தான் கேட்ட விஷயம் நிஜமா என்பதை போல நீலேஷ் நம்பமுடியாமல் பார்த்தான் ஹரித்திரனை.
“ப்ச், தூங்கிட்டியா?…” என்று ஹரித்திரன் பல்லை கடிக்க,
“சத்தியமா உன்னை நினைச்சா தூக்கமெல்லாம் வருமா என்ன? மனசாட்சி இருக்காடா? ஊருக்கு போனவன் இங்க வந்து சொல்லவேண்டியது தானே ஜாப் ரிஸைன் பண்ண போறேன்னு…” என்று என்ன காரணம் என்று புரியாமல் குழப்பத்துடன் கேட்க,
“பேலன்ஸை அங்க வந்து சொல்லிட்டு போறேன். எதுக்கும் நீ தயாரா இருப்ப இல்லையா? அதான்…” என்றவன்,
“மத்ததை அங்க வந்து பேசறேன்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க போக,
“டேய், டேய், டேய் நின்னு தொலைடா இவனே?…” என்று அலறினான்.
“ஷட்அப் மேன், எதுக்கு கத்தற? நான் வீடியோ கால்ல இருக்கேன்…” என ஹரித்திரன் அதட்ட,
“மனுஷனே இல்ல நீ. அதுக்கு ஏன் நான் தூங்கும்போது கால் பண்ணி அரைகுறையா கதை சொல்ற?…” அதற்குமேல் கடுப்பாகிவிட்டான் நீலேஷ்.
“அதுக்கு? நான் தூங்கும்போதா கால் பண்ணமுடியும்? உன்கிட்ட இங்க வச்சு சொல்லவேண்டிய விஷயம் வரை சொல்லியாச்சு. மத்ததை அங்க வந்து பேசறேன்…”
“சரிடா, இப்ப கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. திடீர்ன்னு இந்த ப்ரேக்ல ப்ரைட்டாகறது எப்படின்னு விளக்கமா சொன்னேன்னா நானும் நிம்மதியா தூங்குவேன்…”
“என்ன?…”
“அதான்டா இங்க இருந்து கிளம்பறவரைக்கும் மூஞ்சில முக்காப்படி சோகத்தை சுமந்திட்டிருந்தியே. அதை எங்க வித்த? என்ன விலைக்கு போச்சு?…” என்றதும் ஹரித்திரன் நீலேஷை அப்பட்டமாய் முறைக்க,
“பின்ன என்னடா, இங்கருந்து சோகமா ஊர தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சிக்கிட்டேன்னு இருந்து என் மனசுல ஒருலாரி செங்கல் பாரத்தை ஏத்திட்டு இப்ப அங்க போய்ட்டு எனக்கு கல்யாணம்ன்னு ஜாலியா இருக்க மாதிரி இருக்கியே? என்ன மேட்டர்?…” என்று கேட்க,
“அவ்வளோ அவசரம்…” என்றான் ஹரித்திரன் அவனை கிண்டலாய் பார்த்துக்கொண்டு.
“அப்படியே வச்சுக்கோயேன். சொல்லு சொல்லு….” என்ற நீலேஷ் சட்டென,
“ஆமா, உண்மை தான். பொண்ணு பார்த்தாச்சு. போதுமா? நைட் ப்ளைட்ல கிளம்பறேன். போய் தூங்கு…” என்று அழைப்பை துண்டித்துவிட,
“ஆத்தீ என்ன?…” என்று வாயை பிளந்தவன் மீண்டும் சுதாரிக்கும்முன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க,
“நெசமாத்தான் சொல்றானா இவன்? பொண்ணா? போட்டா கும்பகோணம் வெத்தலைதான்னு சத்தியப்பிரமாணம் எடுத்த பிள்ளையா இவன்?…” என்று வேகமாய் ஹரித்திரனுக்கு அழைத்தான்.
அவனின் அழைப்பு செல்லவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் பொழுது தான் தெரிந்தது விஷயமே?
“அடேய் கிராதகா, இப்படி ப்ளாக் பண்ணி விட்டுட்டியே? நான் கேட்டேனா? சும்மா இருந்தவனை எழுப்பி இப்படி சொல்லிட்டு, கடைசில தூங்காம்ல. தூக்கம் வேற வராதேடா?…” என்று புலம்பிக்கொண்டு தலையை பிய்க்காத குறையாக அமர்ந்துவிட்டான்.
ஹரித்திரனின் காதலை அறிந்திருந்த நீலேஷிற்கு அவன் இன்னொரு பெண்ணை மணக்கும் சாத்தியமே இல்லை என்ற எண்ணம் அத்தனை வலுவாக இருந்தது.
அப்படி இருக்க இது எந்த பெண்ணாக இருக்கும் என்று யோசித்தாலும் அது தீக்ஷாவாக இருக்க கூடும் என்னும் அனுமானம் சுத்தமாக இல்லை.
“திரும்ப பார்த்தா மன்னிப்பை தான் கேட்க முடியும். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்தா அதையும் மானசீகமா கேட்டுட்டு அவளோட வழியில இருந்து தள்ளி நின்னுப்பேன்…” என்று தான் சொல்லியிருந்தானே தவிர தனக்கொரு வாழ்க்கை என்று அப்போதும் அவன் யோசிக்கவோ, பேச்சிற்கோ கூட கூறியதில்லை.
“என்னமோடா மச்சான், நல்லாருந்தா சரி. இவன் பேக் டூ பார்ம் வந்துட்டானோ? செஞ்சிருவானே சேர்த்து வச்சி…” என்றும் முணுமுணுத்துக்கொண்டான்.
இத்தனை கலவரத்தை ஒருவனிடம் இறக்கிவிட்டு மென்னகையுடன் தனது முக்கியமான பயண பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் ஹரித்திரன்.
ஹரிணியின் நிச்சயதார்த்தம் முடிந்து வீடு வரும்வரை கூட ஏதோ ஒரு அதிர்வில் மந்திரத்திற்கு கட்டுண்டதை போல் தான் இருந்தான் ஹரித்திரன்.
தலை வலிக்கிறது என்று தன் அறைக்குள் முடங்கிக்கொண்டவனுக்கு அவள் அவனிடம் வீசிய அந்த அறிமுகமற்ற பார்வை சிறிது சிறிதாய் அவன் அமைதியை கொன்று குவிக்க ஆரம்பித்தது.
‘என்னை எப்படி நியாபகமில்லாமல் போகும்?’ என்று அறைக்குள்ளேயே நிலைகொள்ளாமல் இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தான்.
‘உனக்கு நினைவிருக்கிறது என்பதற்காக அவளுக்கும் நினைவிருக்க வேண்டுமா என்ன?’ என்று இன்னொரு உள்ளம் அவனை எள்ளி நகையாடியது.
‘இதற்கா இத்தனை வருடங்கள் காத்திருப்பும்? இத்தனை வேதனைகளை சுமந்துகொண்டு தனிமையில், தனக்கு தானே தண்டனை அளித்துக்கொண்டு’ நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் மேலும் மேலும் வெறுமையை பிடித்து அடைத்தது.
அந்தநேரத்திலும் கூட அவளை முழுதாய் ஆராய்ந்த தன் விழிகளும், மனதும் என என்னுகையிலேயே அந்த பார்வை அவளின் அறிமுகமற்ற பார்வைக்கு முதல் அந்த அதிர்வில் தீக்ஷா காண்பித்த அந்த மிரட்சி.
‘எஸ் எஸ்’ என மனது என்னவோ கூச்சலிட, மீண்டும் மீண்டும் தன் கண்களை மூடி மனக்கண்ணில் அதனை ஓட்டிப்பார்த்தான்.
ஆம், ஒரு துளி வினாடியில் அந்த கண்கள் அவனை கண்டு கண்டவேகத்தில் களிப்பையும் காண்பித்ததுவே.
‘இதனை எப்படி உணராமல் போனேன்?’ என்று தலையை பிடித்தவனுக்குள் ஏதேதோ சந்தோஷ பரிமாணங்கள்.
“ஓஹ் காட், காட் இட்…” என தனக்குள் சொல்லிக்கொண்டவன் முகத்தில் மீண்டும் புதிதாய் ஒரு மலர்ச்சி பூ விரிவதை போல விரிய துவங்கியது.
அதன்பின்னர் தான் ஹரித்திரன் சுவாசமும் சீராக ஆரம்பிக்க அடைத்திருந்த கதவுகள் திறக்கப்பட்டு வெளிச்சங்கள் ஒளிர்வடைவதை போலிருந்தது.
அவனுக்கான விடைகளும் அனுமானங்களுடன் அவன் முன்னே காட்சியளித்தது.
ஆம், நிச்சயம் சம்ருதிக்ஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவனறிந்தவரை அதுதான் நிஜம் என்று நம்பினான்.
இப்போதும் எவ்வித மாற்றமும் இல்லாத அவளின் அந்த தோற்றமும், முகமும் இந்தநேரம் அவனிதழ்களில் மந்தகாச புன்னகையை தோற்றுவித்து லேசாய் இலகுவாக்கியது.
‘ருதிக்கா, வீட்டுக்கு போவோம்’ என்ற நிவாஷினியின் அழைப்பில் நிச்சயம் அவர்கள் இந்த ஊரில் தான் இருக்கவேண்டும் என்னும் பதிலை தந்தது.
“ஆமால்ல, ஒருவேளை வேற ஊரா இருந்தா ஊருக்கு போகனும், இல்லை இங்க வெளில தங்கியிருந்தா அவங்க வீட்டுக்கு போகனும்ன்னு சொல்லியிருப்பாங்களே? எஸ்…” என்று சந்தோஷித்தான்.
“அடுத்து…” என்று யோசிக்கும்பொழுதே ‘யார் நீங்க?’ என்று கேட்ட அந்த கேள்வியும் தெரியாதவர்களை பார்க்கும் பார்வையும்.
அதன்பின்னே ஒளிந்திருக்கும் வலியின் மிகுதியை அவனால் உணரமுடிந்தது. வாழ்க்கையில் அடிபட்டு விழுந்து கிடப்பவர்களின் அழுத்தம் அவளிடம் கண்டுகொண்டானே.
‘நிச்சயம் அவளுக்கு என் மீதான வருத்தமும், கோபமும், ஏன் துவேஷமும் கூட இருக்கலாம்’ என்றுதான் தோன்றியது.
முதலில் அவளை காணவேண்டும். அவளை அறியவேண்டும். அவர்கள் சூழ்நிலை புரியவேண்டும். அதற்கு தான் இங்கிருக்கவேண்டும்.
இனியும் ஓடி ஒளிந்து ஒழிந்தே போகும் எண்ணமில்லை. எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் முடிவில் இருந்தான்.
இத்தனை வருட காத்திருப்பிற்க்கும் சேர்த்து அந்த ஒற்றை விழி அசைவில் அவனுக்கான அர்த்தத்தை சேர்த்துவிட்டாள் சம்ருதிக்ஷா.
ஆம், அவன் உணராமல் விட்ட ஒன்றை இப்போது நினைவுகூர்ந்தபொழுதில் பிடித்துவிட்டான் ஹரித்திரன்.
கண்ணிலிருந்து மறையும் கடைசிவினாடியில் மின்னல் பார்வை என்றாலும் ஒரே ஒருநொடி அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றாளே?
இதைவிட வேறு என்ன வேண்டுமாம் என்று தோன்ற நிச்சயம் இனி இங்கிருந்து செல்ல போவதில்லை.
தான் வேண்டாம் என்றாலும் தன் பார்வையில் தான் இனி அவளும் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
அதேவேகத்தில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு முதலில் தன் வேலையை இங்கே பார்த்துக்கொள்ளவேண்டும் என நினைக்க,
‘ஒருவேளை அவள் இந்த ஊரிலேயே இல்லை என்றால்?’ என்றொரு மனது இன்னொரு வழியை யோசி என்றது.
‘இல்லைன்னாலும் இனி என்னோட தேடலை நிப்பாட்ட போறதில்லை. எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கறேன்’ என்னும் உறுதியில் இருந்தான் ஹரித்திரன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.