தன்னை கண்டதுமே சம்ருதிக்ஷா எழுந்து சென்றதிலிருந்து ஒரு மிடறு கூட அவனால் விழுங்க முடியவில்லை.
அவனுமே இதனை எதிர்பார்க்கவில்லையே. அதே நிறுவனத்தில் தான் அவளும் பணியில் இருப்பாள் என்பது ஹரித்திரனுமே எதிர்பாராத ஒன்று.
“சென்னைல தான் வேலைன்னு டிஸைட் பண்ணிட்ட. அதுக்கு ஏன்டா ரிஸைன் பண்ணிட்டு போகனும்? நம்ம ஆபீஸ் அங்கயே இருக்கே. அதுவும் மூணு பிராஞ்ச் இருக்கு. அப்படி மூவ் பண்ணிக்கோயேன் உன்னை…” என்றிருந்தான் நீலேஷ்.
இதனை ஹரித்திரன் யோசிக்கவே இல்லை. யோசிக்கவில்லை என்பதை விட அவனின் எண்ணத்தில் இப்படி ஒரு சௌகரியம் இருப்பதே பளிச்சிடவில்லை.
நினைவெல்லாம் அவளின் வசமிருக்க இதனை எப்படி ஆராய்ந்திருக்க முடியும்?
குறிக்கோள் ஒன்றே கருத்து என்பதை போல ஹரித்திரன் அவளிருக்கும் இடம் சென்றுவிட வேண்டும் என்பதை மட்டுமே அல்லவா மனதில் வைத்திருந்தான்!
அங்கிருந்த அலுவலகத்தில் பேசி, சென்னைக்கு மாற்றல் விண்ணப்பித்து தான் வந்து செல்வதற்கு ஏதுவான அலுவலகத்தையும் தேர்வு செய்தவன் அங்கே தான் தன் வாழ்வும் என்பதை உணர்ந்திருக்கவில்லை.
ஹரித்திரனின் திறமைக்கு அனைத்துவித சலுகைகளும் அங்கே வழங்கப்பட்டதை போலிருந்தது.
தங்களின் நிறுவனத்தின் திறமையான பணியாளரை எந்தவிதத்திலும் இழக்க அவர்களின் வியாபார மூளை அனுமதிக்கவில்லை.
கேட்டவிதத்தில் கேட்ட நேரத்தில் அவனுக்கானவற்றை அவர்கள் அனுமதித்திருக்க புறப்பட்டுவிட்டான் ஹரித்திரன்.
முதல்நாள் பணியில் சேர்ந்த பொழுதில் கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை அங்கே தீக்ஷா இருப்பது.
மறுநாள் காலை தனக்கு முன் சென்ற இருசக்கர வாகனத்தின் வேகத்தில் யார் என்ற கவனத்தை அங்கே தற்செயலாக குவித்தவனுக்குள் தான் ஓராயிரம் மின்னல்கள்.
அத்தனை தூரம் மனது அடித்துக்கொண்டது. இங்கே வருகிறாள் என்றால் வேலை பார்த்தால் மட்டுமா?
உள்ளே சென்று எங்கே, எதற்கு என்று தேடி அதன் உண்மை தன்மையை அறியும் முறை நூறுமுறை விழுந்து எழுந்துவிட்டான் ஹரித்திரன்.
அங்கே தான் தீக்ஷாவின் வேலையும் என்ற பின்னர் அவனுக்குள் எழுந்த சந்தோஷமும், நிம்மதியும் அவன் வாழ்வில் அனுபவித்திராதவை.
அதற்காக தானுமே உடனடியாக அவள் முன்னே சென்று நிற்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை.
தனக்கான நிதானம் அவசியமாக இருக்க, விலகி நின்று அவளின் அணுகுமுறைகளை, அவள் புன்னகையை, நடமாட்டத்தை என ஒவ்வொன்றாய் கவனித்து தனக்குள் ஏற்றிக்கொண்டவன் மனதில் இப்போது பெரும்சஞ்சலம் உருவெடுத்தது.
தன் மீதான அவளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்றொரு மனது அவனுள் எச்சரிக்கை விதையை தூவ, எதுவாக இருப்பினும் அவளவனாக தானிருக்க தீர்மானம் செய்துகொண்டான்.
“ம்ஹூம், லேசா சூடு இருக்கு. இதுவே போதும்…” தீக்ஷா மறுக்க,
“அதானே? நீ இதை வேஸ்ட் பண்ணிட கூடாதுன்னே குடிப்பியே? என்னால முடியாது. அதான் நீ வர்றதுக்குள்ள குடிச்சு பப்ஸ் சாப்பிட்டாச்சு. ஆனாலும் பசியே அடங்கலை. என்னன்னு தான் உன்னால ஒரு பப்ஸோட நிக்க முடியுதோ?…” என்றுவிட்டு வினோதா எழுந்துகொள்ள,
“செகென்ட் ரவுண்டா?…” என சிரித்தாள் தீக்ஷா.
நெஞ்சை கிழித்துக்கொண்டு உள்ளே சென்று அவனின் நெஞ்சத்தில் ஜில்லென்ற உணர்வை நிரப்பியது அவளின் புன்னகை ஓசை.
அகம் குளிர்ந்தவனின் முகமும் குளுமையாக மீண்டும் விழிகள் அவளை தனக்குள் ஏந்த துவங்கியது யாரின் கவனத்தையும் கவராமல்.
ஆவல் கொண்டு தான் பார்க்கும் விதத்தில், வேறு யாரேனும் கவனித்து அது தீக்ஷாவிற்கு எவ்வித சங்கடத்தையும், சங்கோஜத்தையும் உண்டாக்கிவிட கூடாதென்பதிலும் கவனமாக இருந்தான் ஹரித்திரன்.
அவனை பாராமல் பார்த்தவன் உள்ளம் ஒருகணம் சுணங்கினாலும் மறுகணம் மெல்லிய அதிர்வை காண்பிக்கத்தான் செய்தது.
தீக்ஷாவின் முயற்சி என்னவென்பதும் கண்டுகொண்டவன் விழிகள் லேசாய் அவளில் சாய்ந்து இறங்கியது.
ஹரித்திரன் என்பவனால் தனக்குள் எவ்வித பாதிப்போ, அதிர்வலையோ உருவாகவில்லை என்பதை நிரூபித்துவிடவேண்டும் என்ற முனைப்பை அப்பட்டமாய் தீக்ஷாவிடம் காணமுடிந்தது ஹரித்திரனால்.
அந்தோபரிதாபம்! அவள் காண்பிக்க நினைத்த முனைப்பில் உணவின் வேகத்தை கவனிக்க தவறி அவ்விடம் விட்டு எழுந்து சென்றால் போதும் என்பதன் வேகத்தை காட்டிக்கொண்டிருந்தாள்.
“எங்க பொண்ணு அவசரமா எல்லாம் சாப்பிடமாட்டா. பொறுமையா ரசிச்சு ருசிச்சு தான் சாப்பிடுவா…” என்றவளின் குரலும், அதற்கு எதிர்பதமாய் இப்போது வேகமாய் உண்டு முடித்தவள் தன் கையையும், இதழ்களையும் டிஷ்யூவினால் துடைத்துவிட்டு எழுந்து நின்றாள்.
“என்ன ருதி? அதுக்குள்ள ஓவரா? நீ சாப்பிடற வேகத்துக்கு நான் நாலு ப்ளேட் உள்ள தள்ளலாம்ன்னு சொல்லுவேன். இதென்ன படாஃபட் மாதிரி?…” வினோதா கூட விநோதமாய் பார்த்துவைக்க,
“நான் இன்னும் முடிக்கவே இல்லையே?…” வினோதா சொல்லி முடிக்கும்முன் கதவின் அருகே சென்றவள்,
“ஒரு கால் வேற பேசனும். பை…” என்றுவிட்டு தீக்ஷா வேகமாய் லிப்டின் பக்கம் சென்றுவிட,
“கையில போனை வச்சிட்டு கால் பேசனுமா? இவ என்ன மொபைல் கம்பெனிக்கே போயா பேச போறா?…” கன்னத்தில் கைவைக்காத குறையாக வினோதா அமர்ந்துவிட்டாள்.
அந்த தளத்திலிருந்து வெளிவந்து நின்ற பின்னர் தான் மீண்டும் மூச்சே எழுந்ததை போலிருந்தது தீக்ஷாவிற்கு.
இதென்ன தன்னிடம் இத்தனை தடுமாற்றம்? அதுவும் அவனை தெரியாதென்று சொல்லிவிட்டு இவ்வளவு போராட்டம்?
தன்னை குறித்தே அத்தனை கோபம் கொண்டாள் தீக்ஷா. லிப்ட் வந்ததும் தங்களின் தளத்திற்கான எண்ணை அழுத்திவிட்டு சுளீரென்று வெட்டிய தலையின் பொருத்தில் கை வைத்துக்கொண்டு கண்ணை மூடி நின்றாள்.
இத்தனை நாட்கள் நிழலாய் அவளை இம்சித்தவன், இன்று நிஜமாய் அவளுள் வதை செய்துகொண்டிருந்தான்.
“ராஸ்கல்…” பல்லை கடித்துக்கொண்டு முணுமுணுக்க,
“ம்க்கும்…” என்ற செருமல்.
அப்போதுதான் அவனும் தன்னோடு அதில் நுழைந்திருப்பதையே உணர்ந்திருந்தாள் தீக்ஷா.