நியூயார்க் நகரத்தில் வந்திறங்கியவனை அழைத்து செல்ல அவனுடன் ஒரேவீட்டில் வசிக்கும் நண்பனான நீலேஷ் காத்திருந்தான்.
நீலேஷ் நண்பன் மட்டுமல்லாது அங்கே அவனுடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவனும் கூட.
“வாடா மச்சான், செம்ம ப்ரைட்டா வருவன்னு பார்த்தா காலி லேய்ஸ் பாக்கெட் மாதிரி வர்ற?…” என்று வந்ததும் ஹரித்திரனிடம் வம்பு செய்ய,
“ப்ச், ஆரம்பிக்காத…” என்றவன் நீலேஷிடம் லக்கேஜை தள்ளிவிட்டு சென்று காரில் அமர்ந்தான்.
“ப்ரண்டாச்சே பிக்கப் பண்ணுவோம்ன்னு பாவம் பார்த்தா, இவன் இரக்கமே இல்லாம பொட்டியை என் பக்கம் தள்ளுறான்?…” என பல்லை கடித்தவன் அதனை தூக்கி உள்ளே வைத்துவிட்டு தானும் அமர்ந்து காரை கிளப்பினான்.
ஹரித்திரன் தான் அமர்ந்திருந்த இருக்கையை நன்றாக சாய்த்து மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கண்ணை மூடி சாய்ந்துகொண்டான்.
“நேரம்டா…” என்றபடி அவனை பார்த்தவன் சிலநிமிடங்கள் தானும் மௌனமாக அப்போதும் வாய் திறந்தான் இல்லை ஹரித்திரன்.
‘அநியாயத்துக்கு அமைதியா இருக்கானே? என்ன நடந்திருக்கும்?’ என்ற யோசனையில் மூளை குறுகுறுவென்று இங்குமங்கும் ஓட அதற்கு மேல் வாயை மூட முடியவில்லை.
“என்னடா விசேஷமெல்லாம் முடிஞ்சதா?…” என்று ஆரம்பிக்க,
“ம்ம்ம்…” என்ற சன்னமான குரல் தான் பதிலாய்.
“வெறும் ம்ம் தானா? இருக்கட்டும். சரி ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?…”
“ம்ம்ம்ம்…”
“கூட ஒரு ம்ம்ம். ஓகே, நெக்ஸ்ட்…” என்றவன், ‘இப்ப நீ பதில் சொல்லித்தான ஆகனும்’ என்று நினைப்புடன்,
“அப்பறம் ஹரிணி என்ன சொன்னா? இங்க வர்றதை பத்தி இந்ததடவை எதுவும் பேசினாளா?…” என்று கேட்டுவிட்டு ஹரியை பார்க்க,
“ம்ஹூம்…” என்றான் அதற்கும் கண்ணை திறவாமல்.
“டேய் போதும் நிப்பாட்டு…” என்று காரை நிறுத்தியவன்,
“ஆத்தீ ரூல்ஸ்…” என்று மீண்டும் காரை கிளப்பினான்.
“எனக்கு வேணும்டா நல்லா வேணும்…” என்றபடி முட்டிக்கொள்ளாத குறையாக வீடுவரை புலம்பியபடி வர ஹரித்திரனிடம் ஒரு அசைவும் இல்லை.
“ட்ராவல் ஃபுல்லா நல்லா தூங்கிட்டு தானடா வந்திருப்ப?…” என்று கேட்டதற்கும் பதிலில்லை.
அவன் கண்களை பொட்டு உறக்கம் அண்டவில்லை என்பதை நீலேஷ் எங்கே கண்டுகொள்ள முடியும்?
இப்போது இந்த சிறியளவிலான பயணத்தில் ஹரித்திரன் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தான்.
இப்போதும் நீலேஷிற்கு அத்தனை ஆச்சர்யம். அவனுடன் படித்த ஹரித்திரன் அமைதியும், புன்னகையுமான குணமிக்கவன்.
பெற்றோர், குடும்பம் என்று அவர்களை விட்டு எங்கும் செல்லமுடியாதென்றவனை எது நாட்டை விட்டு விரட்டியடித்தது என்று இன்றுவரை பிடிபடவில்லை.
அழுத்தமான அழுத்தம். இத்தனை இறுக்கம், மனதிற்குள் பூட்டிக்கொண்ட எண்ணங்கள், வார்த்தைகளில் அளவுகோல் என்று நீலேஷிடம் வந்து சேர்ந்த ஹரித்திரனின் மாற்றங்கள் ஏராளம்.
“என்னடா புது ஆளா தெரியற?…”என்று அங்கே நியூயார்க்கிற்கு வந்த புதிதில் நீலேஷ் கேட்டதற்கு,
“ஏன் அடையாளம் மாறிடுச்சா?…” என்ற எதிர்கேள்வி தான் பதிலாய்.
“பேச்சுமே மாறிடுச்சு…” என்றவனிடம்,
“இதுதான் வேணும். எல்லாம் மாறட்டும்…” என்று முடித்துக்கொண்டான்.
படிக்கும் காலத்தில் எல்லாம் நீலேஷின் கனவே இப்படியான அந்நியதேசத்தில் தான் தன்னுடைய வாழ்க்கை கழியவேண்டும் என்றிருந்தான்.
அவனின் ஆசையை என்றுமே தவறென்று சொல்லியதில்லை ஹரித்திரன். அது உன் விருப்பம் என்றுவிடுவான்.
“லைஃபை நமக்கு பிடிச்ச மாதிரி பிடிச்ச இடத்துல வாழனும்டா. இப்போ வாழாம எப்போ நாம வாழ? அட்லீஸ்ட் கல்யாணம் கமிட்மென்ட்ன்னு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்ம நல்லா என்ஜாய் பண்ணிடனும். குட் வே-ல தான்…” என்று சொல்பவனிடம்,
“தாராளமா என்ஜாய் பண்ணு மேன். வொய் மீ? என்னை இதுல இழுக்காத. உனக்கொரு ஆசைன்னா எனக்கொரு ஆசை. என் குடும்பத்தோட தான் நான் இருக்க நினைக்கறேன்…” என்றிருந்தவன் நான்கு வருடத்திற்கு முன்பொருநாள் திடீரென்று அழைத்து,
“முடிஞ்சளவுக்கு சீக்கிரம் நான் அங்க வரனும். எனக்கொரு ஜாப் அரேன்ச் பண்ணு…” என்றிருக்க,
“என்னடா ஹரி திடீர்ன்னு?…” என்ற நீலேஷின் திகைப்பில்,
அவனின் படிப்பிற்கும் திறமைக்கும் வேலை நிச்சயம் தான். ஆனாலும் அந்த பேச்சின் தொனி நீலேஷை புருவம் உயர்த்த செய்தது.
“பண்ணிடலாம் மச்சான். இது ஒரு மேட்டரா?…” என்று சொல்லி அதற்கு ஏற்பாடும் செய்துவிட கிளம்பிவிட்டான் உடனே.
இப்போதுவரை புரியாத புதிர் தான். ஹரித்திரனின் குடும்பம் வரை எல்லாம் நீலேஷின் பழக்கம் பெரிதாய் இருந்ததில்லை.
அத்திபூத்தார்போன்று தான் போக்குவரத்தென்பது. அதிலும் படிப்பை முடித்துக்கொண்டு மேல் படிப்பென வெளிநாடு வந்தவன் அங்கேயே வேலையை பார்த்துக்கொள்ள இன்னும் தொலைவாகி தான் போயிருந்தனர் நண்பர்கள்.
எப்போதாவது சமூகவலைதளத்தில் பேசிக்கொள்வது தான் என்றிருக்க இப்படி தன்னோடு வந்துவிட்ட பின்னுமே ஹரித்திரனிடம் என்னவோ ஒரு ஒட்டாத தன்மை.
ஆனாலும் ஒதுக்கம் காண்பிக்கவில்லை. உரிமையும் எடுத்துக்கொள்ளவில்லை ஹரித்திரன்.
“அநியாயம் பன்றதா நீ. உன்கிட்ட எதுவுமே நான் கேட்கலைப்பா. எப்பவும் போலவாச்சும் இரு…” என்றவனிடம் கூட எந்தவொரு பாவனையையும் காண்பிக்கவில்லை.
ஆனாலும் நீலேஷ் எப்போதும் போலவே தான் அவனோட சலசலத்து பேசுவது, கிண்டல் செய்வது என்றிருந்தான்.
அதில் ஹரித்திரன் கொஞ்சமேனும் கலந்துகொண்டாலும் பலநேரங்களின் மௌனமான பார்வை மட்டுமே பதிலாய் கிடைக்கும்.
இன்றுவரை இந்த மாற்றத்திற்கான காரணம் மட்டும் அவனுக்கு பிடிபடவே இல்லை.
அதை நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவன் கதவை திறந்துவிட்டு அதன்பின்பே ஹரித்திரனிடம் வந்தான்.
இரண்டு மூன்றுமுறை தட்டி எழுப்பிய பின்னர் தான் அவனால் கண்விழிக்கவே முடிந்தது.
“வந்துட்டோமா?…” என கேட்டுக்கொண்டே சோம்பல் முறித்தவன் விழிகளில் ரத்தம் பாய்ந்திருந்தது.
“மனுஷனாடா நீ? இத்தனை மணிநேரம் எப்படிடா தூங்காம வர முடிஞ்சது?…” என்று கோபமாய் கேட்டவன்,
“நில்லுடா. கேட்கறேன்ல…” என்றான் கோபமாய் நீலேஷ்.
“ப்ச், என்னடா?…” என்று கேட்டு திரும்பிய ஹரித்திரனின் கண்கள் மட்டுமல்ல முகமும் வீங்கி, இமைகள் தடித்திருந்தது.
“என்னாச்சு ஹரி?…” என்று அவனின் நெற்றியை தொட போக,
“சாகலை. ஓகே தானே? ரெஸ்ட் எடுக்கனும்…” என்றவன் விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டான்.
மென்மையே உருவான ஹரித்திரனிடமா இப்படியான தடித்த வார்த்தைகள் வருகிறது என்று நம்பமுடியாமல் பார்த்தான் நீலேஷ்.
இதையே விளையாட்டாய் பேசினால் கூட, ‘இதென்னடா முட்டாள்த்தனமான பேச்சு சாவை பத்தி?’ என்று கேட்க கூடியவன். கேட்டும் இருக்கிறான் முன்பொரு காலத்தில்.
இப்போது அதற்கு நேர்மாறாய் வெறுமையான பார்வையுடன் விரக்தியாய் அவன் மொழிந்த வார்த்தைகள் நீலேஷை பொசுக்கியது.
“ஹரி…” என்று வேகமாய் அவனின் அறைக்குள் நுழையவிருந்தவன் எங்கே உள்பக்கம் தாழிட்டிருப்பானோ என்று நினைக்க அப்படி செய்திருக்கவில்லை.
உள்ளே நுழைந்து பார்க்க அங்கே ஹரித்திரன் இல்லாமல், குளியல் அறையில் சத்தம் கேட்டது.
எப்போதும் துறுதுறுவென்றிருக்கும் நீலேஷையே அந்த வார்த்தை சோர்வுற செய்ய அங்கேயே குஷனில் அமர்ந்துவிட்டான்.
சற்றுநேரத்திற்கெல்லாம் முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ஹரித்திரன் நண்பனை பார்த்து,
“ஏதாவது செஞ்சிருக்கியா?…” என்றான் கேள்வியாய்.
“பசிக்குதுன்னா சொல்லி தொலையேன். அப்படியே உனக்குள்ள வச்சுக்கிட்டு தவிக்கிறதுக்கு அவார்டாடா குடுக்க போறாங்க?…” என்று நீலேஷ் கொந்தளிக்க,
“ஹேய், ச்சீ. வாடா…” என்றான் அந்த ஈரத்துண்டை நண்பனின் மேல் எரிந்துவிட்டு.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…” என்று கடுப்பானவன் தானும் அவன் பின்னோடு சென்றான்.
“நீ போய் உட்கார். நான் எடுத்துட்டு வரேன்…” என்று ஓபன் கிட்சனுக்குள் நுழைய,
“ப்ச், இல்லை. முதல்ல ஒரு ப்ளாக் காபி. ஒரு டேப்லெட். கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிடறேன்…”
“சுத்தமா நீ கெட்டு குட்டிச்சுவரா போய்ட்டாடா ஹரி. லாஸ்ட் டைம் ஊருக்கு போய்ட்டு வந்தும் மந்திரிச்சு விட்ட மாதிரி தான் இருந்த…” என்றவனை கண்டுகொள்ளவே இல்லை.
அவனாகவே ப்ளாக் காபி கலந்தவன் இரண்டு ரொட்டியை வெண்ணெய் தடவி சுட்டெடுத்து உண்டுவிட்டு அதனோடு ஒரு மாத்திரையும் போட்டுக்கொண்டான்.
நீலேஷ் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. கேட்டாலும் பதில் வராததில் அவனுமே கோபமாகியிருக்க ஒன்றும் பேசாமல் அங்கேயே அமர்ந்துகொண்டான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.