நீலேஷ் தான் தலைசுற்றி போய் அமர்ந்திருந்தான் ஹரித்திரனின் பேச்சை கேட்டு.
“பார்த்திருக்கோம்ன்னா? எங்கே? எப்போ?…” என்று நீலேஷ் கேட்க,
“ஹ்ம்ம், பார்த்துக்கிட்டோம். கும்பகோணத்துல, தீக்ஷா வீட்டுல வச்சு…” என்று கூற,
“டேய் என்னடா சொல்ற?…” என்றவன்,
“தயவு செஞ்சு உனக்கு புண்ணியமா போகும். தயவு செஞ்சு நான் கேட்டு கேட்டு நீ சொல்லாத சாமி. நீ சொல்லு, நான் ம்ம் கொட்டிக்கறேன். பிச்சு பிச்சு இந்த பிஞ்சு நெஞ்ச பதற வைக்காம…” என்றதும் ஹரித்திரனின் மனநிலையே இங்கில்லை.
அவனின் மௌனம் சிலநொடிகள் கனத்து கிடக்க நீலேஷும் அவனுக்கான நேரத்தை குறைக்க நினைக்காமல் காத்திருந்தான்.
உறக்கம் என்பது தள்ளி போய்விட்டது இவ்விஷயம் கேட்டு. தலைவலி என்று கீழே வந்திருந்தவன் இப்படி ஒன்று ஹரித்திரனின் அழுத்தத்திற்கு காரணமாய் இருக்கும் என்றெல்லாம் என்னவிழலி.
அதில் ஏதோ ஒன்று அவனை பாதித்திருக்கிறது. அந்த பெண்ணை மறக்கமுடியாமல் தவிக்கிறான் என்று மட்டுமே இதுவரை ஹரித்திரன் கூறியதிலிருந்து அவனின் அனுமானமாக இருந்தது.
வெகுநேரம் எடுத்துக்கொள்ளவில்லை ஹரித்திரனுமே. அவனால் சுமக்கமுடியாத ஒரு பாரமாகியிருந்தாள் தீக்ஷா.
யாரிடமும் மனதை காண்பிக்க நினையாதவன் ஏனோ இந்த நிமிடம் ஒரு இளைப்பாறலை நாடினான்.
“நீலேஷ்…” என்று கரகரத்த குரலில் ஆரம்பிக்க,
“ப்ச், இருக்கேன்டா…”என்று எழுந்துவந்து ஹரித்திரன் அருகில் அமர்ந்துகொண்டான்.
“இப்ப சொல்லு. ரொம்பவும் கஷ்டமா இருந்தா வேண்டாம். நீ போய் படு…” என்றும் நீலேஷ் கூற,
“நீ எதுவும் சொல்லவே வேண்டாம். பேசாம படு…” என்றவன் எழுந்து ச்நேற்று ஒரு தூக்கமாத்திரையை எடுத்துவந்தான்.
“இந்த ஒரு டேப்லெட் எடுத்துக்கோ. நிம்மதியா தூங்குவ. தூங்கி எழுந்தா மனசும் தெளிவாகும். அப்போவும் சொல்ல நினைச்சா தாராளமா சொல்லு….” என்றான் நீலேஷ்.
கையோடு இருவருக்குமான அலுவலக விடுப்பை எடுப்பதே சேர்த்தே செய்தி அனுப்பிவிட்டு பார்க்க ஹரித்திரன் நீரின்றியே மாத்திரையை போட்டும் விழிகளை அசைக்காமல் அமர்ந்திருந்தான்.
“டேப்லட் போட்டா தண்ணி குடிக்க மாட்டியா? நீ குழந்தையாடா?…” என்று நீரை கொண்டுவந்து தர வாங்கி பருகியவனிடம் அத்தனை தெளிவு.
நிச்சயம் இந்த நொடிக்கெல்லாம் ஹரித்திரன் கண்களை உறக்கத்திற்காக சுழற்றியிருக்கவேண்டும்.
அவனிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. சற்றுமுன் இருந்ததை போலவே அசையாமல் அமர்ந்திருக்க,
“உன்னைத்தான் ஹரி, நீ போய் தூங்கு. உன் ரூம் போ…”
“ப்ச்…” அலட்சியம் செய்தான் ஹரித்திரன்.
இப்போதுதான் நீலேஷிற்கு பயம் பிடித்தது. இதென்ன இப்படி கல் போல அமர்ந்திருக்கிறான் என்று தோன்றியது.
அவனின் அருகில் வந்தமர்ந்தவன் பக்கம் திரும்பிய ஹரித்திரன் முகத்தில் லேசாய் மென்னகை.
“என்னடா, பயந்துட்டியா?…” என்றான் அதே சிரிப்புடன்.
“இப்ப, மனுஷனா நீ? இப்படி இருக்க?…” பீதியோடு கூறினான் நீலேஷ்.
“ஒரு மாத்திரை இல்லை, நீ ரெண்டு, மூணுன்னு குடுத்தாலும் தூக்கம் வராது. நான் ட்ரை பண்ணிருக்கேன். என்னை மறந்து ஒரு தூக்கம், என் உடம்பு தாங்காம, கண்ணே முழிக்க முடியாம தானா வரும் பாரு. அப்போ தூங்குவேன்…” என்றான் இலகுவாய்.
“என்ன?…” என்று வாய் பிளந்துவிட்டான் நீலேஷ்.
சுத்தமாய் நம்பமுடியவில்லை. இத்தனை தூரம் அவன் எதிர்பார்த்திருக்கவும் இல்ல.
“என்னோட தாய்மாமா தான் அந்த வரன் பத்தி பேசினாங்க. எனக்கு இருபத்தேழு வயசு ஆரம்பிக்க போகுதுன்னு சொல்லி. ஒன்னுரெண்டுன்னு பார்க்க ஆரம்பிச்சு குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து. இதுல சில ஜாதகம் ஒத்து போகலைன்னும் ரிஜெக்ட் பண்ணினாங்க…”
“எல்லா கல்யாணத்துலையும் நடக்கறது தானே? எனக்கு பெருசா எதிர்பார்ப்பு எதுவும் இல்லை….” என்றவன்,
“உனக்கு தான் தெரியுமே? வீட்டுல சொன்னா சரின்ற ஆள் நான். என் கல்யாணமும் என்னை பெத்தவங்க விருப்பம்ன்னு இருந்தேன். அவ வந்தா. எல்லாருக்குமே அந்த சம்பந்தம் பிடிச்சது…”
“அப்பறம் என்னாச்சுடா?…” ஆர்வம் தாங்காமல் நீலேஷ் கேட்க,
“ரெண்டுவீட்டுக்கும் மத்தியில பேசினது தணிகை மாமா தான். தீக்ஷா வீட்டுலையும் ரொம்ப விருப்பம். அவங்களும் இப்படித்தான் அண்ணன், தம்பின்னு கூட்டுக்குடும்பம். தீக்ஷா அப்பாவும், அவங்க அண்ணனும் ஒரே வீட்டுல தான் இருந்தாங்க…”
“சரி, அப்பறம்?…” நீலேஷ் நன்றாக திரும்பி அமர்ந்தான்.
அவன் தான் ஹரித்திரன் பக்கம் திரும்பினானே தவிர ஹரித்திரன் பார்வை எதிரே மாட்டியிருந்த வெற்றிலை ஓவியத்தில் நிலைத்திருந்தது.
நீலேஷின் இடையிடுதலை கவனித்ததாகவே தெரியவில்லை. அப்படி இருந்தது ஹரித்திரனின் பேச்சுக்கள்.
“ஒரு நல்ல நாள் பார்த்து கிளம்பினோம், எல்லாரும் சேர்ந்து பொண்ணு பார்க்க. அதுவரைக்கும் போட்டோ கூட பார்க்கலை. என்னவோ நேர்ல பார்க்கனும்ன்னு ஒரு ஆசை. அந்த பெயரே எனக்குள்ள ஒரு பிடித்தத்தை கொண்டுவந்துச்சு. அதனால போட்டோ பார்க்கவேண்டாம்ன்னு பிடிவாதமா இருந்துட்டேன்…”
“ரொம்ப நல்லவன்டா…” நீலேஷ் கன்னத்தில் கை வைத்தான்.
“கிட்டத்தட்ட கல்யாண தேதி வரைக்கும் என்ன செய்யனும்ன்னு எல்லாம் முடிவு பண்ணின பின்னாடி தான் சம்பிரதாயமா பொண்ணு கிளம்பினதே? அத்தனை சந்தோஷம் எல்லாருக்கும்….”
“அன்னைக்கு வெள்ளிக்கிழமை. ரூம் எடுத்திருந்தோம் தங்கறதுக்கு. காலையில போய் தயாராகி கோவில் எல்லாம் போய்ட்டு சாயந்தரம் தான் பொண்ணு பார்க்க போனோம். ரெண்டு குடும்பங்கள் மட்டும் தான். பெருசா ரொம்ப கூட்டமில்லை…”
“தீக்ஷாவோட அம்மா அப்பா, தங்கச்சி. அவ பெரியப்பா, பெரியம்மா, அவளோட அண்ணனுங்க ரெண்டுபேர். ஒருத்தருக்கு கல்யாணம் ஆகிருந்தது. அந்த வீட்டு பொண்ணும் ரொம்ப நல்ல டைப்…” என்றான் மென்மையான குரலில்.
“ரொம்பத்தான் சர்ட்டிபிகேட். அப்பறம் என்னடா?எல்லாருக்கும் பிடிச்சு தான் கல்யாணம் பேசினீங்க? இதுல யார் குட்டையை குழப்பினது?…” நீலேஷ் குழப்பமானான்.
அத்தனை சுலபத்தில் சின்ன விஷயத்திற்கெல்லாம் சந்தனநம்பி பெரிய முடிவுகளை எடுக்க கூடியவர் அல்ல என்பது இவனறிந்த உண்மை.
அப்படி இருந்தும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு ச்நேற்று பார்த்து பேசி முடித்தும் திருமணம் நின்று, இப்படி மனமுடைந்து இங்கொருவன் வரும் அளவிற்கு என்னவாம் என்று மூளையை குடைந்தது.
“முதல்முறையா நேர்ல பார்த்தேன். பார்த்ததுமே பிடிச்சதுன்னு தான் சொல்லனும். தீக்ஷா. ஆனா அத்தனை சாஃப்ட். தனியா பேசனும்ன்னு சொல்லி போயுமே ஒருவார்த்தை என்கிட்ட பேசலை. ஏன் நானுமே அவளோட அண்ணியை வச்சு தான் பேசினேன்…”
“பொசுக்குன்னு பார்த்தேன் பிடிச்சதுன்னா. நீ இப்படி இருக்கற அளவுக்கு அந்த பொண்ணு எப்படின்னு அந்த பீலோட சொல்ல வேண்டாமா?…” என்று குறைபட்டுக்கொண்டவனுக்கு எங்கே தெரியும் அன்றைய நாளினுள் அவளின் முன்னே மானசீகமாய் ஹரித்திரன் நிற்கிறான் என்று.
வெட்கங்கள் தாண்டிய அந்த விழிகளின் மிரட்சி. புதிதாய் தனக்கானவள் இவளென்று காட்டப்பட்டிருந்த பெண்ணிடத்தில் ஹரித்திரனின் மனதில் முகிழ்த்திருந்த அந்த பிடித்தம் அன்றைக்கு என்னவோ அந்த வயதிற்கே உரிய ரசாசன மாற்றம் என்று நினைத்திருந்தான் ஹரித்திரன்.
ஆனால் இன்று இக்கணம் அவனின் மனம் முழுவதும் இந்து இதுக்கெல்லாம் நீக்கமற நிறைந்துகொண்டு அவனை ஆட்டிவைக்கிறாள் என்பதற்கு தன்னை மறந்து அவன் அமர்ந்திருப்பதே சான்றாகிறதே!
சந்தன நிறத்தில், இளம்பச்சை கரையிட்ட பட்டுபுடவையில் நின்றவளின் வதனம் செவ்வானம் பூத்திருக்க அவ்வப்போது ரகசிய சிரிப்புடன், தீக்ஷாவின் அண்ணியிடம் பேசும் பொழுதில் அதிகபட்ச அசைவுகளாக அவளின் பின் ஒளிந்துகொண்டு கைவளை சலசலக்க சத்தமின்றி சிரித்த அம்முகம் நெஞ்சில் பசுமையாய் படிந்திருந்தது.
“கல்யாண பொண்ணு பேசமாட்டாங்களா?…” என்று கேட்டிருந்த ஹரித்திரனின் கேள்வியில் தலையசைத்து நெற்றிசுட்டி ஆட அவளின் அண்ணியை விடாமல் பிடித்துக்கொண்டு நின்றவளின் மெல்லிய நடுக்கம் அவன் மனதில் ரசனையி தூண்டியது.
“என்னை பிடிச்சிருக்குன்னு தீக்ஷா வாயால கேட்கலை நீலேஷ். ஆனா அந்த முகம் எனக்கு சொல்லுச்சு. மடையன் நான், பிரச்சனை அன்னைக்கு அதை பெருசா நினைக்கலை. தோணவும் இல்லை. சூழ்நிலை…” என்றவன் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“போன் நம்பர் குடுத்துட்டு வந்தவன் தீக்ஷாவோட நம்பரை கேட்கலை. கால் பண்ணுங்கன்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டேன்…”
“வந்த பின்னாடி என்னடா?…” நீலேஷ் ஹரித்திரனின் முகத்தில் மெல்ல மெல்ல மீண்டும் இறுக்கம் சூழ்வதை கண்டான்.
“ஹ்ம்ம், ஆமா. ஆனா நிச்சயதார்த்தம் மட்டும் நெருங்கின சொந்தங்களை கூட்டி கும்பகோணத்துல வச்சிடலாம்ன்னு சொன்னாங்க. கல்யாணம் சென்னையில. அங்கயே நாள் குறிச்சு அடுத்த பதினஞ்சுநாள்ல நிச்சயதார்த்தம் வச்சுக்க முடிவு…” என்றவன் விழிகள் மெல்ல சிவப்பேற ஆரம்பித்தது.
“ரெண்டுவீட்டோட நெருங்கின சொந்தங்களையும் ரெண்டுபேருமே நேர்ல அழைக்கனும்ன்னு பேசிக்கிட்டாங்க. நாள் குறைவுன்றதால முதல்ல தீக்ஷாவோட பேரன்ட்ஸ் தான் சொல்ல வந்தாங்க. தீக்ஷா பேரன்ட்ஸ் கூட பெரியப்பாவும், அவங்க மூத்த மகனும் வந்திருந்தாங்க….”
“முதல்ல கமலன் சித்தப்பா வீட்டுக்கு போய் அழைச்சுட்டு, அடுத்ததா பார்வதி அத்தை வீட்டுக்கு போறதா இருந்தது. அவங்க வர்ற அன்னைக்கு பார்வதி அத்தையும், சடகோபன் மாமாவும் வேறொரு விசேஷத்துக்கு கோயம்புத்தூர் வரை போயிருந்தாங்க…”
“ஏனாம், உன் மாமனார் வீட்டுல இருந்து வர்றாங்கன்னு தெரியாதா உன் அத்தை வீட்டுக்கு?…” என்றான் கடுப்பாய் நீலேஷ்.
“அவங்க வர்றதுக்காக இவங்களோட ப்ரோக்ராமை தள்ளி போட முடியாதாம். அதான் என் பிள்ளை இருக்கானே, நிச்சயதார்த்தம் தானேன்னு சொல்லி கிளம்பியாச்சு…”