அவர் சொல்லியதை எல்லாம் ஹரித்திரன் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஒன்றென்றால் நூறென்று பேசுபவர்கள் தானே இவர்கள் என்று அசட்டையாய் பார்த்தான் அவரை.
“இங்க பாரு ஹரி, சம்பந்தி சொன்ன பொண்ணு வேண்டாம் விடு. நீ போய்ட்டு வா. நீ வரும்போது உனக்கு பொண்ணு பார்த்து வச்சிருப்போம். நீ தாலி கட்டற. அவ்வளோ தான்…” என்றார் கமலன் மிரட்டல் போல,
“முடியாது. யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. இந்த பேச்சை விடுங்க…” என்று அவன் விலக போக,
“நில்லுடா…” என்று அவனை மறுத்து நின்றார் கமலன்.
“வேண்டாம் கமலா, அவன் ஊருக்கு போய்ட்டு வரட்டும்…” என்று நம்பியும் சொல்ல பேச்சுக்கள் முற்ற, கடைசியாக கமலனின் பேச்சு தீக்ஷாவின் குடும்பத்தினரை பற்றி என்று வந்து நின்றது.
“பொய்யும் புரட்டுமா பேசிட்டு திரியற அந்த குடும்பத்து புள்ளை மட்டும் எப்படி இருப்பா?…” என்று கமலன் வார்த்தையை விட,
“சித்தப்பா…” என்றான் ஹரித்திரன் கூடமே அதிரும் வகையில் அவனின் குரல் பெரிதாய் ஒலித்தது.
“என்னடா இல்லைன்னு சொல்லுவியா நீ? நீயும் தான இருந்த அவ அண்ணன் என்னை அடிச்சப்போ? இப்ப நீயும் அடிக்க வர்ற மாதிரியா வர்ற?…” என்று கேட்டதும்,
“போதும் சித்தப்பா, நிப்பாட்டுங்க…” என்று கத்திவிட்டாள் கங்கா.
அதுவரை அமைதியாக கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தவள் தன் தம்பியை இப்படி நிறுத்தி படுத்துகிறார்களே என்று தாங்கமுடியாமல் முன் வந்துவிட்டாள்.
“என்ன நீ உன் தம்பிக்கு சப்போர்ட்டா? உன் வீட்டுக்கு வராம அவமானப்படுத்திட்டாங்கன்னு தான இவ்வளோ தூரம் வந்ததே?…” என்றார் கமலன்.
“நீங்க என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க, என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்றேன். அன்னைக்கு அந்த பொண்ணு வீட்டுக்காரங்க மேல எந்த தப்பும் இல்லை. அவங்க சொன்னது நிஜம் தான்…” என்றாள் கங்கா.
“என்ன?…” என்று பார்வதியும்,
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?…” என்று மதிவாளனும்,
“கங்கா…” என்ற அதிர்ச்சியுடன் சந்தனநம்பி, கமலனும் பார்த்தனர்.
“ஆமாப்பா, உண்மை தான்…” என்று அன்றைக்கு நடந்தவற்றை சொல்லியவள்,
“நீங்க இப்பவுமா உண்மையை சொல்லமாட்டீங்க?…” என்றாள் தன் கணவனை பார்த்து.
இனி என்ன நடக்கிறதோ நடக்கட்டும். இத்தனை வருடங்கள் இதனை மனதிற்குள் வைத்துக்கொண்டு புழுங்கியதற்கு இதற்குமேல் என்னவானால் என்ன என்ற எண்ணமே வந்துவிட்டது.
மதிவாளனின் அமைதியே அதிலிருக்கும் உண்மையை காண்பித்துக்கொடுக்க பார்வதி சிறிதுநேரத்தில் அத்தனை ஆடிவிட்டார் மகனிடம்.
அதுவும் இவ்வளவு நாட்கள் சொல்லாமல் இருந்ததற்கும் சேர்த்தே அவர் வசைபாட, மனம் மாறிவிட்டார்களோ என்னும் விதமாய் இருந்தது இந்த பேச்சுக்கள்.
“சரி, சரி விடு. ஏதோ பயத்துல பண்ணிட்டான்…” என்று சமாதானம் செய்த கமலன்,
“இப்ப என்ன? அந்த குடும்பம் பொய் சொல்லலை, அதனால இத்தனை வருஷம் இவன் கஷ்டப்பட்டானா? போய்ட்டு போகுது. அதுக்காக அதையே நினைச்சிட்டு இருந்தா சரியா போச்சா?…” என்றாரே பார்க்கலாம்.
அத்தனைபேரும் அவரை பொறுக்கமாட்டாமல் பார்க்க, பார்வதியும் அதற்கு ஒத்து பாட்டு பாடினர்.
“அதுக்குன்னு அந்த வீட்டாளுங்களும் என்ன சும்மாவா? பொய் சொல்லலையே தவிர சண்டைன்னதும் எவ்வளோ பேச்சு? அடிச்சாங்க தானே? அது இல்லைன்னு ஆகிடுமா?…” என அடுத்ததாய் சொல்லி,
“இதுக்காக எல்லாம் அந்தாளு செத்தான்னு சொன்னா ஏத்துக்கற மாதிரியா இருக்கு? வயசாச்சுன்னா போய் சேரவேண்டியது தான். அதெப்படி நாம பொறுப்பாவோம்?…” என்றார் கமலன். வெறுத்துவிட்டது அவரின் பேச்சு.
“நான் சொல்லலை? இந்தாளு மனுஷன்ல சேர்த்தி இல்லைன்னு…” என்று பல்லை கடித்தார் சுகன்யா.
இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை மீண்டும் புரிந்துகொண்ட ஹரித்திரன்,
“குமரா நான் கிளம்பனும்…” என்றான் தன் தம்பியிடம்.
“புண்ணியமா போகும். முதல்ல இந்த கும்பலை விட்டு காலி பண்ணு சாமி. வா உன்னை நான் ட்ராப் பன்றேன்…” என்று சத்தமில்லாமல் அழைத்து வந்துவிட்டான் விமான நிலையத்திற்கு.
வரும்வழியில் ஹரித்திரன் கோவிலில் நடந்தவற்றை எல்லாம் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்ட குமரன்,
“நீ போய்ட்டு வா. அந்த கோவில் பக்கத்துல இருக்காங்களான்னு நான் விசாரிச்சு வைக்கறேன்…” என்று சொல்லி அனுப்பினான் ஹரித்திரனை.
“நானும் வந்திடறேன். வந்திருவேன்…” என்று நம்பிக்கையுடன் விமானம் ஏறினான் ஹரித்திரன்.
————————————————
“ருதிக்கா, இன்னும் தூங்காம அங்க என்ன பன்ற?…” நிவாஷினியின் அழைப்பில் மொட்டைமாட்டியில் நின்றுகொண்டிருந்த சம்ருதிக்ஷா திரும்பி பார்த்தாள்.
“என்ன ஸ்டார்ஸ் எண்ணிட்டிருக்கியா? எத்தனை கவுண்ட் பண்ணிருக்க?…” என நிவா கேட்க,
“எண்ணனும்ன்னு நினைச்சேன். எண்ணிக்கையில் அடங்கலை. அப்பப்போ மிஸ்ஸாகிருது நிவா…” என்றாள் தீக்ஷா தன் தங்கையிடம் சிறு புன்னகை கொடுத்து.
“நாளைக்கு சேர்த்து எண்ணுவோம். இப்ப சாப்பிட வா…” என்று சொல்ல,
“சாப்பாடு வேண்டாமா?…” என்றழைத்தார் அவர்களின் தாய் நர்மதா.
“வந்துட்டோம் ம்மா…” என்று மாடியில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அக்காவும் தங்கையும் அமர,
“சாப்பிட்டு தூங்கனும்ன்னு நினைப்பே இல்லை இல்லையா?…” என்று இருவரையும் கண்டன பார்வை பார்க்க,
“ம்மா, நாளைக்கு லீவ் தானே? தூங்க விடுங்கம்மா…” இளையவள் கெஞ்சுதலாய் கேட்க, அவளுக்கான பதிலை தன் அமைதியில் தந்தார் நர்மதா.
“ப்ச், தெரியாம பேஷன் டிஸைனிங் படிக்கிறேன்னு சொல்லிட்டேன். என்னை வச்சே எத்தனை பன்றீங்க நீங்க?…” என்று அவள் சிணுங்க, தீக்ஷா அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
“வாழ்க்கை இருக்கும் போதே நமக்கானதை செஞ்சிடனும். நாம செய்யனும்ன்னு நினைக்கும்போது எதுவுமே மிச்சமிருக்காது நிவா…” என்றார் ஆழ்ந்த குரலில் நர்மதா.
அந்தகுரலே பிள்ளைகள் இருவருக்கும் பாடமாய் இருக்க அதன்பின்னர் மௌனமாய் உண்டனர்.
“பேசாம சாப்பிடனும்ன்னு நான் சொல்லலையே? நமக்கான சில நேரங்கள்ல நம்ம மனசுக்கு தோணுறதை பகிர்ந்துக்கனும் தானே?…” என்று நர்மதா அன்றைய நாளில் நடந்தவற்றை எல்லாம் தன் பிள்ளைகளிடம் பகிர்ந்தார்.
தீக்ஷாவும் அன்றைக்கு அலுவலகத்தில் நடந்தவற்றை சொல்லிக்கொண்டிருக்க இடையிடையே நிவாஷினியின் கேள்விகள் வேறு.
அந்த பேச்சுக்களில், சின்ன சின்ன சந்தோஷங்கள், சில சுவாரஸியங்கள், அதனைக்கொண்டு வெளிவந்த புன்னகைகள் என்று அந்த அழகான கூடும் பெருமூச்சுக்களை தள்ளி வைத்து இருப்பதை கொண்டு இளைப்பாறியது.
விமானம் ஒன்று அவளின் பார்வையில் பட்டு கடந்து செல்ல கண்டுகொண்டிருந்தாள்.
மனதெல்லாம் மீண்டும் அழுத்த துவங்கியது. ‘நான்… நான்….’ என்று தன்னை தெரியவில்லையா என்று கேட்ட அந்த பரிதவிப்பான பார்வை.
‘வேண்டாம் வேண்டாம்’ என்று அந்த நினைவுகளை விரட்ட முயன்று முடியாமல் மீண்டும் நட்சத்திரங்களை எண்ண துவங்கினாள்.
எண்ணி எண்ணி அந்த களைப்பிலே உறக்கம் வந்துவிடும். இது அவளுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்றும் கூட என்பதனால் அதனையே கையிலெடுக்க மீண்டும் ஒரு விமானம் இடை புகுந்து அவளின் முயற்சியை கலங்கடித்தது.
நிகழ்வுகளால் நினைவுகள் மாறினாலும் நேசங்களின் பிறப்பிடம் உயிர் கலந்து வாசம் செய்வதற்கென காத்திருக்கும்.
மீண்டும் அவள் கரைந்து உருகிய அந்நாட்கள் திரும்பப்போவதில்லை என்னும் ஏமாற்றத்தை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் நட்சத்திர எண்ணிக்கை எண்களில் எண்ணங்களை விதைக்க துவக்கினாள் சம்ருதிக்ஷா.