம் அவர்களின் கண்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது.
மகன் என்னும் குழைவை கொஞ்சமும் அவனிடத்தில் காண முடியவில்லை. விழிகளில் விசாரிப்பு.
“நீ வா த்தான், நான் லக்கேஜை எடுக்கறேன்….” என்று சொல்லிய சிற்பி,
“சின்னண்ணி வா…” என்றான் ஹரிணியையும்.
பந்தலுக்கு கீழ் இறங்கி நின்றவனை புவனா நெருங்கும்முன் எங்கிருந்தோ ஓடிவந்து அணைத்துக்கொண்டார் பார்வதி.
“மருமகனே, என்னய்யா இப்படி ஆகிருச்சு? பாட்டியை பார்க்க கூட வராம? பாட்டியும் உன்னை நினைச்சே உசுரை விட்டிருச்சே? அதோட கடைசி ஆசையே உன் கல்யாணத்தை பார்க்கனும்ன்றது தான்….” என்று பார்வதி வராத கண்ணீரை வரவழைத்து ஒப்பாரி வைக்க இறுகிப்போய் நின்றான் ஹரித்திரன்.
“பாரு விடு, அவனே இப்பத்தான் வந்திருக்கான். உள்ள போகட்டும்…” என்று சடகோபன் சொல்ல,
“சரிங்க…” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு விலகி நின்றவர்,
“ஆமா, எத்தனை நாள் லீவ்ல வந்திருக்க ஹரி?…” என்றார் அவனிடம்.
அவர் கேள்விக்கும் பதில் தராமல், யாரிடமும் பேசவில்லை அவன். வேகமாய் உள்ளே சென்றுவிட்டான்.
எதிரே கங்கா வந்து நிற்க கண்டவன் அவளுக்கும் ஒரு தலையசைப்பு தான் ஹரித்திரனிடம்.
“போய் பாட்டி படத்துக்கு நின்னு கும்பிடு ஹரி…” என தணிகைவேல் சொல்ல,
“கடைசிநேரத்துல டிக்கெட் கிடைக்காம போயிருச்சு. என்ன நியூயார்க்கோ? என்னத்த பெரிய நாடோ?…” என்று அதற்கும் பார்வதி புலம்பிக்கொண்டு பேச,
“ம்மா, பேசாம இருக்கீங்களா?…” என்று தாயை அதட்டினான் சிற்பி.
“இவன் ஒருத்தன்…” என்று பார்வதி மகனை முறைக்க ஹரித்திரனை அங்கிருந்து சத்தமின்றி கூட்டிக்கொண்டு அவனறைக்குள் நுழைந்துவிட்டார் தணிகைவேல்.
“என்னடா மாப்பிள்ளை, வேணும்னே லேட்டா வந்த மாதிரி தெரியுது?…” என்று தங்கை மகனை அவர் முறைக்க,
கதவு தட்டும் சத்தத்தில் திரும்பி பார்க்க தணிகைவேல் முகத்தில் அசூயை பெரிதாய் தெரிந்தது.
“சிற்பியா இருக்கும். இல்லைன்னா ஹரிணி…” என்ற இலகுவாய் ஹரித்திரன் சென்று கதவை திறக்க அங்கே ஹரிணியுடன் கங்காவும் நின்றிருந்தாள்.
“வா…” என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றுவிட இருவருமே வந்தனர்.
“ண்ணா உன் ட்ராலி…” என்று ஹரிணி அதனை நகர்த்தி வைக்க கங்கா கையை பிசைந்துகொண்டு பார்த்தாள்.
ஹரிணியிடம் மட்டும் கேட்டதற்கு பதில் சொல்லிய ஹரி கங்காவிடம் பேசவில்லை.
அவளை காணவே பாவமாய் இருந்தது தணிகைவேலுக்கு. கோபமாய் ஹரியை பார்க்க, சிலநொடிகள் இப்படியே அவள் நிற்க கண்ட ஹரியும்,
“என்னக்கா, எதுவும் பேசனுமா?…” என்றான் அவளிடத்தில்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைக்க கண்டவனுக்கு, அப்படியே தன் தாயை தான் நினைவுப்படுத்தியது.
“என்ன?…” என்றான் கொஞ்சமும் இளக்கம் காண்பிக்காமல்.
“மன்னிச்சிடு ஹரி….” என்று முடிக்கவில்லை.
“ரொம்ப முக்கியம். போய் உன் பிள்ளைகளை பாரு. கிளம்பு…” என்று சொல்லிவிட்டு டவலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட்டான்.
“மாமா பாருங்க…” என்று தணிகைவேலை பார்த்து சொல்ல,
“நீ கிளம்பும்மா. வந்ததும் இத்தனை படுத்தனுமா? கொஞ்சநேரம் போகட்டும்ன்னு சொன்னா யார் கேட்கிறா? அவன் என்ன ஓடியா போவான்?…” என்று அவர்களை அனுப்பியவர் ஹரித்திரன் வர காத்திருந்தார்.
“நீங்க இன்னும் போகலையா?…” என்று மாமனை முறைத்த ஹரி வேறு உடையை எடுக்க,
“கங்கா பாவம்டா. எல்லாரும் இப்படி திட்டினா அவ என்ன செய்வா?…”
“ப்ச்…” என்று சலிப்பாய் அவன் சொல்ல,
“மன்னிச்சிட்டேன்னு சொன்னா தான் என்னவாம்?…”
“சொல்லிட்டா எல்லாம் சரியா போச்சா?….” என்று பல்லை கடித்தவன்,
“என் கல்யாணத்தை மாப்பிள்ளை சொம்பு குடுத்தா தான் தாலி கட்டுவாராம்ன்ற ரேஞ்ச்ல மாத்தி விட்டுட்டானுங்க தி கிரேட் பெருசுங்க. அதுக்கு யார் காரணம்? இவளும், இவ புருஷனும் தானே? அவ்வளோ கலவரம் நடக்குது. அன்னைக்கு எதுவும் பேசலை. இப்ப மன்னிப்பாம்…” என்று வெடிக்க,
“ஆத்தீ, என் மருமவனுக்கு இவ்வளோ கோவம் வருமா?…” என்று திகைத்து தான் பார்த்தார் தணிகைவேல்.
“ப்ச், என்ன மாமா வேணும்?…” என்றான் ஒரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு.
“எத்தனை நாள் இருப்ப? நாளைக்கு நான் நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்ன்னு இருக்கேன்…” என்றவரிடம்,
“இன்னும் நாலு நாள். கிளம்பிருவேன்…” என்று அலட்டிக்கொள்ளாமல் ஒரு குண்டை தூக்கி வீச,
“எப்ப இருந்துடா இப்படியான நீ?…” என்று பதறியவரின் பதற்றம் ஊர்ஜிதம் போல ஹரித்திரன் கிளம்பும் விஷயம் அறிந்து அத்தனை கலாட்டா.
அத்தனைபேரும் ஆளாளுக்கு பேச தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல தான் நின்று வேடிக்கை பார்த்தான் அவன்.
“அவன் விருப்பம். கிளம்பட்டும்…” என்று சொல்லிவிட்டார் சந்தனநம்பியும்.
அவரால் மகனை பார்க்க முடியவில்லை. காலம் கடந்து வந்த இந்த சிந்தனையை அறவே வெறுத்தார்.
மறுநாள் ஹரித்திரன் விமானநிலையம் கிளம்பும்நேரம் ஹரிணி அவனிடம் வந்து நின்றவள்,
“இன்னும் அந்த பொண்ணை உன்னால மறக்க முடியலை தானண்ணா?…” என்று கேட்க ஹரித்திரன் முகத்தில் திடுக்கிடல்.
அவன் விழிகள் தேடலையும், தவிப்பையும் காண்பிக்க அதற்கு மாறாக அவனின் தலை இல்லை என்றாடியது.
“அப்பாக்கிட்ட வேணும்னா திரும்ப பேசுவோமா?…” என்றதற்கும் மறுத்துவிட்டான்.
“என் ப்ரெண்ட்க்கு கும்பகோணத்துல தான் மேரேஜ். அடுத்தமாசம். நான் அங்க போறேன்…” என்று சொல்ல சொல்ல ஹரியின் வேலைகளில் தடுமாற்றம்.
“அண்ணா…” என்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் விழிகள் சிவந்து கிடந்தது.
“கிளம்பும்போது டிஸ்டர்ப் பண்ணாத ஹரிணி…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்லியவன் விருட்டென வெளியேறிவிட்டான்.
விமானநிலையம் சென்றவன் மனதெல்லாம் அலைபாய, அங்கிருந்து சென்றால் போதும் என்பதை போல தன்னிருக்கையில் சென்று கண்மூடிக்கொண்டவன் விழிகளுக்குள் வெட்கம் பூசிய அவள் முகம்.
“என்ன பிடிக்குமாம் பொண்ணுக்கு?…” என்றவன் ரகசிய சிரிப்புடனான கேள்வியும்,
“அவளுக்கு எக் பப்ஸ்ன்னா அவ்வளோ இஷ்டம். அதுவும் பப்ஸ்ல முழு முட்டை இருக்கனும். கேட்டு தான் வாங்குவா….” என்று சொல்லியவளின் வாயை மூட முயன்று கூச்சத்தில் தடுமாறியவளின் தோற்றம் அவனை இப்போதும் நிலைகுலைய செய்தது.
“சம்ருதிக்ஷா. தீக்ஷா…” என்று முணுமுணுத்தவன் மனதில் உலைக்களம் ஒன்று கொதித்தெழும்ப, அதில் ஒளிர்ந்த அவளின் வெளிச்ச ரூபம் அவனை தன்னிடம் இழுத்துக்கொண்டே இருந்தது வருடங்களை கடந்தும்.