மறுநாள் காலை பதினோரு மணி அளவில் சாருவின் குடும்பம் சென்னை வந்து சேர்ந்தது. வழக்கமாக பெண் வீட்டினர் தங்கள் இருப்பிடத்தில் திருமணம் வைத்துக்கொள்வார்கள்.ஆனால், சாம்பசிவம் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை. எப்படியாவது மகன் மருமகள் இருவரையும் சென்னையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.
நரேந்திரனுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. சாருமதி சொல்வது போல் கொஞ்ச காலம் இங்கே இருந்து பார்ப்பது..சரிவரவில்லை என்றால் மீண்டும் பெங்களூரு செல்வது..அப்பா ஏதாவது சொல்லிக் காண்பித்தாலும் வெளியே வேலை கிடைப்பது ஒன்றும் கஷ்டமில்லை. இப்போது இவன் கொண்டு வரும் க்ளியண்டுகளின் மூலம் வரும் வருமானம் இவனுக்கானதுதான். ஆரம்பத்திலேயே இவை பற்றியெல்லாம் தன் அப்பாவிடம் கறாறாகப் பேசிவிட்டிருந்தான். எவ்வகையிலும் கட்டுப்பட அவனுக்கு இஷ்டம் இல்லை.
சாருமதியைப் பார்த்தவனுக்கு உடல் முழுவதும் பரபரப்பு. புதியதாக அவள் செய்துக்கொண்டிருந்த அலங்காரம் அவனை வேறெதிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை. வெளியே தெரியும்படிக்கு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.கண்மணி தலையில் அடித்துக் கொண்டார். “இவன் பார்த்து வச்ச பொண்ணுதானே..இவ்வளவு வருஷமா பார்த்துக்கிட்டு இருக்கான்.இன்னிக்காவது கொஞ்சம் அடக்கி வைக்கக் கூடாதா“என்று சாம்பசிவத்திடம் பொருமினாலும்,மருமகளின் அலங்காரத்தை மீறிய அமைதியும் ,முகம் காட்டிய சாந்தமும் கண்மணியையும் சாருவை பார்க்கச் செய்ததுதான்.
ஆரம்பத்தில் எதெல்லாமோ யோசித்தாலும்,கொஞ்சம் சாருமதியை அளவிட்டதில் அவள் நல்ல பெண்தான் என்றும் புரிந்து கொண்டார்கள் கண்மணியும் சாம்பசிவமும். மகன் அவளிடம் என்னவெல்லாம் சொல்லி வைத்திருக்கிறானோ தெரியாது.ஆனால்,தங்களிடம் பழகும் பெண்ணிடம் அதற்கான எந்த பிரதிபலிப்பும் இல்லை.அத்துடன் இங்கே சென்னையில் மாமனார் மாமியாருடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ சாரு சம்மதித்தது சாம்பசிவம் தம்பதிக்கு பெருத்த நிம்மதிதான்.
இவற்றையெல்லாம் யோசித்த கண்மணியின் முகம் புன்னகை கொண்டது. மகனது செய்கைகள் கூட அவரது சந்தோஷத்தைக் குறைக்கவில்லை. அம்மா தனக்கு அண்ணியாக வரப்போகும் சாருவை பார்ப்பதும், சந்தோஷ முகமாய் வலம் வருவதும் திருமகளின் கண்களில் தப்பவில்லை.
வீட்டுப் பெண்ணான தனக்கு உரிய இடம் பறிபோகும் என்பது போன்ற உணர்வில் சிக்கினாள் . அத்துடன் தன் பெற்றோர் சாருவுக்காக வாங்கிய நகைகளும்,அண்ணன்தனது திருமணத்திற்கு என சாருவுக்காக தனது பணத்திலிருந்து வாங்கியவைகளும் நிச்சயம் திருவின் மனதில் சாரு மீதான வெறுப்பைத் தூபம் போட்டு தூண்டி விட்டது.
அதை அவள் வெளிப்படையாக திருமண மண்டபத்தில் காண்பிக்கவும் தயங்கவில்லை. கல்யாண நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தாள் .
கவனித்தாலொழிய பிறருக்கு புரியாது. இந்த நிலையில்தான் அவளுக்காகவென பார்த்திருக்கும் மணமகன் நிவாஸின் பெற்றோர் குடும்பமாக திருமணத்திற்கு வந்தது. நிவாஸின் பெற்றோரும்,அக்கா மற்றும் அவள் கணவருமாக வந்திருந்தார்கள். திரு எதிலுமே சம்மந்தப் படாமல் தனித்துநிற்பது அவர்களுக்கு மனதில் உறைத்ததை திருவின் விதிப்பயன் என்று சொல்வதைத் தவிர வேறு என்னவென்று சொல்வது?
அவர்கள் மனம் என்னென்னவோ கணக்குகள் போட்டுக்கொண்டிருக்க,தனது யோசனை உலகில் தனியே உலாவிக் கொண்டிருந்தாள் திருமகள். முதல் நாள் மாலை ரெசெப்ஷன் சமயத்தில் கூட கண்மணி ,தனது மகள் திருவை “மேடையில் அண்ணன் பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோம்மா, பரிசுப்பொருட்கள் வாங்கி வைக்கவும் ஹெல்ப்புக்கும் அவன் பக்கத்துல நம்ம வீட்டுலேந்து யாரவது நிக்கணும்” என்று மெனக்கட்டு சொல்லியபிறகும்,திரு ‘அம்மா,நா வாசல்லே வரவங்கள உள்ளே இன்வைட் பண்ண நிக்குறேன்.நீங்க இங்கே பாருங்க” என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள் .
பிறகு,கீழே அமர்ந்துகொண்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சாகேத் ,நரேன் உதவிக்கு யாரும் இல்லாமல் நிற்பதைப் பார்த்து நண்பன் அருகில் நின்றுகொண்டு அவனுக்குத் தேவைப்படும் உதவிகள் செய்துக்கொண்டிருந்தான். சாருவின் தம்பி அவள் அருகே துணைக்கு நின்றுகொண்டிருக்க வெளியே சிரித்தாலும் நரேந்திரனின் மனதில் கோவம் . சாருவுக்கு எல்லாம் புரிகிறதுதான்.அவள் என்ன செய்யமுடியும்?
வீட்டுப்பெண் இப்படி நடந்து கொண்டால் ‘தான்’ அங்கே எப்படி நிம்மதியாக இருக்க முடியும்..நல்லவேளை,அவளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாம்! என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சாரு .
இதோ இன்று நிவாஸின் குடும்பத்தினர் முன்னே தன்னிலையை இன்னும் கீழிறக்கிக் கொண்டது பெண். மணமகளுக்கு நாத்தனார் முடி போடவென சாம்பசிவம் திருவைஅழைக்கும் பொழுது காதில் கேக்காத மாதிரி நகர்ந்து சென்றவள்,தன் வருங்கால மாமியார் அருகே சென்று அமர்ந்தும் கொண்டாள் .இரண்டாம் முறை அழைக்க கண்மணி வர வேண்டியதாகிற்று. வருங்கால சம்மந்தி முன்னே தன் மகளை கடிந்து கொள்ள விரும்பாமல் கண்மணிஅமைதியாய் தன்மகளைஅங்கிருந்து நகர்த்தி சென்று ,நாத்தனார் முடியும் திரு போட்டாள் தான்.
நிவாஸின் அம்மா மனதில்,’என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாள்?”என்று ஒருபுறமும்,’நம்ம நிவாஸுக்கு சரியான ஜோடிதான் ‘என்று மறுபுறமும் தோன்ற தன் மகளின் காதுகளில் கிசுகிசுப்பாக சொல்லியும் கொண்டாள் .
ஜான்வி நரேந்திரனுடனும் கூட படித்தவள்தான் .அதனால் திருமணத்திற்க்கு அவளும் பெங்களூரிலிருந்து வந்திருந்தாள் . இன்னும் மூன்றே நாட்களில் அவளுக்கும் சாகேத்துக்கும் நிச்சயதார்த்த நிகழ்வும் ஏற்பாடு ஆகியுள்ளது.அதனாலேயே சாகேத்-ஜானு இருவரும் வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு வந்திருந்த ஜான்வி திருமகள் நடந்து கொள்வதுபற்றி சாகேத்திடம் நக்கலடித்து பேச,சாகேத் கோவம் கொண்டான்.
“நம்மளுக்கு அதிகம் பழக்கம் இல்லாதவங்க,அறிமுகமில்லாதவங்க பத்தி மோசமான கருத்தை மனசுக்குள்ள விதைக்கிறதும்,வளத்துக்கறதும் ரொம்ப தப்பு ஜான்வி. உன்னை மாத்திக்கோ..” அவன் குரல் உயரவில்லை.அதில் இருந்த ஏதோ ஒன்று ஜான்வி மீண்டும் திருமகளை பார்த்து வைத்தாள் .
பிறகு மறந்தும் ஜான்வி இருக்கும் வழியில் பார்வையை செலுத்தாது தான்பார்வையை திருப்பிக்கொண்டான் சாகேத் . அவனது கோவம் நிச்சயதார்த்தம் வரை நீடித்தது.
நிவாஸ் திருமகளுடன் அவனுக்கு தோன்றும் பொழுதுவீடியோ சாட்டில் பேசினான். பெரும்பாலும் அவனது பேச்சு அவனைப் பற்றியதாக மட்டும் இருந்தது. இவள் தன்னைப் பற்றி ஏதாவது சொல்ல வந்தாலும்,எல்லாத்தையும் உன்னோட ப்ரொபைல் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்‘என்று முடித்து விடுவான். திரு வெகுவாக சோர்ந்து போனாள் . திடீரென்று ,அமேசானில் ஏதாவது பரிசு பொருட்கள் வந்து சேரும். நிவாஸ் தனக்கு பிடித்ததை இவளுக்கு ஆர்டர் செய்து அனுப்பி வைப்பான்.
திருமகள் அதிலேயே மயங்கிப் போவாள்.இப்படித்தான் அவர்களது திருமணத்திற்கு முன்பான நாட்கள் சென்றது. இன்னொருபுறம் ஜான்வி-சாகேத் அவர்களும் அதிகம் சந்தித்துக் கொள்ளவில்லை. எப்போதாவது சந்தித்துப் பேசினாலும் கொஞ்ச நேரத்தில் சண்டையில் முடியும்.
ஜான்வி தன் பிடியிலிருந்து இறங்கி வரமாட்டாள். ஆரம்பத்தில் சமாதானம் செய்த சாகேத் ,பிறகு தானே இறங்கி வரட்டும் என்று அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டான். இப்போது அவன் அறையில் நரேந்திரனும் இல்லை.அவன் ஒருவன் மட்டும் தான் .
ஜான்வி தனது அறையை காலி செய்துக் கொண்டு வந்து விடுவதாக அடம் பிடிக்கிறாள்.
“திருமணத்திற்கு முன்னர் இது போலவெல்லாம் தங்குவதற்கு எனக்கு சம்மதம் இல்லை” என்று தெளிவாக சொல்கிறான் சாகேத். அவனது இந்தப் பத்தாம்பசலித் தனத்தை ஜான்வியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இவ்வளவு நாட்கள் விநீதனுடன் இருந்துவிட்டு,இப்போது தனியாய் இருப்பது அவளுக்கு அத்தனை சுலபமாகவெல்லாம் இல்லை. வினீதனை அலுவலகத்தில் பார்த்தாலும் இருவரும் தங்களது தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது இல்லை. ஆனால் ,அந்த வார இறுதியில் பப்பில் சந்திக்கும் பொழுது , மது லேசாக அருந்தியதற்க்கே பெண்ணுக்கு போதை ஏறிவிட்டது. உடன் வந்திருந்த வினீதனிடம் புலம்பித் தள்ளிவிட்டாள்.
ஜான்வி சென்ற பிறகு அவனுக்கும் வேறு எந்த பெண்ணுடனும் மனது நிலைக்கவில்லை. அவளிடம் ஏதோ ஒன்று அவனை வசீகரித்து விட்டது . அதை பெண்ணவளிடம் அவன் சொல்லவும் செய்தான். ஆனால் ,ஜான்வி ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.
“நோ..நோ வினீ ,அப்படியெல்லாம் சொல்லாத. என்னால முடில. அவன ..அந்த லூசநா காலேஜ் சமயத்திலேயே ப்ரொபோஸ் பண்ணேன்.அவன்தான் வேற ஒருத்திய லவ் பண்ணுறேன்னு என்கிட்ட சொன்னான். இப்போ, திரும்ப அவனோட லைப்டைம்கம்மிட்மெண்டா ,நா போக சான்ஸ் இருக்கும் பொழுது அதை எப்படி மிஸ் பண்ண முடியும் ..நீயே சொல்லு..” என்று வினீதனை மறுத்தாள் .
தன்னை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் வினீதனை விடுத்து கானல் நீர்போல் அவளை போக்கு காட்டிக்கொண்டிருக்கும் காதல் எனும் மாய வலைக்குள் போவேன் என்று ஆடம் பிடிக்கும் அவளை என்ன செய்யலாம்?
வினீதனிடமிருந்து பெருமூச்சுதான் வந்தது. இவள் சாகேத்தை உண்மையாகவே விரும்புகிறாளா எனும் சந்தேகம் அவனிடம். ஆனால் ஜான்வியிடம் கேட்க முடியாது.அமைதியாய் இருந்துவிட்டான்.
‘மேலே அவனுக்காக நிறைய வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கும் பொழுது இதில் நேரத்தை விரயம் செய்வானேன்’ என்றது அவன் மனது.
அதற்குப் பிறகு விநீதனுடன் வெகுவாக பேச்சை குறைத்துக்கொண்டாள் ஜான்வி.அவள் மனதில் எதையோ இழந்த பாரம்.சாகேத்தின் பாராமுகம் வேறு. மொத்தத்தில் கல்யாண பெண்ணுக்குரிய மலர்ச்சி அவளிடம் இல்லை. சாகேத்தை எதை முன்னிறுத்தி நான் விரும்பத் தொடங்கினேன்‘என்று சுய அலசல் வேறு அவளை குழப்பியது.அவனது ஒட்டாத தன்மை அவன் மீது வேறுவிதமான சந்தேகத்தை வேறு கிளப்பி விட்டது.
“இவன் கல்யாண வாழ்க்கைக்கு தகுந்தவனா“..என்றெல்லாம் கூட யோசித்தாள் .சாகேத்திடம் எந்த மாற்றமும் இல்லை . திருவின் திருமணம் பற்றிய செய்தி அவன் மனதை ஐஸ் பாறையை போல மாறச் செய்திருந்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனத்துள்ளே பலத்த அடிதான் .திருவின் மாற்றங்களும் குணமும் வேறு சாகேத்தை வருத்தம் கொள்ளச் செய்தது.
ஆனால்,தான் ஏன் திருவை விரும்பினோம் என்று சாகேத்தின் மனதில் ஒருமுறை கூட வரவில்லை. அவளின் இந்த குண மாற்றம் அவளுக்கு இடும்பை இழுத்து விடக் கூடாதே!என்று மட்டும் யோசித்தது அந்த மனம்.
எண்ணெய் பொறுத்தவரை அவன் திருமகளை நினையாமல்,ஜான்வியை பற்றி யோசித்தால் அவனது வருங்கால நல்வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். அவனிடம் போய் யார் சொல்லுவது?
நரேந்திரன் சாருவை துபாய் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஏற்கனவே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தான். அவளது பேச்சில் அதிகமாக வெளிப்படும் இடங்களில் அதுவும் ஒன்று. டிக்கெட் ஏற்பாடு செய்தவன் ,அது பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. பெங்களூருவில் சாருவின் வீட்டு மாடியில் இப்போது தங்கியிருக்கிறார்கள். சென்னைக்கு நிரந்தரமாக சென்றாக வேண்டுமே..இருவரும் பெங்களூருவில் இருக்கும் நிறுவனங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஒரு மாதம் இங்கே தான்.
சாம்பசிவம் இதற்கெல்லாம் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை. இனி,சாகேத்துடன் தங்க முடியாது.ஒரு மாதத்திற்க்காக வெளியே எங்கே இடம் பார்த்துக்கொண்டு . சாருவின் வீட்டிலும் நல்லவர்களாகத் தான் இருக்கிறார்கள். மகனுக்கும்,புதியதாக கல்யாணம் ஆகியிருக்கும் இந்த சமயத்தில் அங்குள்ள வசதிக்குறைவுகள் ஒன்றும் பெரியதாகத் தெரியாது என்று அமைதியாக இருந்துவிட்டார்.
சாருவுக்கு மாமியார்-மாமனாரின் இந்த நடத்தையே அவர்கள்மீது மரியாதையை அதிகரிக்க போதுமானதாக இருந்தது. தான் நினைத்த அளவுக்கு அங்கே மோசமில்லை. எல்லாம் சூழ்நிலை,நேரம் என்று வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள். “சிறு புரிதல் கூட உறவுகளை வளர்க்கும். சிறு சஞ்சலமும் உறவை முறிக்கும்“.
கடைசி ஒரு வாரம் வேறு வேலைகள் இல்லாதவாறு இருவரும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ,துபாய் கிளம்பிச் சென்றார்கள். அதுவரை சூழ இருந்த எல்லாவற்றையும் மறந்து இருவரும் “உனக்காகவே நான்-எனக்காகவே நீ“என்பதை முற்றும் முழுவதுமாய் உணர்ந்து கொண்ட அழகிய ஒரு வாரமது.
துபாய் வருவதைப் பற்றி அவளவன் தன் பெற்றோரிடம் ஏதாவது சொல்லியிருக்கிறானா என்று சாருவுக்கு கேட்க தயக்கம்.
தேன்நிலவுக்கென வந்துவிட்டு கணவனின் சந்தோஷத்தை குறைக்க அவளுக்கு இஷ்டமில்லை. நரேந்திரனின் பார்வையில் அவனது பெற்றோர் எப்படி என்று தெரியும். எல்லா உறவுகளுக்கும் இடையே சந்தோஷங்களும் சண்டையும் பொது தானே..எல்லாம் காலப் போக்கில் நிறம் மாறிவிடும் என்று அமைதியாகிவிட்டாள் .
ஒருவாரம் சென்றதே தெரியவில்லை. காதலுடன் கலந்த காமம் ,இருவருக்குமிடையேயான புரிதல், என்று அவர்களுக்கென தனிப்பட்ட நாட்கள். சாருவின் கைங்கர்யத்தில் இரு வீட்டாருக்குமான பரிசுப்பொருட்களுடன் இந்தியா திரும்பினார்கள். பெங்களூரு வந்தவர்கள் அந்த வார இறுதியில் சென்னை நோக்கிய பயணம்.
சாருவின் அம்மா அழுது தீர்த்துவிட்டார். சாருவுக்கும் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. பிறந்து,வளர்ந்த ஊர் , பெற்றோர்,தம்பி என எல்லோரையும் விட்டுச் செல்வது அவளுக்கும் சுலபமாக இல்லை. இந்த சூழ்நிலை அவளுக்குப் புதியது.இது வரை எண்ணிப் பார்க்காத ஒன்று.
சாம்பசிவத்தின் வீட்டில் பூக்களால் தோரணம் கட்டி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. மருமகள் வருகிறாள் என்று கொஞ்சம் அதிகப்படியான அலட்டல்கள் என்று நமக்குத் தோன்றினாலும்,மகனை மீண்டும் குடும்பத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் உறவில் எந்த விரிசலும் வந்துவிடக்கூடாது என்று மெனக்கடல் என்றுதான் நான் பார்க்கிறேன். ஒரு விதத்தில் தவறுகளை திருத்தும் முயற்சி…
சாருவுக்கும் கண்மணிக்கும் இயல்பாகவே பொருந்திப் போனது. சாருவும் நரேந்திரனும்ஒன்றாக பைக்கில் காலையில் ஒன்றாக அலுவலகம் செல்வார்கள். சாம்பசிவம் தனது காரில் செல்வார். புதியதாக கல்யாணம் ஆனவர்களுக்கு தனிமை தேவை என்ற எண்ணம்.மாலையில் நரேந்திரனுடனோ சாம்பசிவத்துடனோ சாரு வீடு வந்து சேருவாள் .காலை நேர பரபரப்பில் கண்மணி சாருஇருவரும் அடுக்களையில் வேலை செய்ய நரேந்திரன் காய்கறி நறுக்கி தருவது ,சாருவின் துணியை இஸ்திரி போடுவது போன்றவற்றை செய்து விடுவான்.
இவற்றையெல்லாம் பார்க்கும் திருவுக்குள்சகஜ பாவனை மறைந்து போயிற்று.அண்ணியுடனும் அம்மாவுடனும் அதிகமாக பேசிப் பழகுவதை தவிர்த்தாள் . சாருநேராகவே திருவிடம் சொல்லிவிட்டாள் …உங்களோட நல்ல தோழமை கிடைக்கும்னு நினைச்சேன்.ஆனா எனக்கு ஏமாற்றம்தான் என்று. திரு அதற்க்கு பதில் எதுவும் சொல்லவில்லை.
திருவின் பார்வை சாருவை,’நீயெல்லாம் எனக்கு சமமா‘என்று பார்த்துவைத்ததில் சாரு மனது லேசாக அடி வாங்கியது.அதற்குப் பிறகு மறந்தும் அவள் திரு விஷயமாய் போய் நிற்பது இல்லை.
துபாய்க்கு தேன்நிலவு சென்றுவந்த அண்ணனும் வீட்டில் முன்னரே சொல்லவில்லை,இதோ இவளும்தான் சொல்லவில்லை.பிறகு என்ன நடிப்பு என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
அவரவர்க்கு தனி நியாயங்கள். அதற்கான சப்பைக்கட்டுகள். மொத்தத்தில் உறவில் விரிசல். பார்ப்போம்.