“சொல்லி தானே டா அனுப்பினேன்.. மறந்துட்டேன்னு வந்து நிக்குற?” என சூர்யாவை பிரேமா திட்டிக் கொண்டு இருக்க,
“என்னாச்சு சித்தி?” என்று வந்தான் ஜெய்.
“என் சித்தப்பா மகன் வீட்டுக்கு இன்விடேஷன் குடுத்துட்டு வர சொன்னேன்.. அந்த ஏரியாக்கு போயும் மறந்துட்டு வந்திருக்கான்.. ஒரு வேலை உருப்படியா செய்யுறானா? என்ன தான் படிச்சானோ?” என்று கேட்க,
“ஏன் டா அண்ணா! ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் என்னவோ இதை தான் சொல்லி தர்ற மாதிரி பேசுறாங்க பாரேன்.. ம்மா! ஒருத்தர் தானே விடுங்களேன்!” என்று சாதாரணமாய் சொல்ல,
“நீ ஈசியா சொல்லிட்டு போய்டுவ.. புருஷன் இல்லைனாலும் நல்ல வசதின்னு நம்மளை மதிக்கலைனு பேசுவாங்க டா” என்று சாதாரணமாய் பிரேமா கூறினாலும்,
“சித்தி! என்ன பேசுறீங்க?” என்று பதறி இருந்தான் ஜெய்.
அதன்பின் தான் தன் வார்த்தைகள் தனக்கே உரைக்க, “என்ன டா! உண்மை தானே? இதுக்கு ஏன் ஷாக்?” என்றார் மெல்லிய புன்னகையுடன்.
“என்ன டா! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. வர்ற வெள்ளி கிழமை கல்யாணம்.. இப்படி கல்யாண சந்தோசமே இல்லாம இருந்தா நாங்க எப்படி ம்மா சந்தோசமா கல்யாண வேலையை பார்ப்போம்?”
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப தான் அவளுக்கு புத்தி வந்து யோசிக்குறா.. அவளையும் திருந்த விட மாட்டிங்களா?” கணவன் பேச ஆரம்பித்ததும் காஞ்சனா வந்துவிட,
“இங்க பாரு! யாரும் எப்படியும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு என் பொண்ணு நிம்மதியா சந்தோசமா இருக்கனும்.. அது தான் முக்கியம்” என்றார் குணசீலன்.
“இது ஒரு நல்ல அப்பா பேசுற பேச்சா? யாரும் எப்படியும் போகட்டும்னா அந்த ஜெய் ஒன்னும் யாரோ இல்ல.. உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறவன்.. அவன் சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கலைனா அவனை கட்டிக்கிட்டு இவ எப்படி சந்தோசமா இருப்பா?” என்று கேட்க,
“என் பொண்ணுக்கு எல்லாம் தெரியும்.. அவ ஜெய்கிட்ட பேசி புரிய வைப்பா!” என்று மகளை மட்டுமே நினைத்து பேசும் கனவன் மேல் ஆத்திரமாய் வந்தது காஞ்சனாவிற்கு.
“என்னவோ பண்ணுங்க! அவளும் அங்கே போய் இன்னொரு காஞ்சனாவா தான் இருக்க போறா!ஆனா அதுக்கு கூட உங்க பொண்ணுக்கு விவரம் பத்தாது..” என்று காஞ்சனா கூறி செல்ல,
“எதையாவது சொல்லிட்டே இருக்கனும் இவளுக்கு! அவளை விடு டா.. நீ ஜெய்க்கு போன் பண்ணி பேசு.. ஜெய் பிரண்ட்ஸ், உன் பிரண்ட்ஸ்னு எல்லாருக்கும் நீங்களே நேர்ல போய் இன்விடேஷன் வச்சுட்டு வந்துடலாம்ல?” என்று அஞ்சலியிடம் கேட்க,
“இன்ட்ரெஸ்ட் இல்ல ப்பா! அப்புறமா பார்த்துக்கலாம்!” என்று மட்டும் கூறியவள் ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள்.
“சரி மா! உன் விருப்பம் தான்” என்று கூறி வெளியேறிவிட்டார்.
ஜெய் வீட்டிற்கு வந்து சென்றதில் இருந்து இப்படி தான் தனியே எதையோ சிந்தித்தபடியே உலா வருகிறாள் அஞ்சலி.
‘இனிமேலாவது யோசிக்கட்டும்.. அப்ப தான் அவ வாழ்க்கை நல்லாருக்கும்’ நினைத்துக் கொண்டு காஞ்சனா எதுவும் கேட்கவில்லை அவளை.
குணசீலன் தினமும் ஒருமுறை அவளிடம் பேசிவிடுவார். கல்யாணத்திற்கு என எதையாவது பேசி அவளை உள்ளிழுக்க முயற்சிக்க, அவள் திசை திரும்பவே இல்லை இன்று வரையுமே!.
“கண்டிப்பா வந்துடுங்க ஆண்ட்டி!” சூர்யா அழைக்க,
“நிச்சயமா வர்றோம் பா.. இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கியே!” என்று மீனாட்சி பேசியபடி இருந்தார்.
“ஜனனிகிட்ட தான் அன்னைக்கு அட்ரஸ் வாங்கினேன்.. இந்த பக்கம் எல்லாருக்கும் கொடுக்கவும் தான் இங்கேயும் வந்தாச்சு.. பிரியாக்காக்கு வேணா நேர்ல பார்த்து கொடுத்துடவா?” சூர்யா கேள்விக்கு,
“அதெல்லாம் வேண்டாம் பா.. நான் சொல்லிடுறேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வருவா எப்படியும்.. நான் சொல்லிடுறேன்.. நாங்க கண்டிப்பா வர்றோம்” என பேசிக் கொண்டு இருக்க, அலைபேசியில் பேசி முடித்து உள்ளே வந்தான் ஜெய்.
“போலாமா டா?” என்று தம்பியிடம் கேட்க,
“போலாம் ண்ணா!” என்றதும் சொல்லிக் கொண்டு வெளியே வர காலை எடுத்து வைக்க,
“ஸ்ஸ்! ஆ!” என்று காலை தூக்கி இருந்தான் ஜெய்.
“என்னாச்சு ண்ணா?” என்று சூர்யா கேட்க, ஜெய் குதிகாலில் ரத்தம் வந்தது.
“அச்சச்சோ!” என்று வேகமாய் அந்த சிறிய அறிவாள்மனையை அப்புறப்படுத்தினார் மீனாட்சி.
“இவளுக்கு இதே வேலையா போச்சு.. விளையாடிட்டு அப்படி அப்படி போட்டுட்டு போய்டுவா.. இந்த ஜனனியும் எடுத்து வைக்குறது இல்ல” என்று வேகமாய் உள்ளே செல்ல,
“ஹே சூர்யா!” என்று வந்தாள் ஜனனி.
“வாங்க மேடம்! உங்க வீட்டுக்கு வந்தா ரத்ததானம் எல்லாம் செய்யணுமா?” என்று சூர்யா கேட்க,
“ஏன்? என்னாச்சு?” என்றவளுக்கு,
“மகி விளையாடினதும் அந்த செப்பு சாமானை எல்லாம் உள்ள எடுத்து வைக்க சொன்னேன் இல்ல.. அது தான் காலுல குத்தி விட்டுடுச்சு” என்று ஒரு துணியோடு வந்தார் மீனாட்சி.
“ம்மா! அப்படியே கட்டினா செப்டிக் ஆகிடும்” என்றவள்,
“இருங்க காட்டன் எடுத்துட்டு வர்றேன்” என்றவளை,
“இல்ல! இல்ல! பரவால்ல.. நாங்க பாத்துக்குறோம்” என்று ஜெய் கூற,
“என்ன பார்த்துப்பிங்க? ரத்தத்தையா? இருங்க டாக்டர் சார்!” என்றவள் காட்டன் எடுத்து வர, சூர்யா கிளீன் செய்து அதை வைத்து கட்டினான்.
“எதுக்கும் ஹாஸ்பிடல்ல பார்த்துடுறது நல்லது” கொஞ்சம் கவலையாய் மீனாட்சி கூற,
“ம்மா! அவரே டாக்டர் தான் மா.. அதெல்லாம் பார்த்துப்பார்.. இத்துனுண்டு கீறல்.. அதுக்கு போய்!” என ஜெய் முன்னேயே பேச, ஜெய் முறைக்க,
“சும்மா இரு டி!” என அதட்டினார் மீனாட்சி.
“உனக்கு வாய் மட்டும் குறையவே இல்லை.. அன்னைக்கு கல்லை எரிஞ்சுட்டும் ஏன் குறுக்க வந்தன்னு என்னை கேட்டவ தானே?” என்று சூர்யா சிரிக்க,
“அதை விட மாட்டியே!” என சிரித்தாள் ஜனனியும்.
ஜெய் கேள்வியாய் பார்க்கவும் மீண்டும் ஒரு முறை என ஜனனியின் வீர தீர செயலைப் பற்றி பேசிவிட்டு தான் கிளம்பினர்.
“சரி ம்மா! எல்லாரும் கண்டிப்பா வாங்க! வந்துடு ஜனனி..” என மீண்டும் சூர்யா கூற, ஜெய்யும் அழைக்க, அதன்பின் தான் அழைப்பிதலை கவனித்தாள் ஜனனியும்.
“மட்டனா? சிக்கனா?” என்று கேட்டு அழைப்பிதலைப் பிரித்து படித்தவளை,
“அடுத்து உன் கல்யாண சாப்பாடு தான்.. அப்ப சொல்லு!” என்று கிளம்பினான் சூர்யா.
“நல்ல பையனா தான் இருக்கான்.. பேச்சும் நல்லா இருக்கு.. ஆனா பெரிய இடம் மாதிரி இருக்கு.. சரி பார்த்துக்கலாம்.. தரகர்கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம்.. உன் வீட்டுக்காரர் மூலமாவே பேச சொல்லு” என்று மீனாட்சி கூற,
“நானும் அப்படி தான் மா நினச்சேன்.. இந்த கல்யாணத்துக்கு போய்ட்டு வரலாம்.. அவங்க பேமிலி எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல” என்று கூற,
சூர்யா, ஜெய் இருவருமாய் இரண்டு நாட்களில் உள்ளூர் முழுவதுமாய் சொந்தங்கள் என அனைவர்க்கும் கொடுத்து முடிக்க, நண்பர்களுக்கு தனியே பார்த்துக் கொண்டான் சூர்யா.
நெருங்கிய நண்பன் என ஒருவன் இருக்க, அவனும் வெளிநாட்டில் இருப்பதால் முடிந்தவரை ஆன்லைனில் முடித்துக் கொண்டான்.
“ஏன் டா! வெளில போனா இன்னுமா சின்ன பசங்க மாதிரி கையை காலை பிச்சிகிட்டு வருவீங்க?” பிரேமா கேட்க, பழைய துணியை பிரித்து மருந்திட்டுக் கொண்டிருந்தான் ஜெய்.
“கோவில்ல பார்த்தோம் இல்லை ம்மா ஜனனி.. அவ வீட்டுக்கு போயிருந்தோம்” என்று கூறி சூர்யா நடந்ததை கூற,
“இது சின்ன கீறலாம் சித்தி! அந்த வாயாடி சொல்லுது” என்று சிரித்தான் ஜெய்.
“அது சரி! ரத்த காயம் உண்டு பண்ணிட்டு கிண்டல் வேறயா?” என்று பிரேமாவும் சிரிக்க,
“அந்த பொண்ணு வீட்டுல யார் யாரெல்லாம் டா?” என்று கேட்ட பிரேமா மல்லிகாவைப் பார்க்க, அவரும் அர்த்தமாய் சிரிக்க, அது தெரியாமலே தனக்கு தெரிந்த அனைத்தும் கூறினான் சூர்யா.
“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டவர் அப்போது தான் நியாபகம் வந்தவராக,
“ஆமா! அஞ்சலி வீட்டுக்கு பத்திரிக்கை கொண்டு போகணும் இல்ல?” என்று கேட்க,
“இதென்ன கேள்வி பிரேமா? இன்னுமா அஞ்சலி வீட்டுக்கு கொடுக்கல?” என இரைந்தார் பால நாதன்.
அவர் வந்ததையே அப்போது தான் கவனித்தனர் அனைவரும்.
“இதோ இன்னைக்கு போக சொல்லிடுறேன் மாமா!” என்றவள் கூறவும்,
“நான் வரலை!” என்று வெகு அசட்டையாய் ஜெய் கூற, பால நாதன் முறைக்க,
“வெண்டைக்காய் பொரியல் தான் டா.. அதோ இருக்கு பாரு” என பேச்சை மாற்றி ஜெய்க்கு பிரேமா சைகையாய் கெஞ்ச, சிரித்தவன்,
“எங்க இருக்கு? எடுத்து குடுங்க பார்ப்போம்” என்றான் அவனும் விளையாட்டாய்.
“இன்னைக்கு வெண்டைக்காய் பண்ணின மாதிரி இல்லையே சித்தி!” என நிவியும் கூற,
“பாலக் தான் இருக்கு இல்லம்மா?” என்று சம்மந்தம் இல்லாமல் சூர்யாவும் கூற, பால நாதன் அறைக்குள் செல்லும் வரை அமைதி காத்தவர், அவர் உள்ளே சென்றதும்,
“புள்ளைங்களா டா நீங்க எல்லாம்?” என மூவரையுமே அடிக்க,
“நீ சொன்னதை தானே அவங்க கேட்டாங்க?” என மல்லிகாவுமே சிரித்தார்.