அலுவலகம் செல்ல கிளம்பி வந்த சூர்யாவிடம் மல்லிகா கேட்க,
“நான் மதியத்துக்கு அப்புறம் லீவ் தான் மல்லி ம்மா.. அஞ்சலி வீட்டுக்கு போகணும்.. போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்.. நீங்க எல்லாம் ரெடி ஆகிடுங்க” என்றான் சூர்யா.
“நீ மட்டுமா போற?” என்று பிரேமா கேட்க,
“நான் மட்டும் போய் என்ன பண்ண? அவளும் தான்” என்றான்.
“சரி! சீக்கிரம் வந்துடுங்க” என்றார்.
அவனுடன் கீழே வந்திருந்த அஞ்சலியும் நேற்று என்னவோ சும்மாவே தான் சொல்கிறான் என நினைத்திருக்க, நிஜமாய் இப்பொழுது கூறவும் எதற்காய் இருக்கும் என்று தான் யோசிக்க தொடங்கினாள்.
அப்படி ஒன்றும் அழைத்து சென்று வருபவன் இல்லையே! அங்கே வைத்து எதுவும் சொல்லி அவமானப்படுத்தி விட்டால்? என நினைத்தவளுக்கு தன் தந்தை வீட்டிற்கே செல்ல மனம் வரவில்லை.
என்னவோ என்னவோ என மனம் அதிலேயே நிற்க, நிஜமாய் அவ்வளவு பயம் இருந்ததில்லை இத்தனை வருடங்களில் யாரிடமும்.
ஆட்டிப் படைக்கிறான் என நினைத்தவளுக்கு அவனை எதாவது செய்து விட மாட்டோமா என்றிருந்தது.
“அண்ணா எங்க?” சூர்யா கேட்க,
“இன்னும் சாப்பிட வரலை!” என்று பிரேமா கூறும் பொழுதே வந்து சேர்ந்தான்.
“ஈவ்னிங் நீயும் வாயேன் ண்ணா!” சூர்யா அழைக்க,
“இல்ல டா.. முக்கியமான ஒருத்தரை பார்க்க வர்றதா சொல்லி இருக்கேன்” என்றான் ஜெய்.
“இதை விட அப்படி என்ன முக்கியம்?” மல்லிகா கேட்க,
“வந்து சொல்றேன் ம்மா!” என்று விட்டான்.
“அண்ணிக்கு ஸ்பெஷல் கிபிட் எல்லாம் ஒன்னும் இல்லையா? நீ வேஸ்ட் ண்ணா!” நிவி கூற,
“வாலு இதுக்கு மட்டும் முன்னாடி வா!” என்று சிரித்தான் ஜெய்.
‘இவனுக்கு சிரிக்கவெல்லாம் வருது!’ என நினைத்துக் கொண்டாள் அஞ்சலி.
“அண்ணாவே அண்ணிக்கு ஸ்பெஷல் கிப்ட் தான்.. இல்லையா ஜெய்?” என்று சூர்யா கூற,
“உனக்கும் அண்ணியா?” என்றான் அவனை கிண்டல் செய்ததில் விளைந்த மெல்லிய சிவந்த முகத்துடன்.
“அண்ணனின் மனைவி அண்ணி தானே? மல்லி ம்மா! நீங்க சொல்லுங்க.. நான் என் பிரண்ட்டை ஜனனின்னே கூப்பிடலாமா இல்லை அண்ணன் வீட்டுக்காரம்மாவை அண்ணினு கூப்பிடணுமா?” என வம்பு வளர்க்க,
“அண்ணினு தான் கூப்பிடனும்.. அது தான் மரியாதை!” என்று மல்லிகாவிற்கு முன் கட்டளையாய் கூறிவிட்டார் பிரேமா.
“உங்க இஷ்டம் போல இருங்க டா.. எல்லாரும் நல்லா இருந்தா அது போதும் எங்களுக்கு!” மல்லிகா கூற,
“ப்பா! டச் பண்ணிட்டீங்க மல்லி ம்மா!” என்று பாவனை செய்தான் சூர்யா.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் வீடு வீடா இருக்கு.. கல்யாண களை இப்பவே வந்த மாதிரி இருக்கு” என்ற நிவி,
“போன மாசம் வரை எப்ப எந்த பாம் வெடிக்குமோன்னு பரபரப்பா இருந்த மாதிரியே ஒரு பீல்! ஜெய் அண்ணாவை என்ன பாடு படுத்திட்டாங்க எல்லாரும்” என்று பேச்சுவாக்கில் கூறிவிட, முகம் கறுத்தது அஞ்சலிக்கு.
நிவி பொதுவாய் கூறி இருந்தாலும் அவள் கூறியது சட்டென அனைவர்க்கும் புரிய தான் செய்தது. அதில் அதிர்ச்சியில் தான் அனைவருமாய் அஞ்சலி முகம் பார்த்தது.. அதற்கே முகம் கறுத்துவிட பாவமாய் போனது மல்லிகாவிற்கு.
“நிவி! எங்க என்ன பேசணும்னு தெரியாதா? நீ என்ன சின்ன பிள்ளையா?” என்று அதட்ட, அவளுமே தாமதமாய் தான் உணர்ந்தாள்.
அஞ்சலி யாரிடமும் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில். அதனால் அவள் இருக்கும் இடமே தெரியாததை போல தான் இருக்கும்.
அவள் பேச்சு எல்லாம் சூர்யாவிடம் சண்டையிடும் நேரம் மட்டும் தான். பால நாதன் அவராய் அழைத்து பேசும் பொழுது அவரிடம் பேச்சு வார்த்தை நன்றாய் இருக்கும். அவள் அந்த வீட்டில் நம்பும் ஒரு மனிதர் பால நாதன் மட்டுமே!
இப்படி இருக்க நிவி தன்னையும் அறியாமல் எப்பொழுதும் போல மனதில் இருப்பதை பேசி இருக்க, முதன் முதலாய் பெரிதாய் அடி வாங்கிய உணர்வு. அதுவும் தன்னைவிட சிறிய பெண்ணிடம்.
“நிவி! என்ன இது?” என பிரேமாவும் கேட்டுவிட,
“நிஜமா வேணும்னு பேசல சித்தி!” என எழுந்து கொண்டவள்,
“வெரி சாரி அண்ணி! நான் அப்ப இருந்த நிலவரத்தை சொன்னேன் அவ்வளவு தான்.. உங்களை ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல.. என் வாய் தான்.. எதுவுமே தங்காது!” என்றவள்,
“நிஜமா சாரி அண்ணி! ப்ரோமிஸா இப்படி இனி பேச மாட்டேன்” என்று கூற,
“இல்ல.. பரவால்ல!” என்ற அஞ்சலி பாவமாய் சூர்யாவைப் பார்க்க, அவன் எதுவும் பேசிடவில்லை.
அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அதைவிடவும் சூர்யா தனக்காக ஒரு வார்த்தை கூறி இருந்தால்? என்று மனம் அவன் ஆறுதலை தேடவும் செய்தது.
அதற்கு மேல் எங்கே இருக்க முடியாமல் அவள் எழுந்து கொள்ள சூர்யாவுமே எதுவும் கூறவில்லை.
அஞ்சலி சென்றதும் அங்கே சில நொடி அமைதியாய் கழிய,
“உனக்கு எப்ப தான் எல்லாம் தெரிய போகுதோ நிவி.. இப்படி பேசுற.. கொஞ்சம் கூட சுத்தி கவனிக்குறது இல்லை.. என்ன பொண்ணு நீ?” என மல்லிகா வசை பாட ஆரம்பிக்க,
“மல்லி ம்மா! விடுங்க! அவ என்ன வேணும்னா சொன்னா?” என்ற சூர்யா,
“நிவி! பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் வீட்டுல என்ன நடக்குது, யாரெல்லாம் இருக்காங்கன்னு எல்லாம் நியாபகம் இருக்கனும்.. ம்ம்!” என்று கூற,
“நான் வேணும்னு சொல்லல ண்ணா!” என்றாள் இரு அண்ணன்களுக்கும் பொதுவாய்.
“தெரியும் நிவி! விடு.. அதெல்லாம் ஒன்னும் இல்லை சரியா போயிடும்” என்றான் ஜெய்.
“சரி ம்மா! நான் வர நைட் ஆகிடும்.. நீங்க போய்ட்டு வந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்று ஜெய் கூற,
“அப்ப அங்கே இருக்கும் போது போன் பண்ண வேண்டாமா? நீ ஜனனியை தேடலை சரி.. ஜனனி நீ வருவன்னு தேட வாய்ப்பு இருக்குல்ல?” என கிண்டல் செய்வதை தன் பொறுப்பாக்கி இருந்தார் பிரேமா.
“நீங்களுமா சித்தி!” என்ற ஜெய் முகம் விகசிக்க,
“அப்படி நடந்தா வேணா பாக்கலாம்” என்று கூறி சென்றுவிட்டான்.
“ஆனா நிவி சொன்னதுல தப்பில்ல தான் அக்கா! ஜெய்யைப் பாருங்களேன்! ரெண்டே நாள்ல ஆளே எப்படி மாறிட்டான்.. நிஜமாவே கல்யாண களை அவன் முகத்துல வந்துடுச்சு” என்று சந்தோசமாய் பிரேமா கூற,
“பின்ன! அவன் ஜனனி போன் நம்பர் என்கிட்ட நேத்தே வாங்கிட்டான்.. அவன் என்னவோ சாமியார்னு நீங்க நினச்சா அவனா பொறுப்பு?” என்று கூறிவிட்டு கைகழுவி வந்தான் சூர்யா.
“அடப்பாவி! இது வேறயா? ம்ம்ம் ஜெய்க்கு ஜெய் தான்!” என்று பிரேமா சிரிக்க, சூர்யா, மல்லிகாவும் சிரித்தனர்.
இன்னும் நிவி நடந்த நிகழ்வில் இருந்து வெளிவராமல் இங்கே கவனமும் இல்லாமல் சாப்பாட்டில் அலைந்து கொண்டிருக்க,
“ப்ச்! நிவி!” என்று அவள் தலையில் கைவைத்த சூர்யா,
“ஓகே! ரிலாக்ஸ்! எதுக்கு இவ்ளோ டென்ஷன்? பிரீயா விடு.. இதுவும் ஒரு லெசன் தான்னு நினைச்சுக்கோ.. ம்ம்?” என்று கூறி கன்னம் தட்ட, சரி என தலையசைத்தாள்.
சூர்யா அலுவலகம் கிளம்பி சென்றவன் மதியவேளையில் வந்து மீண்டும் அஞ்சலியுடன் குணசீலன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
வழியில் தலையில் கைவைத்தபடி வந்த அஞ்சலி இன்னும் காலையில் நடந்த நிகழ்வில் இருந்து முழுதாய் மீண்டிருக்கவில்லை.
“என்ன தலைவலியா?” என்று சாதாரணமாய் சூர்யா கேட்க,
“ப்ச்! ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன்.. உன்கிட்ட பேச எல்லாம் என்னால முடியாது” என்று கோபமாய் கூறினாள் அஞ்சலி.
“இன்னுமா காலையில நடந்ததை நினைச்சுட்டு இருக்க?” என்று புருவம் சுருக்கி கேட்டவன்,
“நீ தான் யார் என்ன பேசினாலும் கண்டுக்க மாட்டியே!” என்றும் கூற,
“இப்பவும் சொல்றேன்! நீங்க எல்லாம் அவ்வளவு என்னை பேசுற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்?” என்றாள்.
“அதானே! அஞ்சலியாவது மாத்தி யோசிக்குறதாவது?” என்றவனை அவள் முறைக்க,
“சரி! அவ சின்ன பொண்ணு! ஒரு புளோல வந்துடுச்சு.. ஆனாலும் அவ உண்மையை தானே சொன்னா? நடக்கும் போது தெரியாதது அவ சொல்லும் போது வலிக்குதா?” என்று கேட்க,
“அதை தான் நானும் கேட்குறேன்.. என்ன நடந்துச்சுன்னு அதையே பேசிட்டு இருக்கீங்க? எனக்கு புடிக்காதத்தை புடிக்கலைனு சொன்னது தப்பா?” என்றாள் இப்பொழுதும் சத்தமாய்.
அதில் காரை நிறுத்தி அவள் புறம் திரும்பியவன், “இவ்ளோ பேசுற சரி! உனக்கு ஏன் இப்ப கோபம் வந்துச்சி? நீ இருக்கும் போது உன்னை என் தங்கச்சி பேசிட்டா அதுவும் என் பேமிலி முன்னாடி அது தானே?” என்று கேட்கவும் அவள் அமைதியாய் ஆமாம் என்பதை போல பார்க்க,
“என் பேமிலி முன்னாடி மட்டும் பேசினதுக்கே உனக்கு வலிக்குது.. மண்டபத்துல அவ்வளவு பேர் முன்னாடி ஒரு ஆம்பளையை நீ எனக்கு வேண்டாம்.. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருக்க.. அவனுக்கு அந்த வலி இருக்காதா? இல்ல அந்த குடும்பத்துக்கு தான் உடனே அது மறக்குமா?” என்று கேட்க, இப்பொழுது தான் ஓரளவு அனைவரின் கண்ணோட்டமும் அவளுக்கு புரியவே ஆரம்பித்தது.
“நான் ஏற்கனவே சொன்னது தான்.. நீ ரிஜெக்ட் பண்ணின மாதிரி உன்னை யாராவது ரிஜெக்ட் பண்ணி இருந்தா உனக்கு புரிஞ்சிருக்குமோ என்னவோ! ஏன்! நானே அன்னைக்கு எனக்கு நீ வேண்டாம்னு சொல்லி இருந்தா உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்குறேன்.. நானா இழுத்து வச்சிக்கிட்டது தான் தப்பு போல!” என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய, அந்த கோணத்தில் இன்று தான் சிந்திக்கவே தோன்றியது அஞ்சலிக்கு.
“என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது!” என்று மாப்பிள்ளை கோலத்தில் சூர்யா அன்று கூறுவதை போல இப்பொழுது நினைத்துப் பார்த்தவளுக்கு முகம் அஷ்ட கோணலாய் போனது.
“அப்படி அவன் கூறி இருந்தால்?” என்ற எண்ணம் வந்த நொடி தான் என்ன செய்திருப்போம்? என்று நினைத்துப் பார்க்க, அது நினைத்துப் பார்க்க முடியாததாய் இருந்தது.
நிச்சயம் அடம் பிடித்து இருப்பாள், அவமானமாய் உணர்ந்து அதற்காகவேணும் அவனை திருமணம் செய்தே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடித்திருப்பாள்.. இப்படி தான் தோன்றியது அஞ்சலிக்கு.
தலையை உலுக்கிக் கொண்டவள் அந்த நாளில் இருந்து மீண்டு வர, கார் தன் வீட்டின் முன் நின்றிருந்தது.